இசையறிஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ விருது : பெரியார் மீது அவதூறு பரப்பும் பின்னணியில் ஜாதி, மதவாதச் ச(க்)திகள் – மஞ்சை வசந்தன்

2024 ஏப்ரல் 1-15, 2024 முகப்பு கட்டுரை

கர்நாடக இசைத் துறையில் தனித்த இடம்பிடித்த சாதனையாளர்களுள் ஒருவரான டி.எம்.கிருஷ்ணா அவர்களுக்கு சென்னையின் புகழ்பெற்ற மியூசிக் அகாடமி அமைப்பு இவ்வாண்டுக்கான ‘சங்கீத கலாநிதி’ விருது அறிவித்துள்ளது.

தன்னுடைய பாணியில் கர்நாடக இசையைச் சபாக்களைத் தாண்டி, சென்னை தெருவிழாக்களிலும், அதன் பாடுபொருள்களை சுற்றுச் சூழல் பாதுகாப் பிற்காகவும், ஜாதி – மதவாதங்களுக்கு எதிராகவும் அமைத்துக் கொண்ட டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி வழங்கப்படுவதற்கான அறிவிப்பில் அவருடைய சமூகப் பங்களிப்பையும் குறிப்பிடுகிறது மியூசிக் அகாடமி.

இசை மேதை டி.எம்.கிருஷ்ணா ஜாதி, மத, உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதநேயர் (A Humanist). “மனித குலத்தை ஒரு குலமாகக் கருதி, காற்றும், மழையும், சூரிய ஒளியும் எப்படி மானுடத்திற்கு இயற்கையில் கிடைத்த பொது உரிமையுள்ள பொது உடைமைகளோ அதுபோல, இசையின்பமும்கூட அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிக்கும் ஓர் அற்புத ஊற்றாக, அனைவருக்கும் உரிய பொதுச் சொத்தாக வேண்டும்! யாருக்கும் எட்டாது, ஒரு சிலருக்கே என்ற ஏகபோகத்தை மாற்றி, திறமையும் உள்ளவர்கள் அனைவருக்கும் உரியதாக வேண்டும். புதுமையும் – புத்தாக்கங்களும் (Innovation) இசையிலும் புகுத்தப்பட வேண்டும். இசையை ஜாதிக் கண்ணாடி போட்டு பார்ப்பது தவறு” என்ற புதிய பார்வை கொண்டவர்.
இதன் காரணமாக அவர் ஒரு பெரியார் பற்றாளர்கூட.

கடந்த ஆண்டு, வைக்கம் நூற்றாண்டு விழாவைச் சிறப்பிக்கும் வகையில், அவருடைய இசை மற்றும் குரலிலும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் வரிகளிலும் “சிந்திக்கச் சொன்னவர் பெரியார்” என்ற பாடல் வெளியானது. இவை தான் விருதுக்கு எதிரான எதிர்ப்புக்கு முக்கியக் காரணங்கள்.
டி.எம்.கிருஷ்ணாவின் முயற்சிகளிலும், அவரது சமூக – அரசியல் நிலைப் பாடுகளிலும் முரண்பாடுகள் யாருக்கும் இருக்கலாம். ஆனால், அதற்கும், விருதுக்கும் என்ன தொடர்பு? எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் கூறியுள்ளவை முழுக்க தந்தை பெரியாரின் மீதான அவதூறும் வெறுப்புணர்வும் நிரம்பியவை ஆகும்.
கர்நாடக இசைத் துறையில் அவர் ஆற்றியுள்ள பணிகளுக்காகவும், கர்நாடக இசையைப் பல்வேறு சமூக அமைப்புகளுக்கு எடுத்துச் செல்வதன் மூலமும், இறுக்கமாக வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளுக்கு மாறாக அதன் ஆய்வில் கவனம் செலுத்துவதன் மூலமும் கலையின் கேட்போர் தளத்தை விரிவுபடுத்து வதற்கு அவர் பணியாற்றியமைக்காகவும், சமூக சீர்திருத்தத்திற்கான ஒரு கருவியாக இசையைப் பயன்படுத்துவதற்காகவும் இவ் விருது வழங்கப்படுவதாக மியூசிக் அகாடமி கடந்த மார்ச் 17 அன்று அறிவித்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் மியூசிக் அகாடமி இத்தகைய விருதுகளை அறிவிப்பதும், அவ்வமைப்பின் உயரிய விருதான ‘சங்கீத கலாநிதி’ பெறுபவரை அவ்வாண்டின் இறுதியில் நடக்கும் இசை விழாவுக்குத் தலைமையேற்கச் செய்வதும் வழக்கமாக நடைபெறும் ஒன்றாகும்.
அவ்வகையில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் 15 தொடங்கி 2025 ஜனவரி 1 வரை நடைபெறும் விழாவிற்கு டி.எம்.கிருஷ்ணா தலைமையேற்பார் என்றும் அறிவிப்புச் செய்துள்ளது.

