நிகழ்வுகள்: 60 ஆண்டு ஆசிரியப் பணி! ஓர் உலக சாதனை!

2022 அக்டோபர் 01-15 2022 மற்றவர்கள்

88 ஆண்டுகால ‘விடுதலை’ ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கு தலைவர்கள் பங்கேற்கும் பாராட்டு விழா – விடுதலை சந்தா வழங்கும் விழா 06.09.2022 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் மிகுந்த மகிழ்வோடும் உணர்ச்சி பெருக்குடனும் நடைபெற்றது.

பகுத்தறிவுச் சுடரும்! பறை இசை முழக்கமும்!
நிகழ்வின் தொடக்கமாக விழுப்புரம் மாவட்டம், ஆரியூர் கிராம மக்கள் மிகுந்த உணர்ச்சிப் பெருக்குடன், பகுத்தறிவுச் சுடர் ஏந்தி, பறை இசை முழங்க மூன்றாம் தவணையாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் விடுதலை சந்தாக்களை வழங்கினர். நரிக்குறவர்கள், சுய உதவிக் குழு பெண்கள், இருளர்கள், புதிர வண்ணார்கள், கிராம பூசாரிகள், அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர் சங்கத் தோழர்கள், துப்புரவு பணியாளர்கள், தேநீர் கடை வைத்திருப்பவர்கள், அறிஞர் அண்ணா சுமைத் தூக்கும் தொழிலாளர்கள், திருநங்கைகள், உழைக்கும் மக்கள், விளிம்பு நிலை மக்கள் என்று அனைவரிடமும் பெறப்பட்ட சந்தாக்களை மேடையில் அவர்கள் வழங்கிய போதும், அவர்கள் தந்த பகுத்தறிவுச் சுடரை ஆசிரியர் ஏந்தி நின்ற போதும் உணர்ச்சிப் பெருக்கில் அனைவரின் கண்களிலும் ஒரு சொட்டு கண்ணீரோடு, இத்தமிழ் சமூகம் ஆசிரியரின் உழைப்புக்கு எவ்வளவு கடமைப்பட்டுள்ளோம் என்ற நன்றி உணர்வுடன் அரங்கமே எழுந்து நின்று, அரங்கம் அதிர கரஒலியுடன் நன்றியை செலுத்தியது. முதல் தவணையாக 113 சந்தாக்கள், இரண்டாம் தவணையாக 134 சந்தாக்கள் நேற்று மூன்றாம் தவணையாக 269 சந்தாக்கள். இதுவரை 516 விடுதலை சந்தாக்கள். குக்கிராமத்தைச் சேர்ந்தவர்களின் இந்த நன்றி உணர்ச்சி அலை நாடெங்கும் பரவினால் எல்லோருக்கும் விடுதலையே!

விடுதலை தேனீக்கள்!
கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் தங்களின் விடுதலை சேகரிப்புப் பணியில் நடந்த சம்பவங்கள், ஆசிரியருக்கு நாம் காட்டும் நன்றி ஆகியவற்றை பதிவு செய்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் வரவேற்புரை வழங்கினார்.
கழகப்பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், ஈரோடு த.சண்முகம், மதுரை வே.செல்வம், பொன்னேரி வி.பன்னீர்செல்வம், எழுத்தாளர் மஞ்சை வசந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல் நிகழ்வாக மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் எழுதி, கலைமாமணி திருத்தணி. பன்னீர்செல்வம் பாடிய “மனித இன விடு தலைக்கே” என்ற உணர்ச்சிமிகு பாடல் வெளியிடப்பட்டது. விடுதலை சந்தா சேகரிப்பில், விடுதலை தேனீக்களாக, தமிழ்நாடு முழுவதும் 72 நாள்கள் தொடர் பயணம் செய்து, முதல் தவணையாக சந்தாக்களை பெற்ற கழகத் தோழர் களின் சார்பில், அதன் அடையாளமாக, கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் ஆசிரியரின் 60 ஆண்டுகால விடுதலை பணி, விடுதலையால் தமிழினம் பெற்ற ஏற்றம், ஆசிரியரின் வாழ்நாள் நீட்டிப்புக்கு தேவை இன்னும் பல ஆயிரம் சந்தாக்கள், டிசம்பர் 2 மொத்த சந்தாக்களையும் சேகரித்து வழங்குவோம் என்று பல கருத்துகளை முன்வைத்து முன்னிலை உரை நிகழ்த்தினர்.
கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் விழாவுக்கு வருகைபுரிந்த தலைவர்களை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார்.சிறப்பு விருந்தினர்களுக்கு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். ‘விழுப்புண்களை ஏற்ற விடுதலை வீர வரலாறு’ புத்தகத்தை சிறப்பு விருந்தினர்களுக்கு கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வழங்கினார்.
88 ஆண்டு கால ‘விடுதலை’ ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு முரசொலி ஏட்டின் கலைஞரின் புகைப்படக் கலைஞர் ஆளுயர ரோஜாப்பூ மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.
சிறப்பு விருந்தினர்களாக விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்த தலைவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டு கால ஆசிரியர் பணியைப் பாராட்டி பயனாடை அணிவித்து, புத்தகங்கள் வழங்கி சிறப்பு செய்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ.இராசா, நாடாளுமன்ற உறுப்பினர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மனித நேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் விழாவில் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
88 ஆண்டு கால விடுதலை ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியர் பணி சிறப்பு குறித்து பெரியார் ஊடகத்துறை சார்பில் காணொலி திரையிடப்பட்டது.
88 ஆண்டு கால விடுதலையின் 60 ஆண்டு கால ஆசிரியருக்கு பாராட்டு விழாவில் வெளியிடப்பட்ட விடுதலை சிறப்பிதழில் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் எழுதிய கவிதை ஒலி ஒளி வடிவத்துடன் அரங்கமே உணர்ச்சிப் பெருக்கால் கர ஒலியினை எழுப்பிட திரையிடப்பட்டது.

மோகனா அம்மையாருக்கு நன்றி தெரிவிப்பு
60 ஆண்டு கால ஆசிரியர் பணி தொடர ஆசிரியர் அவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு அளித்து வரும் ஆசிரியர் அவர்களின் வாழ்விணையர் மோகனா அம்மையாருக்கு விழாவில் அனைவர் சார்பிலும் நன்றி தெரி விக்கப்பட்டு திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா, எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் இணைந்து ஆசிரியர், மோகனா அம்மையார் இருவரையும் இணைத்து பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர்.

கழகத்துணைத் தலைவர் தலைமையுரை
வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத வாய்ப்பினைப் பெற்ற 88 ஆண்டுகால “விடுதலை” ஏட்டின் 60 ஆண்டுகால ஆசிரியர் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை உரை ஆற்றினார்.
விடுதலையால் பயன் அடையாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதன் பெட்டிச் செய்திகூட எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தி யிருக்கிறது என்பதையும், இன்று வரை விடுதலை செய்தியின் தாக்கம் உயர் நீதிமன்றம் வரை எப்படி பிரதிபலிக்கிறது என்பதை எல்லாம் விளக்கி விடுதலையின் அவசியத்தையும் அதற்கு ஆசிரியர் ஆற்றிய பணியினையும் மிக உருக்கமாகப் பதிவு செய்தார்.

மல்லை சத்தியா
ஆசிரியரைப் பாராட்டி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகக் தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும் வாழ்த்து களையும் தெரிவித்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தனது பாராட்டுரையைத் தொடங்கினார். திராவிடர் இயக்க வரலாற்றில் இருந்த 300க்கும் மேற்பட்ட பத்திரிகைகள் குறித்தும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடர் இயக்கப் போர்வாள் வைகோ, இன்றைய முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிய பத்திரிகைகள் குறித்தும், இன்று வெளிவரும் திராவிடப் பத்திரிகைகள் பற்றியும் விளக்கி, ஒரு பத்திரிகை நாள்தோறும் வெளி வருவது என்பது, பிரசவ வேதனை; அந்த வேதனையோடு தான், ஆசிரியர் விடுதலையை நாள்தோறும் பிரசவிக்கிறார் என்று உருக்கமாகப் பதிவு செய்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் தோழர் மு. வீரபாண்டியன்
அக்டோபர் புரட்சி அடைந்தபோது லெனின் இஸ்காரா என்ற தீப்பொறி பத்திரிகையைத் தொடங்கி, இது எழுச்சி யூட்டும் என்றார். அன்று அவர் சொன்ன எழுச்சியினை தந்தை பெரியாரும், அதனை தொடர்ந்து இன்று வரை தமிழ் சமூகத்தில் அதை நிறைவேற்றும் ஏடாக விடுதலையும், அதன் ஆசிரியரும் இருப்பதையும் ஒப்பிட்டுப் பேசினார். 35 வருடம் விடுதலையை தொடர்ந்து வாசித்து வருவதையும் பதிவு செய்தார்.

