பண்பாட்டுப் படையெடுப்பிற்கு பலியாகலாமா? சிந்திப்பீர் !

2023 நவம்பர் 1-15, 2023 பெட்டி செய்திகள்

நவராத்திரி கொண்டாடி, நாக்கிலே எழுதினால் படிப்பு வரும் என்று ஆரிய பார்ப்பான்முன் அமரும் தமிழா! உனக்கு சரஸ்வதியா கல்வி கொடுத்தாள்? சரஸ்வதி கல்வி கொடுத்திருந்தால் உன் பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் அவள் ஏன் கொடுக்கவில்லை? சிந்தித்தாயா? ஏகலைவன்களைக் காவு வாங்கிய அவலம் மாறியது யாரால்? எண்ணிப் பார்த்தாயா?
தீபாவளியைத் தீவிரமாய்க் கொண்டாடுகிறாயே! அது தமிழன் பண்டிகையா? காசைக் கரியாக்கும், காற்றை மாசாக்கும் கண்மூடிச் செயல்களைக் கற்றவர்களும் செய்வது சரியா? கற்றவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டாமா? விழி திறக்க வேண்டாமா?

கார்த்திகை தீபம் என்று மூன்று நாள்களுக்கு விளக்கேற்றி உணவுக்குப் பயன்படும் எண்ணெய்யை வீணடிப்பது விவேகமா? உண்ணப் பயன்படும் பூசணிக்காயை, தேங்காயை நடுச்சாலை
யில் உடைத்து நாசப்படுத்துகிறாயே, இது தமிழன் சிறப்புக்கு உகந்ததா? அவற்றை ஏன் உடைத்து நாசமாக்க வேண்டும்? அதனால் கிடைக்கும் பயன் என்ன? சிந்தித்தாயா?
தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதை மறந்து, மறுத்து சித்திரை முதல் நாளைக் கொண்டாடுகிறாயே! அது ஆரிய பார்ப்பனப் பண்பாட்டின் திணிப்பால் வந்த அவலம், அபகரிப்பு என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? சித்திரை ஆண்டுப் பிறப்பைக் கைவிட வேண்டாமா?

ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிப்போம்!
தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம்!

சிந்தியுங்கள்! செயலில் காட்டுங்கள்!