unmai logo

இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 20ஆம் தேதியன்று, அதே இசைத் துறையில் உள்ள ரஞ்சனி, காயத்ரி ஆகியோர், டி.எம்.கிருஷ்ணா தலைமையில் நடைபெறும் விழாவில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதனை மியூசிக் அகாடமியின் தலைவருக்குத் தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களிலும் இது குறித்துப் பரப்பினர்.

‘‘பல ஆண்டுகளாக கர்நாடக இசையைத் தங்கள் வாழ்க்கை என நினைத்து வாழும் இசைக் கலைஞர்களின் கடின உழைப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் கிருஷ்ணன் அவர்களின் செயல்கள் உள்ளன. ஈ.வெ.ரா எனப்படும் பெரியாரைப் போற்றும் கருத்துகளை டி.எம்.கிருஷ்ணா முன்வைத்துள்ளார். பெரியாரைப் போற்றும் டி.எம்.கிருஷ்ணா போன்றவர்களை ஊக்குவிப்பது ஆபத்தானது.

பெரியார், பிராமணர்களைக் கூட்டாக இனப்படுகொலை செய்ய வேண்டுமென பொது வெளியில் உரக்கப் பேசியவர். சமூகத்தில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வார்த்தைகளைக் கொண்டு பேசியவர். ஆபாசமாகப் பேசுவதைச் சமூகத்தில் இயல்பான ஒரு விஷயம்தான் என்ற கருத்தைத் திணிக்க நினைத்தவர் பெரியார்.

கலை மற்றும் கலைஞர்கள் ரசிகர்கள், நிறுவனங்கள், நமது கலாச்சாரத்தை மதிக்கும் ஒரு மதிப்பு சமூகத்தை நாங்கள் நம்புகிறோம். இவற்றைப் புறக்கணித்து இந்த ஆண்டு மாநாட்டில் கலந்து கொண்டால் அது நாங்கள் கொண்ட நம்பிக்கையைக் கொச்சைப்படுத்துவதாகும்’’ என ரஞ்சனி, காயத்ரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாகக் கருத்துகளைப் பதிவிட்டுள்ள தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார் :_
‘‘90 ஆண்டுகளுக்கும் மேலாக கர்நாடக இசை மற்றும் ஆன்மிக உணர்வின் ஆலயமாகப் போற்றப்படும் ‘மியூசிக் அகாடமி’ அமைப்பின் புனிதத்திற்கு பிரிவினை சக்திகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சென்னை மியூசிக் அகாடமியின் அதிகாரப் போக்கிற்கு எதிராகக் குரல் எழுப்பிய அனைத்து புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுக்கும் தமிழ்நாடு பா.ஜ.க. துணை நிற்கிறது’’ என்று பதிவிட்டுள்ளார். இவை உண்மைக்கு மாறான அவதூறுகள். விருதுத் தேர்வு தொடர்பான கருத்து அவர்களுடைய தனிப்பட்ட விருப்பு – வெறுப்பு சார்ந்த ஒன்றாக இருக்கலாம். ஆனால், அதற்கு அவர்கள் தந்தை பெரியாரைத் தொடர்புபடுத்தித் தெரிவித்துள்ள காரணம், உண்மைக்கு மாறானதும், அறியாமையின் பாற்பட்டதும், சமூக – ஜாதி வெறுப்புணர்ச்சியினால் தூண்டப்பட்டதுமாகும்.
இது குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தமது கண்டனத்தையும், உரிய விளக்கத்தையும் அறிக்கையாக எழுதியுள்ளார்கள்.

