நூல் மதிப்புரை : அச்சேறியுள்ள ஆசிரியர் நினைவலைகள்

2023 நூல் மதிப்புரை ஜனவரி 16-31 ,2023

பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்

* திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வயது 90. அவரது பொது வாழ்க்கையின் வயது 80. அவரது நினைவுகளைப் பின்னோக்கி இழுத்துச் சென்ற நிகழ்வுகளின் வயது 60.
இது போன்ற ஒரு அரிய தலைவரின் நினைவுகளை அவரே நமக்கு அறியச் செய்வது தான் இந்த நூல்!
* தந்தை பெரியார் பற்றி 16 கட்டுரைகள், அன்னை மணியம்மையார் பற்றி 11 கட்டுரைகள், பாவேந்தர் பாரதிதாசன் பற்றி 9 கட்டுரைகள், ‘விடுதலை’ இதழ் அனுபவங்கள் பற்றி 7 கட்டுரைகள் என மொத்தம் 43 கட்டுரைகளை உள்ளடக்கிய கையடக்கமான நூல் இது !
* ஆசிரியர் அய்யாவின் ஆற்றோட்ட நடையை இதில் காண முடிகிறது! தன்னைப் பின்னோக்கித் தள்ளி, தகவல்
களுக்கு முக்கியம் தருகின்ற தலைமைப் பண்பு, நிகழ்வுகளை நிஜத்திற்கு கொண்டு வந்து நிறுத்தும் நினைவாற்றல், தியாகத்தாலும் பொறுமையாலும் பெற்ற அனுபவங்களின் பாடங்கள் – இவை அத்தனைக்கும் நிகழ்வுகளோடு சான்றுகள் தந்துள்ளார்!
* தந்தை பெரியார் பற்றிய நினைவுகளை எழுதும் போது ஆசிரியரின் மனநிலை – காணக் கிடைக்காத பொக்கிஷத்தைக் காணுகின்ற ஒருவரின் வியப்பைத் தான் உணர முடிகின்றது! பெரியார் மீது அவர் வைத்திருக்கிற அன்பையும் மரியாதையையும் வெளிப் படுத்துவது போல அமைந்துள்ளது !
* பெரியார் – அண்ணா உறவு பற்றிய ஒரு நிகழ்வு நம்மை நெகிழச் செய்கிறது. ஈரோட்டில் அண்ணா ‘விடுதலை’ ஆசிரியராக இருந்த காலம். காலை நடை பயிற்சிக்கு தினமும் நண்பர்கள் இருவரோடு ஈரோடு ரயில் ஜங்ஷன் பிளாட்பாரத்திற்குச் செல்வது வழக்கமாம். அங்கே நடைப்பயிற்சியோடு மனப் பயிற்சியாக புத்தகங்களையும் வாசிப்பாராம் !
* அங்கே இருந்த ஹிக்கின்பாதம்ஸ் புத்தகக் கடை நண்பரின் உதவியால் – தினமும் ஒரு ஆங்கில நூலை கடையிலேயே உட்கார்ந்து படிப்பாராம்..பெரிய புத்தகமென்றால் மறுநாளும் மீதமுள்ள பக்கங்களைப் படித்து முடிப்பாராம், அண்ணா! படித்த தகவல்களை திரும்பிச் செல்லும் போது விவரித்துக் கொண்டே நடந்து செல்வாராம்!
* ஒருமுறை அண்ணா, தான் படித்த புத்தகம் ஒன்று மிகச் சிறப்பாக இருந்ததைக் கூறி அதன் விலை ரூ.50 ஆக இருந்ததால் வாங்க முடியாமல் போனதற்காக வருந்தினராம். இதன் காரணமாக நண்பரில் ஒருவர் தந்தை பெரியாரிடம்
எடுத்துச் சொன்னாராம்!
* எல்லோரும் வியந்து போகும் வகையில் பெரியார் ரூ.100அய்த் தந்து, இரண்டு புத்தகங்கள் வாங்கச் சொல்லி, ஒன்று ‘குடிஅரசு’க்காகவும் ஒன்று அண்ணாவுக்காகவும் ஏற்பாடு செய்தாராம்!
காசை இறுகப் பிடிக்கும் அய்யா, கருத்தைச் சொல்லும் நூலுக்காக தாராளமாகப் பணம் தந்தாராம்!
* அன்னை மணியம்மையாரின் தியாகவுள்ளத்தை விளக்கிச் சொல்வது போல நடந்த நிகழ்வு ஒன்றை நினைவு படுத்துகிறார்.
தந்தை பெரியாரின் மறைவுக்குப் பிறகு, ஈரோட்டில் அவர் பிறந்த வீட்டை, அய்யாவின் நினைவிடமாக அரசு சார்பில் அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அறிவித்தார்! இடத்திற்கான இழப்பீட்டை அரசு தர தயாராக இருந்ததையும் தெரிவித்தார்!