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா
சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா அவர்கள், 88 ஆண்டு காலம் ஓர் ஏட்டின் 60 ஆண்டு கால ஆசிரியராக தமிழர் தலைவர் மட்டும்தான் இருந்திருக்கிறார் என்று அனைவரும் சொன்னார்கள். தமிழர் என்ற முறையில், தமிழர்தான் இந்த சாதனையைப் புரிந்து இருக்கிறார் என்பது நமக்கு பெரும் மகிழ்ச்சி என்று, தனது பாராட்டைத் தெரிவித்தார். திருப்பூர் மாநாட்டிற்கு சென்றபோது, ஆசிரியர் தங்கி இருந்த இடத்தில் இவரும் தங்கி இருந்ததை நினைவு கூர்ந்து, அப்போது ஆசிரியரின் கை நிறைய ஆங்கிலப் பத்திரிகைகள் இருந்ததையும், அது அனைத்தையும் வாசித்து, உள்வாங்கி நம் மக்களுக்காக விடுதலையில் பிழிந்து தருகிறார் என்றார். ஒன்றிய ஆட்சி தங்கள் கொள்கைகளை ஊடகங்களில் திணித்து வரும் சூழலில், சில ஊடகங்கள் மட்டும் தான் உண்மையை பேசுகின்றன. ஆனால், பல ஊடகங்கள் ஒன்றிய அரசுக்கும் அவர்களுக்கு விலை போய்விட்டன. தமிழில் நமக்கு ஒன்றிய ஆட்சியின் அவலத்தைத் தெரியப்படுத்துவது விடுதலை தான். விடுதலை என்பது திராவிடர் கழக நாளேடு என்ற எண்ணம் தவறு. நம்முடைய பத்திரிகை விடுதலை, ஒவ்வொருவரும் சந்தா செலுத்த வேண்டும் என்று உணர்ச்சிப் பெருக்குடன் பதிவு செய்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன்
தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்கள், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும், பள்ளிப் பருவத்திலும் அங்கே நடைபெற்ற கூட்டங்களைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டதையும், தந்தை பெரியார், ஆசிரியர் பேசியதைக் கேட்ட நினைவுகளையும் நினைவு கூர்ந்து, மிகக் கடினமான செய்தியையும், மிக எளிமையாக மக்களுக்குப் புரியும் வண்ணம் எடுத்துச் சொல்லும் வலிமையை, தனித்திறமையை ஆசிரியர் பெற்றிருக்கிறார். ஆசிரியரைப் பார்த்துதான் இதை நாங்களும் கற்றுக் கொண்டோம் என்றார். பொதுக்கூட்டம், அரங்கக்கூட்டம், தலைவர்கள் கூட்டம் என்று எதுவாக இருப்பினும், உரிய ஆதாரம் இன்றிப் பேசும் பண்பு ஆசிரியரிடம் இல்லை. எல்லா தரவுகளோடும் தான் கூட்டமேடைக்கு வருவார். இந்தப் பண்புகளை ஆசிரியரிடமிருந்து நாங்கள் கற்றுக் கொள்கிறோம் என்றார். எது இந்த பணியை அவரை தொடர வைக்கிறது என்றால், அவரின் சிறந்த பண்புகள் தான். 88 ஆண்டுகள் ஒரு பத்திரிக்கையை நடத்துவதே பெரிய சிரமம். விடுதலை ஏற்றுக் கொண்டுள்ள சமூக நீதி தத்துவம் தான், அது இயங்க காரணம் என்பதை பதிவு செய்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி.
