மருத்துவம் :மரணம் (2)

2023 மருத்துவம் ஜனவரி 16-31 ,2023

மருத்துவர் இரா. கவுதமன்

1980இல் ‘மரணம்’ என்பதன் விளக்கம் தெளிவாக்கப்பட்டது.
1. ஒருவர் மீள முடியாத நிலையில் இரத்த ஓட்டம் நின்றுவிடுதல் மூச்சு விடுவது நின்று விடுதல் (Irreversible cessation of circulatory and respiratory function).

2. மீள முடியாத நிலையில் ‘மூளை’யின் செயல்பாடுகள் நின்று விடுதல் (Irreversible cessation of all functions of the entire brain).

மருத்துவ முறையிலும், சட்டத்தின் முறையிலும் இன்று உலகம் முழுவதும் மரணம் குறித்து இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மரணம் நிகழக் காரணங்கள்:
விபத்துகள்
தற்கொலைகள்
கொலைகள்
நோய்கள்
இயற்கை மரணங்கள்
இவற்றில் விபத்துகள், தற்கொலைகள், கொலைகள் போன்றவை எதிர்பாராது திடீரென ஏற்படும் நிகழ்வுகளாகும். இவற்றில் விபத்துகளில், தலையில் அடிபட்டு, தலை எலும்புகள் உடைந்து, மூளையும் பாதிப்படைந்தால் ‘மூளைச் சாவு’ ஏற்பட்டு மரணம் நிகழக்கூடும். மனத் தளர்ச்சி (Depression), சமூகப் பயங்கள், தற்கொலைகள் நிகழக் காரணங்களாக அமைகின்றன. நச்சு மருந்துகள், பூச்சிக்கொல்லிகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளுதல், தூக்கிட்டுக் கொள்வது போன்ற செயல்பாடுகளால் தற்கொலை நிகழ்கிறது. சண்டைகள், பகை, பயம், பழிவாங்குதல் போன்றவை கொலைகள் நிகழக் காரணமாகின்றன.
நோய்வாய்ப்பட்ட மரணங்களும், இயற்கை மரணங்களும் இயல்பான மரணங்களாக நிகழ்கின்றன. மாரடைப்பு, இதய முடக்கம் (Heart attack, Cardiac arrest) முதிர்ச்சியடைந்த புற்றுநோய், சிறு நீரகச் செயலிழப்பு, கட்டுப்படுத்தப்படாத நீரிழிவு நோய், மிகு இரத்த அழுத்தம், தோல்வியடைந்த மருத்துவம், மூப்பு போன்றவற்றால் இயற்கை மரணங்கள் நிகழ்கின்றன.

மரணம் நிகழும் பொழுது:
மரணம் என்கிற நிகழ்வு நடக்கும் பொழுது, உடல் திசுக்களின் இயக்கம் முழுமையாக நின்றுவிடுகிறது. இதயம் தன் துடிப்பை நிறுத்திவிடும். மூச்சு நின்றுவிடும். மூளைச் செயல்பாடு முழுமையாக நின்றுவிடும். சில ஆய்வுகள், மரணம் நிகழ்ந்த உடன் மூளை முழுமையாகச் செயலை நிறுத்திவிடாமல், மேலும் சில நிமிடங்கள் செயல்படுவதாகக் கூறுகின்றன. ஆனால் அந்தச் செயல்பாடுகளும் உயிரோடு இருக்கும் பொழுது மூளை செயல்படுவதைப் போலில்லாமல் மந்தகதியில் அச்செயல்பாடுகள் இருக்கும் என்பதும் அவ்வாய்வுகளின் முடிவு.

மரணத்தின் முக்கிய நிகழ்வுகள்:
மரணம் நிகழும் பொழுது, இதயம் நின்றுவிடும். இதயம் மெதுவாக நிற்கும் பொழுது, அது வெளியேற்றும் இரத்தமும், இரத்த ஓட்டமும் மெதுவாகி, இரத்த ஓட்டம் நின்றுவிடும். இரத்த ஓட்டம் நிற்பதால் உடல் திசுக்களுக்குத் தேவையான உயிர் மூச்சுக்காற்று, திசுக்களுக்குச் செல்வது தடைபட்டு அத்திசுக்களின் இயக்கம் நின்றுவிடும். இரத்தத்தின்மூலம் செல்லும் உணவுச் சத்துக்களும் உயிர் மூச்சுக்காற்றும் (Oxygen) நின்று விடுவதால், செல்களில் ஏற்படும் “மூச்சுக்காற்று ஏற்றம்’’ (Oxidation) நின்றுவிடும். அதன் விளைவாக செல்களில் உண்டாகும் வெப்பம் உண்டாகாமல் உடல் சில்லிட்டுப் போகும். இறந்த உடல் சில்லிட்டுப் போக இதுவே காரணம்.
அனைத்துத் திசுக்களில் ஏற்படும் மாற்றங்கள் போலவே நரம்பு மண்டலமும், அதன் தலைமையகமான மூளைத் திசுக்களும் செயலிழக்கத் துவங்கி, சில நிமிடங்களில் தன் செயல்பாட்டை முழுமையாக நிறுத்திக்கொள்ளும். “இறப்பு’’ என்பதற்கு “மூளைச்சாவு’’ என்று உறுதியான பின், மூளையின் செயல்பாடுகள் நின்ற பிறகும் இன்றைய மருத்துவ அறிவியல் மற்ற உறுப்புகளின் செயல்பாட்டை நிறுத்தாமல் பல நாள்கள் செயல்பட வைக்கக்கூடிய வகையில் வளர்ந்துள்ளது.