* அன்னை மணியம்மையாரோ இழப்பீட்டு தொகையை மறுத்ததோடு, அய்யாவின் இல்லத்தையொட்டி இருந்த சிறு வீடு_- அண்ணாவும் அவரது துணைவியாரும் வாழ்ந்த வீட்டையும் சேர்த்து, அரசுக்குக் கொடுத்து இருவரின் நினைவாக – அரசு சார்பில் ‘ பெரியார் அண்ணா நினைவகம் ‘ உருவாவதற்கு உறுதுணை
யாக இருந்தாராம்!
* பெரியார் _ – மணியம்மையார் திருமணக் காரணத்தினால் அண்ணா பெரியாரை விட்டுப் பிரிந்ததையும், அதன் பின்பு நடந்த பல கசப்பான நிகழ்வுகளையெல்லாம் மனதில் கொள்ளாமல் – தனது தியாக திருவுள்ளத்தால் எல்லோரையும் அதிசயிக்கச் செய்தார், அன்னை மணியம்மையார்!
இந்த வரலாற்று நிகழ்வு இன்றைய தலைமுறைக்குத் தெரிய வேண்டுமல்லவா?
* பாவேந்தர் பாரதிதாசன் புதுவையில் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் பற்றிய நிகழ்வு ஒன்று . தந்தை பெரியார், பாவேந்தர் மற்றும் ஆசிரியரும் கலந்து கொண்ட கூட்டம். கவிஞரோ மதங்கள் பற்றியும், சிவஞான போதம் பற்றியும் பேசினார்.
* சிவஞான போதம் சொல்லும் பாடல் ஒன்றை மேடையிலேயே பாடிக் காட்டினாராம். “மாயமான் தன்னை உண்மை மான் என்று நினைத்துப் போனவன் (ராமன்) எப்படி கடவுளாக இருக்க முடியும்?’’ என்று வினா தொடுத்து இருந்ததாம் -_ அந்தப் பாடலில்.
இப்படிப்பட்ட அரிய நிகழ்வையும் இந்த நூலில் காணமுடிகின்றது!
* ‘விடுதலை’ நாளேட்டில் பணியாற்றிய போது கிடைத்த பல அனுபவங்களை நம்மோடு பகிர்கிறார் !
* அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவை தலைவராக இருந்தார் பி. எச். பாண்டியன். சட்டமன்றத்தின் அதிகாரம்_- வானளாவிய அதிகாரம் எனக் கூறி, விகடனில் வெளியான கார்ட்டூனுக்காக, அதன் ஆசிரியர் பாலசுப்பிரமணியனைக் கைது செய்து, சிறையில் தள்ளினார்.
அதனை கண்டித்து ‘விடுதலை’யில் அறிக்
கையை வெளியிட்டார் ஆசிரியர்!
* “எழுத்துரிமை, கருத்துரிமை பறிப்பு என்னும் போது அது முக்கியமானது என்று கருதுவது சக பத்திரிகையாளர்களின் கடமை! அதில் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்ற
பிரச்சினைக்கே இடமில்லை “ என்று தனது நிலையை விளக்கி ஆசிரியர் பதில் அளித்தாராம்.
பின்பு, சில நாள்களில் விடுதலையாகி வந்த விகடன் ஆசிரியரை, முதல் ஆளாக அவரது ஆனந்த விகடன் அலுவலகத்திற்கே நேரில் சென்று, அவருக்குச் சால்வை அணிவித்து, பாராட்டியும் வந்தாராம் !
* ஆசிரியர் அய்யாவின் 60 ஆண்டுகால ‘விடுதலை’ நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பில் கிடைத்த அனுபவங்கள் இது போன்று ஏராளம்! அதற்காகவே தனியாக ஒரு நூல் எழுதப்பட வேண்டும் !
* ஆசிரியர் இது போன்று பல நிகழ்வுகளையும் நினைவுகளையும் மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தை – அச்சில் கொண்டு வந்துள்ளார் !
தமிழர் தலைவரின் அனுபவங்களை வெளியிடுவது மூலம், தலைவருக்குத் தலைவரான பெரியார் பற்றியும் மற்றவர்கள் பற்றியும் அறிந்து கொள்ளும் நல் வாய்ப்பு நமக்குக்
கிடைக்கிறது!