தொல்.திருமாவளவன் அவர்கள், பெரியாருக்கே விடுதலையை நிறுத்தி விடலாம் என்ற எண்ணம் தோன்றி, இவரிடம் ஒப்படைக்கலாம் என்ற எண்ணம் வந்தது மிகச்சரியான தேர்வு, சரியான முடிவு தான் என்பது இங்கு பாராட்டுக்குரியது என்றார். கருத்தியல் போருக்கான, களப் போருக்கான தனது வாரிசினை 1962லேயே பெரியார் தேர்வு செய்து விட்டார். அவரிடம் விடுதலையை ஒப்படைத்து விட்டார் என்பது இங்கே நினைவு கூரப்பட வேண்டியது என்றார். 30, 40 ஆண்டுகளுக்கு முன்னால் இதே அரங்கில் அவர் பேசியதும், அப்போது இருந்த அரங்கின் நிலையையும், தற்போது நிலையையும், அதற்குக் காரணம் ஆசிரியர் என்பதையும் விவரித்தார். 40 வருடத்திற்கு முன் இருதய அறுவை சிகிச்சை செய்தவர் ஆசிரியர். அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உளவியல் ரீதியாக எப்படிப்பட்ட பாதிப்புகள் வரும் என்பதையும், அதை யெல்லாம் தாண்டி இவர் இப்படி இயங்குவதும், அவரது துடிப்பும் பிரமிக்க வைக்கிறது என்றார். பல மணி நேரம் மேடையில் அமர்ந்திருக்கிறார். அனைவரும் பேசி முடித்த பிறகு ஒரு மணி நேரம் பேசுகிறார் என்பதும், எதிரிகளை நடுங்க வைக்கும் அளவிற்கு ஆதாரத்துடன் செய்திகளைத் தருகிறார் என்பதும் அவரின் பிறவிப் பண்பாகவே நான் பார்க்கிறேன் என்றார். துணைத் தலைவர் கவிஞர் அவரின் கவிதையில் ஆசிரியர் பொறுப்பில் இன்னும் நூறு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று அவரின் ஆசையைத் தெரிவித்தார். தமிழ் மக்கள், உழைக்கும் மக்கள், விளிம்பு நிலை மக்கள் அவர்களின் நன்மைக்கு ஆசிரியர் இன்னும் பல ஆண்டுகள் இருக்க வேண்டும் என்று தனது விருப்பத்தினைப் பதிவு செய்தார்.
திராவிடர் இயக்கத்தின் கடைசி பெரும் தலைவராக இன்று நம்மோடு ஆசிரியர் இருக்கிறார். அன்று ஒரு வேளை ஏடு நிறுத்தப்பட்டிருந்தால், இன்று சமூகத்தின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார். நூலகத்திற்குச் சென்றால் விடுதலையைத் தேடிப் படிக்கும் பழக்கம் திருமாவுக்கும் உண்டு என்று உணர்ச்சியுடன் பதிவு செய்தார். மாணவர் பருவத்தில், இந்தித் திணிப்புக்கு எதிராக இதே அரங்கில் அவர் பேசியதையும், அவரின் பேச்சே தலைப்பாக விடுதலையில் வந்ததையும், அதைப் பார்த்து அவர்கள் அடைந்த மகிழ்வையும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். சனாதன சக்திகளை எதிர்க்கும் துணிச்சலை உங்களிடம், உங்களை பார்த்து தான் கற்றுக் கொண்டோம் என்றார்.
