அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (323) – காளாஞ்சிமேட்டில் பெரியார் படிப்பகம் திறப்பு!

2023 அய்யாவின் அடிச்சுவட்டில் செப்டம்பர் 16-30, 2023

காளாஞ்சிமேட்டில் பெரியார் படிப்பகம் திறப்பு!
– கி. வீரமணி

வழக்குரைஞர் தஞ்சை அ. இராமமூர்த்தி – சரசுவதி ஆகியோருடைய செல்வனும் போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் பணிபுரிபவருமான இரா.அப்புவும், நல்லூர் மு.துரைராஜ் அவர்களின் மகனும் திருப்பெரும்புதூர் பொறியியல் கல்லூரியில் பணிபுரிபவருமான து.நித்யாவும் வாழ்க்கைத் துணையேற்கும் நிகழ்ச்சி கடந்த 23.1.2004 அன்று காலை தஞ்சாவூர் சிவசிதம்பரம் பிள்ளை திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் தலைமையேற்றுப் பேசினார். துளசி அய்யா வாண்டையார் மணமக்களுக்கு மாலை எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி பார்வதி, பழ. நெடுமாறன், கவிஞர் காசிஆனந்தன், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ‘தமிழரசி’ ஆசிரியர் நடராசன், அமைச்சர் கோசி. மணி மற்றும் நானும் கலந்துகொண்டு உரையாற்றினோம்.

பழம்பெரும் திராவிடர் இயக்கத் தொண்டரும், தந்தை பெரியார் அவர்களால் “கம்பவுண்டரய்யா’ என அழைக்கப்பட்டவருமான பெரியார் பெருந்தொண்டர் கா. உலகநாதன் அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி 24.1.2004 அன்று காலை உரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி மேலையூர் கீழத்தெருவிலுள்ள அவரது இல்லத்தில் நடந்தது.

மத்திய நிருவாகக் குழு செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். மறைந்த கா. உலகநாதன் அவர்களின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினோம்.

மறைந்த கா. உலகநாதன் அவர்கள் படித்துப் பாதுகாத்து வைத்திருந்த கழகம் வெளியிட்ட நூல்களை கண்ணந்தங்குடி மேற்கு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு அன்பளிப்பாக தலைமை ஆசிரியர் வேணுகோபாலிடம் நாம் வழங்கினோம்.

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் தருமபுரி அ. தீர்த்தகிரி- சுகிலா ஆகியோரின் மகன் வழக்குரைஞர் தீ. சோழவேந்தனுக்கும், சேலம் சி. அர்ச்சுனன் அ. சின்னப்பாப்பா ஆகியோரின் மகள் அ. இராஜலெட்சுமிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 26.1.2004 அன்று காலையில் எனது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பின்னர் ‘விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’ ஆகிய இதழ்களுக்கு எம்மிடம் சால்வைக்குப் பதிலாக சந்தா நன்கொடையாக ரூ.3225 வழங்கினார். வாழ்த்துரை வழங்கியவர்களுக்கு சால்வைக்குப் பதிலாக தந்தை பெரியார் எழுதிய நூல்களையும் எனது நூல்களையும் அ. தீர்த்தகிரி வழங்கினார்.

தந்தை பெரியார் அவர்களிடம் மிகுந்த பாசமும் அன்பும் கொண்டு பழகியவரும், அதேபோல் நம்மிடமும் இறுதிவரை மிக நெருக்கமாகவும் அன்புடனும் பழகி வந்தவருமான பெரியார் பெருந்தொண்டர் சென்னை எஸ்.எம். ஜக்கிரியா அவர்கள் 24.1.2004 அன்று இயற்கை எய்தியது கேட்டு மிகவும் துயருற்றோம். அன்று வெளியூரில் இருந்த காரணத்தால் இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போயிற்று. 29.1.2004 அன்று சென்னை திரும்பியதும் அவரது இல்லத்திற்குச் சென்று அவர்தம் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றேன். உடன் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன், சுற்றுப் பயணச் செயலாளர் சாமி. திராவிடமணி, வடசென்னை மாவட்ட தி.க., தலைவர் ப. கவுதமன், மாவட்ட செயலாளர் கோ. கதிரவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சி. நாகேந்திரன் ஆகியோர் வந்திருந்தனர்.

