சிறுகதை : பொன்னியின் மைந்தன்

2022 அக்டோபர் 01-15 2022 சிறுகதை

இசையின்பன்

“ஹலோ பரிதி!’’
“சொல்லு செல்லம்…
திருச்சி வந்துட்டியா?’’
“வந்துட்டேன்…
வந்த கையோடு பொன்னியின் செல்வன் படத்துக்கு ரெண்டு டிக்கெட் வாங்கிட்டேன்…’’
“அப்படியா எத்தனை மணி ஷோ?’’
“ஏழு மணி ஷோ, சோனா தியேட்டர்.
நீ எங்கடா இருக்க?’’
“சிந்தாமணி கிட்ட.’’
“அங்க என்ன பண்ற?’’
“நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் பேசிக்கிட்டு இருந்தேன். நீ எங்க விடுதியா?’’
“ஆமாம். உனக்கு வேற ஏதும் வேலை இருக்கா?’’
“இல்லேப்பா, ரயில்ல வந்த டயர்டு… ஒரு தூக்கம் போடலாம்னு நெனச்சேன்.’’
“அப்புறமா தூங்கலாம் நான் வர்றேன், கிளம்பி ரெடியா இரு.’’
பரிதியின் புல்லட் காட்டூரில் உள்ள தெரசா ஹாஸ்டல் முன்பு நின்றது.
ஓடி வந்து ஏறிக்கொண்டாள் காவியா.
“எங்கேப்பா போறோம்?’’’
“சொல்றேன்.’’
புல்லட் திருவெறும்பூரைத் தொட்டு இடது புறமாக நடராசபுரம் வழியாக மிதமான வேகத்தில் சென்றது.
“பரிதி, எங்கேப்பா போறோம்…’’ ஆவலுடன் மீண்டும் காவியா கேட்க, “சொல்றேன் சொல்றேன்’’ என்றான் பரிதி, சாலையின் வலது பக்கம் வண்டியைத் திருப்பிக் கொண்டே.
சாலையின் இரு புறங்களும் பசுமையாகக் காட்சியளிக்கின்றன. ஆங்காங்கே ஆண் பிள்ளைகளும் பெண் பிள்ளைகளும் ஜோடி ஜோடியாக நின்று கொண்டும் சிறிது மறைவான பகுதியில் உட்கார்ந்து கொண்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர்.
“பரிதி, என்னை எங்கே தள்ளிக்கிட்டுப் போற? ஏதாவது ரொமான்ஸ் மூட்’ல இருக்கியா’’ன்னு கேட்டுக்கொண்டே,
ஹெல்மெட்டின் பின்பக்கம் தட்டினாள் காவியா.
சிரித்துக் கொண்டே பரிதி, “இடது பக்கமாகப் பாரு காவியா’’ என்றான்.
“ஹய்யோ! என்னடா இது? இவ்வளவு தண்ணி ஓடுது!’’ கரை புரண்டோடும் கொள்ளிடம் நதியைப் பார்த்து ஆச்சரியப்-பட்டாள்.
“நீ தஞ்சை பெரிய கோயில் பார்த்திருக்கியா காவ்யா?’’
“பார்த்திருக்கியாவா?! ஜூலை மாதம் என் கொலிக் மேரேஜ்க்கு தஞ்சாவூர் போயிருந்தேன். அப்பக் கூட பெரிய கோயிலுக்குப் போயிட்டுதான் வந்தேன்.’’
“அப்படியா?’’
“நீ போயிருக்கியா பரிதி?’’
“ம்ம்… போயிருக்கேன்.’’
“அந்தக் கோயிலோட பிரம்மாண்டத்தைப் பார்த்தியா! ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுத்தும் தொழில்நுட்பக் கலை!
ராஜராஜ சோழன், “கிரேட் எம்பரர்!” லயித்துப் போய் கூறிக்கொண்டே…
“கல்லணை உங்களை வரவேற்கிறது!” பெயர்ப் பலகையைப் பார்த்தாள்.
“ஓ… இதுதான் கல்லணையா!’’
ஆர்ப்பரித்து ஓடும் ஆற்று வெள்ளத்தைப் பார்த்தாள்.
வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கல்லணை (நிக்ஷீணீஸீபீ கிஸீவீநீut) என்ற போர்டு இருக்கும் இடத்தில் வண்டியை நிறுத்தினான் பரிதி.
“வா போகலாம் காவியா!’’
வண்டியை நிறுத்திவிட்டு மெதுவாக நடக்கத் தொடங்கினர்.
“இவ்வளவு பேரு தினமும் வருவாங்களா பரிதி?’’
“ஆத்துல வெள்ளம் வர்ற வரைக்கும் வருவாங்க காவியா…’’
ஆற்றின் ஓரக் கரைகளில் சுற்றுலா வந்த மக்கள் மகிழ்ச்சியோடு குளித்துக் கொண்டிருந்தனர்.
