ஆளுமையும் தியாகமுமே அன்னை மணியம்மையார் – பவளசங்கரி திருநாவுக்கரசு

2023 கட்டுரைகள் மார்ச் 1-15,2023

பொதுத் தொண்டில் ஈடுபடும் மகளிர் வாழ வேண்டிய நெறிமுறைகளுக்கு ஓர் இலக்கணம் வகுக்கப்படுமேயானால், அந்த நெறியாக, இலக்கணமாக வாழ்ந்தவர் மணியம்மையார்! சமூகநீதி, ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை போன்ற உயர்ந்த கோட்பாடுகள் விருட்சமாக வேர் விட்டுப்படர்ந்த ஓர் இயக்கம் என்றால் அது திராவிட இயக்கம். ஆண்களின் ஆதிக்கம் கோலோச்சி நிற்கும் அரசியல் களத்தில் ஒளி வீசும் தீபமாக, திராவிட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, சுடர்விட்டுப் பிரகாசித்தவர் மணியம்மையார். திராவிட இயக்கத்தில் ஜாதி இழிவு நிலை ஒழிந்து, சமத்துவம் தலைத்தோங்கவும், திராவிட இன மக்களின் அடிமைத்தளை உடையவும், அவர்தம் விடுதலைக்கு ஓங்கி குரல் எழுப்பியவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார்.

ஈ.வெ.ரா. பெரியாரின் உற்ற துணையாக அவருடைய உடல் நலத்தைப் பேணியதோடு, அவரோடு இணைந்து கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் காரணமாய் சிறைக்கோட்டம் ஏகினாலும், மனம் தளராது, பெரியாரின் வீட்டு நிருவாகத்தையும் கவனித்துக் கொண்டு, இடையறாத கட்சிப் பணியும் செய்து, பெரியாரின் மறைவிற்குப் பிறகும் அவர் விட்டுச் சென்ற பணிகளை செவ்வனே, திறம்பட நிர்வகித்த பெருமைக்குரிய சிறந்த பெண்மணி மணியம்மையார்.

தமிழ்நாட்டையும், தமிழ் இன மக்களையும் அனைத்து வகையிலும் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய கொள்கை கொண்டிருந்த பெரியாரை கண்ணும் கருத்துமாய்ப் பாதுகாத்த வகையில் திராவிட இயக்கத்திற்கே பெரும் தொண்டாற்றியவர் என்ற பெயர் பெற்றாலும், உண்மையான தாய்மைப் பண்பும், இளகிய உள்ளமும், சேவை மனப்பான்மையும், ஒருங்கே அமையப் பெற்ற தியாகச் சுடர்தான் மணியம்மையார். மூப்பின் விளிம்பில் இருந்த பெரியார், ‘‘இந்த வயதிலும் சாகாமல் இருக்கிறேன் என்றால் அது இந்த அம்மாவால்தான் என்பது யாருக்கும் தெரியாது. எனது உடம்புக்கு ஏற்ற உணவு பக்குவப்படி கொடுப்பது, உடை மாற்றுவது எல்லாம் இந்த அம்மாதான் என்று மனம் நெகிழ்ந்து கூறியுள்ளதே அதற்கான சான்று.

எந்தப் பலனும் எதிர்பாராமல், சேவை ஒன்றையே குறிக்கோளாய்க் கொண்டு ஒரு தாயாக பெரியாரை அரவணைத்துக் காத்து வந்தார். அவருடைய வாழ்க்கையின் ஆழத்தைப் புரிந்து கொண்டவர்கள், உலகில் எந்த ஒரு தாயும், இத்தகைய ஏச்சையும், பழியையும், கேலி கிண்டலையும், ஏளமான சொற்களையும், அவதூறுகளையும் சுமந்திருப்பார்களா என்றால், இல்லை என்றே உறுதிபட உரைப்பர். அவருடைய மனம், செயல், சொல், எண்ணம், குறிக்கோள் அனைத்துமே தொண்டு என்பது மட்டுமே! பெண்மைக்கே உரிய விருப்பங்களான, ஆடம்பரம், அலங்காரம், படாடோபம், பகட்டு என்பவை எதுவுமே இல்லாமல், காது, கழுத்து, மூக்கு, கை என எங்குமே எந்த அணிகலனும் அணியாமல், மிக மலிவான கைத்தறிச் சேலையும், அதுவும் கருப்பு வண்ணச் சேலையும், வெள்ளை இரவிக்கையும் மட்டுமே அணிந்து, ஆணவம், அகந்தை, அடுத்தவரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணம் ஏதுமில்லாமல், மிக எளிமையாக, அடக்கமே உருவமாக, இயக்கப் பணி மட்டுமே வாழ்க்கையாக வாழ்ந்து காட்டியவர் மணியம்மையார்.

