அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (338)

2024 அய்யாவின் அடிச்சுவட்டில் மே 1-15, 2024

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளிவிழா!

– கி.வீரமணி

நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம் கோடியக்கரை முதன்மைச் சாலையில் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் மு.தங்கவேல் அவர்களால் பெரியார் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இடத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பெரியார் படிப்பகம் திறப்பு விழா 31.1.2005 அன்று மாலை 5:00 மணிக்கு நடந்தது.
ஒன்றிய தி.க. தலைவர் ஆசிரியர் இரா.ச. சீனிவாசன் தலைமையில் மாவட்ட தி.க. தலைவர்கள் வி.எஸ்.டி. அழகப்பன், வீ. மோகன், ஊராட்சி மன்றத் தலைவர் சுசீலாமுருகன், க. சுந்தரம், அ. சித்திரவேலு ஆகியோர் முன்னிலையில் பெரியார் படிப்பகத்தைத் திறந்து வைத்தோம்.

அப்போது உரையாற்றுகையில் “இந்தக் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள், வணிகர்கள் அனைவரும் ஜாதி, மதம், கட்சிக்கு அப்பாற்பட்டு ஆர்வத்தோடு வந்திருப்பது கண்டு மகிழ்ச்சியுற்றுப் பாராட்டுகிறேன். இந்தப் படிப்பகம் அனைவருக்கும் பொதுவானதாகும். எல்லோரும் ஒற்றுமையோடு வளர்ச்சியடைய ஈடுபாடு கொண்டு பெரிய நூலகமாக உருவாக்கிட வேண்டுகிறேன். இங்கே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கணினி மென்பொருள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்ய ஊர்மக்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டதைப் பாராட்டுகிறேன். விரைவில் அதற்கான உதவிகளை அளித்திட முயற்சிக்கிறோம்” என்று உறுதியளித்து விடைபெற்றோம்.

31.01.2005 நாகை மாவட்டம் ஆயக்காரன்புலம் வந்தடைந்து, தொண்டர்களின் எழுச்சி முழக்கங்களுக்கிடையே தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம். திராவிடர் கழக செயலவைத் தலைவர் இராசகிரி கோ. தங்கராசு, மாவட்ட தி.க. தலைவர்கள் வி.எஸ்.டி. அழகப்பன், வீ. மோகன் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் மணவிழாவில் கலந்துகொண்டனர்.

அடுத்து ஆயக்காரன்புலம் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர் கி. முருகையன்- மல்லிகா ஆகியோரின் மகள் மு. ரஷ்யாவுக்கும் ஆயக்காரன்புலம் ஜி. செந்தில் வடிவேலன்- வள்ளி ஆகியோரின் மகன் செ. சுரேசுக்கும் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை ஆயக்காரன்புலம் திருமண மண்டபத்தில் அன்று மாலை 6:30 மணியளவில் தலைமையேற்று நடத்தி வைத்தோம். விழாவுக்கு சிங்கப்பூர் தொழிலதிபர் ஏ.கே.எம். காசிநாதன், வேதாரண்யம் தொகுதி தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் மா.மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கவிஞர். கலி. பூங்குன்றன் அவர்களுடைய தாயார் க. தனம் அம்மையார் அவர்கள் 2.2.2005 அன்று காலை இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து வருந்தினோம். அவ்வமயம் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்த நாம் கவிஞர். கலி.பூங்குன்றன் அவர்களிடம் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினோம்.

கள்ளக்குறிச்சி மாவட்ட மேனாள் தலைவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மு. கண்ணன் – அமுதா ஆகியோரின் மகன்களில் மணமகன் க.செங்குட்டுவனுக்கும் கள்ளக்குறிச்சி ஆர்.ஆர். மேனிலைப்பள்ளி ஆசிரியையும் கள்ளக்குறிச்சி வட்டம் சிறுநாகலூர் என். இராமன்- மீனா ஆகியோரின் மகளுமான இரா.நாகலட்சுமிக்கும் மற்றும் மணமகன் க.இளங்கோவுக்கும் சேலம் சூரமங்கலம் சுந்தரமூர்த்தி – சு.கிளாரா ஆகியோரின் மகள் லாவண்யா பிரபாவுக்கும் வாழ்க்கை இணை ஏற்பு விழாவை, திராவிடர் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ. சாமிதுரை அவர்கள் தலைமையில், 2.2.2005 அன்று புதன்கிழமை காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி மகாலட்சுமி திருமண மண்டபத்தில் சிறப்பாக நடத்தி வைத்தோம்.

