கட்டுரை – வாழ்க்கையில், கொள்கையில் ‘எதிர்நீச்சல்’ அடித்த நடிகர் மாரிமுத்து!

2023 அக்டோபர் 1 - 15, 2023 கட்டுரைகள் மற்றவர்கள்

… வி.சி.வில்வம் …

நடிகரும், இயக்குநருமான திரு.மாரிமுத்து அவர்கள் செப்டம்பர் 8 ஆம் நாள் மாரடைப்பால் காலமானார்.

வளர்ந்து வந்த சிறந்த நடிகர் மட்டுமின்றி, சமூகச் சிந்தனை கொண்ட மனிதராகவும் திகழ்ந்தார்!

சில படங்களில் நடித்தும், சிலவற்றை இயக்கியும் வந்த அவர், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்தார். அதில் குறிப்பாக “எதிர்நீச்சல்” என்றொரு தொடர் பலராலும் பேசப்பட்டது!
தொலைக்காட்சித் தொடர்களை விரும்பாதவர்கள் கூட, இந்தத் தொடரைப் பார்த்துள்ளனர். அந்தளவிற்கு சமூகத்திற்கு மனிதர்களுக்குத் தேவையான செய்திகள் அதில் இருந்துள்ளன!
தவிர அவர் மறைவிற்குப் பிறகு அவர் வழங்கிய எண்ணற்ற நேர்காணல்களைச் சமூக ஊடகங்களில் பார்க்க முடிந்தது. இப்படியான ஒரு மனிதரை, இத்தனை நாள் அறியாமல் இருந்துள்ளோமே என நினைக்குமளவு இருந்தன அவரது பேட்டிகள்.

தம் கொள்கைகள், அதை வெளிப்படுத்தும் விதம், திரைத்துறையில் அவர் பழகிய அணுகுமுறைகள், தன்னுடைய தனித்தன்மைகள் என அனைத்தையும் இயல்பாக விவரிக்கிறார்.
சமூகத்தின் மற்ற துறைகளை விட, திரைத்துறை என்பது பணமும், புகழும், வெளிச்சமும் அதிகம் இருக்கும் தொழில். அதில் ஒரு மனிதர், “எனக்குக் கடவுள் மீதும், ஜாதி மீதும் நம்பிக்கை இல்லை”, எனக் கூற தனித் தைரியம் வேண்டும்! ஏனெனில் அவர் வளர்ந்து வந்த ஒரு நடிகர்.

எங்கெல்லாம் வாய்ப்புக் கிடைக்கும் எனத் தேடிக் கொண்டே இருப்பேன் என்கிறார். ஒவ்வொருவருக்கும் கைப்பேசி வழி கூட செய்தி அனுப்பி நினைவூட்டுவேன் என்கிறார். எனக்குப் பணக்காரன், ஏழை என்கிற பாகுபாடு கிடையாது. அதேநேரம் என்னிடம் திறமைகள் இருக்கின்றன. உழைத்துக் கொண்டே இருப்பேன். ஓய்வு என்பதே எனக்குப் பிடிக்காதது என பல்வேறு நேர்காணல்களில் பதிவு செய்திருக்கிறார்.

எல்லோரையும் போல நானும் திரைத்துறைக்கு வந்த போது உணவுக்கே சிரமப்பட்டேன். இன்றைக்கு போதுமான பொருளாதார வசதி இருக்கிறது. எனினும் சிரமப்பட்ட போதும், இப்போதும் என் வாழ்வை நான் ரசித்தே வாழ்கிறேன் என்றார் முத்தாய்ப்பாக!

அவர் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு கூட, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜாதகம் குறித்துப் பேசியிருந்தார். பல ஜோதிடர்கள் முன்பாக, தனக்குத் தெரிந்த அறிவியல் கருத்துகளை அழகாகப் பதிவு செய்திருந்தார். இது சமூக ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. எதிர்ப்புகள் இருந்தாலும் தன் பகுத்தறிவுக்
கருத்துகளை வெளிப்படுத்த அவர் தயங்கியதே இல்லை.

