தலையங்கம் : மத்தியப் பிரதேசத்தில் பெரியார் புயல்!

2022 செப்டம்பர் 16 -30 2022 தலையங்கம்

“கடவுள், மதத்தின் பெயரால் பார்ப்பனர்கள் பொது மக்களை முட்டாளாக்குகின்றனர்’’ எனப் பேசிய மத்தியப் பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் உமாபாரதியின் உறவினரும், பா.ஜ.க.வின் ஓபிசி தலைவருமான பிரீத்தம் லோதி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பா.ஜ.க. பார்ப்பனர்களின் கட்சி என்று, கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடையாளமாக இருந்தவர் உமாபாரதி. பாபர் மசூதி இடிப்பு நிகழ்வில் உமாபாரதி மிக முக்கியப் பங்கு வகித்தவர். அண்மைக்காலமாக பாஜகவில் இருந்து ஓரங் கட்டப்பட்டார். பா.ஜ.க. மாநிலத்தலைமை கூட உமாபாரதியை எந்த ஓர் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளுக்கும் அழைப்பதில்லை. அவர் மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சராகவும், ஒன்றிய கேபினட் அமைச்சராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. உமாபாரதியின் உறவினரான பிரீத்தம் லோதி, மத்தியப்பிரதேச பா.ஜ.க.வில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் ஓபிசி பிரிவினரிடையே அதிகம் செல்வாக்கு பெற்றவராக உள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரீத்தம் லோதி பேசினார்.

அதில், “மத வழிபாடுகள், அர்ச்சனைகள் என்ற பெயரில் மக்களை ‘பிராமணர்’கள் முட்டாள்களாக்கி வருகின்றனர். மக்களிடம் இருந்து பணம் முதலியவற்றைப் பறித்து வருகின்றனர். நல்ல குடும்பங்களைச் சேர்ந்த அழகான பெண்கள் வந்தால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதல் வரிசையில் உட்கார வைத்துவிடுகின்றனர். அந்தப் பெண்களின் வீடுகளில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்கின்றனர். வயதான பெண்களை பின்வரிசைகளுக்குத் தள்ளிவிடுகின்றனர்” எனக் கூறியிருந்தார் பிரீத்தம் லோதி.
அவரது இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரீத்தம் லோதிக்கு எதிராக மத்தியப்பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரீத்தம் லோதி தமது பேச்சுக்கு வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்தார்.

பா.ஜ.க. மேலிடம், பிரீத்தம் லோதியை அக்கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. இது பார்ப்பனர் அல்லாத சமூகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.க. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிரீத்தம் லோதி, பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தினரிடையே தமக்குள்ள செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மத்தியப் பிரதேசத்தின் பிச்சோர் தொகுதியில் மாபெரும் பேரணியை நடத்தியுள்ளார். இதில் பல ஆயிரம் பேர் கலந்து கொண்டுள்ளனர். பார்ப்பனர்கள் குறித்து சர்ச்சைக்குள்ளான வகையில் பேசியதற்காக, பாஜகவிலிருந்து நீக்கப்-பட்ட நிலையில் இவர் தலைமையேற்று நடத்திய பேரணி மத்தியப் பிரதேசத்தில் பாஜகவினருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் பேரணியில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மிகப் பெரிய அளவில் கலந்து கொண்டனர். மேலும் அவர்கள் பா.ஜ.க. தலைவர் வி.டி.ஷர்மா மற்றும் ஒன்றிய அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இவர்கள் குவாலியர் _- சம்பல் பகுதியில் உள்ள முக்கிய பார்ப்பனத் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாபெரும் கூட்டத்தில் லோதியின் உறவினரான மேனாள் ஒன்றிய அமைச்சர் உமா பாரதியும் கலந்துகொண்டார். இந்தப் பேரணியை ஓபிசி மகாசபை முன்னெடுத்து நடத்தி உள்ளது.
பிற்படுத்தப்பட்டோருக்கான கணக்கெடுப்பு மற்றும் கூடுதலாக இட ஒதுக்கீடு கேட்டு பிச்சோர் தொகுதியில் வருகின்ற 28ஆம் தேதி மேலும் ஒரு பேரணியை நடத்த உள்ளதாக பிரீத்தம் லோதி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரீத்தம் லோதியின் சமூகமான லோதி சமூகத்தினர், அவருக்கு ஆதரவு தெரிவித்து, பார்ப்பனர்களுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ஷிவ்புரி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவில் ஒன்றில் ஒன்று கூடினர்.
அந்தக் கூட்டத்தில், “இனி கோவில் விழாக்கள், திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும், பூஜை செய்வதற்குப் பார்ப்பனர்களை அழைக்கக் கூடாது, அவர்–களுடன் எந்த விதமான உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது” என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இதனை மீறினால் 2100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி, அதில் பஞ்சாயத்துத் தலைவரான ராம் பிரகாஷ் என்பவர் கையொப்பமிட்ட ஆவணங்-களும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. வழக்கமாக பி.ஜே.பி.யினர் இஸ்லாமியர்களைப் புறக்கணிக்க வலியுறுத்தி கூட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது, பார்ப்பனர்களைப் புறக்கணிக்க வலியுறுத்திக் கூட்டம் நடத்தியது – பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம், பெரியார் மத்தியப் பிரதேசம் சென்றுள்ளார் _ அந்தக் காற்று பேருருக் கொண்டு வட மாநிலங்களில் வீசப் போகிறது என்பதற்கான அறிகுறி தோன்றிவிட்டது. புதிய திருப்பம் ஏற்படவும் போகிறது.-
– கி.வீரமணி
ஆசிரியர்