நிகழ்வு –  வரலாற்றை அடுத்தத் தலைமுறைக்கு நகர்த்திய நூல் வெளியீட்டு விழா

2023 கட்டுரைகள் ஜூன் 16-30,2023

வை. கலையரசன்

‘விடுதலை’ ஏடு பார்ப்பனியம் செய்த சூழ்ச்சிகளால் பாழ்பட்டுப் போயிருந்த தமிழர் சமூகத்தின் வாழ்வுரிமையை மீட்டெடுத்த ஏடு மட்டுமல்ல, தமிழரின் மறுமலர்ச்சியைக்  காட்டிய வரலாற்று நிகழ்வுகளின் பதிவேடு ஆகும்.

இந்த பதிவேடுகளிலிருந்து வரலாற்றுச் செய்திகளை தேர்ந்தெடுத்து தொகுத்து அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் வழங்கும் வகையில் “விடுதலைக் களஞ்சியம்“ என்ற தொகுப்பு வரிசையை வெளியிடத் தொடங்கியுள்ளார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி. இதன் முதல் தொகுதி வெளியீட்டு நிகழ்வு சென்னை பெரியார் திடலில் விடுதலை ஏட்டின் 89 ஆம் ஆண்டு விழாவில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, விடுதலைக் களஞ்சியம் முதல் தொகுதியைக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் வெளியிட எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார். விழாவில் பங்கேற்று தி.மு.க. செய்தித் தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆகியோர் உரையாற்றினர்.

இந்த விழா நூல் வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாமல் இன்றைய அரசியல் சமூகச் சூழலில் தமிழர்களுக்கு வழிகாட்டும் வகுப்பாகவும் அமைந்திருந்தது..

கவிஞர் கலி. பூங்குன்றன்

அறிமுக உரை ஆற்றிய துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்கள் ஆற்றிய உரையில்,
நீதிக்கட்சியினர் திராவிடன் ஏட்டையும் விடுதலை ஏட்டையும் தொடங்கி அவற்றை நடத்த முடியாமல் தந்தை பெரியாரிடம் ஒப்படைத்ததை குறிப்பிட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் போர்வாள்களாக விளங்கிய ஏடுகள் மூச்சு திணறிய நேரங்களில் எல்லாம் பிராண வாயுவாக பெரியார் திகழ்ந்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ஆய்வாளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் ஏராளம்.

மேலும் தந்தை பெரியார் பொறுப்பேற்றத்தில் விடுதலை ஏடு எதிர்கொண்ட அறைகூவல் களையும் தந்தை பெரியாருக்கு பின் அன்னை மணியம்மையார் காலத்தில் எமர்ஜென்சி நேரத்தில் தணிக்கை என்ற பெயரில் விடுதலை சந்தித்த இடர்பாடுகளை விளக்கி, அப்போது அன்னை மணியம்மையார் அவர்கள் எவ்வளவு துணிச்சலோடு அந்த நெருக்கடி நிலையை சந்தித்து, விடுதலையைத் தடையின்றி நடத்தினார் என்பதை வரலாற்று குறிப்புகளோடு எடுத்துரைத்தார்.

இதழியல் வரலாற்றில் இவை தவிர்க்க இயலாத சாதனை சரித்திரங்கள் ஆகும். இளைஞர்களும் ஆய்வாளர்களும் இதழியலாளர்களும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளாகும். எதிர்காலத்தில் காவி பாசிச அரசு மேற்கொள்ளும் ஊடக சுதந்திரங்களுக்கு எதிரான அறக்கூவல்களை எதிர்கொள்ளும் மனநிலையை உருவாக்கும்.

தொல். திருமாவளவன்

நூலைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமா வளவன் அவர்கள் தனது உரை சமூகச் சூழலில் தந்தை பெரியாரை ஆயுதமாக தாங்கிப் பிடிக்க வேண்டிய வரலாற்று கடமையை உணர்த்தியது.

சனாதனமும், பாசிசமும் எப்படி இந்தியாவை ஆட்டிப் படைக்கிறது என்பதை விளக்கி, அதற்கான நிகழ்கால சாட்சியமாகதான் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டார் என்பதையும், புதிய நாடாளுமன்றம் மக்களாட்சிக்கான மன்றமாக இல்லாமல் சனாதன கூடாரமாக இருப்பதையும் விளக்கினார். தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் புதிய நாடாளுமன்றத்தில் 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அவர்களுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் மறைமுகத் திட்டம் உள்ளது என்பதை விளக்கி அவ்வாறு அமைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை என்பது மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே அமையும் என்றால் அது மிகப் பெரிய ஜனநாயக விரோத போக்காக அமையும் என்று கூறியுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் எவ்வளவு முக்கியமானது என்றும், மக்களவை தலைவர்கள் முன் அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையை நிச்சயம் வைக்க வேண்டும் என்றும், செங்கோல் வைக்க வேண்டிய இடத்தில் அரசமைப்புச் சட்ட முகவுரை இருக்க வேண்டும்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பிஜேபியை வீழ்த்த வேண்டும் என்றும், தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையும் நாம் பாதுகாக்க வேண்டும் என்றால் பெரியார் இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் தேவைப்படுகிறார் என்றார்.

