மறுப்பிலக்கியம் மாற்றிலக்கியம் திராவிட இலக்கியம் – எழுத்தாளர் இமையம்

2024 Uncategorized ஏப்ரல் 16-30, 2024 கட்டுரைகள் மற்றவர்கள்

பொதுவாக அரசியல் சூழலும் சமூகச் சூழலும்தான் புதிய இலக்கியப் போக்குகளை உருவாக்குகின்றன. அந்த விதத்தில்தான் மார்க்சிய சிந்தனை உலகெங்கும் பரவியபோது, அச்சிந்தனையை முன்னிறுத்தும் விதமாக இலக்கியங்கள் எழுதப்பட்டன. கருப்பின மக்களுடைய போராட்டங்கள் வலுப்பெற்றபோது, கருப்பின மக்களுடைய வாழ்க்கை இலக்கியங்களாக எழுதப்பட்டன. பெண் உரிமைகள் குறித்த உரையாடல் ஆரம்பித்ததும் உலகெங்கும் பெண்ணிய இலக்கியங்கள் எழுதப்பட்டன. இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தின் தாக்கமும், காந்திய சிந்தனையும் வலுப்பெற்றபோது, அது சார்ந்த இலக்கியங்கள் எழுதப்பட்டன. அம்பேத்கரின் நூற்றாண்டை ஒட்டி எழுந்த அரசியல் விவாதங்களின் மூலம் ‘தலித்’ இலக்கியம் என்ற வகைமை இந்தியாவில் நிலைபெற்றது. தமிழ்நாட்டில் திராவிட இயக்கச் சிந்தனையும், சமூகநீதிக்கான போராட்டமும் உருவானபோது திராவிட இலக்கியம் உருவானது.

1916இல் சென்னையில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பிக்கப் பட்டது. இச்சங்கம் 1917இல் அரசியல் கட்சியாக மாறி, 1917 முதல் 1937வரை அரசு அதிகாரத்திலிருந்தது. இச்சங்கம் 1917இல் ‘திராவிடன்’, என்ற பெயரில் தமிழிலும், ‘ஆந்திர பிரகாஷிகா’ என்ற பெயரில் தெலுங்கிலும், ‘Justice’ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் தினசரி
நாளிதழ்களை நடத்தியது.

காங்கிரஸிலிருந்து பிரிந்து வந்து சுயமரியாதை இயக்கம் என்கிற பெயரில் இயக்கம் நடத்திக்கொண்டிருந்த பெரியார் 1944இல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் தலைவரானார். தலைவரானதும் தான் நடத்திக்கொண்டிருந்த சுயமரியாதை இயக்கத்தின் பெயரையும், தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் பெயரையும் மாற்றி திராவிடர் கழகம் என்று 1944இல் அறிவித்தார். அதோடு திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடாது என்ற முடிவையும் வெளியிட்டார். 1949இல் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது.

தென்னிந்திய நல உரிமைச் சங்கமாக இருந்தாலும், சுயமரியாதை இயக்கமாக, திராவிடர் கழகமாக, திராவிட முன்னேற்றக் கழகமாக இருந்தாலும் இவற்றின் அடிப்படை நோக்கமாக இருந்தது சமத்துவமும் சமூக நீதியும்தான்.
Justice Party என்ற பெயரில் ஓர் அமைப்போ, சங்கமோ, கட்சியோ பதிவு செய்யப்படவில்லை தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தான் ‘நீதிக்கட்சி’ என்று சொல்ல
ஆரம்பித்தார்கள். அச்சொல்லே நிலைபெற்று விட்டது. Justice என்ற நாளிதழின் பெயர்தான் நீதிக்கட்சி என்பதற்கான வேர்ச்சொல். தென்னிந்திய நல உரிமைச் சங்கமும், சுயமரியாதை இயக்கமும், திராவிடர் கழகமும், தி.மு.க.வும், இந்த அமைப்புகள் நடத்திய பத்திரிகைகளும்தான் தமிழ் நாட்டில் திராவிட இயக்க இலக்கியங்கள் உருவாவதற்குக் காரணங்களாக இருந்தன.
நீதிக்கட்சியும், தி.மு.கவும் அரசியல் அதிகாரத்திற்கு வந்தவை. திராவிடர் கழகம் இன்றளவும் கொள்கை, பிரச்சார இயக்கமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.

