சமூகநீதி கிலோ எவ்வளவு ? – வழக்குரைஞர் சே.மெ. மதிவதனி

2024 மே 1-15, 2024

இந்திய வரலாற்றில் அரசமைப்புச் சட்டத்திற்கு நேரெதிரான நடைமுறைகளையும், செயல்பாடுகளையும் தனது பத்தாண்டு கால ஆட்சியில் வெளிப்படையாக அரங்கேற்றியவர் நரேந்திர மோடி. அவர் பதவிப் பிரமாணம் எடுத்தது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தான்; ஆனால், உள்ளத்தில் அவர் எடுத்துக்கொண்டது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இந்துத்துவக் கொள்கை உறுதிமொழியை. அரசமைப்புச் சட்டத்தின்படி அவரின் உறுதிமொழி அமைந்திருந்தால், விருப்பு வெறுப்பு இன்றி அனைவருக்குமான, அனைத்து இந்திய மக்களுக்குமான பிரதமராக இருந்திருப்பார். ஆனால், அவர் வளர்ந்த ஆரிய பீடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, பிரிவினைவாதக் கொள்கையை ஒவ்வொரு ‘ஷாகா’ பயிற்சியிலும் முன்மொழியச் செய்கிறது.

“புனிதமான என் இந்து மதம், இந்து சமூகம், இந்து கலாச்சாரம் ஆகியவற்றை பேணி வளர்ப்பதன் மூலமாக பாரதவர்ஷத்தினை எல்லா விதத்திலும் பெருமை அடையச் செய்வதற்காக நான் ராஷ்டிரீய ஸ்வயம்சேவக் சங்கின் உறுப்பினராகிறேன் என்கிற உறுதிமொழியை எல்லாம் வல்ல இறைவனின் முன்பாகவும், என் மூதாதையர் முன்பாகவும் எடுத்துக் கொள்கிறேன். சங் அமைப்பிற்காக நான் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும், முழு இதயத்துடனும் ஆன்மாவுடன் செயலாற்றுவேன்;என் வாழ்நாள் முழுவதும் இந்த உறுதி மொழியைக் கடைப்பிடிப்பேன்”.
மேற்சொன்னவை ஒரு மதசார்பற்ற நாட்டில் எத்தனை கலவரங்களுக்கு வழிவகுக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள். இதுதான் பிரதமர் மோடியின் வழியும்,சிந்தனையும்! கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்தால் பி.ஜே.பி விசுவாசிகளின் – காவிக் குண்டர்களின் அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கினை அவர்களின் உறுதிமொழி வாயிலாகவே புரிந்து கொள்ளலாம். இந்திய அரசமைப்புச் சட்டம் தனது முகவுரையிலேயே social justice எனும் சமூகநீதியையும், Secularism என்னும் மதசார்பற்ற தன்மையையும் தாங்கி நிற்கிறது. சமூகநீதி கிலோ எவ்வளவு என்று கேட்கும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் பார்ப்பனியமும் சமூகநீதிக்கு எதிரானவர்கள். “இருந்தால் இந்துவாக இரு; இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறு’’ என்று கூறிய கோல்வால்கரின் வழி வந்த பிரதமர் மோடி நாட்டின் மதசார்பற்ற தன்மையைக் காப்பாற்ற முடியுமா?

நெடுங்காலமாக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றி அதனிடத்தில் மநுதர்மத்தை அமர்த்திவிடத் துடிக்கிறது சங்கபரிவார் கூட்டம்.

1949 நவம்பர் 26 அன்று இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கப்பட்ட நாளில் இருந்தே அதனை நிராகரித்த கூட்டம் தான் இன்றைக்கு ஒன்றியத்தில் ஆட்சி புரிகிறது. “பழமையான நமது பாரதத்தில் நிலவிய தனித்துவமான அரசமைப்பு மேம்பாடுகள் குறித்து நமது அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. ‘மநு’வின் சட்டங்கள், ஸ்பார்டா தேசத்து லிகுர்கஸ், பெர்சியா தேசத்து சோலான் ஆகியோருக்கு முன்பே எழுதப்பட்டவை. ‘மநுஸ்மிருதி’யில் இதுநாள் வரை ஒளிரும் அந்தச் சட்டங்கள், உலகின் மீதான மரியாதையை- தன்னெழுச்சியான தழுவுதலை உறுதிப்படுத்துகின்றன. நமது அரசமைப்புச் சட்ட வல்லுநர்களைப் பொறுத்தவரை அது ஒன்றுமில்லை என்று ‘ஆர்கனைசர்’ பத்திரிகையில் எழுதினார்கள். (ஆதாரம் : பக். 25,
“ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை” – ஆசிரியர் கி.வீரமணி).