இந்தியா முழுவதும் பரவ வேண்டிய கருத்து பெரியார் கருத்தாக இருக்கிறது என்பதை எடுத்துரைத்து, பிஜேபி கட்டியமைக்க நினைப்பது இந்து ராஷ்டிரமல்ல ‘பிராமண ராஷ்டிரா’ என்பதையும் விளக்குகிறார்.
ஒரு ஜனநாயக நாட்டில் நீதி நெறி தவறாத ஆட்சியை வழங்குவதற்கான வழிகாட்டி நூலாக கொள்ளப்பட வேண்டியது அந்த நாட்டிற்கென உருவாக்கப்பட்ட அரசியல் சட்டங்கள் தாம்! அதுவே ஆட்சியாளர்கள் பின்பற்ற வேண்டிய சாசனம்!

நூலை வெளியிட்டு உரையாற்றிய கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஆசிரியர் எழுதிய முன்னுரையை பாராட்டினார்.
“பெர்னாட்சாவின் அனைத்து நூல்களிலும் முன்னுரை இருக்கும். அவர் எழுதிய
முன்னுரைகளை மட்டுமே தொகுத்து அதற்காக ஒரு நூல் வெளியிட்டு அந்த நூலுக்கு முன்னுரை எழுதினார்.
ஓர் ஆராய்ச்சி மாணவர் போல் இந்த நூலுக்கான முன்னுரையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
நீதிக்கட்சியிடமிருந்து விடுதலை பெரியாரிடம் வந்தது தொடங்கி, பல்வேறு செய்திகளைச் சாறு போல் ஆசிரியர் பிழிந்து தந்திருக்கிறார்,

தொடர்ந்து, ‘விடுதலைக் களஞ்சியம்’ வெளியீட்டு விழாவுக்காக அவர் எழுதிய ‘நடிகவேள் மன்றம் நிரம்பப் பூக்கள்’ என்ற கவிதையை வாழ்த்து செய்தியாய் பதிவு செய்தார்.

இதழியலாளர் ப. திருமாவேலன்

நிகழ்வில் எழுத்தாளர் ப. திருமாவேலன் அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். அவரது உரையில், திராவிட பல்கலைக்கழகத்தின் நிரந்தரமான வேந்தர் ஆசிரியர் என்று தொடங்கி, ஒரே ஒரு சாதனையை மட்டும் தான் ஆசிரியர் பாக்கி வைத்திருந்தார். அதுவும் இன்றைக்கு நிறைவேறி இருக்கிறது. அதுதான் விடுதலை களஞ்சியம் என்றார்.

தமிழர் தலைவர் ஆசிரியருடைய சாதனை என்பது பெரியாருக்குப் பின் விடுதலையை விடாமல் நடத்தியது என்றார். மேலும், எனக்கு பின்னால் என் வாரிசு என் புத்தகங்கள் தான் என்றார் பெரியார். இன்று, பெரியாருக்குப் பிறகு அதிக அளவில் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதிலும் பெரியாரின் புத்தகங்களைப் பதிப்பிக்காமல் பதிப்பகம் நடத்த முடியாது என்று நினைக்கக் கூடிய அளவில் பெரியாரை “செல்லிங் பாய்ண்ட்” ஆக மாற்றியது ஆசிரியருடைய அடுத்த சாதனை.

பெரியாருக்குப் பிறகு திராவிடம் இருக்காது, இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தபோது பெரியாரே பரவாயில்லை என்று எதிரிகளைச் சொல்ல வைத்ததும் ஆசிரியரின் சாதனை. ஒவ்வொரு செய்தியையும் தனித்தனியாக தொகுத்து பல்வேறு நூல்களை ஆசிரியர் வெளியிட்ட விதத்தை அடுக்கடுக்காக விளக்கி, ஆசிரியர் அவர்கள் பொதுச்செயலாளராக ஆனதிலிருந்து சாதனையை மட்டுமே செய்கிறார்.

