ஆசிரியர் பதில்கள் – மோடியின் ‘பாச்சா’ பலிக்காது !

2024 ஆசிரியர் பதில்கள் மே 1-15, 2024
1. கே: மோடியின் இஸ்லாமியர் வெறுப்புப் பேச்சு அப்பட்டமான விதிமீறல் என்று தெரிந்தும் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் அமைதி காப்பது ஏன்? மோடியைத் தகுதி நீக்கம் செய்ய எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?
– அ.ரோசா, சேலம்.
ப : மக்கள் மன்றத்தின் தீர்ப்பே இறுதி முக்கியத் தீர்வு ஆகும். இடையில் உச்சநீதிமன்றத்திலும் பரிகாரம் தேட முயற்சிக்க வேண்டும்.
2. கே: “தாலி பறிக்கப்படும்” என்ற மோடியின் வக்கிர, வன்முறைப் பேச்சுக்கு, பிரியங்கா அளித்துள்ள பொருள் பொதிந்த கடுங்கண்டனம் பற்றித் தங்கள் கருத்து என்ன?
– இ. சாந்தி, கள்ளக்குறிச்சி.
ப : பிரியங்கா காந்தியின் அரசியல் பரிபக்குவத்திற்குச் சரியான சான்று!
3. கே: தேர்தல் நேரத்தில் முதலமைச்சர்களைச் சிறையில் அடைத்துள்ளதை உச்சநீதிமன்றம் அனுமதிப்பது சரியா? உடனடித் தீர்வு காணாமல் தள்ளிப்போடுவது ஏற்புடையதா?
– ப. சின்னப்பொண்ணு, வேப்பம்பட்டு.
ப : “தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதியாகும்”
‘பெயில்’ ஜாமீன் என்பது விதி; ஜெயில் என்பது விதிக்கு விலக்கு (while Bail is the rule whereas Jail is the exception).
4. கே: தமிழ்நாட்டில் எங்கு கொலை நடந்தாலும், தி.மு.க.தான் காரணம் என்று பொய்க் குற்றச்சாட்டைக் கூறும் தரம் தாழ்ந்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டாமா?
– எம். ஹேமாவதி, கொடுங்கையூர்.
ப : மக்கள் தண்டித்துத்தான் வருகிறார்கள் தேர்தல் மூலம் என்றாலும், பிறவிக் குணம் மாறுவது எளிதல்லவே! என்ன செய்வது?
5. கே: தோல்வி பயத்தில் மோடி அண்மைக்காலமாகக் கூறிவரும் தரம் தாழ்ந்த, மோசடியான குற்றச்சாட்டுகள். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் செல்வாக்கைச் சீர்குலைக்கச் செய்யும் முயற்சிதானே?
– கே. துரைவேலவன், மணலி.
ப : மோடியின் ‘பாச்சா’ பலிக்காது!
மக்களின் விழிப்புணர்வு தெளிவாக உள்ளது.
6. கே: தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்கத்தான் வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறுவது ஏற்புடையதா? தேர்தல் முடிவை எதிர்த்துத் தொடரப்படும் வழக்கில் தீர்ப்புச் சொல்லும்போது, வாக்கு எண்ணிக்கை நேர்மையாக நடக்க தீர்ப்பு சொல்லத் தயக்கம் ஏன்? ஒப்பிட்டு எண்ணுவதில் ஓரிரு நாள்கள் கூடுதல் கால அவகாசம் எடுத்துக் கொள்வதில் தப்பு என்ன?
– பொன். ராக்காம்மா, ஆரணி.
ப : அமையவிருக்கும் புதிய இந்தியா கூட்டணி அரசு இவை பற்றியெல்லாம் சிந்திக்கும்; சிந்தித்துச் செயலாற்றவும் செய்யும்.
7. கே: இஸ்லாம் எதிர்ப்பு மற்றும் வெறுப்புப் பேச்சு இந்துக்களின் ஆதரவைத் திரட்டும் என்ற பி.ஜே.பி. நம்பிக்கை முட்டாள்தனமானது என்ற விமர்சனம் சரிதானே?
– கோ. அம்மாய்ச்சி கோடம்பாக்கம்.
ப : அதிலென்ன அய்யம்? வரும் தேர்தல் முடிவு அதை நிரூபிக்கும்.
8. கே: மக்களின் சொத்துக்களைப் பறிக்கவும், இந்து மக்களின் இடஒதுக்கீட்டு அளவைக் குறைத்து சிறுபான்மையினருக்குக் கொடுக்கவும் காங்கிரஸ் முயல்கிறது என்ற மோடியின் குற்றச்சாட்டு குறித்து தங்களின் கருத்து என்ன?
– சி. வீராசாமி, பள்ளிப்பட்டு.
ப : இதுபற்றி விரிவான விளக்கத்தை- ஓர் அறிக்கையை ‘விடுதலை’யில் (25.4.2024) காண்க.  