மரணம்(5) மரணத்திற்கு பின்னால்…- மருத்துவர் இரா. கவுதமன்

2023 மருத்துவம் மார்ச் 1-15,2023

மரணமடைந்தவர்கள் மீண்டும் உயிரோடு வரமாட்டார்கள் என்ற உண்மை எல்லோரும், அறிவர். ஆனால் அவர்களோடு வாழ்ந்த நாள்கள், அவர்களைப் பற்றிய நினைவுகள் அழியாமை, மரணம் அடையும் வரை நம்மோடு இருந்தவர்கள் அதற்குப் பிறகு என்ன ஆகிறார்கள் என்ற கற்பனை ஆகியவற்றின் விளைவாகத் தோன்றிய எண்ணங்களே கடவுள், ஆவிகள், பேய்கள், பிசாசுகள், ஆன்மா போன்றவை கற்பனையாக உருவாக அடிப்படைக் காரணம்.

பல நேரங்களில் மரணமடைந்தவர்களின் உறவினர்கள், “அவர் மரண-மடையப் போவதை ஒருசில மணி நேரத்திற்கு முன்னே, ஒரு சில நாள்களுக்கு முன்பே உணர்ந்துவிட்டார் போலும்’’ என்றெல்லாம் கூறுவதைக் கேட்டுள்ளோம். ஆனால், இதற்கு எந்தவித மருத்துவ, அறிவியலும் அடிப்படையாக இல்லை. எல்லா மதங்களிலும் மரணத்தைப் பற்றி பலவகை
மூடநம்பிக்கைகள் நிலவுகின்றன.

எல்லா மதங்களிலும் மரணமடைந்தவர்கள் ஆவியாக அலைவதாக நம்பிக்கைகள் நிலவுகின்றன. அதுவும் திடீரென ஏற்படும் மரணங்களில் மரணமடைந்தவர்கள் தங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாததால் ஆவியாக மாறி அலைகின்றனர் என்ற நம்பிக்கை பரவலாக அனைவர் மனதில் இருக்கிறது. அதிலும் நல்லவர்கள், நம்மை வழி நடத்திய பெரியவர்கள் நல்ல ஆவிகளாக மரணத்திற்குப் பின்னும் நமக்கு நல்வழி காட்டுவதாகவும், கெட்டவர்கள் கெட்ட ஆவிகளாக மாறி நமக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கை. திடீரென மரணமடைந்தவர்கள் தங்கள் ஆசை நிறைவேறும் வரை ஆவியாக அலைந்து மற்றவர்களுக்குத் தொல்லை கொடுப்பார்கள் என்றும் நம்புவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

ஆவிகளைப் பற்றிய எண்ணங்களும்,நம்பிக்கைகளும் நாளடைவில் பேய்களாக உருவாகியது. பேய்கள், பிசாசுகள் கற்பனைக்கு, மதம், மத குருமார்கள், அதை வளர்த்ததும் ஒரு முக்கிய காரணம். கடவுள் பற்றிய நம்பிக்கையைப் போலவே “சாத்தானை’’ப் பற்றிய நம்பிக்கையும் பெரும்பாலான மதங்களிலும் உள்ளன. நாகரிகம் வளரும் காலத்தில் ஒரு பேரரசாக உருவாகிய கிரேக்கம் பல கடவுள்களை நம்பி, அவற்றுக்கு உருவம் கொடுத்து, சிற்பங்களாக வடிக்கத் துவங்கினர். ஒவ்வொரு செயல்பாட்டிற்கும், ஒரு கடவுளைக் கற்பிப்பதும், அதை வணங்கும் பழக்கமும் கிரேக்க நாட்டிலேயே உருவானது. அதற்குப் பிறகு வந்த ரோமப் பேரரசில் அரசனே கடவுள் என்ற நிலைகளில் நம்பிக்கை கொள்ளும்படி மக்கள் வற்புறுத்தப்பட்டனர்.

ரோமப் பேரரசு காலத்தில் தோன்றிய ‘செமிடிக்’ மதங்கள் பல உருவ வழிபாடுகளை மாற்றி, ஒரு கடவுள் தத்துவத்தை முன் வைத்தன. ‘பைபிளில் வரும் ஆப்ரகாம் கதைக்குப் பிறகு உருவான மதங்கள் “செமிடிக் மதங்கள்’’ என்றழைக்கப்பட்டன. யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் இவையனைத்தும் ஒரு கடவுள் வழிபாட்டில் நம்பிக்கை வைத்தன. யூதர்களின் வேதமான “தோரா’’விலும் அதிலிருந்து கிளைத்த கிறித்துவர்களின் வேதமான “பைபிளி’’லும், அதற்குப்பின் வந்த இஸ்லாமியர்களின் வேதமான “குர்ஆனி’’லும் கடவுளைப் பற்றிக் குறிப்பிடுவது போலவே, “சாத்தானை’’ப் பற்றியும் குறிப்பிடுகின்றன.

