கட்டுரை – பாசிஸ்டுகளுக்கு எச்சரிக்கை! – வி.சி.வில்வம்

2023 கட்டுரைகள் செப்டம்பர் 1-15,2023 மற்றவர்கள்

– வி.சி.வில்வம்

மகாராஷ்டிரா மூடநம்பிக்கை ஒழிப்புக் குழுவின் (மகாராஷ்டிரா அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதி) தலைவராக இருந்தவர் டாக்டர் நரேந்திர தபோல்கர்‌ (1945- _ 2013).
புனே நகரில் நடைப்பயிற்சி மேற்கொண்ட போது 2013ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 20ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்!

ஒவ்வொரு இந்தியரும் அறிவியல் மனப்பான்மையை, சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்ப வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் 51ணீ (லீ) (1976) சொல்கிறது. அதன்படி நடந்து கொண்டதற்காக சாலையில் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது!

தபோல்கர் போலவே தவறு செய்ததால் 2015 பிப்ரவரி 20 ஆம் தேதி கோவிந்த் பன்சாரே‌, அதே ஆண்டு ஆகஸ்ட் 30இல் எம்.எம். கல்புர்கி, 2017 செப்டம்பர் 5 ஆம் தேதி கவுரி லங்கேஷ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

நரேந்திர தபோல்கர் எம்.பி.பி.எஸ்., முடித்தவர்! சமூக நோக்குடன் 12 ஆண்டுகள் மருத்துவச் சேவை செய்தார். சிறந்த கபடி வீரரும் கூட! இதற்காக மகாராஷ்டிரா அரசிடம் இருந்து மதிப்புமிக்க “சத்ரபதி சிவாஜி கிரிடா புரஸ்கார்’ விருதை வாங்கியவர்!

தொடக்கத்தில் சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான இயக்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். 1983ஆம் ஆண்டு மூடநம்பிக்கை
களை ஒழிக்கும் நோக்கில் அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதி எனும் அமைப்பை உருவாக்கினார். நாளடைவில் இது அம்மாநிலத்தில் 230 கிளைகளைக் கொண்டு விரிந்தது. “சாதனா” என்கிற மராத்திய வார இதழில் 15 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். சற்றொப்ப 12 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்!

“மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தைப் புரிந்து கொள்வோம்’ என்கிற நூலை மராட்டிய மொழியில் எழுதி, பின்னர் அது ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டது. தமது அந்தர் ஸ்ரத்த நிர்மூலன் சமிதி (கிழிமிஷி) அமைப்பின் செயல்பாடுகளையும் அதில் எழுதியிருந்தார். இந்து மதத்தை மட்டுமே எதிர்க்கிறார் எனக் குற்றம்சாட்டினர் இந்துத்துவவாதிகள். ஆனால் இஸ்லாம், கிறிஸ்துவ மூடநம்பிக்கைகள் குறித்தும் நிறைய பேசியுள்ளார். கிறிஸ்துவ மூடநம்பிக்கைகள் குறித்து “போப்” அவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.

இப்படியான சூழலில் தான் 2013ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். புள்ளி விவரங்கள், ஆவணங்கள் குறித்தெல்லாம் இப்போது குறிப்பிடத் தேவையில்லை. இயல்பாகச் சில கேள்விகளை முன் வைப்போம்!

அறிவியலையும், பகுத்தறிவையும் பேசியதால் தபோல்கருக்குக் கிடைத்த இலாபம் என்ன? எதிர்ப்பைத் தவிர அவர் பெற்றது என்ன? தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு, இறுதியில் கொலை செய்யப்பட்டார். இவையெல்லாம் நடக்கக் கூடும் என அறிந்தும் ‌அவர் ஏன் பேசினார்?
ஒரே காரணம்தான்! மக்களை நேசித்தார்; சமூக அமைதியை விரும்பினார்! இவை கிடைப்பதற்கு அறிவியலை வளர்ப்பதுதான் ஒரே வழி! அதனால்தான் தபோல்கர் பகுத்தறிவு பூர்வமாகச் சிந்தித்து மக்களிடையே தன் கருத்துகளை எடுத்துக் கூறினார்!

இதற்காக ஒருவர் தம் உயிரை இழப்பாரா? இவ்வளவு ஆபத்து இருக்கிறது எனத் தெரிந்தும் ஒருவர் துணிந்து செயல்படுவாரா? ஆம்! செயல்படுவார்கள்_ செயல்படுகிறார்கள்.

இப்படியான மனிதர்களால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது!

உயிரைத் துச்சமென மதித்து இந்தப் பணியைத் தமிழ்நாட்டில் செய்பவர்கள் தான் கருப்புச் சட்டைக்காரர்கள். இங்கு பெரிய ஓர் அமைப்பாய்த் திரண்டதால் ஆபத்து குறைந்தது! ஏனைய மாநிலங்களில் அது குறைவாய் இருப்பதால் தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் போன்றோர் கொலை செய்யப்பட்டனர்.