90 வயதிலும் பிரமாண்டமான செயல் திட்டத்தை முன்னெடுத்துள்ளார். எப்படி இதை சாதிக்கப் போகிறார்,
இந்த பெரியார் உலகத்தைச் சாதிக்க போகிறார் என்று மலைப்பாக இருக்கிறது. அவர் சுற்றிச் சுழன்று பணி செய்து, பெரியாரியத்தை இன்றும் உயிர்ப்போடு வைத்திருக்கிறார் என்றார். திமுகவை இன்றைக்கு சனாதன சக்திகள் எதிர்க்கிறது என்றால் அது அரசியல் கட்சி என்பதால் மட்டும் அல்ல. பெரியார் என்ற தொட்டிலில், நாற்றங்காலில் வளர்ந்த இயக்கம் என்பதால். பெரியாரின் பிள்ளை கலைஞர் என்பதால் தான் அவர் மிகப்பெரிய துணிச்சலைப் பெற்றார். பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் என்பது பெரியாரின் சிந்தனையில் வளர்ந்த திட்டம் என்று விளக்கினார். பெரியாரியம் தான் தமிழ்நாட்டு அரசியலை வழிநடத்துகிறது; அச்சாக மய்யமாக இருக்கிறது. இன்றைய நிலையில் அதிகமான வீரியத்தோடு, மிக அதிகமான வீரியத்தோடு தமிழர் தலைவரின் பங்கு தேவைப்படுகிறது. வரலாற்றுத் தேவையகீகீ£க இன்னும் பல பத்து ஆண்டுகள் ஆசிரியர் வாழ வேண்டும் என்றார். உடனுக்குடன் செய்திகளை வாசிப்பது, உடனுக்குடன் அதை வெளிப்படுத்துவது, அதற்கு எதிர்வினை ஆற்றுவது என்ற போர் குணத்திற்கு அவருக்கு நிகர் அவர்தான் என்பதை பதிவு செய்து, தருமபுரியில் நடந்த ஜாதி வெறியாட்டத்தையும், அதற்கு எதிராக தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஜாதி ஒழிப்பு மாநாட்டையும், அதே இடத்தில் திருமாவளவன் பேசுவார் என்று ஆசிரியர் பிரகடனப்படுத்தியதையும், ஜாதி வெறியாட்டம் தாண்டவம் ஆடிய அதே இடத்தில், அதே திருமா வந்து பேசுவார் என்ற துணிச்சல், பெரியாரிடம் ஆசிரியர் பெற்ற துணிச்சல் என்று அழுத்தமாகப் பதிவு செய்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி.
பிஜேபியுடன் திமுக கூட்டணி வைத்ததை நினைவு கூர்ந்து, அந்த நேரத்தில் விடுதலையில் தங்களை மிகக் கடுமையாக எழுதுவார்கள் என்பதை எல்லாம் விளக்கினார். சில நேரம் கலைஞரிடம் அப்படி விடுதலையில் வரும் செய்திகளை மறைக்கப் பார்ப்போம். ஆனால், விடுதலை எங்கே என்று கலைஞர் கேட்டுப் படிப்பார்.
விடுதலை வந்த அறிக்கைகளுக்கும் தலையங்கத்திற்கும் பதில் எழுதுவோமா என்று முரசொலியில் கேட்ட போதும், இந்த கூட்டணியை விமர்சித்து வந்தால் தான் அது விடுதலை; கூட்டணியில் இருக்கும் என்னை விமர்சித்து எழுதினால் தான் அவர் வீரமணி. இல்லையென்றால் ஈரமணி ஆகிவிடுவார் என்று கலைஞர் சொன்னதையும் எடுத்துரைத்தார்.
இன்றைய நிலையில் யார் இந்து? நான் ஏன் இந்து? என்று வெளிப்படையாக இனி முரசொலியும், விடுதலையும், தீக்கதிரும் எழுத வேண்டும் என்றார். இந்து என்றால் சூத்திரன், விபசாரி மகன், பஞ்சமன், தீண்டத்தகாதவன் என்று இருக்கும்போது, நான் ஏன் விபசாரி மகன்? நான் ஏன் தீண்டத்தகாதவன்? என்ற கேள்விகளை மக்களிடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும். எத்தனை பேர் இப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்று எழுத வேண்டும். வெற்றி பெற வேண்டும் நீங்கள் பெரியாரையும் கலைஞரையும் – வயதில் விஞ்ச வேண்டும் என்றார். எங்கள் சுயநலத்திற்காக நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று தனது விருப்பத்தையும், ஆசிரியர் மீது கொண்ட பற்றினையும் விளக்கி, பாராட்டி அமர்ந்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஏற்புரை
‘‘மிகுந்த உணர்ச்சிமயமான இந்த அறிவுப்பூர்வ-மான நிகழ்ச்சியில், அதற்குக் காரணமாக இருந்து ஒரு மிகப் பெரிய கொள்கைப் போரில், லட்சியப் போரில் போரா யுதமாக, எளிதில் நமக்கெல்லாம் கிடைக்க முடியாத ஒரு பேராயுதமாக இருக்கும் – தந்தை பெரியார் அவர்கள் கொடுத்த மிகப்பெரிய அறிவாயுதம்தான் ‘விடுதலை’ என்ற நம்முடைய அந்த அறிவாயுத நாளேடு.