திராவிடர் கழக திருப்பூர் மாவட்ட துணைத் தலைவரும் “பாசமலர் லாரி சர்வீஸ்” உரிமையாளருமான காரமடை பாசமலர் ஆறுமுகம் – அன்னை காமாட்சி ஆகியோரால் காரமடையில் புதிதாகக் கட்டப்பட்ட தந்தை பெரியார் இல்லத்தை 3.2.2005ஆம் தேதி காலை 8 மணிக்கு திறந்து வைத்தோம். திறப்பு விழாவுக்கு பொதுக்குழு உறுப்பினர் சாலை வேம்பு சுப்பையன் தலைமை வகித்தார்.

பாசமலர் ஆறுமுகம், தந்தை பெரியார் இல்லம் கட்டப்பட்டுள்ள மனையிடத்தின் அருகில் பெரியார் படிப்பகம் அமைத்திட ஒரு சென்ட் நிலத்தை பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கிய பதிவுப் பத்திரத்தை எம்மிடம் வழங்கினார். மேலும் காரமடை பெரியார் படிப்பகத்திற்கு விரைவில் கட்டடப் பணிகள் ஆரம்பித்து திறப்பு விழா நடைபெற முதலில் திராவிடர் கழகம் சார்பில் ரூ.1000/- வழங்குவதாக அறிவித்தோம்.
கோவை மத்திய பகுதி ரேஸ்கோர்ஸ் அருகிலுள்ள கே.ஜி. மருத்துவமனையின் நிருவாகத் தலைவரும் பிரபல மருத்துவ வல்லுநருமான டாக்டர் ஜி.பக்தவச்சலம்
அவர்களுக்கு 2005ஆம் ஆண்டுக்கான பத்மசிறீ விருது மத்திய அரசு வழங்கிக் கவுரவித்தது.

இதையொட்டி, 3.2.2005ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10.45 மணியளவில் கோவையிலுள்ள கே.ஜி. மருத்துவமனைக்கு நாம் சென்றபோது டாக்டர் பக்தவச்சலம் அவர்கள் எமக்குப் பொன்னாடை போர்த்தி அன்போடு வரவேற்றார். பின்னர் மத்திய அரசின் பத்மசிறீ விருது பெற்றதற்கு நாம் அவருக்கு சால்வை அணிவித்துப் பாராட்டுத் தெரிவித்தோம். சிறிது நேரம் உரையாடிவிட்டு விடை பெற்றோம்.

கழகத் துணைப்பொதுச் செயலாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, வசந்தம் கு. இராமச்சந்திரன், டாக்டர் இரா.கவுதமன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
கோவை – சுந்தராபுரம் குறிச்சி சாரதா மில்ஸ் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளரும் தந்தை பெரியாரிடமும் எம்மிடமும் நீங்காத பாசம் கொண்ட
வரும் அமெரிக்காவிலுள்ள கண்ணகி அவர்களின் தந்தையாருமான பாலசுப்பிரமணியம் (வயது 79)அவர்
கள் இயற்கை எய்திய செய்தியறிந்து வருந்தினோம்.

3.2.2005 அன்று காலை கோவை சுந்தராபுரம் குறிச்சியிலுள்ள அவரது இல்லத்திற்கு நாம் நேரில் சென்று அன்னாரின் படத்திற்கு மாலையணி
வித்து மரியாதை செலுத்தியபின், மறைந்த பெரியவரது சகோதரர்கள் வெற்றிவேல், சிவகுருநாதன், விசுவநாதன், மகன்கள் வி.சுகுமார், வி.பன்னீர்செல்வம் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.

