Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

நச்சுமனச் சனாதனத்தை வீழ்த்துவோம்!

நால்வருண மனுதரும நச்சுவிதை தூவி
நாட்டோர்பால் வேற்றுமைகள் வளர்க்கின்றார்; நாளும்
கால்வயிற்றுக் கஞ்சிக்கும் கதியில்லார், இல்லாக்
கடவுளர்பால் பழிபோட்டுப் பாவங்கள் நீக்கும்
மேல்சாதி என்றேய்ப்போர் அடிமைகளாய் ஆகி
மேன்மையெலாம் இழந்தனரே! மிடுக்குடையோர் தாழ்ந்து
வால்பிடித்துக் குனிந்தபடி வணங்கியெதிர் நின்றே
வாய்பொத்திக் கிடப்போரும் வண்டமிழர் ஆமோ!
வெறுப்பான அரசியலை நடத்துகிற வீணர்
வெம்பழிகள் இழைக்கின்ற காவியரின் கூட்டம்
பொறுப்பின்றிப் புலம்புவதை அறிவாளர் கேளார்;
புல்லர்தம் கூற்றெல்லாம் பொய்யன்றோ? நாளை
ஒறுப்புக்கே ஆட்படுவர்! நாட்டினரோ ஒன்றாய்
உணர்ச்சியுடன் ஆர்த்தெழுந்தே சமத்துவத்தை என்றும்
மறுப்போரைப் புறம்தள்ளித் தேர்தலிலே வீழ்த்தி
மகிழ்ந்திடவே படிப்பினைகள் நல்கிடுவார் நன்றே!

பிரித்தாளும் சூழ்ச்சியினைப் பிறப்பினிலே கொண்டோர்
பிதற்றலுமே சனாதனத்தின் பேருருவம் ஆகும்;
விரிந்தமனம் இல்லாதார் வேதங்கள் தொன்மம்
வேண்டாத சாதிமத வெறுப்பினையே என்றும்
எரிகொள்ளி யால்தலையைச் சொறிந்தபடி இன்றும்
இன்புறுவர்; துயர்செய்வர்; பெரியாரும் சொன்ன
சரியான பகுத்தறிவை அறியாத கூட்டம்
சழக்கினையே உழக்கினிலே அளக்கின்றார் வெல்வோம்!

பிற்போக்கின் அடையாளம்! மதவெறியின் உச்சம்!
பேரழிவின் குறியீடு; சமத்துவத்தின் மாண்பாம்
முற்போக்கின் கடும்பகையே! மூடநெறி தன்னை
முதுகினிலே எந்நாளும் சுமந்தபடி நிற்கும்
கற்சிலையைப் போலமனம் உள்ளோரோ பொல்லாக்
கயமைகளின் பெருங்கிடங்காம்! பொதுவாக நாட்டில்
நற்செயல்கள் நடப்பதற்குத் தடையாக உள்ள
நச்சுமனச் சனாதனத்தை நாம்வீழ்த்து வோமே!♦