இப்படியான சூழலில் தான் அவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதேநேரம் சிலரை மகிழ்ச்சிக்கும் உள்ளாக்கியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்! நம்பித்தான் ஆக வேண்டும்! எப்போது கருணை (?) உள்ள கடவுளும், அன்பு (?) நிறைந்த மதமும், ஒற்றுமை (?) வழியும் ஜாதியும் அவர்களுக்குள் போனதோ அப்போதே மனிதநேயம் அவர்களை விட்டுப் போய்விடுகிறது !

அறிமுகம் இல்லாத, எவ்வகையிலுமே தொடர்பில்லாத ஒருவரின் மரணத்தை இவர்கள் வெளிப்படையாகக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன? நாத்திகம் பேசினார் என்கிற ஒரே ஒரு காரணத்தைத் தவிர? “ஜோதிடர்கள் முன்பாகவே எதிர்த்துப் பேசினார், அதனால் அவர்கள் சாபம் பலித்துவிட்டது”, என எழுதுகிறார்கள்.
“ஜாதகத்தை நம்புகிறவர்களுக்கு மரணமே வராதா?” என்கிற எதிர் கேள்விகளும் சமூக ஊடகங்களில் பரவியே கிடந்தன. சங்கித்தனமான ஒவ்வொரு விளைவுக்கும், ஓர் எதிர்விளைவை உண்டாக்குவதாலேயே இது பெரியார் மண் என்று அழைக்கப்படுகிறது!

“வறுமை எனை வாட்டிய போதும், என் வாழ்வை ரசிப்பதை நான் நிறுத்தவில்லை. அதேநேரம் என் உழைப்பையும், திறமையையும் முன்னிறுத்தி இந்த அளவிற்கு உயர்ந்துள்ளேன்” என ஒரு மனிதர் கூறினால் அவரிடம் இருந்து பாடம் கற்று, தானும் முன்னேறி, சமூகத்தையும் உயர்த்த வேண்டும்! அவர்தான் மனிதர் என்று அழைக்கப்படுவார்!

அவர் புத்திசாலியாக இருந்தார் என்பதற்காகவே அவர் மரணத்தைக் கொண்டாடக் கூடாது. முட்டாள்கள் மட்டுமே இருந்து இந்த உலகத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?
நடிகர் சூர்யா ஒரு நாத்திகர் அல்ல. அதேநேரம் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி தமிழ்ப் பிள்ளைகளுக்கு உதவி, பல்லாண்டு காலமாகவே கல்வித் தொண்டு செய்து வருகிறார். அவரது திரைப்படங்கள் ஏதாவது தோற்றுவிட்டால் இந்தப் பாஜக வகையினர் மகிழ்ந்து கொண்டாடுகிறார்கள். அதற்கு என்ன காரணம்?

ஏழை, எளிய பிள்ளைகளின் கல்விக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பமில்லை. அதை ஓர் புத்திசாலித்தனமான நடவடிக்கையாகப் பார்க்கிறார்கள். இதையே கோவிலுக்கு அள்ளிக் கொடுத்தால் கும்மி அடிப்பார்கள்!

ஆக சிந்திக்க மறுப்பவர்களைப் பார்த்து வருத்தப்பட்டாலும், அவர்கள் சிந்திக்கத் தொடங்கும் வரை இயங்கிக் கொண்டே இருப்பதுதான் இயக்கம்! அப்படி வளர்ந்துதான் நூறாண்டுகளைக் கடந்து, இதை அற்புதமான தமிழ்நாட்டை நமக்குத் தந்திருக்கிறது திராவிடர் இயக்கங்கள்!
நடிகர் மாரிமுத்து அவர்களுக்குப் புகழ் வணக்கம்! ♦