உங்கள் மானத்தை நீங்கள் திரும்பப் பெறுவதற்காக, இழந்த உரிமைகளை நீங்கள் பெறுவதற்காக…
அந்த நாளேடு, அதன் 88 ஆண்டுகால பயணத்தில், ஓர் ஊழியன், அதற்குப் பணி செய்தான் என்பதற்காக, அவனை உற்சாகப்படுத்தவேண்டும், ஊக்கப்படுத்த வேண்டும், இந்தப் பணி தொடரவேண்டும் என்பதற்காக தங்களுடைய முக்கிய பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உழைப்புத் தேனீக்களாக, நம்முடைய ரத்த நாளம் போன்ற, ரத்தவோட்டம் போன்ற தோழர்கள், உழைப்பாளிகள் உழைத்து, இன்றைக்கு முற்றிலும் வியக்கத்தக்க முறையில், மக்களிடம் சென்று ‘‘‘விடுதலை’யைப் படியுங்கள், அது ‘விடுதலை’க்காக அல்ல, உங்கள் விடுதலைக்காக, உங்கள் அறிவு விடுதலைக்காக, உங்கள் மானத்தை நீங்கள் திரும்பப் பெறுவதற்காக, இழந்த உரிமைகளை நீங்கள் பெறுவதற்காக’’ என்று உணர்வுப்பூர்வமாக எடுத்துக் கூறி, மிகப்பெரிய உழைப்பை செய்துகொண்டிருக்கக் கூடிய அருமைத் தோழர்கள் ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில், சந்தா வழங்குகின்ற அருமையான உற்சாகம் மிகுந்த இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து, சிறப்பான முறையில் தலைமையேற்று ஏற்பாடு செய்த ‘விடுதலை’யினுடைய நிருவாக ஆசிரியர் அருமைக்கும், பெருமைக்குமுரிய கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களே,
சிறப்பான கருத்துரைகளை இங்கே எடுத்து வைத்துள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் அருமைத் தோழர் மானமிகு மல்லை சத்யா அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் அன்புத் தோழர் மு.வீரபாண்டியன் அவர்களே,
மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவரும், மாநிலத் தலைவருமான சட்டப்-பேரவை உறுப்பினர் அன்பிற்குரிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்களே,
இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளரும், எங்கள் அன்புத் தோழரும், எங்கள் மாவட்டத்துக்காரர் என்ற பெருமையை என்றைக்கும் நாங்கள் மறக்காமல் ஒன்று சேரக்கூடியவர்களாக இருக்கக்கூடிய அருமைத் தோழர் கே.பி. என்று அழைக்கக் கூடிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,
என்றைக்கும் இரட்டைக் குழலைத் தாண்டி மூன்றாவது குழலாக இன்றைக்கு இருப்போம்; காரணம், இந்தக் குழல் இங்கேதான் உருவானது என்பதை வலியுறுத்தக்கூடிய எழுச்சித் தமிழர், முனைவர், நாடாளுமன்ற உறுப்பினர், எனது அருமைச் சகோதரர், உடன்பிறப்பு, என்றும் மாறாத கொள்கை உறவு படைத்த அருமைச் சகோதரர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும், ஒப்பற்ற நாடாளுமன்ற உறுப்பினரும், சீரிய சுயமரியாதை வீரர், பகுத்தறிவாளர் அருமைச் சகோதரர் மானமிகு ஆ.இராசா அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டு, அருமையாக வரவேற்புரை- முன்னிலை உரை வழங்கிய கழகப் பொதுச்செயலாளர்கள், உழைப்புத் தேனீக்களாக சந்தாக்களைச் சேர்த்த தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களே, முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களே, பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அவர்களே, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் அவர்களே,
