கட்டுரை – பா.ஜ.க. ஆட்சியில் நேர்மையாளர் படும்பாடு! – சரவண இராஜேந்திரன்

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூலை 16-31, 2023

– சரவண இராஜேந்திரன்

சஞ்சீவ் பட் மும்பை அய்.அய்.டி.யில் படித்தவர். 1988ஆம் ஆண்டு இந்தியக் காவல் பணிக்குத் தேர்வான அவர் குஜராத் மாநில காவல்துறையில் பணியாற்றி வந்தார்.
தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு சமூக சேவைகள் காவல் பணியோடு இணைந்து செய்ததற்கு பல விருதுகளை பெற்று உள்ளார்.

குஜராத் அய்.பி.எஸ் அதிகாரியான சஞ்சீவ் பட், 2002 கோத்ரா கலவரத்துக்கு முதல்வராக இருந்த மோடிதான் காரணம் என்றும், “இந்துக்கள் கோபத்தில் இருக்கின்றனர்; அவர்களது வன்முறையைத் தடுக்க வேண்டாம்’’- என முதல்வராக இருந்த மோடி, காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பேசினார் எனவும் பெரும் குற்றச்சாட்டை வீசி பரபரப்பைக் கிளப்பியவர்.

ஆனால், சஞ்சீவ் பட்டின் இந்தக் குற்றச்சாட்டை நம்பகமானது இல்லை என கூறி விசாரணை அமைப்புகள் அனைத்தும் நிராகரித்துவிட்டன. இதனிடையே 2011-ஆம் ஆண்டு துறைசார்ந்த ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானார் சஞ்சீவ் பட்.

2012 குஜராத் சட்டசபை தேர்தலில் மோடியை எதிர்த்து மணிநகர் தொகுதியில்சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதாவைப் போட்டியிட வைத்தார். இதன் பின்னர் 2015-ஆம் ஆண்டு காவல்துறை பணியில் இருந்தே சஞ்சீவ் பட் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
1990ஆம் ஆண்டு அத்வானி ரதயாத்திரையின் போது குஜராத்திலும் ஹிந்துத்துவ அமைப்பினர் அடாவடியில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட சிலரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அந்த விசாரணை அதிகாரியாக இருந்தவர் சஞ்சீவ் பட்.

விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஒருவர் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு காரணமாக மரணமடைந்தார். இது முதலில் காவல் மரணம் என்று வழக்காக எடுக்கப்பட்டது. மருத்துவ அறிக்கையை பொதுவில் வழங்காமல் இருந்து மோடியைப் பற்றி சஞ்சீவ் பட் கருத்துத் தெரிவித்த பிறகு இந்த வழக்கில் 2012ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது. இறுதியாக ஜூன் 20, 2019 அன்று, ஜாம்நகரில் உள்ள மாவட்ட (செஷன்ஸ்) நீதிமன்றம் பட் குற்றவாளி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. பின்னர் அவர் தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்தை அணுகினார், அது நிராகரிக்கப்பட்டது. அதன் பிறகு இன்றுவரை அவர் சிறையில் தொடர்ந்து இருந்து வருகிறார், இடையில் பல முறை பிணை கேட்டும் வழங்கப்படவில்லை.

இன்றும் இந்த வழக்கு ஆட்சியாளர்களை எதிர்த்தால் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அவர்களின் நிலை இப்படித்தான் ஆகும் என்று மிரட்டும் விதமாக சஞ்சீவ் பட் என்ற நேர்மையான அதிகாரிக்குக் கொடுத்த தண்டனை அச்சுறுத்தி வருகிறது.