‘வளர்தொழில்’ இதழின் ஆசிரியர் க.செயகிருட்டினன் அவர்களின் தந்தையார் கே.எஸ். கனி(வயது 85) அவர்கள் 4.2.2005இல் கும்மிடிப்பூண்டியில் உள்ள அவரது இல்லத்தில் மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். அவரின் குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தி அனுப்பி தொலைபேசி மூலமாக ஆறுதல் தெரிவித்தோம். கழகப் பொதுச்செயலாளர் கவிஞர்.கலி.பூங்குன்றன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களுடன் சென்று அவரது உடலுக்கு
மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கக் கோரியும் அதன் மூலம் ஜாதி தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தவும், கொலை, பாலியல், பொருளாதார குற்றங்களுக்கு ஆளாகியுள்ள சங்கராச்சாரியார்கள் குற்றவாளிகள் தான் என்பதை மக்களுக்கு விளக்கவும் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான விழிப்புணர்வுப் பிரச்சார விரைவுப் பயணம் மேற்கொண்டோம். தொடக்க விழாவுக்கு 6.2.2005 அன்று நாகர்கோவில் சென்ற நாம், 3.10.2004 அன்று மறைவுற்ற பழம்பெரும் சுயமரியாதை வீரரும் திராவிடர் கழக குமரி மாவட்ட மேனாள் பொருளாளருமான கோட்டாறு (நாகர்கோவில்) பி. பகவதி பெருமாள் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது படத்தைத் திறந்து வைத்து மரியாதைச் செலுத்தியதோடு, அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் கூறினோம்.
தமது மறைவுக்குப்பின் எவ்வித சடங்குகளும் இல்லாமல் எரியூட்டவும், கண்களைக் கொடையாகவும், உடலில் கருப்புச் சட்டையுடன் இருக்கவேண்டும்
என்றும், ‘விடுதலை’ நாளேட்டிற்கு சந்தா ரூ.1000/-, நகர தி.கவுக்கு நன்கொடையாக ரூ.5000/- வழங்க வேண்டும் என்றும் அவர் தனது மறைவுக்கு முன் எழுதிய மரண சாசன உயிலை அவரது மகன் ப.எழிலன் எம்மிடம் காண்பித்து நன்கொடை வழங்கினார்.

அன்று மாலை 5 மணியளவில் நாகர்கோவில் பொன்னப்பா திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் உரையாற்றுகையில், தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை இன்னும் செயல்படுத்தாமல் இருப்பதை மக்களுக்கு விளக்கியும் அதே சட்டம் கேரள மாநிலத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது போல் தமிழ்நாடு அரசும் சட்டம் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பேசினோம். தொடர்ந்து திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்துவிட்டு புறப்பட்டோம்.

விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் இரண்டாம் நாளான 7.2.2005 அன்று அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரையில் நாம் பிரச்சாரப் பயணம்
மேற்கொண்டோம். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினோம். ஜாதியை ஒழிக்க தந்தை பெரியார் பல போராட்டங்கள் மூலமாகப் பாடுபட்டதையும், சேது சமுத்திரத் திட்டத்தின் நன்மை குறித்தும் நாம் மக்களுக்கு விளக்கிக் கூறினோம். பொதுமக்கள், வணிகர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

மூன்றாம் நாள் 8.2.2005 அன்று திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டோம். அன்று காலை 11:45 மணிக்கு திண்டுக்கல் வந்தடைந்த நாம் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா. வீரபாண்டியன் அவர்களின் தந்தையார் இராமசாமி அவர்களின் அண்ணன் திரு.வே.மு.கிருஷ்ணன் 13.1.2005ஆம் தேதி மறைவுற்ற செய்தி அறிந்து, நாகல் நகரில் உள்ள அவரது இல்லம் சென்று மறைந்த வே.மு. கிருஷ்ணன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அவரது குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினோம்.

பின்னர் இரவு 7:50க்கு திருச்சி வந்த நாம் கழக இளைஞரணித் தோழர் திருச்சி திருவெறும்யூர் கே.வீ. பச்சையப்பன்- திருவரங்கம் ஆகியோரின் மகன் ப. சுரேசுக்கும் திருவெறும்யூர் மேற்கு கணபதி நகர் சி. பிச்சைய்யா- அம்சவள்ளி ஆகியோரின் மகள் பி. சாந்திக்கும் பிரச்சார மேடையில் வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வை நடத்தி வைத்தோம்.