மதம் வேண்டும், பழமை வேண்டும் என்போர் அறிவியலைப் பயன்படுத்துவதில்லையா? அதை விரும்புவதில்லையா? ஒரு நூறாண்டுகளில் இந்த உலகம் எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. இந்த முன்னேற்றத்திற்கு உங்கள் மதம், உங்கள் பழமைவாதச் சிந்தனைகள் எந்த அளவுக்கு உதவி செய்திருக்கிறது?
மொத்த முன்னேற்றத்திற்கும் அறிவியல் மட்டும் தானே காரணம்‌? ஏன் எதற்கு எப்படி எனக் கேட்கும் பகுத்தறிவுச் சிந்தனை தானே காரணம்?

சரி‌‌… எங்கள் மதத்தால் உருவான நன்மை களைப் பயன்படுத்த வேண்டாம் என்று நீங்கள் சொல்லுங்கள். அறிவியலால் ஏற்பட்ட பயன்களை அனுபவிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இதில் எது சாத்தியப்படும்? இந்தச் சமுதாயத்தில் _ இந்த உலகத்தில் மதம் இல்லாமல் வாழ்ந்து விட முடியும்! அறிவியல் இல்லாமல் வாழ்ந்துவிட முடியுமா? இன்னும் சொன்னால் நவீன அறிவியலைப் பயன்படுத்தித் தானே உங்கள் மதத்தை வளர்க்கிறீர்கள்?

பகுத்தறிவு பேசுகிறார், அறிவியல் பேசுகிறார் என்றுதானே தபோல்கரைக் கொலை செய்தீர்கள்? இதில் எந்த அறிவியலை நீங்கள் பயன்படுத்தாமல் இருக்கிறீர்கள்? நடைப்பயணமாய் இருந்த உலகத்திற்கு வாகனங்கள் கிடைத்ததே… அதைக் கண்டுபிடித்தது உங்கள் மதமா? அறிவியலா? ஆகாயத்தில் நாடு விட்டு நாடு பறக் கிறீர்களே… அமெரிக்காவில் கூட ஆர்.எஸ்.எஸ்.வைத்துள்ளீர்களே… அங்கு செல்லும் விமானத்தைக் கண்டுபிடித்தது உங்கள் மதமா? இல்லை அறிவியலா?
கூகுள், முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட எண்ணற்ற ஊடகங்களில் உங்கள் பழமைவாத சிந்தனைகளைப் பிரச்சாரம் செய்கிறீர்களே… அவை எல்லாம் நீங்கள் கண்டுபிடித்தவையா?

எதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? எப்படி இவற்றையெல்லாம் வெட்கமில்லாமல் பயன்படுத்துகிறீர்கள்?
பயன்படுத்துவது எல்லாம் அறிவியல் சாதனம்! பேசுவது மட்டும் சனாதனம். வாழ்வது 2023. எண்ணங்கள் 1700.

இந்த முரண்களைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாததால்தான் மதவெறி ஆட்கொண்டு திரிகிறீர்கள்! கத்தி, அரிவாள், துப்பாக்கி கொண்டு சக மனிதர்களைச் சாகடிக்கிறீர்கள்.நீங்கள் எத்தனை அறிவாளிகளைக் கொன்றாலும், அவர்கள் அடங்கிவிட மாட்டார்கள். உலகில் எவ்வளவோ விஞ்ஞானிகள், அறிஞர்கள் கொலை செய்யப்பட்ட பிறகும், அவர்களால் தான் இந்த உலகம் இவ்வளவு வளர்ந்திருக்கிறது! உலகில் இவையெல்லாம் தொடர்கதைகள் தான்! எனினும் தொடர்ந்து நாங்களும் உழைப்போம்! அறிவியல் சிந்தனைகளை மேம்படுத்துவோம்!

இதன் விளைவாகவே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தபோல்கர்
நினைவு நாள் கூட்டங்களை அறிவித்துள்ளார்கள்

தமிழ்நாடு முழுவதும் 51 இடங்களில் இந்நிகழ்வு நடைபெறுகிறது!

நாங்கள் ஜாதிகளின் பரம்பரை அல்ல! மதங்களின் பரம்பரை அல்ல! மாறாக தபோல்கரின் பரம்பரை, கோவிந்த் பன்சாரே பரம்பரை, கல்புர்கி பரம்பரை, கடைசியாக நீங்கள் கொன்ற கவுரி லங்கேஷ் பரம்பரை!

இந்த உலகம் அமைதி பெற வேண்டும்! மனிதர்களின் மகிழ்ச்சி நீட்டிக்க வேண்டும்! அதற்கு பகுத்தறிவாளர்களின் பங்கு முதன்மையானது. இப்படிப்பட்டவர்களை பாசிஸ்டுகள் கொலை செய்வது கடுமையான கண்டனத்திற்குரியது. இந்நிலை தொடர்ந்தால் காரணமானவர்கள் கடும் விளைவைச் சந்திப்பர்! ♦