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடி அரசின் பங்கை அம்பலப்படுத்தியதற்காகப் பழிவாங்கப்பட்டு கடந்த அய்ந்து ஆண்டுகளாக சிறையில் வாடும் குஜராத் முன்னாள் அய்.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு, அவரது பிள்ளைகள் ஆகாஷி பட் மற்றும் சாந்தனு பட் ஆகியோர் எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதம் :
அன்புள்ள அப்பா!
உங்களன்பு ஆகாஷியும் சாந்தனுவும் எழுதிக்கொள்வது…
மீண்டும் ஓராண்டு கடந்துவிட்டது. இது, போராட்டக் களத்தில் இன்னுமொரு நாள்… இதை எழுதும்போது, நாம் இருவரும் இரண்டு எதிரெதிர் உலகங்களுக்கு நடுவில் அமர்ந்திருக்கிறோம்! மகிழ்ச்சியும் நெருக்கமும் நிறைந்த ஓர் உலகம் போய்விட்டது. இன்று நாம் ஒருவருக்கொருவர் பிளவுபட்டு, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும், இந்த பாசிச சக்திகளுக்கு எதிராகப் போராடும் பாதையில் நிற்கிறோம்! இரண்டு நாள்களுக்கு முன்புதான், இந்த ஈவிரக்கமற்ற ஆட்சி நம்மைப் பிரித்தது. நாங்கள் இந்த கடிதம் எழுதும்போது, நீங்கள் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்ட நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. செய்யாத குற்றத்திற்காக நீங்கள் 5 ஆண்டுகளாகச் சிறையில் வாடுகிறீர்கள். இந்நாட்களில் நாம் ஒன்றாகக் கொண்டாடிய தந்தையர் தினத்தின் பழைய நாள்களின் நினைவலைகளால் சூழ்ந்திருந்தோம். எங்கள் வாழ்க்கை முடிவில்லாத கனவாகிப்போன ஜூன் 20 ஆம் தேதியை நோக்கி என் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. 2019, ஜூன் 20 நினைவுகள் என்னை மூழ்கடித்தன; இந்த ஆட்சியால் சிதைக்கப்பட்ட நீதிமன்றம், விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே முடிவை முன்கூட்டித் தீர்மானித்துவிட்டது. உரிய நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் அதை அப்பட்டமாகப் புறக்கணித்த நீதிமன்றம் எந்த ஆதாரங்களையும் பரிசீலிக்காமல், எதிர்தரப்பு சாட்சிகளைக்கூட அழைத்து வர அனுமதிக்காமல், தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக விசாரணை நடத்தியது.

இரண்டு அரசியல்வாதிகளைப் பாதுகாப்பதற்காக நீதித்துறையே முற்றாகக் கேலிக்குரியதாகி, உங்கள் குரல் நசுக்கப்பட்டது. கடந்த அய்ந்து ஆண்டுகளாக, நாங்கள் மற்றொரு கொடூரமான விசாரணையை எதிர்கொள்கிறோம். எப்படியாவது உங்களை மவுனமாக்க அரசாங்கம் வேறு சில முயற்சிகளை மேற்கொள்கிறது. கடந்த ஒவ்வோர் ஆண்டும், நாம் பிரிந்திருந்த இந்த நாள்களை நினைவில் வைத்து நான் இந்தப் பதிவுகளை எழுது வருகிறேன். என்றேனும் ஒருநாள் நீங்கள் விடுதலையாகி நம் வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்களில் அவற்றை படித்துப் பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையில் இதனை எழுதுகிறேன். அன்று இந்த இருண்ட நாள்கள் நாம் மறக்க நினைக்கும் பழைய நினைவுகளாக இருக்கும் என்று நம்புகிறேன். அதற்காகவே இந்த எண்ணங்களை இங்கே எழுதுகிறேன்.

அனைத்தையும் அன்றைக்கு நேரடியாகச் சொல்ல முடியாது அல்லவா. சொல்ல முடியாமல் போன வார்த்தைகள், அனுபவிக்க முடியாமல் போன தருணங்கள், உருவாகியிருக்க வேண்டிய நினைவுகள்… அனைத்தையும் இங்கே எழுதுகிறேன். அப்பா, நானும் ஷானும் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடமும் நீங்களாக இருக்க முயற்சி செய்கிறோம். எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம். நீங்கள்தான் எங்கள் தைரியம். எங்கள் இதயங்களில் பகுத்தறிவு மற்றும் ஞானத்தின் குரல், எங்களுக்கு வழிகாட்டும் தாரகை, எங்கள் இதயத் துடிப்பு…. உங்களை நாங்கள் தந்தையாகப் பெற்றதற்காக மிகவும் பெருமைப்படுகிறோம்.

இன்று, பொய்வழக்கு சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்ட நான்காவது ஆண்டை அனுசரிக்கும் இந்நாளில் செய்வதறியாது திகைத்து நிற்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. நாங்கள் ஒரு குடும்பம் என்ற நிலையிலும் ஒரு தேசம் என்ற நிலையிலும் உங்கள் விஷயத்தில் தோல்வியடைந்துவிட்டோம் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஒடுக்கப்பட்டவர்களையும் வன்முறையால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்-கான மக்களையும் நீங்கள் பாதுகாத்தீர்கள். ஆனால், பாதுகாவலரைப் பாதுகாக்கும் நேரம் வந்தபோது, நீங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பாதுகாத்த அதே சமூகம், காது கேளாதவர்களைப் போல் கள்ள மவுனத்தில் ஆழ்ந்திருக்கிறது. அலட்சியமும், பயமும், சில சமயங்களில் பேராசையும் அவர்களை முடக்கிப் போட்டது. ஆனாலும் உங்கள் பணிக்காலத்தில் நீங்கள் தைரியமாக, இடைவிடாமல் போராடினீர்கள், ஆனால் நாங்கள்தான் உங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். ஒரு நேர்மையான அதிகாரியாக இருப்பதில் எங்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக இருந்தும், இந்தப் போரில் நாங்கள் அமைதியாக இருந்து தோற்றுவிட்டோம். ♦