அடுத்து, இரவில் திருச்சி (ஜங்சன்) ரயில்வே சந்திப்பு அருகில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றி
னோம். பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு வந்து உரையைக் கேட்டுத் தெளிவு பெற்றனர்.

எழுச்சியூட்டும் விழிப்புணர்வுப் பயணத்தின் இடைவிடா நிகழ்ச்சிகளுக்கு இடையே தஞ்சை ‘விடுதலை’ வாசகர் வட்டத் தலைவர் இரா.பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் விருப்பத்தை ஏற்று, புதிதாகக் கட்டப்பட்டுள்ள அவர்களது இல்லத்தினை எமகண்ட நேரத்தில் திறந்து வைத்து அந்தக் குடும்பத்தினரை மகிழ்வித்தோம்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுநலத் தொண்டர்களுக்குச் சால்வை அணிவித்து, வீட்டைக் கட்டிய தொழிலாளர் தோழர்களுக்கும் ஆடைகள் அளித்து, ‘விடுதலை’ வளர்ச்சி நிதிக்காக ரூபாய் ஆயிரத்தை நம்மிடமும், ‘தீக்கதிர்’ வளர்ச்சி நிதிக்காக ரூபாய் ஆயிரத்தை தோழர் ஆர்.சி. பழநிவேலிடமும் அளித்தனர்.
விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தின் நான்காம் நாளான 9.2.2005 அன்று குடந்தை, மயிலாடுதுறை, சிதம்பரம் நகரங்களில் விழிப்புணர்வுப்
பிரச்சாரம் செய்து அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டங்களில் உரையாற்றினோம்.

குடந்தை ஒன்றிய மே்னாள் தலைவரும் நகர கழகத் தலைவர் கு.கவுதமன் தந்தையார் எஸ்.வி. குமாரசாமி (வயது 77) அவர்கள் 8.2.2005 ஆம் தேதி மறைவுற்ற செய்தியறிந்து வருந்தினோம். குடந்தையில் பிரச்சாரப் பயணம் சென்ற நாம், 9.2.2005 மாலை 5.45க்கு சோழபுரம் சென்று எஸ்.வி. குமாரசாமி அவர்களது உடல்மீது மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினோம். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம்.

அய்ந்தாம் நாள் 10.2.2005 அன்று கடலூர், புதுச்சேரி, திண்டிவனம் நகரங்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்தோம். திண்டிவனம் காந்தியார் திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டக் கழகம் சார்பில் பிறந்த நாள் பரிசாக 50 ‘விடுதலை’ சந்தா மற்றும் ‘உண்மை’, ’பெரியார் பிஞ்சு’, தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ இதழ்களுக்கு சந்தாவாக ரூ.25,510/- எம்மிடம் வழங்கப்பட்டது.

ஆறாம் நாளான 11.2.2005 அன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டோம். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் காமராசர் சிலை அருகில் அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரச்சார நோக்கம் குறித்த கருத்துகளை ஆதாரங்களோடு விளக்கி உரையாற்றினோம். ஏராளமான மக்கள், நடுநிலையாளர்கள் திரண்டு வந்து தெளிவு பெற்றனர்.

பின்னர், இரவு 8:50க்கு காஞ்சிபுரம் வணிகர் வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினோம்.

ஏழாம் நாளான 12.2.2005 அன்று அரக்கோணம், திருத்தணி, திருவள்ளூரில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டோம். அன்று இரவு 7 மணிக்கு அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் அருகில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் சொ.ஜீவன்தாஸ் தலைமை தாங்கினார். எமது உரையில், இந்துத்துவா குறித்தும் குஜராத் கலவரத்தில் பல அப்பாவி உயிர்கள் பலியானது குறித்தும் ஆதாரத்துடன் விளக்கிக் கூறினோம். அதன்பின் இரவு 8 மணிக்கு திருத்தணியிலும் இரவு 10:10 மணிக்கு திருவள்ளூர் நகரிலும் நடந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றினோம்.