மன்னார்குடி ஒன்றியம் காளாஞ்சிமேட்டில் தந்தை பெரியார் படிப்பகம், கி. வீரமணி நூலகம் திறப்பு விழா  ஜாதி ஒழிப்புப் போராட்ட வீரரும் பெரியார் பெருந்தொண்டருமானஅ. முருகையன் அவர்களின் 88ஆம் பிறந்தநாள் விழா என முப்பெரும் விழாப் பொதுக் கூட்டம் 31.1.2004 அன்று மிகச் சிறப்பாக நடந்தது.
முதுபெரும் லட்சிய வீரர் அ. முருகையன் தனது சொந்த நிலத்தில் ரு.50,000 செலவில் புதிய கட்டடம் எழுப்பி தந்தை பெரியார் படிப்பகத்தினை திராவிடர் கழகத் தலைவர் திறந்து வைத்தார். அடுத்து தந்தை பெரியார் சிலை அமைக்கப்பட்ட திடலில் கழகக் கொடியினை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் வசந்தா ஊமைத்துரை ஏற்றி வைத்தார்.

காளாஞ்சிமேட்டில் தந்தை பெரியார் படிப்பகம், கி.வீரமணி நூலகம் திறப்பு விழா

காளாஞ்சிமேடு நகரில் உள்ள பெரியார் சிலை அருகில் 1957இல் தந்தை பெரியார் இட்ட ஆணையை ஏற்று ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களான ஆர்.ரெங்கசாமி, கோஆறுமுகம்,வி. கோபால், இரா.சோமு, இ.சக்திவேல்,ச. தங்கராசு, வெ.முத்துக்கண்ணு, க.பக்கிரிசாமி ஆகியோர் இன்று நம்மிடையே இல்லையானாலும், என்றைக்கும் போராட்டத் தளபதிகளாக இருந்துவரும் வீரர்களான அ. முருகையன், க. சக்திவேல், கோ. கலியமூர்த்தி, க. சூரியமூர்த்தி, ச. பரமசிவம், வீ. கணேசன், சுப்பையன், ஜெகநாதன் ஆகியோர் புதிய இளைஞர்களை வழி நடத்திச் செயல்பட்டு வருவதைப் பாராட்டி அவர்களுக்கு கருப்புச் சட்டைத் துணி அணிவித்துச் சிறப்புச் செய்தோம்.

“ஜாதி ஒழிப்பு நினைவுக் கல்வெட்டினை மத்திய திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு திறந்து வைத்தார்.
காளாஞ்சிமேடு கிராமத்தில் கழகத்திற்குப் புதிய வரவுகளாக வந்து சேர்ந்துள்ள இளைஞர்களான ஆர். சுதாகர், இராசசேகர், விசயேந்திரன், பி. அன்பரசன், எஸ். விநோத், எம். தேவேந்திரன், மாணவர்கள் கே. திலீபன், கே. கவாஸ்கர், கே. கலைவாணன், ஏ. ராஜா (எ) பாரதிதாசன், ஏ. பிரபாகரன், விநோத், கே.பி.கிருட்டினராசு ஆகியோருக்குக் கைத்தறி ஆடை அணிவித்துப் பாராட்டி வரவேற்றோம்.

உரத்தநாடு, புலவன்காடு மெ. நல்லான் உ. மாரிக்கண்ணு ஆகியோரின் மகனும் தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரியின் முதல்வர் டாக்டர். நல். இராமச்சந்திரன் அவர்களின் சகோதரருமான பொறியாளர் நல். தங்கமணி –  திருவையாறு, வெண்ணைமங்கலம் ப. வீரையன் – எஸ். மல்லிகா ஆகியோரின் மகள் பொறியாளர் வீ. கீர்த்தி இவர்களின் இணையேற்பு நிகழ்வு 1.2.2004 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் ஓரியன்டல் டவர்ஸ் திருமண அரங்கில் எமது தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தஞ்சை டாக்டர் சொரூபராணி செல்வராசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொழிலதிபர் திருச்சி ‘வீகேயென்’ எல். கண்ணப்பன் முன்னிலை வகித்தார். மணமக்களுக்கு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி கூறி திருமணத்தை நடத்தி வைத்தோம். பேராசிரியர் உ. பர்வீன் நன்றி கூறினார்.

பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் நல். இராமச்சந்திரன் மணவிழாவிற்கு வந்த அனைவரையும் சிறப்பாக வரவேற்றார். இவ்விழாவில் திருமதி. மோகனா வீரமணி, அமெரிக்கா (வாஷிங்டன்) தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜ், திருமதி. சரோஜினிராஜ், டாக்டர் மு. தவமணி, மாவட்ட தி.க., தலைவர் கு. வடுகநாதன் மாவட்டச் செயலாளர் விஜயகுமார், மாவட்டத் துணைத் தலைவர் மு.அய்யனார், வழக்குரைஞர் சி. அமர்சிங், கல்லூரிப் பேராசிரியர்கள், பணியாளர்கள், திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. பார்வதி, ஏ.பி.ஜே. மனோரஞ்சிதம், வழக்குரைஞர் வீரமர்த்தினி, கலைச்செல்வி அமர்சிங் உள்பட ஏராளமான கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

உரத்தநாடு கு. செயமணி குழந்தைவேல் ஆகியோரின் மகன் கு. கவுதமனுக்கும், வேதாரண்யம் மாவட்டக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பூவத்தூர் கோ. கஸ்தூரி – க. விமலா ஆகியோரின் மகள் க. மேகலாவுக்கும், வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த விழா கடந்த 1.2.2004ஆம் நாள் ஞாயிறு 11 மணியளவில் உரத்தநாடு டி.கே.எம். திருமண அரங்கில் மிகச் சிறப்பாக நடந்தது.

கு. அய்யாத்துரை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் சாமி. திராவிடன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் வை. குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மணவிழாவிற்குத் தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றினேன்.

மணமக்களை வாழ்த்தி நெடுவை ஊராட்சி மன்றத் தலைவர் பெ. வெங்கடாசலம், பூவைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் பெ. வெங்கடாசலம், பூவைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம், புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி முன்னால் பொது மேலாளர் க. இராமையா, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வி. கருப்பையா, புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ஆர். செயராமன், புதுக்கோட்டை மாவட்ட தி.க. தலைவர் க.காளிமுத்து, பேராசிரியர் முனைவர் இராமசாமி, வழக்குரைஞர் பெருமாள், கழகச் செயலவைத் தலைவர் ராசகிரி கோ. தங்கராசு மற்றும் பலர் பேசினர்.

நீடாமங்கலம் ஒன்றியம், ஒளிமதி கிராமத்தில் நகர தி.க., அமைப்பாளர் எம். பொன்னுசாமி – கலாவதி ஆகியோரால் புதிதாகக் கட்டப்பட்ட “சுமதி இல்லம்” அறிமுக விழா 2.2.2004 அன்று நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினோம்.

திருவாரூர் மாவட்டம் காவலக்குடி பெரியார் பெருந்தொண்டர் மறைந்த சா. மாரிமுத்து பேத்தியும் எம். கண்ணன்_ ராணி ஆகியோரின் மகளுமான க. அமுதா மற்றும் சாலியமங்கலம் கா.குப்புசாமி – கு. காந்திமதி ஆகியோரின் செல்வன் கு. சீனிவாசன் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வு திருவாரூர், கமலாலயம் வடகரையிலுள்ள பி.ஆர்.எம். திருமண அரங்கில் 2.2.2004 அன்று காலையில் மிகச் சிறப்பாக நடந்தது. சாலியமங்கலம் ஒன்றிய தி.க., தலைவர் வை. துரைராசன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தஞ்சை கோட்டப் பிரச்சார அமைப்புக் குழு தலைவர் எஸ்.எஸ். மணியம், கீழப்படுகை முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் கே. முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்விற்கு நாம் தலைமையேற்று மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை ஏற்கச் செய்து சிறப்புரையாற்றினோம். மணமக்களை வாழ்த்தி, மாவட்ட தி.க., மகளிரணி தலைவர் சுப்புலட்சுமிபதி, மாவட்ட தி.க. தலைவர் வீ.மோகன் ஆகியோர் பேசினர்.

மணமகன் சார்பில் சால்வைக்குப் பதிலாக ‘விடுதலை’ ‘உண்மை’, பெரியார் பிஞ்சு சந்தா எம்மிடம் வழங்கப்பட்டது.