மதத்தின் பெயரால், ஜாதியின் பெயராலும், புராண இதிகாசங்கள், கடவுள், நம்பிக்கைகள், வாய்மொழிக் கதைகள் இவற்றின் பெயரால் எளிய
மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகப் போராடுவது, பிரச்சாரம் செய்வது மற்றும் சமூக மேம்பாடு, முன்னேற்றம், அறிவியல் சிந்தனை என்பவையே இந்த மூன்று இயக்கங்களின் அடிப்படை நோக்கம். தங்களுடைய நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல அவை பயன்படுத்திய கலை வடிவங்கள் தாம் – கவிதை, சிறுகதை, நாவல், நாடகங்கள், திரைக்கதை வசனங்கள். தங்களுடைய கருத்துப் பிரச்சாரத்திற்காகத் திராவிட இயக்கங்களும், திராவிட இயக்கப் பற்றுள்ளவர்களும் நடத்திய நாளிதழ்கள், வார, மாத இதழ்களின் எண்ணிக்கை 287க்கும் மேற்பட்டவை. இந்த இதழ்களுக் கெல்லாம் தாயாக இருந்தவை திராவிடன், Justice ஆகிய நாளிதழ்களே. ஆங்கில இதழ்களையும் நடத்தியிருக்கிறார்கள். இதழ்கள் நடத்துவதை தங்களுடைய போராட்ட வடிவத்தின் முக்கியமான ஆயுதமாகக் கருதியிருக்கிறார்கள்.
திராவிட இயக்கங்களாலும் அவை நடத்திய பத்திரிகைகளாலும் பெரிய எழுத்தாளர் பட்டாளமே தமிழ் நாட்டில் உருவானது.

திராவிட இயக்க எழுத்தாளர்கள் கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம், திரைக்கதை வசனம் என்று எதை எழுதினாலும் அவற்றின் உள்ளடக்கம் ஜாதி ஒழிப்பு, ஆண்டான் அடிமை முறை ஒழிப்பு, குலத்தொழில், குலக்கல்வி முறை ஒழிப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, சமூகநீதி, புராண, இதிகாச, கடவுள் நம்பிக்கைகள் சார்ந்த, கட்டுக்கதைகளுக்கு எதிர்ப்பு, புனித பண்பாடு, கலாச்சாரம், மனு தர்மம் போன்றவற்றால் கட்டமைக்கப்பட்ட சமூகக் கட்டுமானங்களின் மீதும் வலுவான,
அறிவியல்பூர்வமான விமர்சனக் கேள்விகளை எழுப்புவதுதான் திராவிட இயக்க இலக்கியம்.
வகுப்புவாதத்தோடு சமரசம் செய்து கொள்ளாமல் பகுத்தறிவோடு அடித்தட்டு மக்களின் அவலத்தை உள்ளது உள்ளபடியே எழுதி, அரசியல், கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் பெரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் ஏற்படுத்தினார்கள்.

இராமாயணம், மகாபாரதம் போன்ற புராண இதிகாசக் கதைகள், தெய்வக் கதைகள், சமூக
நம்பிக்கைகள் அனைத்தும் அறிவியலுக்கு எதிராகச் சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாக இருக்கின்றன. சமூகத்தை முன்னேற்றப் பாதைக்கு, அறிவியல் பாதைக்கு
இட்டுச் செல்ல மறுக்கின்றன. ஆகவே, அவற்றை எதிர்த்து, மறுத்து எழுத வேண்டியதன் தேவையைத் திராவிட இயக்க எழுத்தாளர்கள்
உணர்ந்து எழுதினார்கள். இராமாயணம், மகாபாரதம், மநு தர்ம சாஸ்திரம் போன்றவற்றுக்கு மாற்றாக சங்க இலக்கியங்களையும், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருக்குறள், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் போன்ற அறநெறி – நீதிநெறி நூல்களையும் முன்னிறுத்தினார்கள்.

தமிழர், தமிழர் நலன், பண்பாடு, கலாச்சாரம்,மொழி, தமிழரின் அடையாளம் என்று பகுத்தெடுத்தார்கள். நம் மண் – நம் பெருமை – நம் இலக்கியம் என்ற முழக்கத்தை முன்னெடுத்தார்கள். இலக்கிய அழகியலுக்கு இலக்கிய உத்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதைவிடவும் கருத்துப் பிரச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுத்தார்கள். அதேநேரத்தில் இலக்கிய அழகியலோடு
எழுதவில்லை என்று குறைசொல்ல முடியாத அளவிற்குத்தான் எழுதியிருக்கிறார்கள். தங்களுடைய ஒவ்வொரு எழுத்தின் நோக்கமும் சமூக மாற்றம், சமூக முன்னேற்றம், ஜாதி ஒழிப்பு, சுயமரியாதை, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, மனிதனை மனிதனாக நினை – சம நீதி – சமூக நீதி, அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் அனைவருக்கும் இடஒதுக்கீடு, எல்லாருக்கும் எல்லாமும் என்ற அடிப்படை லட்சியத்தில் எழுதினார்கள். வெறும் கருத்துப் பிரச்சாரத்திற்காக மட்டுமே எழுதினார்கள் என்று மட்டுமே சொல்ல முடியாது. திராவிட இயக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமான அடையாளமாகவும், இன்றும் தமிழ்நாட்டு மக்களால் போற்றப்படுகின்ற எழுத்தாளராகவும் இருப்பவர் பாவேந்தர் பாரதிதாசன். அவர் எழுதிய ‘பிசிராந்தையார்‘ என்ற நாடகத்திற்காக 1969இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றிருக்கிறார்.