இங்கே சிறப்பாகக் குழுமியிருக்கக்கூடிய அத் துணைப் பெரியோர்களே, அத்துணை இயக்கத் தாய்மார்களே, தோழர்களே, சான்றோர்களே, ஊடகவியலாளர்களே,
இந்தப் பெருஞ்சுமையை, நான் சுகமாகக் கருதிடும் அளவுக்கு ஆக்கி இந்தப் பயணத்தில், 60 ஆண்டுகால பயணத்தை எளிமையாக ஆக்குவதற்கு முழுக் காரணமாக இருக்கக்கூடிய என்னுடைய வாழ்விணையர், அன்பிற்கும், பாராட்டுதலுக்கும், நன்றிக்கும் உரிய அருமைத் தோழர் மோகனா அவர்களே,
மற்றும் இந்நிகழ்வில் குழுமியிருக்கக்கூடிய தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய தலைதாழ்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏன் தலைதாழ்ந்த என்று சொல்லுகிறேன் என்று சொன்னால், வெறும் அடக்கத்திற்காக அல்ல. அய்யா அவர்களுடைய தொண்டர்கள் என்று சொன்னால், எதிர்ப்பு வரும்பொழுது, அவர்களுடைய தலை நிமிரும்; தலை சாயாது. ஆனால், பாராட்டு, புகழ் என்று வருகிற நேரத்தில், தலை சாயத்தான் வேண்டும்; விரும்பி சாய்வதில்லை; இயல்பாகவே சாயக்கூடிய அளவிற்குத் தலை தாழ்ந்து, உங்களுடைய பாராட்டு என்பது, அது உண்மை என்று நான் சொல்லாவிட்டாலும்கூட, அதைத் தாண்டி உற்சாகம், ஊக்க மாத்திரை என்ற அளவிலே தருகிறீர்கள்.
இன்றைக்குத் தவணை முறையிலே நீங்கள் சந்தாக்களைக் கொடுத்திருக்கிறீர்கள். இது அவ்வளவும் உங்களுடைய உழைப்பு. நம்மிடம் அதானிகள் இல்லை; நம்மிடம் அம்பானிகள் இல்லை. இருக்கக்கூடாது; அப்படியே வந்தாலும், அவர்களுக்கு இங்கே இடமில்லை.
திருவாரூர் சனாதன எதிர்ப்பு மாநாட்டினை எதிர்த்து, ஓர் அறிக்கை கொடுத்தவர். ஹிந்து மதம்; ஹிந்து மதம் என்றால், சனாதனம். அதைத்தான் எதிர்க்கிறார்கள் என்று.
இப்பொழுது மக்களுடைய வரிப் பணத்தில் சம்பளத்தை வாங்கிக்கொண்டு ஒருவர், ராஜ்பவனில் சனாதனத்தைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார் அல்லவா, ஒரு சனாதனவாதி; ஆர்.எஸ்.எஸ். பணியை செய்து கொண்டிருக்கின்றார் அல்லவா ஓர் ஆளுநர். அந்த ஆளுநர், பதவியேற்பதற்கு முன்பு, தலைமை நீதிபதிக்கு முன்னால், அரசமைப்புச் சட்டத்தில் இருக்கின்ற மதச்சார்பின்மையின்மீது உறுதிமொழி எடுத்துத்தானே அந்தப் பதவிக்கு வந்திருக்கிறார்.
அந்த அரசமைப்புச் சட்டத்தில், உறுதிமொழியில் என்ன இருக்கிறது? பிரியாம்பிள்பற்றி சொன்னாரே, சற்று நேரத்திற்கு முன்பு ஆ.இராசா அவர்கள்.
SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC என்ற வார்த்தை இருக்கிறதே, அதில் SOVEREIGN SECULAR என்று வருகிறபொழுது, சமதர்ம, மதச்சார் பற்ற என்கிற இரண்டு சொற்களும் மிகவும் முக்கியம். இந்த இரண்டு சொல்லும் சனாதனத்திற்கு விரோத மானவை; நேர் எதிரானவை.