தந்தை பெரியார் அவர்களின் மிக முக்கியக் கோட்பாடான, பெண்ணினத்திற்கேயுரிய, உரிமை உணர்வு, சமத்துவப் பாங்கு, சுதந்திரப்
பண்பு, விடுதலை வேட்கை, கொள்கைப் பிடிப்பு,ஆர்வம், அக்கறை, எளிய தோற்றம், சிக்கன இயல்பு, சீர்திருத்தச் சிந்தனைப் போக்கு, ஏற்றமிகு நடத்தை, துணிவு போன்ற அனைத்தையும் அப்படியே கடைப்பிடித்து, அவருக்குப் பின் திராவிடர் கழக தலைமைப் பொறுப்பும் ஏற்ற சீர்மிகு வெற்றிப் பெண்மணி மணியம்மையார். திறந்த புத்தகம் போன்றது இவரது வாழ்க்கை. எந்த ஒளிவு மறைவோ, கள்ளத்தனமோ, பேராசையோ, இல்லாத தியாக வாழ்க்கை இவர் வாழ்க்கை என்றால் அது மிகையல்ல.. குடும்பமாக இருந்த ஓர் இயக்கத்தின் தலைவராக
இருந்து தொண்டர்களை வழி நடத்தியவர் மணியம்மையார். பெரியார் வகுத்த பாதையில் அடி பிறழாமல், நடந்து, வரலாற்றில் இப்படிப்
பட்ட புரட்சித்தாயை இந்த நாடு கண்டதில்லை என்று அறிஞர்களும், ஆய்வாளர்களும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர் இவர்.

தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்றால் அது திராவிட இயக்க வரலாறு என்பது போல, அந்த வரலாற்றில் இணைந்து இடம்பெறும் வரலாறு அன்னை மணியம்மையாரின் வரலாறு. அவர் கேட்டுப் பழகி பழிச்சொல், வசை மொழி, இழிவுச் சொற்கள் அனைத்தும் அவரை மென்மேலும் பண்படுத்தி, அவரைப் பன்மடங்கு ஆக்கப்பூர்வமாக உழைக்கச் செய்தது. அந்த வகையில் உலகின் அத்துணைப் பெண்களும் உள்ளதால் உள்வாங்கிக் கொள்வதோடு, தாம் தேர்ந்தெடுத்த பாதையில் ஏற்படும் தடைகளை உறுதியுடன் முறியடித்துக் கொண்டே முன்னேறிச் செல்லும் அந்த வல்லமையை தம் வாழ்நாளின் இறுதி நாள் வரை இறுக்கமாய் பற்றிக் கொண்டிருந்த அந்த உள்ளத்துணிவை, முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு வாழ வேண்டும்.

“தந்தை பெரியார் அவர்களிடம் நான் வந்து சேர்ந்தது எந்தவிதமான பலனை எதிர்பார்த்தோ, பணத்திற்கு ஆசைப்பட்டோ, பெருமை ஆடம்பர உல்லாச வாழ்வு வாழ்வதற்கோ, என் குடும்ப முன்னேற்றம் கருதியோ அல்லது வேறு எந்தவிதமான பலனையும் எதிர்பார்த்தோ, வந்தவள் அல்லவே அல்ல’’ என்ற அவரது பேச்சு, அவருடைய திறந்த புத்தகமான வாழ்க்கைக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும், தன்னலமற்ற மனப்போக்கின் வெளிப்பாடாகவும், இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 1974இல் தி.மு.க பற்றி அவர் பேசுகையில் “இன்றைய தி.மு.க ஆட்சி கட்டிக் காக்கப்பட வேண்டியது’’ என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தினால் நிருவாகச் சீர்குலைவு ஏற்பட்டதையும் தம் ஊழியர்களுடன் தக்க உடன்பாடு காணவேண்டி அரசினை வலியுறுத்தி ‘‘என்.ஜி.ஓ பிரச்சினையும் அரசின் விசித்திர அணுகுமுறையும் என்னும் தலையங்கத்தினை ‘விடுதலை’ இதழில் 1978ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் நாள் எழுதிய இந்த எழுத்துகளே இவர் தம் வாழ்நாளில் எழுதிய இறுதித் தலையங்கமாய் அமைந்தது. அரசின் அடக்கு முறையைத் தவிர்க்க வேண்டும் என்பதை அன்புடன் எடுத்துக் கூறிய அதே வேளையில், அரசு ஊழியர்களும் பொறுமையுடன், தங்கள் கடமையறிந்து, பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் வெளிப்படுத்தியது அவர்தம் தாய்மை உணர்வைப் பறை சாற்றும் விதமாகவே அமைந்திருந்தது. அம்மையார் தம் இன்னுயிர் இழக்கப்போகும் ஆறு நாள்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடிவடைந்து, போராட்டமும் கைவிடப்பட்டது.

1978ஆம் ஆண்டு மார்ச் 16ஆம் தேதி மணியம்மையாருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்தது. பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் அன்பான அஞ்சலியுடன் அம்மையாரின் இன்னுடல், தந்தை பெரியாரின் நினைவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது, கழகக் கண்மணிகளின் அன்புத்தாய் மணியம்மையார், தாம் இறப்பதற்கு முன்பே, ‘‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிருவாகக்கமிட்டியின் செயலாளர் பதவியைத் தொடர திரு. கி.வீரமணி அவர்களை நியமனம் செய்கிறேன் என்று எழுதி வைத்திருந்தார் அன்னையார்.

சுயநலமற்ற, தன்னிகரில்லாத் தம்முடைய சேவை மனப்பான்மையால், தாம் சார்ந்திருந்த கழகத்தின் கொள்கைகளை நிறைவேற்றுவதே தம் கடைமையாக எண்ணி வாழ்க்கையையே அர்ப்பணித்த மணியம்மையாரை இன்றும் மனமார வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க மணியம்மையார் புகழ்!