கவிதை – அயோத்திதாச பண்டிதர்!

2023 கவிதைகள் மே-16-31,2023

முனைவர். கடவூர் மணிமாறன்

சாதி எதிர்ப்பின் முதற்போ ராளி
நீதியை விழைந்த நேரிய தொண்டர்!
அறிஞர் அயோத்தி தாச பண்டிதர்
குறிக்கோள் வாழ்வினர் கொள்கை மறவர்;
சீர்மிகு திராவிட இயக்கம் முகிழ்த்திட
வேர்எனத் திகழ்ந்த வெந்திறல் அரிமா!
தமிழகம் என்றும் தலைநிமிர்ந் தெழவே
‘தமிழன்’ “திராவிடன்” எனுமிரு அரசியல்
அடையா ளத்தைக் கொடையாய் அளித்தவர்
படைமறம் ஏந்திய பான்மை மிக்கவர்;
தமிழ்வர லாற்றைத் தகவுற எழுதிய
அமிழா நெடும்புகழ் அறிஞர் இவரோ
ஒருகா சுக்கும் மதிப்பிலாத் தமிழன்
சிறுமை நினைந்தே “ஒருபைசாத் தமிழன்”
என்னும் பெயரிலும் “ஆதித் தமிழன்”
நன்னயத் “திராவிடன்” இதழ்களும் நடத்தினார்!
திராவிட மகாசனச் சபையைத் தொடங்கித்
திராவிடர் மேன்மை திகழ்ந்திடச் செய்தார்;
சாதி வேறுபா டற்ற திராவிடன்
மேதகு தமிழன் என்றே உரைத்தார்;
எண்ணூ றாண்டுகள் மறைந்தே கிடந்த
பன்னரும் பவுத்த மதத்தை மீட்டவர்;
இரவு பகலிலா ஒளியெனப் புத்தரின்
வரலாற் றினையே நூலாய்ப் படைத்தார்;
மருத்துவம் இலக்கியம் இலக்கணம் கணியம்
அறிந்த மாண்பினர் வள்ளக் காத்தி
அயோத்தி தாசர் இவரின் பாட்டனார்!
உயரிய சிந்தனை ஒப்புர வாளர்!
அவருடன் நீல கிரிக்குச் சென்றவர்
உவப்புறத் தோடர் பழங்குடிப் பாவையைத்
திருமணம் புரிந்தார்! பர்மா சென்றவர்
திரும்பினார் தமிழகம்! இராயப் பேட்டை
வாழ்விடம் ஆக்கி வனப்புறு தொண்டால்
பாழ்ச்செயல் ஓய்ந்திட உழைத்தார் இனிதே!