மிகத் தெளிவாக குலத்துக்கு ஒரு நீதி என்பதுதான் எங்கள் நீதி;அதுவே எங்கள் கொள்கை என்பதைப்
பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். மநுஸ்மிருதியின்படி ஆட்சி நடந்தால், ‘மநு’ நாட்டின்
சட்டமாக இருந்தால், அங்கே பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட,பட்டியலின, பழங்குடியினப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும்? அவர்களின் சுயமரியாதை, கல்வி, வேலை, ஊதியம் அனைத்தும் கேள்விக்குறி தானே! பார்ப்பான் வாழ மற்றவர்கள் அவர்களுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தைத் தவிர மநுஸ்மிருதியில் என்ன இருக்கிறது? இவை அனைத்தையும் சிந்தித்துதான் சாகும் வரை மநுதர்மத்தை எதிர்த்தார் பெரியார்; எரித்தார் அம்பேத்கர். இன்று வரை எதிர்த்தும், எரித்தும் வருகிறார் ஆசிரியர்.

இவை எல்லாம் முன்பு நடந்தவை. இப்போது அவர்கள் மாறி விட்டார்கள் என்று பரிந்து பேசுபவர்களுக்கு நாம் எடுத்துக்காட்ட வேண்டிய செய்திகள்
இருக்கின்றன. 1949இல் வெளிப்படையாகப் பேசியவர்களால், அவர்களின் தீய எண்ணத்தை இந்த மண்ணில் தற்போது பேச முடியாது என்பதால் தேன் தடவிய விஷ உருண்டைகளுடன் வருகின்றனர்.

2017இல் அய்தராபாத்தில் நடைபெற்ற அகில பாரத் ஆத்வக்த (வழக்குரைஞர்கள்) பரிஷத் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் பேசினார். “இந்த அரசமைப்புச் சட்டம் வெளிநாட்டுத் தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டது. அது குறித்து நாம் பேசியாக வேண்டும்.
நமது அரசமைப்புச் சட்டத்தை நமது தேசிய மதிப்பீடுகளுக்கு ஏற்ப மாற்ற வேண்டும். அதற்கு மதிப்பீடுகளும், முறைமைகளும் அற்ற வழுக்கலைச் சரி செய்து, அவற்றால் நமது அரசமைப்புச் சட்டத்துக்கே மெருகேற்ற வேண்டும்”. (ஆதாரம்: பக். 26 “ஆர்.எஸ்.எஸ் எனும் டிரோஜன் குதிரை” – ஆசிரியர் கி.வீரமணி). இவர்களின் தேசிய மதிப்பீடு என்ன? ஜாதி, வர்ணாசிரமம், மநுதர்மம், மதவாதம், பெண்ணடிமைத்தனம் இவைகள் தானே! அனைத்திற்கும் மேலாக இந்தியா இந்துத்துவா நாடாக மாற வேண்டும் என்ற இலக்குக்கு ஏற்ப அரசமைப்புச் சட்டத்தில் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.

மேற்சொன்ன உணர்வுகள் அனைத்தும் ஒரு கட்சியின் உறுப்பினர்க்கு இருக்கலாம்; இந்துத்துவ அமைப்பின் தலைவருக்கு இருக்கலாம்; சங்பரிவார் கூட்டத்தினருக்கு இருக்கலாம்; ஆனால், இந்தியாவின் பிரதமருக்கு இருக்கலாமா? 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்திய மக்களாகிய இஸ்லாமியர்கள் மீது அத்தனை வெறுப்பினை வெளிப்
படுத்தி உள்ள மோடி எப்படி மதசார்பற்ற நாட்டின் பிரதமராக நீடிக்கமுடியும்? இஸ்லாமிய வெறுப்பின் அளவைப் பொறுத்துதான் ஆர்.எஸ்.எஸ். தனது ஆதரவுக் கரத்தை நீட்டும், அதன் தயவில் தான் பிரதமர் வேட்பாளராக மீண்டும் நிற்க முடியும் என்ற பாசிச விசுவாசம் மோடியை இப்படி பேசச் செய்கிறது. தோல்வி பயம் உச்சத்தில் இருக்கும் மோடி, இன்னும் நிறையப் பேச வேண்டும். அவர் யார்? அவர் சார்ந்திருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மனித குலத்திற்கு எத்தனை ஆபத்தானது என்பதை உலகம் அறியட்டும்!
எல்லா சர்வாதிகாரத்திற்கும் மக்கள் முடிவு எழுதியுள்ளார்கள். இந்த முறையும் 2024 தேர்தல் முடிவில் இந்திய மக்கள் பாசிச பி.ஜே.பிக்கு முடிவுரை எழுதுவார்கள். 