பிரச்சாரப் பயணத்தின் நிறைவு நாளான 13.2.2005 அன்று ஞாயிற்றுக்கிழமை திருப்பெரும்புதூர், தாம்பரம் மற்றும் சென்னையில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மேற்கொண்டோம். அன்று இரவு 9:15 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணியில் பிரச்சார நிறைவு விழாப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் நாம் உரையாற்றுகையில், “ஜாதி ஒழிக்கப்பட- தீண்டாமை ஒழிக்கப்பட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவது தான் ஒரே வழி; தமிழ்நாடு அரசு இதை உடனே செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.

அன்றைய திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் சு.அறிவுக்கரசு, தஞ்சை இரா.பெரியார்செல்வம், சீனி. விடுதலை அரசு,
இராம.அன்பழகன் ஆகியோர் பயணத்தில் உரையாற்றினர்.சுற்றுப்பயண ஏற்பாடுகளை திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன் மேற்கொண்டார்.

இறுதியாக, பிரச்சாரப் பயணத்தில் பங்கேற்ற கழக நிருவாகிகள், பேச்சாளர்கள், பயணக்குழுவினர், தொண்டர்களுக்குப் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கும் விழா இரவு 11:30க்கு கழகத் தோழர் அன்சாரி- அசீனா இணையரின் இல்லத்தில் எமது தலைமையில் நடந்தது. தேனீக்களை மிஞ்சும் கழகத் தோழர்களின் சுறுசுறுப்பைப் பாராட்டி நாம் அவர்களுக்குச் சால்வை அணிவித்து சிறப்பு செய்தோம்.

தஞ்சை வல்லம் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் 16.2.2005ஆம் தேதி காலையில் தொடங்கியது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கள், பிப்.16ஆம் நாள் காலை 10:35 மணிக்கு சென்னையிலிருந்து தனி ஹெலிகாப்டர் விமானம் மூலம் கலைக்கல்லூரியின் விமான தளத்தில் இறங்கினார். அவரை சந்தன மாலை அணிவித்து அன்போடு வரவேற்றோம்.

தமது வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை நூலாக எழுதி, தமிழில் மொழியாக்கம் செய்த ‘விடுதலையைத் தேடி நான் தப்பித்த கதை” எனும் நூலில் – தமிழில் கையொப்பம் இட்டு எமக்கு ஆளுநர் பரிசாகக் கொடுத்தார்.

நண்பகல் 12:10 மணிக்கு பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் வெள்ளி விழா கொண்டாட்டத்திற்கு அமைக்கப்பட்ட அலங்கார மேடைக்கு வந்தார்.
விழா மேடையில் தமிழ்நாடு ஆளுநர் மேதகு சுர்ஜித் சிங் பர்னாலா அவர்கட்கு பொன்னாடை போர்த்தி தந்தை பெரியாரின் உருவம் பொறித்த தஞ்சாவூர்த் தட்டு பதித்த கேடயத்தை நினைவுப் பரிசாக வழங்கினோம். அதன்பின் 25 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் பாராட்டப்பட்டனர்.

தமிழ்நாடு ஆளுநர் பர்னாலா அவர்கள் தமது வெள்ளிவிழா உரையில், “ஒரு மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் நல் இயல்பையும் திறமையினையும் வெளிக் கொண்டு வரும் ஒரு கருவியாக கல்வி அமைந்துள்ளது. கல்விதான் மனிதனை முழுமை பெறச் செய்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது. ஒரு நாட்டின் வளர்ச்சியும் வளமும் கல்வியைப் பொறுத்தே அமையும். நாடு விடுதலை அடைவதற்கு முன் கல்வி என்பது மேல்தட்டு மக்களுக்கு, வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கிட்டியது. கல்வி அளிப்பதிலும் வேறுபாடுகள் காட்டப்பட்டது. ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி பெறும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. மேலும் அந்தக் கால கட்டத்தில் கல்வி என்பது மிக அதிக பொருள் செலவில் பெறக்கூடிய ஒன்றாக இருந்தது.

