ஜாதியை ஒழித்துவிட்டீர்களா? – வி.சி.வில்வம்

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூன் 1-15, 2023

ஜாதி ஒழியக் கூடாது என்பவர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. ஜாதியால் எந்தப் பயனையும் அடைந்திருக்க மாட்டார்கள்? ஆனால், உணர்ச்சியால் உந்தப்பட்டு, சமூக அமைதிக்குக் கேடு செய்பவர்கள் இவர்கள்.

ஜாதிப் பெருமையை வாயளவில் பேசினாலும், வாழ்க்கை அளவில் அவர்களாலும் பின்பற்ற முடியாது! எங்கள் ஜாதி, எங்கள் குலப் பெருமை, எங்கள் ஜாதி ஊர்வலம், எங்கள் ஜாதி மாநாடுகள் எனப் பீற்றிக்கொள்ளும் இவர்கள், அனைத்து ஜாதியினர் உதவியின்றி உயிர் வாழ்ந்துவிட முடியுமா?

“எங்கள் ஜாதி ஆள்கள் மட்டும் தனியாக ஓர் ஊரில் வாழ்ந்து கொள்கிறோம்“, என அறிவிக்கத் துணிவு இருக்கிறதா? ஜாதிகளின் மூலக்கிடங்கு, மொத்த வியாபாரிகள் பார்ப்பனர்கள் தான் இப்படி அறிவிக்க முடியுமா?

அவர்களே ஆட்சி செய்து கொண்டும், மருத்துவம் பார்த்துக் கொண்டும், கல்வி நிலையங்கள் நடத்திக் கொண்டும், வேளாண்மை செய்து கொண்டும், போக்குவரத்து நடத்திக் கொண்டும், ஒருவருக்கொருவர் முடிவெட்டியும், துணிகளை வெளுத்தும், சாலைகளில் குப்பைகளைச் சேகரித்தும், சொந்த ஜாதி ஜனங்களின் மலத்தை அள்ளியும் வாழ முடியுமா?

உழைக்கும் வேலைகள் செய்தால் கேவலம் என்றும், அவர்களைக் கீழ் ஜாதி என்றும் பார்ப்பனியம் கற்பித்ததைப் பின்பற்றும் இதர ஜாதியினர் இதுகுறித்து சிந்திக்க வேண்டும். அனைத்து வேலைகளையும் அனைவரும் செய்ய வேண்டும், அறிவியல் சாதனங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பது தான் வளர்ந்த நாடுகளின் வாழ்வியல் முறையாக இருக்கிறது!

அப்படியிருக்கும் போது “எங்கள் ஜாதி உயர்ந்த ஜாதி’’ எனப் பெருமை பேசி மற்றவர் உதவியின்றி உயிர் வாழ முடியாது என்பது ஒருபுறம் இருக்க, ஒருநாள் கூட வாழ முடியாது என்பதே உண்மை நிலை!

ஜாதி ஒழிய வேண்டும் என விரும்புவோர் மனிதர்களை நேசிக்கிறார்கள் என்று பொருள்! இந்தச் சமூகத்தில் அனைவருக்கும் அனைத்தும் எனப் போராடுவோர்! சுதந்திரம் இருக்கும் நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் சுதந்திரம் இருக்குமா என முழக்கம் செய்வோர்!

“அவர்களிடம் சென்று இந்தப் பழமைவாதிகள் எத்தனை ஜாதிகளை ஒழித்துள்ளீர்கள்?” என நக்கல் செய்கிறார்கள்! அதனால் தான் சொல்கிறோம். உங்களாலே உங்கள் ஜாதி ஆள்களுடன் மட்டுமே வாழ முடியாது!

திராவிடர் இயக்கப் போராட்டங்களால் இந்தச் சமூகம் வெற்றி கண்டுவிட்டது! புரட்சி பெற்றுவிட்டது! கூடவே அறிவியலும் வெகுவாக வளர்ந்துள்ளது. கல்வி பெற்ற சமூகமாக மாறி உணவு, உடை, இருப்பிடத்திற்கு உத்திரவாதம் ஏற்பட்டுவிட்டது. பொருளியல் நல்ல அளவில் உயர்ந்துள்ளது. நீங்களே நினைத்தாலும் ஜாதியை உங்களால் காப்பாற்ற முடியாது.

பெரியாரின் கொள்கைத் தாக்கம் சமூகத்தை எப்படி புரட்டிப் போட்டுள்ளது என்பதற்குக் கீழ்க்கண்ட -எடுத்துக்காட்டு——களே போதும்.
பெரியாரியக் கொள்கையுடன் வாழ்பவர் அந்தத் தோழர்! இரண்டு குழந்தைகளுடன் கைம்பெண்ணைத் திருமணம் செய்தவர். இவர் கள்ளர் வகுப்பைச் சார்ந்தவர்! அந்தப் பெண் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்தவர்!

இதன் உள்ளடக்கம் என்பது ஒரு ஜாதி மறுப்புத் திருமணம், ஒரு கைம்பெண் திருமணம், அதிலும் இரண்டு குழந்தைகளுடன்! அந்த கள்ளர் தோழர், அருந்ததியர் தோழர் வசிக்கும் பகுதியில் தான் வாழ்வேன் என இன்றுவரை வாழ்பவர். இவர்களின் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும்.
மற்றொரு தோழரைப் பார்க்கலாம். இவரும் பெரியாரிஸ்ட்! இவர் நாவிதர் வகுப்பைச் சார்ந்தவர். இவரின் இணையர் நாயுடு வகுப்பைச் சார்ந்தவர். இவர்களின் மகனுக்குப் பெண் பார்க்க வேண்டும்.

எவ்வளவு சிக்கல் பாருங்கள்! பொதுவாகவே ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதில் பல சிரமங்கள் இருப்பதைப் பார்க்கிறோம்! இப்படியான நிலையில் ஜாதிகளைச் சல்லி, சல்லியாக உடைத்த பெற்றோர்களுக்குச் சங்கடங்கள் இல்லாமலா போகும்?
இந்த இடத்தில் தான் இணைப்புப் பாலமாக வந்து நின்றது பெரியார் திடல்! ஆம்! அங்கே செயல்படுகிற பல்வேறு அமைப்புகளில் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையமும் ஒன்று! அவற்றின் சார்பில் இணை தேடிக் கொள்ளும் பெரு விழாவை “மன்றல்” எனும் பெயரில் தமிழ்நாடெங்கும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்!

அந்தச் சந்திப்புகளில் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டு, மேற்குறிப்பிட்ட இரண்டு பெற்றோர்களும் தத்தம் பிள்ளைகளுக்கு நல்வழியை ஏற்படுத்திக் கொடுத்தனர்!

ஜாதிக்கு சமாதி கட்டு!

மனிதனை மனிதனாய்ப் பார்!

சகோதரனை மனிதனாக்கு!

என்பதற்கு ஏற்ப, இந்த இரண்டு பெரியார் தொண்டர்களும் எவ்வளவு சிறப்பான மனிதத்தை வேரூன்ற வைத்துள்ளனர்
பாருங்கள்!

பெரியார் எந்த ஜாதியை ஒழித்தார்? எனச் சில சில்லுவண்டுகள் கேட்பர்.

பார்ப்பனர்கள் ஏன் ஜாதியை உருவாக்கினார்கள்? என அந்த வாய்களுக்குக் கேட்கத் தெரியாது!
பெரியார் திடலில் இதுவரை நடத்தி வைக்கப்பட்டுள்ள ஜாதி மறுப்பு, மத மறுப்பு, விதவை திருமணங்கள் ஆயிரமாயிரம் என்பது அறியாது பிதற்றுபவர்கள் மூடர்கள்!

அதேபோல “திராவிடர் கழகத்தில், பெரியார் திடலில் அனைத்து ஜாதியினரும் இருக்கிறார்களா?’’ எனவும் சிலர் கேட்பார்கள்.
இவர்களுக்கு நாம் பதில் சொல்லப் போனால், யார்? யார்? எந்தெந்த ஜாதி எனக் குறிப்பிட்டு எல்லோருமே இங்கு இருக்கிறார்கள் எனப் பதில் எழுத வேண்டிவரும்.
நாம் ஒருவரை மனிதராய் பார்க்கிறோமே தவிர, ஜாதியால் அல்ல! மேலும் எவருக்குமே எவரின் ஜாதியும் தெரியாது; அது தேவையும் இல்லை!
ஜாதியால் பொதுச் சமூகத்தில் ஒருவர் புறக்கணிக்கப்படலாம். ஆனால் திராவிடர் கழகத்தில் இணைந்து ஒருவர் மீது கருப்புச் சட்டை வந்துவிட்டால், அவருக்கான மரியாதையே வேறு!

அதனால் தான் “சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு” என்றார் பெரியார்! அதை நோக்கித்தான் பெரியாரிஸ்டுகள் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்! ♦