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ‘தமிழரசி’ ஆசிரியர் டாக்டர் ம. நடராசன் தொகுத்த “அண்ணா நூல்கள் வெளியீட்டு விழா, பேரறிஞர் அண்ணா நினைவு நாள் ஆகியவை கவியரங்கம்-, கருத்தரங்கத்துடன் அண்ணா நினைவு நாளான 3.2.2004 செவ்வாய் மாலை சென்னை, காமராசர் அரங்கில் தொடங்கியது. புலவர் வரத கோவிந்தராசன் தலைமையில் அண்ணாவைப் போற்றிப் பாடிய அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் விக்ரமன் வரவேற்புரையாற்றினார். மதுரை ஆதின கர்த்தர் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். பேரறிஞர் அண்ணா எழுதிய ‘தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள்’ 10 தொகுதிகள் கொண்ட நூலினையும், சென்னை கலைவாணர் என்.எஸ்.கே. சிலை திறப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா பேசிய உரை குறுந்தகட்டினையும் யாம் வெளியிட்டோம். ம.தி.மு.க. அவைத் தலைவர் எல். கணேசன் தொழிலதிபர்கள் குற்றாலிங்கம், எஸ்.எம். மனோகரன், வி.செ. கந்தசாமி, முத்துக்குமாரசாமி, பேகன் அய்.ஏ.எஸ். ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

‘தமிழரசி’ ஆசிரியர் டாக்டர் ம. நடராசன் தொகுத்த அண்ணா நூல்கள் வெளியீட்டு விழா

பேரறிஞர் அண்ணாவின் தொண்டினையும் ஆற்றிய சமுதாயப்பணி, அரசியல் பணிகளையும் விளக்கி வழக்குரைஞர் இராமலிங்கம், ‘சாமித்தோப்பு’ தவத்திரு பாலபிரஜாபதி அடிகளார், ம.தி.மு.க. அவைத் தலைவர் எல்.கணேசன் ஆகியோர் பேசினர். அடுத்து நாம் வாழ்த்துரை வழங்கினோம்.

‘தமிழரசி’ ஆசிரியர் டாக்டர் ம. நடராசன் ஏற்புரையாற்றினார். அகில இந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் நிலவன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். சென்னை மாவட்ட அ.இ.த.எ. சங்கச் செயலாளர் புலவர் பெ.இ.பிரபாகரன் நன்றி கூறினார். பேரறிஞர் அண்ணா பற்றாளர்கள், தமிழ் படைப்பாளர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், எழுச்சிமிக்க தமிழ் இளைஞர்கள் மகளிர் முதலியானோர் திரளாகப் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தமிழக மூதறிஞர் குழுவின் தலைவர் பேராசிரியர் ஞான. அய்யாசாமி அவர்களின் 80ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் சாலையிலுள்ள ஃபிரீடம் ஹால் மன்றத்தில் 5.2.2004 வியாழன் இரவு 7 மணியளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அடுத்து பிறந்த நாள் வாழ்த்தரங்கம் அவருடைய மருமகனார் டாக்டர் ஜி. திருநாவுக்கரசு வரவேற்புரையுடன் தொடங்கியது. முதலில் தமிழ்நாடு அரசு மேனாள் தலைமைச் செயலாளர்கே. சொக்கலிங்கம் அய்.ஏ.எஸ்., பேசுகையில், “நானும் பேராசிரியர் ஞான.அய்யா சாமியும் 1943ஆம் ஆண்டிலிருந்து நெருக்கமாகப் பழகிய நண்பராவோம் என்று பேசினார். மேனாள் துணைவேந்தர் தமிழறிஞர் வா.செ. குழந்தைச்சாமி, நீதியரசர் பெ. வேணுகோபால், சென்னை எக்ஸ்னோரா நிறுவனத்தின் தலைவர் எம்.பி. நிர்மல், ஆகியோர் உரையாற்றியபின் நிறைவாக நாம் பாராட்டிப் பேசினோம். முன்னதாக பேராசிரியர் ஞான. அய்யாசாமி, இராசாத்தி அம்மாள் ஆகியோருக்கு நாமும், திருமதி மோகனாவும் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தோம்.

திருவள்ளூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் திருத்தணி காசிநாதபுரம் எம். பாரதி_ எஸ். மாலா ஆகியோரின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 6.2.2004 அன்று மாலை மிகச் சிறப்பாக நடந்தது.

திருத்தணி ராமாராவ் திருமண மண்டபத்தில், ஒப்பந்த உறுதிமொழி ஏற்கச் செய்து திருமணத்தை நடத்தி வைத்துச் சிறப்புரையாற்றினோம்.
மாவட்டக் கழகச் செயலாளர் கொ. சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மணவிழாவிற்கு, மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் மா. பெரியண்ணன், மாவட்ட தலைவர் வழக்குரைஞர் கெ. கணேசன், கழகப் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் பா.குப்பன், மாவட்ட தி.க. துணைத்தலைவர் மா.மணி, ஒன்றியச் செயலாளர் கே. மூர்த்தி, நகர செயலாளர் கா.மு.க தமிழ்மணி, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ந. அறிவுச்செல்வன், மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்குரைஞர் ம. நாராயணசாமி, காசிநாதபுரம் கோ.கிருட்டினமூர்த்தி, பெரியார் பெருந்தொண்டர் கே.பி. நேசன், எம்.கே. சந்திரன், தலித் மக்கள் முன்னணி நிறுவனர் தங்கவயல் வாணிதாசன், மாவட்ட த.ம.மு. தலைவர் மா. பழநி, திராவிடர் கழக இளைஞரணித் தோழர்கள், மகளிரணி தோழியர்கள், கழகத்தின் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

சிதம்பரம் மாவட்டம் பெண்ணாடம் நகர் திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 7.2.2004 அன்று சனிக்கிழமையன்று இரவு 7 மணிக்கு பெண்ணாடம் பெரியார் திடலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முதலில் அகரம் சீகூர் ஆறுமுகம் சிலம்பாட்டம், சுருள் கத்தி, தீப்பந்தம் நிகழ்ச்சியும், மந்திரமா? தந்திரமா? எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சியும் நடத்தப்பட்டன.
பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் தா.கோ. சம்பந்தம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர். பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர் த.செயக்குமார் முன்னிலை வகித்தார். கழகத் துணைப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு, பிரச்சாரச் செயலாளர் துரை. சந்திரசேகரன், கோட்ட பிரச்சாரக்குழுச் செயலாளர் இராமபிரபா ஜோசப், கோட்டப் பிரச்சாரக் குழுத் தலைவர் புலவர் ந. தங்கவேலன், மாவட்ட ப.க. அமைப்பாளர் க. நாராயணசாமி, மாவட்ட துணைத் தலைவர் வெ. ஞானசேகரன், கடலூர் மாவட்ட தலைவர் நா. தாமோதரன், மாவட்ட து. செயலாளர் தி. லெனின், மாவட்ட தொழிலாளர் அமைப்பாளர் கொ.மணிவண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அ. செங்குட்டுவன், நெய்வேலி நகரத் தலைவர் சொ.தண்டபாணி ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக, இயக்கக் கொள்கைகளை விளக்கும் பெரியாரின் பெருஞ்தொண்டை எடுத்துக்கூறியும் சிறப்புரையாற்றினோம். விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த மறைந்த கழகப் பொதுச் செயலாளர் துரை. சக்ரவர்த்தி, கிலிமங்கலம், ந. இலக்குமணன், புலிவலம் பெ.கோ. கிருட்டினன் ஆகியோரின் உருவப்படங்களைத் திறந்து வைத்தோம். மங்களூர் ஒன்றிய தி.க. தலைவர் ஆசிரியர் மு. நடராசன் நன்றி கூறினார்.

கடலூர் மாவட்டம், திட்டக்குடி தமிழாசிரியர் வை. இளவரசன் – அலர்மேலு ஆகியோரின் மகன் சிந்தனைச் செல்வனுக்கும், பெரம்பலூர் மாவட்டம் தூத்தூர் ம. தியாகராசன் – செந்தமிழ்ச்செல்வி ஆகியோரின் மகள் சுமதிக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவுக்குத் தலைமையேற்று நடத்தி வைத்தோம்.