ஆசிரியர் அறிக்கை : மனித நேயத்துக்காகவும், சமத்துவம் – சமூகநீதிக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடிய உலகத் தலைவர். தந்தை பெரியாரின் கருத்துகள் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி, உலகம் முழுவதும் ஆய்வு செய்யப்படுவதும், ஏற்கப்படுவதும், சமூகநீதிக்கான அடையாளமாக தந்தை பெரியார் கொண்டாடப்படுவதும் பெரியார் உலகமயமாகி வருவதும், எதிர்ப்பாளர்களை அச்சம் கொள்ளச் செய்திருக்கிறது. அதன் காரணமாகவே, பெரியார் இனப் படுகொலையை முன்மொழிந்தவர் என்று அவரைப் பற்றி திட்டமிட்டு, தொடர்ந்து சில பார்ப்பனர்கள் இட்டுக் கட்டி ஆங்கிலத்தில் அவதூறு பரப்பி வருகின்றனர்.
(கனடாவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு மாநாடு வரை இவர்களின் அவதூறு பரப்பும் முயற்சிகள் தொடர்ந்தன.) இன்று அதனையே கர்நாடக இசைப் பாடகிகளான மேற்சொன்ன இருவரும் தங்கள் பதிவில் எழுதியுள்ளனர்.

உலகிலேயே வன்முறையை நாடாமல், ஒரு மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திய தலைவர் தந்தை பெரியார். உலகில் வேறெங்கும் இல்லாத வர்ணாசிரம – ஜாதி – தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சமரசமற்ற கருத்துப் போர் நடத்தி, அதற்காகவே சுயமரியாதை இயக்கம் கண்டு, திராவிட இயக்கத்தை வழிநடத்தி, அதில் வெற்றியும் கண்டு வருபவர் தந்தை பெரியார். காரணம், அவர் ஓர் தனி மனிதரல்லர் – தத்துவம்! உடலால் மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்னும், அவரது கொள்கைகள், போராட்டங்கள் தான் இன்றும் வெற்றி பெறுகின்றன. இத்தனைப் பெரிய சமூகப் போராட்டத்தில் எந்த இடத்திலும் வன்முறையில் ஈடுபடாமல் ஓர் அமைதிப் புரட்சி இயக்கமாக இதை உருவாக்கி, வழிநடத்தியவர். இன்று வரை அந்தப் பாதையில் தடம்மாறாமல் திராவிடர் கழகம் நடை போடுகிறது. தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு சமூகத்திற்காகப் போராடும் கருப்பு மெழுகுவத்திகள் தந்தை பெரியாரின் தொண்டர்கள். போராட்டத்தில் ஈடுபட்டு, சிறைக்குச் சென்று, தாக்குதல்களுக்கு உள்ளாகி பெரியார் தொண்டர்கள் உயிரைத் துறந்ததுண்டு. ஆனால், அப்போதும் நாம் வன்முறையை நாடிய தில்லை.
காந்தியாரைப் படுகொலை செய்த கால கட்டத்தில்கூட, பார்ப்பனர்கள்மீது தாக்குதலை ஏவாமல் பார்ப்பனர்களைப் பாதுகாத்து, அமைதியை நிலைநாட்டியவர் தந்தை பெரியார்.

அகில இந்திய வானொலியில் உரையாற்றி, அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாகத் தக்க வைத்த மனிதநேய மாண்பாளர் அவர்!

