நேர்காணல் : கலைஞர் பதில்கள்!

2022 கட்டுரைகள் ஜூன் 1-15 2022

கேள்வி :- தந்தை பெரியார் கொள்கை யின்பால் தாங்கள் ஈர்க்கப்பட்டதற்குக் காரணமான முக்கிய நிகழ்ச்சி எது?
கலைஞர் :- நான் திருவாரூர் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, ‘பனகல் அரசர்’ என்ற தலைப்புள்ள புத்தகம் துணைப்பாடக் கட்டுரையாக எங்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 50 பக்கங்கள் இருக்கும். வகுப்பிலேயே நான் ஒருவன் தான் அந்தச் சிறு நூல் முழுவதையும் அப்படியே மனப்பாடம் செய்து சொல்வேன். அந்தப் ‘பனகல் அரசர்’ என்ற புத்தகம்தான் எனக்கு அரசியல் அரிச்சுவடியாகவும், தந்தை பெரியார் அவர்களின் கொள்கையின்பால் நான் ஈர்க்கப்படவும் முக்கிய நிகழ்ச்சியாக அமைந்தது.
கேள்வி :- ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று சொல்லிக் கொண்டு சிலர் புறப்பட்டுள்ளார்களே?
கலைஞர் :- ‘ஆரியத்தால் வீழ்ந்தோம்’ என்பதற்குப் போட்டியாக சிலர் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ என்று புறப்பட்டுள்ளார்கள். திராவிடத்தால் தமிழ்ச் சமுதாயம் என்றைக்கும் வீழாது! எனவே, திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று இப்போது சொல்பவர்களே, கடந்த காலத்தில் திராவிடத்தால் வாழ்ந்தோம் என்ற நிலையிலே இருந்தவர்கள்தாம்!
கேள்வி:- ஆரியர் – திராவிடர் போராட்டம் தொடர்கிறது என்று குறிப்பிட்டு வருகிறீர்கள் – எந்த அடிப்படையில்?
கலைஞர்:- திராவிடர் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான பகுத்தறிவு, சுயமரியாதை, இட ஒதுக்கீடு, மூட நம்பிக்கை எதிர்ப்பு போன்றவை இன்றைக்கும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களின் சூழ்ச்சியால் சோதனைக்கு உள்ளாகும்போது, ஆரியர் – திராவிடர் போராட்டம் தொடர்கிறது என்று சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
கேள்வி:- ஜாதியை, மதத்தை அடையாளப் படுத்தி அரசியல் நடத்துவது சாத்தியப்படுமா? அப்படிச் சிலர் கிளம்பி உள்ளனரே?
கலைஞர் :- அப்படி முயற்சி செய்தாவது அரசியல் நடத்த முடியுமா என்று முயற்சிக்கிறார்கள்; அவ்வளவுதான்! இது பெரியார், அண்ணா, காமராஜர் போன்ற தலைவர்களால் பண்படுத்தப்பட்ட பூமி; ஜாதி, மதத்தை அடையாளப்படுத்தும் அவர்களின் முயற்சி பலிக்காது. சதிக்கு கால் முளைத்துத்தான் சாதி ஆகிறது. எனவே, சாதிப் பற்றுக்கொள்வதும், மத வெறி கொள்வதும் சமதர்மத்திற்கு ஒவ்வாததாகும்.
கேள்வி :- பகுத்தறிவு, சுயமரியாதை இவை இரண்டும் நமது அடிப்படை என்று சொல்லி வருகிறீர்கள்; இவற்றின் அடிப்படையிலான செயல்பாடுகளுக்கு என்ன திட்டம்?
கலைஞர் :- அதைப்பற்றி தீவிரமாகப் பேசுவதன் மூலமும், எழுதுவதன் மூலமும், பாடத் திட்டங்களிலே இந்த அடிப்படைக் கொள்கைகள் இடம் பெறக் கூடிய வகையில் மாற்றி அமைப்பதன் மூலமும் பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகளுக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து, ஆழமாக வேரூன்றச் செய்திட முடியும்.
கேள்வி :- சுயமரியாதை இயக்கத்தின் வழி வந்தவர்கள் நாம்; காலில் விழும் கலாச் சாரத்தைத் தவிர்க்குமாறு தாங்கள் அறிக்கை வெளியிட்டால் நல்ல விளைவு ஏற்படுமே?
கலைஞர் :- காலில் விழுகின்ற கலாச்சாரத்தைத் தவிர்க்க வேண்டுமென்று நான் பல முறை எடுத்துக் கூறியிருக்கிறேன். அறிக்கை வெளியிடுவதாலோ, அறிவுரை கூறுவதாலோ மட்டும் காலில் விழும் கலாச்சாரம் முற்றிலும் மாறிவிடாது. கழகத்தைப் பொறுத்த வரையில் அந்தக் கலாச்சாரம் பெருமளவிற்குக் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். 2006ஆம் ஆண்டு கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றபோதுகூட, அமைச்சர்கள் யாரும் காலில் விழக் கூடாது என்று கண்டிப்பாக எச்சரிக்கப்பட்டது. இந்தக் கேள்வியும், இதற்கு நான் அளிக்கும் பதிலுமே நீங்கள் விரும்புகிற அறிக்கையாக அமையுமென்று கருதுகிறேன்.