எதிர்பாராத விபத்துகளால் பாதிக்கப்பட்ட-வர்களின் தலையில் அடிபடும் சூழ்நிலையில் (Head Injury) அடிபட்டவர் முழு மயக்க நிலைக்குச் (Coma) சென்றுவிடும் சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றால் மூளை மெதுவாகச் செயலிழக்கும் நிலை ஏற்பட்டாலும், மற்ற முக்கிய உறுப்புகள் செயலிழக்காமல், நோயாளிக்கு வெளியிலிருந்து, பொறிகள் மூலம் (Mechines) இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளைச் செயல்படுத்த முடியும். இந்த மருத்துவ வளர்ச்சி, உறுப்பு மாற்று (Organ Transplantation) மருத்துவத்தில் ஒரு பெரும் புரட்சியையே ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமின்றி பல்லாயிரக் கணக்கான நோயாளிகள் (உறுப்புகள் செயலிழந்தவர்கள்) வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
* இறப்பிற்கு முன் முதல் நாளோ அல்லது
சில நாட்களுக்கு முன்போ உடல் செயல்பாடுகள் சிறிது சிறிதாகக் குறைந்துகொண்டே வரும்.
* மரணத்திற்கு முன் நோயாளி மிகவும் அமைதியாக இருக்கக் கூடிய சூழ்நிலை சில நேரங்களில் ஏற்படும்.
* மரணம் என்பது சில நேரங்களில், சிலருக்கு திடீரென ஏற்பட்டாலும் (எடுத்துக்காட்டாக, இதய முடக்கம் (Cardiac arrest) ஏற்பட்டு இறத்தல்), பெரும்பாலான நோயுற்றவர்களுக்கு மருத்துவம் செய்வதற்கேற்ப, மெதுவாகவே ஏற்படலாம். மரணம், மருந்துகள் மூலம் அமைதியாகவும், மெதுவாகவும் இறப்பு ஏற்படுத்துவதையே மருத்துவர்கள் செயல்படுத்துவர்.
* நோயாளிகள் வலியின்றி, அமைதியாக, அதிகத் தொல்லைப்படாமல் இயற்கையாக மரணமடையும் நிலையும் சில சமயம் எற்படும்.
* மரணம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு வகையில் நிகழும் என்பதே உண்மை.
ஒவ்வொருவருடைய வயது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய், அதனால் ஏற்பட்ட உறுப்புகளின் பாதிப்புகள், அந்நோயினை£ல் பாதிக்கப்பட்ட முக்கிய உறுப்புகளின் செயலிழப்பு, மருத்துவம் செய்வதன் நிலைப்பாடுகள் போன்றவை ஒருவரின் மரணம் நிகழும் நேரத்தை நிர்ணயிக்கும் (எடுத்துக்காட்டாக மாரடைப்பு ஒரு சில மணி நேரத்தில் நிகழும் இதய முடக்கம் உடனே நிகழ்ந்துவிடும். விபத்துகளால் ஏற்படும் மரணம் அவர்களுக்குப் படுகின்ற காயங்கள், இரத்தப்போக்கு போன்றவற்றைப் பொருத்து ஏற்படும். வயது மூப்பினால் ஏற்படும் மரணம், உறுப்புகளின் செயலிழப்பைப் பொறுத்து சில மணி நேரம் முதல் சில நாள்கள் வரைகூட மெதுவாக நிகழும்.)
இதய நோய்கள், நுரையீரல் நோய்கள், புற்று நோய்கள், சிறு நீரக நோய்கள் மருத்துவம் செய்வதைப் பொறுத்தும், மருத்துவம் பயனின்றிப் போவதைப் பொறுத்தும் மரணத்தைத் தள்ளிப்போடலையும், பின் மரணம் நிகழும் வகையில் அமையும். மரணத்தின் நிகழ்வை இந்த உறுப்புகளுக்குச் செய்யும் மருத்துவம் மெதுவாக நிகழ வைக்கும் (slow down)

மரணத்திற்கு முன் ஏற்படும் மற்ற மாற்றங்கள்:
பெரும்பாலானவர்கள் மரணத்திற்கு முன் ஒரு சில மணிகளோ, ஒரு சில நாள்களோ அமைதியான உறக்க நிலையிலோ (More Sleep) ஆழ்ந்த மயக்கத்திலோ (Coma) ஆழ்ந்துவிடுவர். உடல் இயக்கத்திற்கு தேவையான உணவுகள் உடலில் உள்ளே செல்லாததால் உடல் உறுப்புகளின் செயல்பாட்டிற்குத் தேவையான சக்தி கிடைக்காது. அதனால் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் குறைந்துகொண்டே வரும். இதயம் மெதுவாக இயங்குவதால் உடலுக்குத் தேவையான இரத்தம் இதயத்திலிருந்து செல்லாது.
இரத்தத்தின் மூலமே செல்களின் இயக்கத்திற்குத் தேவையான உணவு, உயிர்மூச்சுக்காற்று கிடைக்காது. மெதுவாக உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கும். இறக்கத் துவங்கும் உறுப்புகளுக்கு செயலிழப்பின் விளைவாக பசியோ, தாகமோ எடுக்காது. இந்த பசியின்மை நோயினாலோ, மூப்பினாலோ ஏற்படும் மரணத்திற்கு பல நாள்களாகவோ, பல வாரங்களாகவோ, பல மாதங்களாகவோகூட நிகழக்கூடும்.