குருகுலப் போராட்டம், வைக்கம் போராட்டம், இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஜாதி ஒழிப்புப் போராட்டம் என வாழ்நாள் முழுக்க போராட்டங்களால் பொழுதளந்தவர் – தந்தை பெரியார் இவற்றில் எதிலும் வன்முறையைக் கைக் கொண்டவரல்லர். அதனால்தான் இன்றளவும் போற்றப்படுகிற தலைவராக அவர் இருக்கிறார்.
05.01.1953இல் பார்ப்பன இளைஞர்கள் நடத்திய, இராயப்பேட்டை யுவர் சங்கக் கூட்டத்தில் பார்ப்பனர்களுக்குத் தந்தை பெரியார் கூறிய அறிவுரையில்,
“பிராமணர்கள் இந்த நாட்டில் வாழக் கூடாது என்றோ, இருக்கக் கூடாது என்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. திராவிடர் கழகத்தின் திட்டமும் அதுவல்ல. திராவிடர் கழகத்தினுடைய திட்டமெல்லாம், திராவிடர் கழகமும் நானும் சொல்லுவது எல்லாம், விரும்புவது எல்லாம், நாங்களும் கொஞ்சம் வாழ வேண்டும் என்பது தான். இந்த நாட்டிலே நாங்களும் கொஞ்சம் மனிதத்தன்மையோடு சமத்துவமாக இருக்க வேண்டும் என்பது தான். இது பிராமணர்களை வாழக் கூடாது என்று சொன்னதாகவோ, இந்த நாட்டைவிட்டு அவர்கள் போய்விட வேண்டுமென்று சொன்னதாகவோ, அர்த்தம் ஆகாது. அவர்களைப் போகச் சொல்ல வேண்டிய அவசியமுமில்லை. அது ஆகிற காரியம் என்று நான் கருதவுமில்லை” என்று கூறினார் இக்கொள்கை இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது
அவரை வன்முறையாளர் என்றும், இன்னும் அதிகப்படியான வார்த்தைகளால் இனப்படு கொலையை முன்மொழிந்தவர் என்றெல்லாம் அவதூறு பரப்புவதும், இழிவு செய்வதும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாத கண்டனத்திற்குரியவையாகும்’’ என்று ஆசிரியர் அவர்கள் கண்டித்ததோடு, வரலாற்றுச் சான்றுகளோடு விளக்கியுள்ளார்,

‘‘எந்தப் பேதமும் இல்லாமல் மனித குலம் வாழ வேண்டும் என்பதே, பெரியாரின் தத்துவம், நோக்கம், செயல்பாடுகள் அத்தனைக்கும் அடிப்படை.
தந்தை பெரியார் இல்லையேல் பெண்ணடிமைத் தனம் இந்த நாட்டில் நீங்கியிருக்க வழி உண்டா? தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துகள் எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் மட்டுமானது அல்லவே! அவருடைய கருத்துகள் தானே பார்ப்பனர் சமூகத்திலும் புரட்சியை உண்டாக்கின. விதவை என்று கூறி, மொட்டையடிக்கப்பட்டு, முக்காடிட்டு மூலையில் அமர்த்தப்பட்ட கொடுமைகள் எல்லாம் மறைந்து, பார்ப்பன மகளிரும் தங்கள் சுயமரியாதையைப் பெறுவதற்குத் தந்தை பெரியாரின் பேச்சுகளும், எழுத்துகளும், செயல்பாடும் தானே காரணம்!

வர்ணாசிரம, ஜாதி, பாலின அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளுக்கும், பாகுபாடுகளுக்கும், அனைத் துத் துறையிலும் இதே நிலை கோலோச்சி வந்ததற்கும் எதிராகப் போராடிய தந்தை பெரியார், அப்படி ஆதிக்கம் செலுத்தியவர்களையும் திருத்தி, சமத்துவ நிலைக்குக் கொண்டு வரவிரும்பி உழைத்தவரே அல்லாமல், அவர்களை அழிக்க நினைத்தவர் அல்லர்.

டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகப் பேசியுள்ள இந்த இரு பெண்களுக்கு ஆதரவாக துஷ்யத்து சிறீதர், விஷாகாஅரி, சித்ரவீணாரவிகிரண் உள்ளிட்ட இன்னும் சிலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். பெரியார் என்பவர் ஜாதி, மத, இன, மொழிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக உயர்ந்து நிற்பதைச் சகிக்க முடியாத வெறுப்புணர்ச்சி தான் இவர்கள் கூறும் அவதூறுகளுக்குக் காரணமாகும்.
சம்பந்தப்பட்ட மியூசிக் அகாடமி அமைப்பின் தலைவர் திரு.முரளி அவர்கள் இசைக் கலைஞர்கள் ரஞ்சனி – காயத்ரி ஆகியோருக்கு எழுதிய பதிலில், தனக்கு எழுதப்பட்ட கடிதம் பொது வெளியில் பகிரப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகித் துள்ளார். மேலும், விருதுக்கான தங்கள் தேர்வில் உறுதியாக இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

திருவையாறு தியாகய்யர் உற்சவத்தில் அரியக்குடி, ராமானுஜ அய்யங்காரின் எதிர்ப்பும், 1946ஆம் ஆண்டு ‘குடிஅரசு’ ஏட்டின் துணை ஆசிரியராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ‘தீட்டாயிடுத்து’ என்னும் தலைப்பில் எழுதிய துணைத் தலையங்கத்தை (09.02.1946) இந்தச் சூழலில் நினைவூட்டுவது பொருத்தமாகும்.