கேள்வி :- கல்வி – பொதுப் பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது. தேசிய மொழிகள் அனைத்தும் ஆட்சி மொழியாக ஆக்கப்படவில்லை. ஈழத் தமிழர் – கச்சத்தீவு போன்ற மாநில உணர்வுகளைப் பொதுவாக மத்திய ஆட்சி புறந்தள்ளி வருகிறது. இந்த நிலையில் தேசிய இனங்களின் உரிமைகள் மீட்கப்பட என்ன செய்ய வேண்டும்?
கலைஞர் :- கழகத்தின் அய்ம்பெரும் முழக்கங்களில் ஒன்றான மாநிலத்தில் சுயாட்சி – மத்தியில் கூட்டாட்சி என்ற தத்துவம் நூறு சதவிகிதம் நடைமுறைக்கு வந்தால்தான் நீங்கள் கூறுகின்றபடி தேசிய இனங்களின் உரிமைகள் மீட்கப்பட ஏதுவாக அமையும்.
கேள்வி :- தமிழர் வீட்டுப் பிள்ளைகளின் பெயர்கள் (கழகக் குடும்பத்தில் கூட) தமிழைப் புறந்தள்ளி பெரும் அளவு சமஸ்கிருத மயமாகி விட்டதே; இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
கலைஞர்:- தமிழ்ப் பெயர்களையே நம் வீட்டுப் பிள்ளைகளுக்குச் சூட்ட வேண்டுமென்று திரும்பத் திரும்ப எடுத்துக் கூறி மாற்றம் காணுவதற்கான முயற்சியிலே அயராமல் ஈடுபட வேண்டும். கழகத்தைப் பொறுத்தவரையில், நானும், பேராசிரியரும், பொருளாளர் தம்பி ஸ்டாலின் போன்றவர்களும் திருமண நிகழ்வுகளில் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறோம்.
கேள்வி :- தந்தை பெரியாரின் இன்றைய தேவை?
கலைஞர் :- தந்தை பெரியாரின் தேவை இன்றைக்கு மட்டுமல்ல; என்றென்றைக்கும் தேவை! எனினும் இப்போது மிக மிகத் தேவை!
கேள்வி :- இந்த வயதிலும் தங்களால் எப்படிக் கடுமையாக உழைக்க முடிகிறது?
கலைஞர்:- இந்த வயதிலும் என்றால்; எனக்கு 90தானே ஆகிறது; தந்தை பெரியார் 94 வயது வரை ஓயாமல் உழைக்கவில்லையா?
கேள்வி :- தமிழ்நாட்டின் மூத்த தலைவரான – 90ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தாங்கள் நம் மக்களுக்குக் கூற விரும்பும் பிறந்த நாள் செய்தி என்ன?
கலைஞர்:- பெரியார், அண்ணா கூறிய அடிப்படைக் கொள்கைகளை எந்த நிலையிலும் மறவாதீர் என்பதுதான் பிறந்த நாள் செய்தியாக முக்கியமாக நான் கூற விரும்புவதாகும்.
கேள்வி :- செய்ய நினைத்து – செய்ய இயலாமல் போன காரியங்கள் என்ன?
கலைஞர்:- மத்தியில் தமிழும் ஆட்சி மொழி; சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழும் பயன்பாட்டு மொழி; மாநில சுயாட்சி – இவைதான் இன்னும் முழுமையாக முடியாமல் இருக்கின்ற காரியங்கள்.
கேள்வி :- தி.மு.க.வை வழிநடத்த, ஒரு தலைமைக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்?
கலைஞர்:- தலைவன் – தொண்டன் என்ற எண்ணம் சிறிதும் இன்றி, அண்ணன் – தம்பி என்ற பாசப் பிணைப்பு, கட்சித் தோழர்களின் பொதுவாழ்விலும் குடும்ப வாழ்விலும் அக்கறை, கட்சித் தோழர் எவரிடமும் பகை-வெறுப்பு பாராட்டாத பண்பு, எல்லோரும் பின்பற்றும் லட்சிய மாதிரியாகத் திகழுதல், பகுத்தறிவு – சுயமரியாதை, இனவுணர்வு காத்திடும் போர்க் குணம், அரசியல் நிகழ்வுகளின் போக்கை முன்கூட்டியே தீர்மானிக்கும் பார்வை, சமரசம் இல்லாத கொள்கைப் பிடிப்பு போன்றவையே தலைமைக்கான தகுதிகள்.
கேள்வி :- தி.மு.க.வின் இறுதி லட்சியம்?
கலைஞர்:- சமுதாயத் துறையில் சமத்துவம், பகுத்தறிவு; பொருளாதாரத் துறையில் சமதர்மம்; அரசியலில் ஜனநாயகம்.
கேள்வி :- கருணாநிதி – சிறுகுறிப்பு வரைக?
கலைஞர்:- மானமிகு சுயமரியாதைக்காரன்!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *