மே தினமும் பெண் தொழிலாளர்களும் – முனைவர் வா.நேரு

2024 மே 1-15, 2024

தந்தை பெரியார் அவர்களால் 1930களிலேயே தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டு ஆண்டுதோறும் நாமெல்லாம் கொண்டாடும் நாள்.

தொழிலாளர்கள் தினம் கொண்டாட ஆரம்பிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகின்றது.தொழிலாளர் என்று நினைக்கும்போது உலகின் சரிபாதியாக இருக்கும் பெண் தொழிலாளர்களின் நிலை என்ன என்பது நினைவுக்கு வருகிறது. எவ்வளவோ உலகில் மாறுதல்கள் ஏற்பட்ட நிலையில் அறிவியல் வளர்ச்சிகளும்,செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய புதிய கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கும் இந்த நாளில் பெண்களுக்கு பணிபுரியும் வாய்ப்புக்
கிடைப்பதென்பதே அரிதாகத்தான் அமைகின்றது. நமது நாட்டில் மட்டுமல்ல,உலக அளவில் பெரும்பாலான நாடுகளிலும் இப்படித்தான் இருக்கிறது.
‘‘பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கை கொண்டவர்கள். இரண்டொரு உறுப்பில் மாற்றமே அல்லாமல், மற்றபடி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன்’’ என்றார் தந்தை பெரியார். அது மட்டுமல்லாது “தனி உரிமை உலகில் பெண்கள் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும். தங்கள் ஆண்பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல்,பெண்களுக்கே செலவு செய்து படிக்கவைக்கவேண்டும். வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும்“ என்று குறிப்பிட்டார்.

பெண்களுக்கு வாழ்க்கையில் வருமானம் தரக்கூடிய தொழில்கள் வேண்டும். நமது பெண்கள், அவர்களின் வாழ்க்கையில் ஒரு வருமானம் வரக்கூடிய நிலையில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தன்னம்பிக்கையோடு அணுகுகிறார்கள். எதையும் எதிர்கொள்ளும் மன உறுதி அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் அவர்கள் தன்னுடைய தேவைகளுக்கே அடுத்தவர்களின் கைகளை எதிர்பார்த்து இருக்கும் நிலையில் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளைச் சமாளிப்பதில் சிக்கல்கள் எழுகின்றன. அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் பெண்களுக்கு வாழ்க்கையில் ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்கவேண்டும், அதன்மூலம் அவர்களுக்கு வருமானம் வரவேண்டும் எனக் குறிப்பிட்டார்கள்.

பெண்கள் தங்கள் கால்களில் நிற்பதற்கு ஒரு வேலை வாய்ப்பு, ஊதியம் என்பது மிக அடிப்படை. ஆனால் அப்படிப் பெண்கள் வேலை தேடும்போது அவர்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்பு என்பது எப்படிப்பட்டதாக அமைகிறது என்றால் பெரும்பாலும் கூலி வேலைகளாக அமைகின்றன. உலக அளவில் வேலை பார்ப்பவர்களில் ஆண்களின் சதவிகிதம் 76.1, பெண்களின் சதவிகிதம் 49.6, உலகமயமாக்கலுக்குப் பின் பெண்கள் மில்லியன் கணக்கில் கூலித் தொழிலுக்குத்தான் கொண்டு வரப்பட்டுள்ளனர். பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட மிகவும் பின் தங்கியுள்ளது என்று அய்.நாவின் அறிக்கை குறிப்பிடுகிறது.
வேலை இல்லாத ஆண் இளைஞர்களின் எண்ணிக்கையைவிட பெண் இளைஞிகளின் எண்ணிக்கை இருமடங்காக இருக்கிறது. ஒரே அளவு கல்வித் தகுதி இருந்தாலும் இரண்டு ஆண்களுக்கு வேலை கிடைத்தால்,அங்கு ஒரு பெண்ணுக்குத்தான் உலக அளவில் வேலை கிடைக்கிறது என்று அய்.நா.வின் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. பல பிராந்தியங்களில் மன ரீதியான தடைகள் பெண்களை வேலைக்கு எடுப்பதில் இருக்கின்றன. மத அடிப்படைவாதிகள் பெண்கள் படிப்பதை,
பெண்கள் வேலைக்குச் செல்வதை ஏற்றுக் கொள்ளாத மன நிலை கொண்டவர்களாக இன்றைக்கும் இருக்கிறார்கள்.

உலக அளவில் நாடாளுமன்றங்களில் பெண்கள் 23% மட்டுமே இருக்கிறார்கள்.கார்ப்பரேட் கம்பெனிகளில் உயர் நிலை அதிகாரிகளாக(CEO) 4% பெண்களே இருக்கிறார்கள்.தொழிற்சாலைகளில் 13.5% மற்றும் சர்வீஸ் சென்டர்களில் 61.5% பெண்கள் வேலை பார்க்கிறார்கள். விவசாயத் துறையில் 25% பெண்கள் வேலை பார்க்கிறார்கள்.உலகின் சரிபாதியாக இருக்கும் பெண்களின் எண்ணிக்கை பணிபுரியும் இடங்களில் எந்த நாட்டிலும் சரிபாதியாக இல்லை. ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் தாய்லாந்து போன்ற நாடுகள் இதற்கு விதிவிலக்கு.அங்கு எல்லாப் பணி இடத்திலும் ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக இருப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

உலகில் உள்ள 173 நாடுகளில் 18 நாடுகளில் பெண்கள் வேலைக்குச் செல்வதை, அந்தப் பெண்களின் கணவர்கள் சட்டத்தை வைத்துத் தடுக்க இயலும். உலகில் 67 நாடுகளில் மட்டுமே வேலைக்குப் பணியாட்கள் எடுப்பதில் பாலின சமத்துவம் சட்டப்படி இருக்கிறது. ஓய்வூதியம் இல்லாமல் இருக்கும் ஆண்கள் சதவிகிதம் 35 என்றால் பெண்களின் சதவிகிதம் 65. வயதான காலத்தில் எந்தவிதமான ஊதியமும் இல்லாமல் துன்பப்படும் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையைப் போல் இருமடங்கு. இதுதான் இன்றைய உலகம்.