கலாச்சார மாற்றங்கள் நிகழத் தொடங்கியதற்குப்பின் கல்வியைப் பொறுத்த நிலைமை முற்றிலும் மாறியது. அதன் காரணமாக மக்கள் கல்வி பெறும் வாய்ப்பினைப் பெற்றனர்.

குறிப்பாக பெண்களும் கிராமப்புற மக்களும் கல்வி பெறத் தொடங்கினர். இன்றைய தினம் கல்வி என்பது ஒவ்வொருவரின் பிறப்புரிமையாக மாறிவிட்டது.
உண்மையான கல்வி என்பது மனிதநேயத்தைக் கற்பிப்பதாகவும், மற்றும் ஏழை எளியோரின் பிரச்சினைகளை ஒருவர் உணர்ந்திடும் வகையிலும் இருந்திடல் அவசியம்.

தமிழ்நாட்டின் சமூக வரலாற்றின் அடிப்படை அங்கமாகத் திகழ்பவர் தந்தை பெரியார் அவர்கள் ஆவார்கள்.
ஏழை, எளியோரின் நலம் பேணுதல் எனும் பண்பாட்டைப் பெற்று விளங்கிய பெரியார் அவர்கள், சமத்துவச் சமுதாயம் மலர்ந்திட அரும்பாடுபட்டார். அதன் விளைவுதான் 1924ஆம் ஆண்டு அவர்தம் தலைமையில் நடந்தேறிய வைக்கம் போராட்டம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த போராட்டம்.

இன்றைய தினம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார அமைப்பு ஆகியவற்றின் கீழ் 46 கல்வி மற்றும் அற நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. “புரா” திட்டத்தின்கீழ் பொருளாதார மற்றும் கல்வியில் பின்தங்கியுள்ள 65 கிராமங்களைத் தத்தெடுத்து பெரியார் பெண்கள் பொறியியல் கல்லூரி அக்கிராமங்களில் நகர்ப்புறங்களில் மக்களுக்குக் கிடைக்கும் வசதிகளைச் செய்து கொடுத்து கிராமப்புறங்களில் மறுமலர்ச்சி ஏற்படும் வண்ணம் சிறப்புறப் பணியாற்றி வருகின்றது.

பெரியார் நூற்றாண்டுக் கல்லூரி 20-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்றமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இன்றைக்குக் கல்வி தேடி வந்து ஒவ்வொருவரின் வீட்டுக் கதவையும் தட்டுகிறது. இந்த நல்ல வாய்ப்பை ஒவ்வொருவரும் பயன்படுத்தி, இளைஞர்கள் தாமும் முன்னேறி, நாட்டையும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்லவேண்டும்.

இந்த நல்ல தருணத்தில் என்னுடைய நீண்ட கால நண்பரும், இக்கல்லூரியின் நிறுவனத் தலைவருமான கி.வீரமணி அவர்களுக்கும், கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் வாழ்த்துக் கூறி, வெள்ளி விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டார்.
எமது தலைமையுரையில், மாணவர்கள் நடத்திய கலை நிகழ்ச்சியில் அவர்களின் திறமையையும், அமைதியாக நிகழ்ச்சிகளைக் கண்டுகளித்த விதம் அவர்களின் கட்டுப்பாட்டைக் காட்டுகின்றது. மாணவர்கள்தான் வருங்கால சமுதாயத்தை மாற்றியமைக்கும் சிற்பிகள் என்றும், எங்கள் மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வேலை கேட்க மாட்டோம்; சொந்தமாகத் தொழில் தொடங்கி மற்றவர்களுக்கு வேலை கொடுப்போம் என்ற மனப்பாங்குடன் கூடிய உறுதிமிக்கவர்கள் என்றும் கூறி, மாணவர்கள் தன்மானச் சிங்கங்களாகத் திகழ வேண்டும் என்று குறிப்பிட்டோம்.
இரா.மல்லிகா வரவேற்புரையாற்றினார். மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன், ‘வீகேயென்’ கண்ணப்பன், வீ.சுந்தரராசுலு ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அ. இராமசாமி வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கி நிறைவு விழா சிறப்புரையாற்றினார்.

பேராசிரியர் உ.பர்வீன் அவர்கள் நன்றி கூற விழா சிறப்பாக நிறைவு பெற்றது.