இந்திய இலக்கியச் சிற்பிகள் என்ற வரிசையில் திராவிட இயக்க எழுத்தாளர் டி.கே.சீனிவாசன்
குறித்து சாகித்ய அகடாமி நூல் வெளியிட்டிருக்கிறது. டி.கே.சீனிவாசன் மட்டுமல்ல, இந்திய இலக்கிய சிற்பிகள் வரிசையில் இடம்பெறத் தக்க தகுதி உடைய சிறுகதை மன்னன் என்று
போற்றப்பட்ட S.S.தென்னரசு, ஏ.வி.பி.ஆசைத்தம்பி, இராம.அரங்கண்ணல்,இளமைப்பித்தன், கே.ஜி.இராதாமணாளன் போன்ற நூற்றுக்கணக்கான திராவிட இயக்க எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

பண்டிதத் தமிழில் எழுதுவதுதான் இலக்கியம் – மக்கள் பேசும் தமிழில் எழுதுவது இலக்கியமல்ல, கொச்சைத் தமிழ், பாமரத் தமிழ், கொடுந்தமிழ், நீச பாஷை என்று புறக்கணிக்கப்படும் நிலைமையை மாற்றி ‘மக்கள் தமிழ்’ என்ற முழக்கத்தோடு, புதிய பண்பாட்டு, இலக்கிய, மொழி அரசியலை முன்னெடுத்தார்கள். இவர்தான் எழுத வேண்டும்,
இன்ன மொழியில்தான் எழுத வேண்டும், இவ்வடிவத்தில்தான் எழுத வேண்டும் என்ற இலக்கிய மேட்டுக்குடி மனப்பான்மையை அகற்றி, எழுத்தில் ஜனநாயகத் தன்மையைக் கொண்டுவந்தார்கள். திராவிட இயக்க எழுத்தாளர்களின் படைப்புகளை தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி இலக்கியங்கள் என்று சொல்லலாம்.
திராவிட இயக்க எழுத்தாளர்கள் தங்களுடைய எழுத்தில் எதையெல்லாம் பிரச்சாரம் செய்து எழுதினார்களோ அவற்றில் பல விஷயங்கள், குறிப்பாக சொத்தில் சம உரிமை, 50% உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சட்டமாக்கப்பட்டு தமிழ்நாட்டில் செயல்
வடிவம் பெற்றுள்ள நிலையில், இனி அந்த எழுத்துகளுக்கு என்ன மதிப்பு இருக்கப் போகிறது என்று யாராவது கேட்டால், அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இதுதான்:

பராசக்தி என்ற திரைப்படத்தில் ‘அம்பாள் என்னைக்கடா பேசினாள்’ என்று கலைஞர் ஒரு வசனம் எழுதியிருப்பார். அந்த வசனம் இன்னும் பேசுபொருளாக இருக்கிறது. கடவுள்கள் சார்ந்து சமூகத்தில் கலவரங்கள் நடக்கும்போதெல்லாம் கலைஞரின் கேள்வி உயிர் பெற்று எழுகிறது. இந்தியாவில் ஆன்மிகவாதிகள், துறவிகள் என்ற பெயரில் சொத்து குவிப்பவர்கள் இருக்கும்வரை கலைஞரின் ’சங்கிலி சாமியார்’ என்ற சிறுகதையும் இருக்கும்.

பிராமணியத்தின் வர்ணாசிரம தர்மம், மனுதர்மம் பற்றி இந்தியாவில் பேச்சு இருக்கும் வரை அண்ணா எழுதிய, ‘சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகம் இருக்கும்.
ராமாயணம் இருக்கும்வரை, அதற்கு மாற்றாக அண்ணா எழுதிய ‘நீதி தேவன் மயக்கம்’ என்ற நாடகமும், புலவர் குழந்தையின் இராவணகாவியமும் இருக்கும்.
2024 – ஜனவரியில் நடைபெற்ற சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான புத்தகப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது – பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்னும் புத்தகம்தான்.

தமிழ் மொழி என்று ஒன்று இருக்கும்வரை – தமிழினம் என்று ஒன்று இருக்கும்வரை – தமிழ் இலக்கியங்கள், தமிழ் பண்பாட்டு அடையாளங்கள் இருக்கும்வரை – திராவிட இயக்க எழுத்தாளர் பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய ”தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்… தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்” என்ற கவிதை வரிகளும் இருக்கும்.
இராமாயண, மகாபாரதக் கதைகள், மனுதர்மம், வர்ணாசிரம தர்மம், பிறப்பின் அடிப்படையிலான மேல் கீழ் என்ற இழிவுகள், ஜாதி, மத, இன, வர்க்க வேறுபாடுகள், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள், பண்பாடு, கலாச்சாரம் போன்ற சமூகக் கட்டுமானங்கள் தமிழ்நாட்டில், இந்தியாவில் இருக்கும்வரை – அவற்றிற்கு எதிராகக் குரல் எழுப்பும் ஆயுதங்களாகத் திராவிட இயக்க எழுத்தாளர்களின் எழுத்துகள் இருக்கும்.

(13.03.2024 – புது தில்லி சாகித்ய அகாடமி நடத்திய Festival of Letters நிகழ்வில் பேசிய ஆங்கில வடிவத்தின் தமிழாக்கம்.)