அதிலும் குறிப்பாக குடிஅரசு, பகுத்தறிவு போன்ற வார இதழ்களை தொகுப்பது என்பது கொஞ்சம் எளிமையான காரியம். ஆனால், விடுதலை போன்ற நாளிதழை தொகுத்திருக்கிறார் என்றால் இது யாரும் செய்ய முடியாத மகத்தான சாதனை என்றார். தமிழர், தமிழினம் பற்றிய செய்திகளை மட்டும் விடுதலையில் திருப்பிப் பார்ப்பதற்கே தனக்கு அய்ந்து ஆண்டுகள் ஆனது என்றும் , ஆனால் இன்றைக்கு விடுதலை தொகுதியாக வருகிறது என்றால் அது மிகப் பெரிய சாதனையின் தொடக்கம். நீதிக்கட்சியால் திராவிடன் நாளிதழ் தொடங்கப்பட்ட நாள் 01.06.1917, ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு முன்பே திராவிடன் என்று சொல்லை பயன்படுத்துவது இன எதிரிகளை அச்சுறுத்தும் என்று நம் மூதாதையர்கள் எப்படி சிந்தித்தார்கள் என்பதை விளக்கினார்.

திராவிடன் என்ற சொல்லை பெரியார் பயன்படுத்திய போது, திராவிடன் என்ற சொல்லைப் பார்த்தால் பார்ப்பனருக்கு எவ்வளவு எரிச்சல் வருகிறதோ, தமிழன் என்று சொல்லும் போதும் அவ்வளவு எரிச்சல் வருகின்ற வரை திராவிடன் என்ற சொல்லை தான் பயன்படுத்துவேன் என்று பெரியார் சொன்னதை நினைவு கூர்ந்தார். தமிழினத்தின் மானத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விடுதலை 89 ஆண்டுகள் நடந்திருக்கிறது. அதில் 61 ஆண்டுகாலம் ஆசிரியராக நம் மானமிகு ஆசிரியர் இருந்திருக்கிறார்.

இது இந்த இயக்கத்தின் வரலாற்றில் மட்டுமல்ல, இதழியல் வரலாற்றில், உலகளாவிய அளவில் அனைவரும் பாராட்டிப் போற்ற வேண்டிய காரியமாக அமையும் என்றார்.

இந்த தொகுதியில் முதல் செய்தியாக தனது கண்ணில் பட்டது குழந்தை திருமணங்களைப் பற்றியது என்றும், அது ஆளுநர் ரவி அவர்களை தனக்கு நினைவுபடுத்துவதாகவும், 1936 இல் சாரதா சட்டத்தின்படி குழந்தை திருமணங்களைப் பற்றி விடுதலையில் வந்திருக்கக்கூடிய செய்தியை வாசித்தார். அன்று இருந்த சனாதனத்தின் புத்தி 2023 ஆம் ஆண்டிலும் அப்படியே இருக்கிறது என்பதை விளக்கினார். எனவே இந்த நூலின் தேவை என்பது இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தேவை என்றார்.

தந்தை பெரியாரின் தொலைநோக்கு, அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை நமக்கு காட்டும் என்று கூறி, அய்யாவின் தொலைநோக்குக்கு அடுக்கடுக்காக சான்றினை வழங்கினார்.

டி.கே.எஸ். இளங்கோவன்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தி தொடர்புக் குழு தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் தனது வாழ்த்துரையில்:

1936-இல் விடுதலையில் வெளிவந்த செய்திகள் இன்றும் தொடர்கிறது என்பது வியப்பாக இருக்கிறது என்றும், இன்றும் எதிரிகளின் மோதல் போக்கு தொடர்கிறது. ஆனால், ஒளிந்து மறைந்து எப்படி வருகிறார்கள் என்பதை விளக்கினார்.
அன்று எப்படி வேதத்தை தமிழர் மரபோடு இணைத்து பேசினார்களோ, இன்றும் அதுவே தொடர்கிறது என்றும், நம் பண்பாடு தமிழர் பண்பாடு. தமிழர் பண்பாடு என்பது வேறு, மனுதர்ம பண்பாடு என்பது வேறு என்றார். மனுதர்மம் மட்டும் இருந்திருந்தால் நாம் அதை எதிர்த்து நின்றிருப்போம். ஆனால், சதுர்வர்ணம் மயா சிருஸ்டம் என்று கடவுளே சொன்னார் என்று சொன்னபோது, அந்த கடவுளை எதிர்த்து நிற்க முடியாமல், இங்கே என்ன நடந்தது, அது எவ்வளவு பெரிய பாதுகாப்பின்மையை நமக்கு ஏற்படுத்தியது.