“வா, அந்த ஓரமாக நின்னு பார்க்கலாம்.’’
காவியா சிறு குழந்தைபோல் அவன் கரத்தைப் பற்றிக் கொண்டு நடந்தாள்.
“இந்த அணையைப் பற்றி உனக்கு ஏதாவது தோன்றுகிறதா காவியா?’’
“முதலில், இது அணையா பரிதி?’’
“அணை என்பதை விட நீர்த்தேக்கம் என்றும் சொல்லலாம். ஆனால் அணைக்-கட்டுகள் பிற்காலத்தில் அறிவியல் வளர வளர உயரமாகத் தொடங்கின. ஆனால் எந்த அணைக்கட்டுக்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு.
இந்த அணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி.
வேகமாகப் பாய்ந்து வரும் நீரைத் தடுத்து மூன்று திசைகளில் அனுப்பும் பணிக்காக 2000 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டதே இக்கல்லணை…
நேரே ஒரே புறம் வெள்ளம் பாய்ந்து வயல்வெளிகள் பாழாய்ப் போவதைத் தடுத்து நீர்ப் பாசனத்தைச் சீராக்குவதுதான் இதன் நோக்கம்!’’
“இது கொள்ளிடம் ஆறுதானே பரிதி?’’
“ஆமா, ஆனால் கரிகாலன் காலத்தில் கொள்ளிடம் ஆறு இல்லை. கரை புரண்டோடிய காவிரி என்கிற பொன்னி நதிதான்.’’
“கேட்கவே பிரமிப்பா இருக்கு பரிதி!’’
“உன் பிரமிப்பு இருக்கட்டும் காவியா, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கிய ஆங்கிலேயர்களே வியப்பாகப் பார்த்தனர் கல்லணையை! ஆற்றுப் படுகைக்கு கீழே கடினமான களிமண் காரைகளின் மேல் பெரும் பாறைகளை அடுக்கிக் கட்டப்பட்டதால் தான் அணை இவ்வளவு காலம் நீடித்து இயற்கை அளிக்கும் சவால்களை எதிர்கொண்டு நிற்கின்றது. இதனால்தான் கல்லணையைப் பரிசோதித்த ஆங்கிலேயப் பொறியாளர்
சர்.ஆர்தர் காட்டன் அதிசயித்துப் போய் ‘நிஸிகிழிஞி கிழிமிசிஹிஜி’ என்று புகழ்ந்தார்.
“உண்மையாகவா பரிதி?
கேட்கக் கேட்க நானும்தான் அதிசயித்துப் போகிறேன்’’ என்றாள் காவியா.
“சரி, வா கரிகாலன் மணிமண்டபத்துக்குப் போகலாம்!’’
உள்ளே நுழைந்த காவியா கரிகாலன் பற்றிய குறிப்புகளைப் படிக்கத் தொடங்கினாள். சேர, பாண்டிய மற்றும் 11 வேளிரும், ஒன்பது குறுநில மன்னர்களும் இணைந்து போரிட்டும் 19 வயது கரிகால் வளவனை வெல்ல முடியாமல் புறமுதுகிட்டு ஓடிய வெண்ணிப்போர் வரலாற்றைப் படிக்கையில் சிலிர்த்துப் போனாள் காவியா. அது மட்டுமல்ல இமயம் வரை படையெடுத்து மகத நாடு வரை வெற்றி பெற்றதும், இலங்கைக்குப் படையெடுத்து வெற்றி பெற்று அங்கே இருந்து அழைத்து வரப்பட்ட 12,000 போர்க் கைதிகளைக் கொண்டே கல்லணையைக் கட்டினான் என்பதையும் படித்தபோது உணர்ச்சி வயப்பட்டு பரிதியின் கையை இறுகப் பற்றி அழுத்தினாள்.
“என்ன காவியா, படிக்கப் படிக்க ஆச்சரியமா இருக்கா? இன்னும் அவன் நீதி சொன்ன வரலாற்றைக் கேட்டால் கூடுதலாகப் பிரமித்து விடுவாய்! அது மட்டுமல்ல, அக்கால மனிதர்களின் நேர்மையும் நமக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும்.’’
“அது என்ன பரிதி?’’