திட்டக்குடி இராமலிங்கம் -அஞ்சுகம் மணவிழாவை 8.2.2004 அன்று காலை 8.30 மணியளவில் நடத்திவைத்து சிறப்புரையாற்றினோம்.
அந்தமான் தி.மு.க., மாநில அமைப்பாளர் ஏ.ஆர். மருதவாணன்- சரோஜா ஆகியோரின் மகன் என்.எம். அருண்பாலாஜிக்கும் சென்னை – சைதாப்பேட்டை ஜி. சண்முகம் – செல்வி ஆகியோரின் மகள் எஸ். லட்சுமிக்கும் 10.2.2004 அன்று மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை, ரங்கபாஷ்யம் தெருவிலுள்ள மோகனம்பாள் கல்யாண மண்டபத்தில் மணவிழா வரவேற்பு நடந்தது. நாம் கலந்துகொண்டு சுயமரியாதைத் திருமணம் சார்ந்த கருத்துகளை எடுத்துக்கூறி வாழ்த்துரை வழங்கினோம்.

பெரியார் பெருந்தொண்டர் கருஞ்சட்டை மாவீரர் குடந்தை வட்டம் பட்டீசுவரம் மானமிகு அய்யாசாமி (வயது 77) 11.2.2004 அன்று இரவு மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து பெரிதும் வருந்தினோம்.

பட்டீஸ்வரம் மானமிகு அய்யாசாமி

குடந்தை நகர திராவிடர் கழகச் செயலாளராக, குடந்தை வட்ட திராவிடர் கழகச் செயலாளராக, ஜாதி ஒழிப்புப் போராட்டம், இந்திய எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்ற வீரராக, ஒரே இயக்கம், ஒரே தலைமை, ஒரே கொடியின் கீழ் நிலை குலையாது பணியாற்றிய கட்டுப்பாட்டின் கவசமாக வாழ்ந்த அய்யாசாமி அவர்களின் மறைவு பெரும் இழப்பாகும். அவரது பிரிவால் துயருற்ற அவருடைய அன்புத் துணைவியார், இரு மகன்கள், மகள் ஆகிய குடும்பத்தினருக்கும், கழகத் தோழர்களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம், சுயமரியாதைச் சுடரொளியாகிவிட்ட கருப்புச் சட்டை மாவீரருக்கு வீர வணக்கத்தைச் செலுத்துகிறோம்.” என்று அறிக்கை வெளியிட்டோம்.

தலைமைக் கழகத்தின் சார்பில் கழக செயலவைத் தலைவர் மானமிகு ராசகிரி கோ.தங்கராசு அவர்கள் தோழர்களுடன் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
அகில இந்திய மருந்தாளர்கள் கூட்டமைப்புத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட, ஊட்டி, கே.எஸ்.எஸ். மருந்தியல் கல்லூரி முதல்வர் டாக்டர் பி. சுரேஷுக்கு 14.2.2004 அன்று காலை 9:30 மணியளவில் சென்னை காமராஜ் அரங்கத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவினை தமிழ்நாட்டில் உள்ள மருந்தியல் கல்லூரிகளின் நிருவாகத்தினர், மருந்தகத் தொழிற்சாலைகள், மருந்தாளர்கள் கூட்டமைப்பு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டுத்துறை அமைப்பாளர்கள் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

டாக்டர் சுரேஷைப் பாராட்டி அறிஞர்கள் சிலர் பேசினர். நிறைவாக பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் என்கிற முறையில் அவரின் சிறப்புகளை எடுத்துக் கூறிப் பாராட்டி உரையாற்றினோம்.

கெடார் சு. நடராசன் இல்லத் திருமணம்

14.2.2004 சனிக்கிழமை மாலை 5:00 மணியளவில் செஞ்சி ஏ.என்.ஏ. வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில், விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர், பெரியார் பெருந்தொண்டர், கெடார் சு. நடராசன் – சவுந்தரி இல்ல மணவிழா எமது தலைமையில் நடைபெற்றது. மணமக்கள் வழக்குரைஞர் சு.ந.விவேகானந்தன் – சி.சித்திரலேகா ஆகியோரின் இணையேற்பு விழாவை நடத்திவைத்து, உறுதிமொழி ஏற்கச்செய்து உரையாற்றினோம். இயக்கத் தோழர்கள், பல்வேறு கட்சித் தோழர்கள் கலந்துகொண்டனர்.