கடவுளின் பெயரால் நடக்கும் அனைத்து ஏமாற்றங்களிலிருந்தும் விடுதலை பெற இந்த ‘விடுதலை’ தேவை என்றார். அரசமைப்புச் சட்டம் பிரிவு 25 மதத்தை பின்பற்றுவது அடிப்படை உரிமை என்று சொல்கிறது. ஆனால் அதற்கு முன்பு மனசாட்சிப்படி நடக்கும் உரிமையும் இருக்கிறது. அதனுடைய அர்த்தம் என்பது கடவுளை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கும் உரிமையும் அரசியல் சட்டத்தில் இருக்கிறது. மதம் அடிப்படை உரிமையோ, மனசாட்சி உரிமையோ எதிலும் அரசு தலையிட முடியாது என்கிறது. ஆனால் இன்றைக்கு இருக்கும் ஒன்றிய அரசு எப்படி அனைத்து நிலையிலும் இந்த உரிமைகளில் தலையிடுகிறது என்பதை எடுத்துரைத்தார்.

இத்தகைய அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதற்கு, ‘விடுதலை’யால் விடுதலை பெறுவோம் என்றார். தொடர்ந்து, செங்கோல் மன்னர் ஆட்சியின் வடிவம் என்றும் அன்றைக்கு நீதிபதி, நிர்வாகி, சட்டம் அனைத்தும் மன்னனாக இருந்தார். அவர் தவறு செய்தால் செங்கோல் வளைந்து விடும் என்றார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு ஜனநாயக நாட்டில் செங்கோலின் தேவை எங்கிருந்து வருகிறது? ஏதாவது சட்டத்தை தவறாக கொண்டு வந்தால் பிரதமர் மோடி பாண்டிய மன்னனை போல் உயிர் துறப்பாரா?

குடியரசுத் தலைவர் புறக்கணிக்கப்பட்டது மிகப்பெரிய நோக்கத்துடன் நடந்தது , அந்த நோக்கம் தவறானது. விடுதலை என்பது வெறும் காகிதம் அல்ல; நமக்கான ஆயுதம், பேராயுதம்!
தமிழர் தலைவரின் தலைமை உரை:

வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்விற்கு தலைமை ஏற்று உரை நிகழ்த்திய கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பல்வேறு வரலாற்றுச் செய்திகளை விளக்கி, திராவிடம் என்ற சொல்லின் ஆழத்தை விளக்கினார். மேலும், அடிப்படை உரிமைகள் அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானம் என்றும், அதில் கைவைக்க முடியாது என்றும் டி.கே.எஸ். இளங்கோவன் சொன்னதை மேற்கோள் காட்டி தம் சிந்தனையை வெளிப்படுத்தினார்.

அப்போது, அடிப்படை உரிமைகளையே இன்றைக்குத் தூக்கிப் போட்டு விட்டார்கள்; செல்லரிப்பதுபோன்று; புத்தகம் பார்ப்பதற்கு மேலே நன்றாக இருக்கும்; அந்தப் புத்தகத்தைத் திறந்துப் பார்த்தால், உள்ளே உள்ள பக்கங்களையெல்லாம் செல்லரித்துப் போயிருக்கும்.

இன்றைக்கு செல்லரிப்பதுபோன்று, முழுக்க முழுக்க பாசிசம், இந்திய அரசமைப்புச் சட்டத்தை விழுங்கிக் கொண்டிருக்கிறது.

மிக முக்கியமாக இதில் கவனிக்கவேண்டிய செய்தி என்னவென்றால் நண்பர்களே, ஆழமாக எண்ணிப் பாருங்கள்.

We the People of India என்றுதான் தொடங்கும். நமக்கு நாமே வழங்கிக் கொண்டது. இறையாண்மை என்பது நாடாளுமன்றத்திலே கிடையாது; இறை யாண்மை பிரதமரிடம் கிடையாது; இறையாண்மை குடியரசுத் தலைவரிடம் கிடையாது; இறையாண்மை நீதிமன்றத்தில் இருக்கிறதா? என்றால் கிடையாது.

பின் எங்கே இருக்கிறது? இந்திய அரசமைப்புச் சட்டப்படி நான் சொல்லுகிறேன், இறையாண்மை எங்கே இருக்கிறது என்றால், மக்களிடம்தான் இருக்கிறது. மக்கள் பார்த்து முடிவு செய்யவேண்டும். மக்கள் தீர்ப்புதான் இறுதியானது. மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் முடிவு செய்வார்கள். கருநாடகமே அதற்கு உதாரணம். வருபவர்களுக்கு பூக்கள் மட்டும் போடுவார்களே தவிர, ஓட்டுப் போடுவார்களா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது என்பதை விளக்கினார்.

நிகழ்வில் பங்கேற்ற திராவிடர் கழகத் துணைப்பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வரவேற்புரையாற்றினார். வடசென்னை மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மரகதமணி நன்றி கூறினார். ♦