என்னை உருவாக்கிய பெரியாரின் சிந்தனைகள்.. – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

2024 Uncategorized ஏப்ரல் 1-15, 2024 கட்டுரைகள் பெரியார்

சென்ற இதழ் தொடர்ச்சி….

இதையெல்லாம் தாண்டி, இன்னொன்று சொல்லுகிறார். இப்பொழுது மனிதனுடைய ஆயுட்காலம் என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
ஆனால், பலப்பல காரணங்களுக்காக, 58, 60 வயதில் நம்முடைய ஓய்வு இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.
ஆனால், பெரியார் சொல்கிறார்,

‘‘ஓய்வு, சலிப்பு எல்லாவற்றையும் தற்கொலை என்றே கருதுவேன்’’ என்கிறார்.
பெரிய வார்த்தை இது:-

ஓய்வு, சலிப்பு எல்லாம் தற்கொலை என்பது.

ஆனால், அந்தப் பெரிய வார்த்தைக்குப் பின்னால், ஒரு சிறப்பான வாய்ப்பு இருக்குமோ என்று உணர்ந்து பார்க்கவேண்டும்.
ஏனென்றால், அவர் கடுமையாகக் கடிந்துகொள்ளக்கூடிய ஒவ்வொரு இடத்திலும் நாம் உணர்ந்து உன்னிப்பாகப் பார்க்கவேண்டும்.

சக்கி முக்கிக் கல்லை உரசினால், நெருப்பு வருகிறது. தீக்குச்சியை உரசினால் நெருப்பு வெளிவருகிறது. அதுபோன்று, கடினமான வார்த்தைகள் நம் மனதை உரசும்பொழுது, அதற்கான பதில்கள் சரியாக வரும் என்று நினைக்கிறேன்.
ஏன் அப்படி பெரியார் சொல்கிறார் என்றால், இன்றைய காலகட்டத்தில் மிகமிகத் தேவை அது.

காலம் மாற மாற, நம்முடைய ஓய்வு பெறும் வயது என்பது 60ஆக மாறியிருக்கிறது. ஆயினும், ஓய்வு, சலிப்பு என்பது இளமையிலும் சரி, முதுமையிலும் சரி எப்பொழுதும் இருக்கக்கூடாது என்கிறார். அதுதான் உயிர்ப்புள்ள மனிதத் தன்மை.
ஏனென்றால், மரங்களுக்கும், மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?

மரம் சலித்துக்கொள்கிறதா? இல்லையா? என்று தெரியவில்லை. ஆனால், மரத்தை வெட்டினாலும், திரும்பத் திரும்ப வளர்ந்துவிடுகிறது.
அப்படி இருக்கும்பொழுது, மனிதனாக இருக்கின்ற நமக்கு ஏன் ஓய்வு, சலிப்பு என்று இருக்கவேண்டும்?
– மேதகு கலாமின் படத்தைக் காட்டி,
அதனுடைய பிரதிபலிப்புதான், அதற்கு வாழும் உதாரணமாக இருந்தவர் கலாம் அவர்கள். கடைசி நேரம் வரைக்கும், அவர் அப்படித்தான் இருந்தார்.
அவருக்கு சலிப்பு என்று ஒன்று இருந்ததாக யாரும் அவரிடம் பார்க்க முடியவில்லை. ஏனென்றால், ஒரு நாட்டினுடைய உச்சகட்டப் பதவிக்குப் போயிருக்கிறார்; அதிலிருந்து பணி ஓய்வு பெற்று இருக்கிறார். அதற்குப் பிறகு ஓய்வாக மிகவும் ஜாலியாக இருந்திருக்கலாம் அல்லவா! ஆனால், அவர் அப்படி இருந்தாரா, என்றால் இல்லை.

விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கடைசி மூச்சுவரை அவர் ஓய்வு, சலிப்பு என்றில்லாது இருந்திருக்கிறார் என்றால், பெரியார் சொன்ன அந்த வார்த்தைக்கு உண்மையான உதாரணமாக இருந்தார்.
நவீன இந்தியாவினுடைய அறிவியல் தந்தை கலாம் அவர்கள் வாழும் உதாரணமாக இருந்தார்.
தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இருக்கும் படத்தைக் காட்டி, நான் ஒரு கதை சொல்ல முயற்சி செய்கிறேன். சில பேருக்குப் புரிந்திருக்கும்; புரியாதவர்களுக்கு அடுத்து புரியும் என்று நினைக்கிறேன்.
ஏன் அப்படி என்றால், என்னுடைய பெயர் வருவதற்குக் காரணம்… அண்ணாவைக் காட்டி, இவர்…
எனக்கு என் அப்பா பெயர் வைப்பதற்குக் காரணம்… பெரியாரைக் காட்டி, அவர்…
இவரும், அவரும் சேர்ந்துதான் இன்றைக்கு நான் இங்கே வந்து நிற்கிறேன்.

இப்படி இருந்தாலும், இது எனது பால்யத்தில் நடந்தது. எனக்குப் பெயர் வருவதற்கு முன்னால் நடந்தது.
என்னுடைய பெயர் ‘‘அண்ணாதுரை’’ என்று பெரியாரால் ஈர்க்கப்பட்ட எனது அப்பா வைத்தது. ஆனால், உலகத்தில் ஓர் அண்ணாதுரைதான் இருக்கவேண்டும் என்பதற்காக, எனக்குப் பெயர் கொடுத்து, இந்த உயரத்தைத் தொடு என்று தள்ளிவிட்டார் அல்லவா, எனது அப்பா திரு.மயில்சாமி, அவர் பெயரை எனக்கு முன்னால் வைத்து, மயில்சாமி அண்ணாதுரையாக உங்கள் முன் நிற்கிறேன் இப்பொழுது.
இந்தப் படத்தைப் பார்த்தீர்களேயானால் தெரியும் (கலாம் – மயில்சாமி அண்ணாதுரை படம்) முன் பார்த்த படத்திற்கும், (அண்ணா – தந்தை பெரியார்) இந்தப் படத்திற்கும் ஓர் ஒற்றுமை இருப்பதுபோன்று தெரியும். இதைப் பலர் சொல்லியிருக்கிறார்கள்.

ஏன் அப்படி என்றால், அண்ணா அவர்கள் அவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், கிட்டத்தட்ட அவர் வாக்குமூலம் போன்று அவர் சொன்னாலும், அவர் எழுதிய ‘‘வசந்தத்தில்’’ அண்ணாவை உருவாக்கியது தந்தை பெரியார்தான் என்று பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்.
அதேபோன்று, என்னை அவர் (அப்துல் கலாம்) உருவாக்கினார், எப்படி? அடுத்தது என்ன? அடுத்தது என்ன? அடுத்தது என்ன? என்ற மந்திர வார்த்தையால்.
ஒரு சாதாரண மனிதனாக இருக்கும்பொழுது, ஒரு வெற்றியைப் பெற்றவுடன், அந்த வெற்றிக் களிப்பிலேயே இருந்துவிடலாம்.
ஆனால், அப்படியில்லாமல், எனது வெற்றியை நான் சொல்லப் போகின்ற ஒவ்வொரு தருணத்திலும், கைகொடுத்துக் குலுக்கிவிட்டு, ‘‘அடுத்தது என்ன?’’ என்று கேட்பார், ஒவ்வொரு முறையும், இது நடந்தது.

எனது வெற்றிகளுக்கு சிறிது சிறிதாக, கொஞ்சம் கொஞ்சமாக என்று முன்பு சொன்னேன் அல்லவா! அந்தக் கொஞ்சம் கொஞ்சமுடைய நீட்சி கலாமுடைய இந்த ‘‘அடுத்தது என்ன?’’ என்ற வார்த்தைதான்.
சந்திரயான்-1 வெற்றி என்று சொன்னபொழுது, அடுத்தது என்ன? என்று கேட்டார்.
உச்சபட்ச அறிவியலுடைய கண்டுபிடிப்பாக சந்திரயான்-1 இருந்தது. இருந்தாலும் அடுத்தது என்ன? என்று கேட்டார்.
அடுத்தது ‘‘சந்திரயான்-2 சார்’’ என்று சொன்னேன்.
‘‘2-க்கு அடுத்தது?’’ என்றார்.
‘‘2, 3, 4 என்று வந்துகொண்டே இருக்கும் சார்’’ என்றேன்.
அண்ணாவைப் பார்த்து பெரியார், ‘‘அடுத்தது என்ன?’’ என்று கேட்டிருப்பாரோ?
சலிப்பு, ஓய்வு தற்கொலைக்குச் சமம் என்ற வார்த்தையினுடைய உண்மையான பொருள் ‘‘சலிப்பில்லாமல், அடுத்தது என்ன என்று ஓடு’’ என்பதாய் பெரியார் அவர்கள் சொன்னதாகத்தான் நான் பார்க்கிறேன்.

இப்பொழுது, சலிப்பில்லாமல் இருக்கலாம் என்று சொல்லிவிடலாம்.
எப்படி இருப்பது? அதற்கான பதில்தான் இது.

‘‘மனிதன் பிறந்த நாள் முதற்கொண்டு, சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்’’ என்றார் பெரியார்.
அவர் நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறார், ‘‘நான் போகிற போக்கில் விதைத்துவிட்டுப் போய்விட்டேன்; போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்’’ என்று.

ஆனால், எல்லாவற்றிலும் ஒரு கோர்வை மற்றும் அர்த்தம் இருக்கிறது என்பதைத்தான் நான் சொல்ல முயற்சி செய்கிறேன்.

சலிப்பில்லாமல் இருக்கலாம்; சலிப்பில்லாமல் இருக்கவேண்டும் என்றால், எப்படி இருப்பது?
எல்லாக் குழந்தைகளிடமும் கேட்டுப் பாருங்கள்; மாணவப் பருவம் என்பது சலிப்பில்லாமல் இருக்கும் தருணம்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாணவப் பருவம் சலிப்பில்லாத வாழ்க்கை என்பது நமது அனுபவமும்கூட.
அப்படியென்றால், வாழ்க்கையில் சலிப்பே இல்லாமல் இருக்கவேண்டும் என்றால், என்ன செய்யவேண்டும்?
வாழ்நாள் முழுவதும் மாணவனாக இருந்தால், வாழ்க்கை சலிப்பே இல்லாமல் போய்விடும் அல்லவா!

சலிப்பில்லாதது மாணவ வாழ்க்கை; வாழ்நாள் முழுவதும் நான் மாணவன் என்கிற நிலையை நான் அடைந்துவிட்டேன் என்றால், அது படிக்காமல், பாஸ் பண்ணாமல் அல்ல; அப்படி வருகின்ற மாணவன் இல்லை.

அடுத்தடுத்து உயர உயரப் போகக்கூடிய மாணவனாக இருந்தால், சிறப்பாக இருக்கும் என்று சொல்கிறேன்.
இதுவரை நான் ஒவ்வொரு இடத்திற்கும் ஓரிரு உதாரணங்களை – நடந்த உதாரணங்களைக் காண்பித்திருக்கிறேன்.
அந்த வகையில், இப்பொழுது இதற்கான உதாரணத்தை திரும்ப என்னை முன்னிலைப்படுத்திச் சொல்ல முயற்சி செய்கிறேன். என்னை மட்டும் முன்னிலைப்படுத்தவில்லை. இன்னொரு மாணவனும் இருக்கிறார்; அவரும் சென்னையில் இருந்து வந்திருக்கிறார்; அவரும் இங்கே இருக்கிறார்.
‘‘என்றும் மாணவர்களுடன் மாணவனாய்’’ நான் இருக்கிறேன்.
அது எப்படி என்பது அடுத்த இரண்டு நிமிடத்தில் தெரியும்.

(காணொலியில் சில ஒளிப்பதிவுகள் அனைவருக்கும் ஒளிபரப்பப்படுகின்றன.)

(தொடரும்…)