உலகப் பொதுவான சூரியன் குந்திக்குக் கணவனா ? – குடந்தை வய்.மு.கும்பலிங்கன்

2024 ஏப்ரல் 1-15, 2024 கட்டுரைகள் மற்றவர்கள்

மகாபாரதக் கதையில் குந்திதேவி, அவள் மகன் கர்ணன் இருவருக்கும் சூரியன் உரிமையாக்கப்பட்டுள்ளான்.
சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் (விண்மீன்). அறிவியலுக்கு உட்பட்ட ஓர் ஆய்வுப் பொருள் இஃது உலகிற்கே சொந்தமானது. பொதுவானது நாடு, மொழி, மதம், இனம், ஜாதி, சமயம், குலம், கோத்திரம் அனைத்தும் கடந்தது.

இயற்கையில் உருவான இந்த உலக பொதுச் சூரியனை, செயற்கையான இந்துமதக் கற்பனைக் கதையாக வருகிற மகாபாரதத்தில் ஒரு பாத்திரமான – குந்திதேவியின் கணவனாக – கர்ணனின் தந்தையாகக் காட்டவும், வர்ணிக்கவும் எந்த அடிப்படையும் இல்லை.

சூரியனின் தோற்றம் எப்போது? மகாபாரதக் கதை நடந்தது எப்போது? இந்தியாவின் இதிகாசத்தில் மகாபாரதக் கதையின் காலத்தில் சூரியனின் மனைவி குந்திதேவி என்றால், அதற்கு முன்னர் சூரியனின் மனைவிகள் யார்? அவர்களின் பெயர்கள் என்ன? குந்திதேவி வருகைக்கு முன் ஒரு மனைவியுடன் வாழ்ந்தாரா? பல மனைவியருடன் வாழ்ந்தாரா? குந்தி தேவிக்குப் பின் சூரியனின் மனைவி யார்? போன்ற கேள்விகள் வரவும் எழவும் நியாயம் அவசியம் உண்டல்லவா! ‘பாரத் மாதா கி ஜே’ போடும் பக்த கோடிகளே இக்கேள்விகளுக்குத் தாங்கள் தரப்போகும் பதில் என்ன?

மேலும் ஒரு வினா எழ நியாயம் இருக்கிறது. நெருப்பு வடிவமான சூரியன் குந்திதேவியுடன் கூடிக் குலவிக் குடும்பம் நடத்தியது எந்தக் காலத்தில்? எந்த ஆண்டில்? வரலாற்றுக் குறிப்புகளில் ஆதாரம் ஏதும் இல்லையே! நெருப்புப் பிழம்புக்குப் பிள்ளை பிறக்குமா? பிறக்கச் செய்யத்தான் முடியுமா?
சில நாகரிகமான – நளினமான எழுத்தாளர்கள் “கதையில் வரும் சம்பவங்களும் காட்சிகளும் பெயர்களும் கற்பனையே; உண்மை அன்று” என்று முகப்புரையிலேயே சொல்லிவிடுவார்கள்.

இந்த நாகரிக நளினப் பண்பு அந்நாளைய மகாபாரத எழுத்தாளருக்கு இல்லாமல் போய்விட்டது போலும்! இதில் இன்னுமொரு பெருங்கூத்து என்னவெனில், உலக முழுமுதல் கடவுளான விநாயகப் பெருமான் சொல்ல வியாச முனிவர் கதையை எழுதினாராம். காரணம், புளுகுவதுதான் புளுகுகிறோம். அதை அண்டப் புளுகாகவும், ஆகாசப் புளுகாகவும் புளுகிவிடுவோமே என்ற முடிவுக்கு வந்துவிட்டனர் போலும்!
மேலும், பக்தி மார்க்கக் கடவுள் கதை என்றால் –

கடவுள் வரலாறு என்றால் அதைக் கேட்டுக் கொள்ள வேண்டுமே தவிர, எதிர் வினா போட்டுச் சிந்திக்கக் கூடாது என்றும் வாய்ப்பூட்டுப் போட்டுவிட்டார்கள்.
மேலும் ஒரு கூடுதல் செய்தி:- இராமாயணப் பாரதக் கதைகள் எதுவும் தமிழ்நாட்டில் – தென்னாட்டில் – திராவிட நாட்டில் நடந்ததாக எந்தவொரு வரலாற்றுக் குறிப்பும் கிடையாது. அனைத்துக் கதைகளுமே வடநாட்டில் வட இந்தியாவில் நடந்ததாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் மொழியில் – எழுதிய இராமாயண பாரதக் கதைகள் கற்பனைகள் நிறைந்த – பொய்மை மலிந்த கட்டுக்கதைகள் என்பதையும்; இவற்றுக்குமுன் தென்னகத் திராவிடத் தமிழர்கள் தங்கள் உயிர்மொழியாம் தமிழில் எழுதிய திருக்குறள், நாலடியார் மற்றும் சங்க இலக்கியங்கள் போன்ற செம்மை சார்ந்த நூல்கள் மட்டுமே உண்மை வரலாற்றுக்கான சான்றுகளாய் விளங்கும் எடுத்துக்காட்டுகள் ஆகும் என்பதையும் இங்கு ஈண்டு ஒப்புநோக்க வேண்டும்.