‘விடுதலை’யை நெருக்கடி காலத்திலேயே முடக்கிவிடவேண்டும்; ‘முரசொலி’யை முடித்து விட வேண்டும்; கலைஞரை செயல்பட விடக்கூடாது என்றெல்லாம் நினைத்தார்கள்.

27,605 ‘விடுதலை’ சந்தாக்கள்
அந்த ‘விடுதலைக்கு’ இன்றைக்கு அத்துணைத் தோழர்களும் உழைத்து, மேடையில் 27,605 சந்தாக் களைக் கொடுத்திருக்கிறீர்கள்.
உங்களுக்கு உத்தரவாதம் சொல்லுகிறேன். நான் இந்தப் பணியை விடமாட்டேன்.
நானும் ‘விடுதலை’யை விடமாட்டேன்;
‘விடுதலை’யும் என்னை விடாது. எனக்கு எப்பொழுது இயற்கையில் விடுதலை கிடைக்கிறதோ, அப்பொழுதுதான் இந்தப் பணியிலிருந்து ஓய்வு பெறுவேன்; காரணம் இந்த இனத்திற்குக் கடைசி மூட நம்பிக்கைக்காரன் இருக்கிற வரையில், கடைசி எதிரி இருந்து, நம்மை சூத்திரனாக, பஞ்சமனாக, தீண்டாத வனாக, தொடக்கூடாதவனாக, படிக்கக்கூடாதவனாக ஆக்கி, நம்முடைய சகோதரிகளான பெண்களையெல்லாம், சரி பகுதியாக இருக்கக்கூடியவர்களை அடிமை யாக்கியுள்ள நிலை இருக்கின்ற வரையில், ‘விடுதலை’க்கு வேலை உண்டு.
‘விடுதலை’ ஆயுதம் – சுழன்றுகொண்டே இருக்க வேண்டும்; இந்த ஆயுதம் முனை மழுங்கக்கூடாது; இதை அடிக்கடி சானை பிடிக்கவேண்டும்; அதுதான் சந்தா இயக்கம்.
சந்தா கொடுக்கவில்லை; சானை பிடித்துக் கொடுக்கிறீர்கள்; கூர் மழுங்கக்கூடாது என்பதற்காக.
நாங்கள் இருக்கின்றோமோ, இல்லையோ – ‘விடுதலை’ இருக்கவேண்டும்; ‘விடுதலை’ போன்ற ஏடுகள் இருக்கவேண்டும். அந்த உரிமைப் போர்க் குரல் நடத்தக்கூடிய உணர்வுகளை உண்டாக்ககூடியவர்கள் இருக்கவேண்டும்.
எனவேதான்,
அதுதான் நம்மை வாழ வைக்கும்;
அதுதான் சமதர்மத்தை,
அதுதான் ஜனநாயகத்தை,
அதுதான் மதச்சார்பின்மையை,
அதுதான் அனைவருக்கும் அனைத்தும் என்கின்ற திராவிட மாடல் ஆட்சியைக் காப்பாற்றும்.
‘விடுதலை’ என்று சொல்லும்பொழுது,
மூடநம்பிக்கையிலிருந்து விடுதலை
பெண்ணடிமையிலிருந்து விடுதலை
அடிமைத்தனத்திலிருந்து விடுதலை
ஜாதியிலிருந்து விடுதலை
தீண்டாமையிலிருந்து விடுதலை
என்று சொல்லுகின்ற குரல் தொடர்ந்து ஒலிக்கவேண்டும்.
மிகப்பெரிய அளவிற்கு, ஆபத்துகள் வருகின்ற பொழுதெல்லாம், மூச்சுக் காற்று தேவை; பிராண வாயுக் குழாய் தேவை. – அந்தப் பிராண வாயுக் குழாய்தான் ‘விடுதலை’ இது என்றும் தயாராக இருக்கிறது என்று சொல்லி,
இவ்வளவு சிறப்பாகப் பாராட்டிய தோழர்-களுக்கும், சந்தாக்கள் அளித்தவர்-களுக்கும், திரட்டியவர்களுக்கும், உற்சாகப்படுத்தியவர்-களுக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!’’ என்று ஏற்புரையாற்றினார்.