இந்திய ஒன்றியத்தில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து கொண்டே இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை கூடுகிறது, சீனாவை மிஞ்சி விட்டது என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன, ஆனால் பெண்களின் வேலை வாய்ப்பு விகிதம் 2004இல் 35 சதவிகிதமாக இருந்தது, ஆனால் 2022இல் அது 25 சதவிகிதமாகக் குறைந்து விட்டது என்று அதிகாரப்பூர்வ தரவுகளின் அடிப்படையில் பொருளாதார நிபுணர் ரோசா ஆபிரகாம் குறிப்பிட்டதாகப் பத்திரிகைச் செய்தி குறிப்பிடுகிறது.

சங்கராச்சாரி போன்ற மதக் குருக்களே வேலைக்குப் போகும் பெண்களை இழிவு படுத்திப் பேசும் கொடுமை நம் நாட்டில் நிகழ்ந்தது. மதக் கலாச்சாரம் பெண்களை வெறும் படுக்கைக்கும் சமையலுக்கும் மட்டுமே உரியவர்கள் என்று கருதுகிறது. 2022இல் வேலை செய்யும் வயதுடைய இந்தியப் பெண்களில் 10 சதவிகிதம் பேர் மட்டுமே வேலையில் உள்ளனர் அல்லது வேலை தேடுகிறார்கள் என்று குறிப்பிடுகின்றனர். இந்தியாவில் 361 மில்லியன் ஆண்கள் பணிபுரியும் நிலையில் 39 மில்லியன் பெண்கள் மட்டுமே பணிபுரிவதாகக் குறிப்பிடுகின்றனர்.

இந்தியாவிலேயே அதிக அளவு பணிபுரியும் பெண்களைக் கொண்ட மாநிலமாகத் தமிழ்நாடு இருக்கிறது. இந்தியத் தொழில்துறைகளில் பணிபுரியும் 15.8 இலட்சம் பெண்களில் 6.79 இலட்சம் அல்லது 43 சதவிகிதம் தமிழ்நாட்டில் உள்ளனர் என்று புள்ளி விவரம் கூறுகிறது. தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் ஏற்படுத்திய தாக்கம்,பெண்கள் கல்வி கற்பதையும்,பெண்கள் வேலைக்குச் செல்வதையும் குடும்பமும் சமூகமும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு ஆதரிக்கும் மனநிலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்தியாவின் பெரும்பாலான மற்ற மாநிலங்களில் இந்த மனநிலை இல்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் முதன்மைக் காரணிகளாக சமூகமும், குடும்பமும் இருக்கின்றன.

“காணும் பொருளெல்லாம் தொழிலாளி செய்தான்
அவன் காணத் தகுந்தது வறுமையா?
பூணத்தகுந்தது பொறுமையா?”
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். இது பெண் தொழிலாளர்களுக்குப் பெரிதும் பொருந்தும். பெண் தொழிலாளர்களுக்கு வறுமையும் பொறுமையாக இருப்பதற்கான போதனையும் மட்டுமே கிடைக்கிறது. மே தினம் கொண்டாடும்,
மே 1இல் உலகம் முழுவதும் இருக்கும் பெண்களின் வேலை வாய்ப்பைப் பற்றியும், அவர்களுக்குப் பணியிடங்களில் நிகழும் இடையூறுகள் பற்றியும், ஆண்களைப் போல ஏன் அவர்களுக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பதைப் பற்றியும் சிந்திக்கும் நாளாக அமையட்டும்.

பெண்கள் பணிபுரிவதைத் தடுக்கும் மதரீதியான மனத்தடைகளை உலகம் முழுவதும் களைவதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்ளும் நாளாக மே 1 அமையட்டும். பெண்கள், தங்களுக்கென ஒரு தொழிலை ஏற்படுத்திக்கொண்டு, வருமானம் ஈட்டுவதற்கு உத்வேகம் பெறும் நாளாக இந்தத் தொழிலாளர் தினம் அமையட்டும். ஜாதி, மத மோதல்களில் முதலில் பலியாகும் பெண்களின் நிலையை மாற்றுவதற்குச் சிந்திக்கும் நாளாக மே 1 அமையட்டும். ஆணாதிக்கம் ஏற்படுத்தி வைத்துள்ள ‘ஆணுக்காகக் கடவுளால் படைக்கப்பட்டவளே பெண் ‘ என்னும் மாயை எல்லாம் மறை
வதற்கான முன்னெடுப்பை எடுக்கும் நாளாக இந்த மே1 தொழிலாளர் தினம் அமையட்டும்.

அனைவருக்கும் மேதின வாழ்த்துகள்! 