தஞ்சை – வல்லம் பெரியார் மணியம்மை மகளிர் பொறியியல் கல்லூரியில் 16.2.2004 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்திய – ஜெர்மானியக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த ஜெர்மானியப் பொறியியல் வல்லுநர்களை சென்னை – பெரியார் திடலில் வரவேற்று விருந்தளித்தோம்.

கும்பகோணத்தில் 18.2.2004 அன்று மகாமக மூடநம்பிக்கை செயல்பாடுகளை எதிர்த்து பொதுக்கூட்டம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான கழகத் தோழர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு ஆர்வமுடன் கேட்டனர். அக்கூட்டத்தில் நாம் சிறப்புரையாற்றுகையில்,
“22ஆம் நூற்றாண்டை நோக்கிப் போக வேண்டியவர்கள்தான். 21ஆம் நூற்றாண்டிலே இருந்து கொண்டிருக்கிறோம். இது அறிவியல் மாற்றங்கள் வேகமாக வளர்ந்துகொண்டிருக்கும் காலகட்டம். (இதற்கு முன்னாலே ஒரு 3 அல்லது 4 நூற்றாண்டுகளிலே இருந்துதான் தொழிற்புரட்சியிலே இருந்து எல்லா வளர்ச்சிகளும் ஏற்பட்டிருக்கின்றன. மனிதன் ஒரு காலத்திலே குகையில் வாழ்ந்தான். நிர்வாணமாகத் திரிந்தான். பிறகு கொஞ்சம் மானவுணர்வு வந்த பிற்பாடு எப்படியோ புரிந்து இலைகளையும், தழைகளையும் தனக்கு ஆடைகளாக ஆக்கிக்கொண்டான். அப்படிப்பட்ட மனிதன் வளர்ந்து முன்னே செல்லும்போது அவன் ஆடையைப் பருத்தியிலே இருந்தும் மற்றும் பட்டுப்பூச்சிக் கூடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பட்டு நூலால் மிக நேர்த்தியான பட்டு உடைகளை தயாரித்து உடுத்திக்கொண்டான்.இன்னும் பல்வேறு சிந்தனைத்திறன், செயல் திறன்மிக்க அறிவுகளையெல்லாம் தெரிந்து வளர்த்துகொண்டிருக்கிறான். எனவே, வளர வேண்டிய மனிதன் தேயக்கூடாது. பின்னாக்கிப் போகக்கூடாது. இதுதான் மனித சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படுகின்றவனுடைய சிந்தனையாக இருக்க முடியும். நாட்டுக் குடிமக்கள் எல்லோருக்கும் உரிய கடமை_ அடிப்படை கடமை அறிவியல் சிந்தனையை மனப்பான்மையைப் பரப்ப வேண்டும்.
இன்னும் சில நாள்களில் இவ்வூரில் மகாமகம் நடக்கவிருக்கிறது. அதில் எவ்வளவு மூடநம்பிக்கை நிகழ்வுகள் நடைபெறுகின்றன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். சிறிய குளத்தில் ஆயிரக்கணக்கானோர் மணிக்கணக்கில் நின்று மூழ்கினால் எவ்வளவு சுகாதாரக்கேடு!

அதன்பிறகு பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரியில் மூன்று நாள்கள் நடைபெற்ற காவேரிப்படுகை மற்றும் சுற்றுச்சூழல் குறித்து நிகழ்ந்த பணிப்பட்டறையின் நிறைவு விழா பிப்ரவரி 18ஆம் நாள் கருத்தரங்க அறையில் நிகழ்ந்தது. கல்லூரியின் முதுநிலை விரிவுரையாளர் ஆர். சவுமியன் வரவேற்புரை நிகழ்த்திய பின்னர், கல்லூரியின் தாளாளரும் வரி ஆலோசகருமான டாக்டர் எஸ். ராஜரத்தினம் அவர்கள் தமது உரையில், இக்கருத்தரங்கத்தைத் தொடர்ந்து ஒரு வைப்பு நிதி ஏற்படுத்தி, இதுபற்றிய ஆய்வினை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து ஜெர்மானிய நிபுணர் உரையாற்றினார். கல்லூரி பேராசிரியர்கள் பரிசளித்துப் பாராட்டப்பட்டனர். பேராசிரியர் சுப்பையா அவர்களின் நன்றியுரையுடன் நிறைவு விழா இனிதே நிறைவுற்றது.

(நினைவுகள் நீளும்)