நன்மை செய்பவர் கடவுள், தீமை செய்பவர் சாத்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே நன்மை செய்யும் “பரிசுத்த ஆவி’’களும் தீமை செய்யும் கெட்ட ஆவிகளும், “பிசாசுகள்’’, “இரத்தக் காட்டேரிகள்’’(ஞிக்ஷீணீநீuறீணீ) தோன்றின அதே ஒவ்வொரு மதத்திலும், ஒவ்வொரு நாட்டிலும் நன்மை செய்யும் தேவதைகளும், தீமை செய்யும் ஆவிகளும் அவரவர் கற்பனைகளுக்கு ஏற்ப, அப்பகுதியின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டன.

பயத்தின் விளைவாகவே, அந்த ஆவிகளும், பேய்களும் தம்மைப் பிடித்துக்கொள்ளும் என்ற நிலையில் அவற்றை மனநிறைவடையச் செய்ய, அந்தக் கற்பனை உருவங்களை அமைதிப்படுத்த அவற்றை வணங்குவதும், அவற்றிற்கு வேண்டியதைப் படைக்கும் பழக்கமும் ஏற்பட்டது.
கடவுளுக்கும், மக்களுக்கும் தொடர்பு உண்டாக்கும் இடைத்தரகர்களாக, “அர்ச்சகர்களாக’’ வாழ்ந்தனர். கடவுள் ஆவிகள், பேய்கள் இவற்றைக் கட்டுப்படுத்தும் சக்தி படைத்தவர்களாக இவர்கள், மக்களால் நம்பப்பட்டனர். இந்தியாவில் ஆரியர்கள் இந்தத் தரகுப் பணிகளை செய்யத் துவங்கினார்.

அரசர்களே மதகுருமார்களின் கட்டளை-களாக ஆண்டவன் கட்டளையாக ஏற்றுக்-கொண்டு செயல்படும் பொழுது அவர்கள் கீழ் வாழும் குடிமக்கள் மதகுருக்களின் ஆணைகளை, கடவுளின் ஆணைகளாக, எதிர்ப்பின்றி ஏற்றுக்கொண்டு அடங்கிப் போயினர். சர்வ வல்லமை உடைய மனிதர்களாக மதகுருக்கள் மாறிப்போயினர். பல பகுதிகளில் கடவுளின் ஆணைகளை அறிந்தவர்களான இந்த அர்ச்சகர்களே தங்கள் வாரிசுகளுக்கு மதச்சடங்குகளும், அவை தங்கு தடையின்றி தொடரும் முறைகளையும் சொல்லித் தந்தனர். அதன் விளைவாக அர்ச்சகர் பரம்பரை தோன்றியது. புரோகிதர்கள் மட்டுமே தெய்வீக சம்பிரதாயம் அறிந்தவர்களாக பல மதங்களில் மாறிப்போனார்கள்.

புரோகிதனுக்கு மட்டுமே கடவுளை அணுகும் வழிமுறைகள் தெரியும் என்றும், கடவுளின் விருப்பையும், வெறுப்பையும் காட்டும் மந்திரங்கள் அவனுக்கும், அவன் பரம்பரைக்கு மட்டுமே தெரியும் என்றும் மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். பரம்பொருளுக்கும், பக்தனுக்கும் இடையே இந்த இடைத்தரகன் பாதி தெய்வீகத்தன்மை உடையவன் ஆனான். அவன் துணையின்றி ஒருவரும் நேரடியாக தெய்வத்தைத் தொழுவதோ, தெய்வத்துடன் தொடர்புகொள்ளவோ முடியாது என்ற நிலை நாளடைவில் மக்களிடையே பரவச் செய்யப்பட்டது. புரோகிதர்களும், அர்ச்சகர்களும், பூசாரிகளும் சமூகத்தில் அஞ்சத் தக்கவர்களாகவும், அவர்கள் சொற்கள் தெய்வீக அருள்வாக்காகவும் மாறிவிட்டது.
நாட்டை ஆளும் மன்னர்களும் அந்த தெய்வீக அருள்வாக்கிற்குக் கட்டுப்பட்டனர். மன்னர்களையும் மிஞ்சிய அதிகாரம் உடைய அவர்களைப் பார்த்து மக்கள் பயத்துடன் அணுக வேண்டிய நிலை ஏற்பட்டது. எந்த கடவுள்களை நெருங்க இந்தப் பூசாரிகள் தேவைப்பட்டனரோ, அவர்களையே மக்கள் பயத்துடனும், பக்தியுடனும் (பய, பக்தி) நெருங்கும் நிலை ஏற்பட்டது.

– தொடரும்