“சொல்கிறேன் கேள். கரிகாலன் அரண்-மனைக்கு ஒரு வழக்கு வந்தது. வழக்காட வந்தவர்கள் கரிகாலன் சிறுவனாக இருக்கிறானே, நம் வழக்குக்கு இவனால் எப்படித் தீர்ப்பளிக்க முடியும் என்று குழப்பம் அடைந்ததைக் கண்ட கரிகாலன், “இருங்கள் நான் சென்று பெரியவர் ஒருவரை அனுப்புகிறேன்’’ என்று உள்ளே சென்றான். சிறிது நேரத்தில் ஒரு பெரியவர் வந்து வழக்கின் விவரம் கேட்டார்? “அய்யா, இதோ நிற்கிறாரே இவரிடமிருந்து நான் சிறிது நிலத்தை வாங்கினேன். அந்த நிலத்தை உழும்போது பூமிக்கு அடியில் ஒரு பொற்குவியலைக் கண்டெடுத்தேன். அதற்கு உரியவர் இவர் தானே! இவரிடம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்கிறார்’’ என்று முறையிட்டார். இதைக் கேட்ட நிலத்தை விற்றவர், “அது எப்படி அய்யா எனக்குச் சொந்தமாகும்? நான்தான் இவருக்கு நிலத்தை விற்று விட்டேனே… அதனால் இந்தப் பொற்குவியல் அவருக்குத்தான் சொந்தம்’’ என்றார். நேர்மையான மக்களின் இந்தச் சிக்கலான வழக்கைக் கேட்ட பெரியவர் சற்று யோசித்து, “உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் இருக்கிறார்களா?’’ என்று கேட்டார். அதற்கு ஒருவர், எனக்கு வயதுக்கு வந்த மகள் இருக்கிறாள்’’ என்றார்; இன்னொருவரோ, “எனக்கு வாலிப வயதில் மகன் இருக்கிறான்’’ என்றார். இதனைக் கேட்ட பெரியவர், “அப்படியென்றால் இரு குடும்பத்தாருக்கும் திருமண உறவை மேற்கொண்டு மணமக்களுக்கு அந்தப் பொற்குவியலை சீராகக் கொடுத்து விடுங்கள்’’ என்றார். வழக்காடிய இருவரும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டு அந்தப் பெரியவருக்கு நன்றி கூறினர். சிரித்துக்கொண்டே அந்தப் பெரியவர் தனது வேடத்தைக் கலைத்தார். வழக்காட வந்தவர்கள், வேடம் கலைத்த கரிகாலனைப் பார்த்து மகிழ்ந்து போய் “கரிகாலன் வாழ்க! வாழ்க!’’ என முழக்கமிட்டனர். இந்த வரலாற்றைச் சொல்லிவிட்டு பரிதி காவியாவைப் பார்த்தான். “காவியா காவியா! என்னாச்சு உனக்கு?’’ என்று உலுக்க, உறைந்து நின்ற காவியா இயல்பு நிலைக்கு வந்து,
“பரிதி இதுவரையில் நான் கேட்ட பழைய வரலாற்றில் கரிகால் வளவன்தான் சிறந்த மன்னன் என்று நினைக்கிறேன்’’ என்றாள்.
ஹா ஹா ஹா…
வாய்விட்டுச் சிரித்தான் பரிதி.
“அப்ப ராஜராஜ சோழன்?’’
தொடர்ந்தான் பரிதி… “கரிகாலன் வரலாற்றில் குடிமக்களின் நன்மையே பிரதானமாக உள்ளது. ஆனால், ராஜராஜன்? அவன் சூட்டிக்கொண்ட பெயரிலேயே முதலில் தமிழ் இல்லை. முழுக்க முழுக்க கோயில்கள் அமைப்பது, பார்ப்பனர்களுக்கு நன்மை செய்வது இப்படியே அவன் ஆண்ட காலம் முழுவதும் செலவாகியது.
ஆனால், கரிகாலனுடைய வரலாறு சுவையானது. விறுவிறுப்புக்குப் பஞ்சமே இல்லை… வீரம், நீதி, நேர்மை, நல்லாட்சி என மனித குணங்கள் நிறைந்தது. பொதுமக்களைக் காப்பதையே தன்னுடைய வாழ்நாள் பணியாகக் கொண்டவன்.
ஆதிவாசிகளாக அலைந்த ஒளியர், குறும்பர்கள் இவர்களை திருத்தி தமிழ்நாட்டு கலாச்சார நதியில் இணைத்துவிட்ட ஒரு முதன்மை ஒருமிப்பாளன். இவனுடைய வரலாற்றைத் திரைப்படமாக்கினால்தான் தமிழருக்குப் பெருமை. அசல் பொன்னியின் செல்வன் கரிகாலன்தான். என்ன, சரிதானே காவியா?’’
“முழுமையாக ஏற்கிறேன் கரிகாலனின் சீடரே!’’ என்று குனிந்து வணக்கம் சொல்ல இருவரும் சிரித்துக்கொண்டே கல்லணையை விட்டு வெளியே வந்தனர்.
“சரி, இப்போது சொல். ஈவினிங் எத்தனை மணிக்கு ஷோ?’’
“வேண்டாம் பரிதி, எனக்கு படத்துக்குப் போக நாட்டமில்லை…’’
“ஏன் காவியா?’’
“உண்மையை விட்டுவிட்டு போலியை நம்பி ஏமாறப்போவதா பரிதி?’’
“நோ காவியா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்த்து வருவோம். அதற்கு எந்தத் தடையும் போட்டுக் கொள்ள வேண்டாம்’’ என்று கூறிக்கொண்டே, புல்லட்டை திருச்சியை நோக்கிப் பறக்க விட்டான் பரிதி.