திருவையாறு தியாகராயர் உற்சவத்தில் (கர்நாடக இசை மேடையில்) தமிழரான தண்டபாணி தேசிகர், ‘சித்தி விநாயகனே’ என்று தமிழ்ப் பாட்டு பாடியதற்காக, “தமிழில் பாடி, சந்நிதானத்தைத் தண்டபாணி தேசிகர் தீட்டுப்படுத்தி விட்டார்; நான் அதே மேடையில் பாட மாட்டேன்” என்று அரியக்குடி இராமானுஜ அய்யங்கார்கள் அரற்றியது 1946ஆம் ஆண்டோடு முடிந்துபோகவில்லை; அதே நிலை தான் 80 ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் தொடர்கிறது என்பதற்கு இப்போது சங்கீத கலாநிதி விருது பெறவுள்ள நண்பர் டி.எம்.கிருஷ்ணா தலைமை யேற்கும் நிகழ்ச்சியில் “பாட மாட்டோம்” என்று பாடகிகள் இருவர் தெரிவித்திருக்கும் எதிர்ப்பே சான்றாகும்.

இப்போராட்டம் இரண்டு தத்துவங்களுக்கிடையில் நடப்பதாகும். அனைவருக்கும் அனைத்தும் கிட்ட வேண்டும், அனைவரும் சமம், அனைவருக்கும் உரிமை வேண்டும், மொழி, இன பேதம் கூடாது என்று கருதும் சமத்துவத் தத்துவத்தற்கும், எதிலும் மேல்-கீழ் இருக்க வேண்டும். எதுவும், யாரும் சமமில்லை, தமிழ் நீச பாஷை, தமிழர்களின் கலையுடன் கர்நாடக இசை கலக்கக் கூடாது என்ற தத்துவத்திற்கும் நடக்கும் போராட்டமே இது! தன்னுடைய தளத்தில் நின்று, கலையை சமூகத்தின் அனைத்துத் தரப்பினருடனும், அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து, இசைந்து செயல்படுத்தி
வரும் டி.எம்.கிருஷ்ணாவின் செயல்களே – இந்த எதிர்ப்புகளுக்குக் காரணம் என்பதை, மேற் சொன்ன இருவரின் எதிர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
முற்போக்குக் கருத்துக்களை முன் வைத்துப் பாடினால், அது அவதூறா – இழுக்கா?

கலை அனைவருக்கும் பொதுவானதே!

கலை அனைவருக்குமானது, கலையில் மக்களின் பிரச்சினைகள் பேசப்பட வேண்டும் என்ற கருத்தைத் தான் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
டி.எம்.கிருஷ்ணா எங்குப் பிறந்தார் என்பது முக்கியமில்லை; அவர் எதை முன்னிறுத்துகிறார் என்பதே முக்கியம். சமத்துவத்திற்கான குரல் எங்கிருந்து வந்தாலும், அதைக் கரம் நீட்டி வரவேற்க வேண்டியது நமது கடமை!

டி.எம்.கிருஷ்ணாவுக்கு ஆதரவாக, ஏராளமான பார்ப்பன நண்பர்களும் குரல் கொடுத்திருப்பதும், கலை அமைப்புகள் ஆதரவாக நிற்பதும் வரவேற்கத் தக்கனவாகும்.
அவசியமற்ற இந்த சர்ச்சை எழுந்த பின்னாலும், விருது தேர்விலும், தங்கள் நிலைப்பாட்டிலும் மிக உறுதியாக நிற்கும் மியூசிக் அகாடமி அமைப்புக்கும், அதன் தலைவர் திரு.முரளிக்கும் நமது பாராட்டுகள் வாழ்த்துகள்!

நண்பர் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் பல சிறப்புகளைப் பெற்றவர் என்றாலும், அவரது சமூகக் கருத்துகளுக்காகவே அவர் எதிர்க்கப்படுகிறார் என்றால் அவரை ஆதரிக்க வேண்டியதும் நமது கடமை! அதே வேளையில், அவருடைய கருத்துகளுக்கு எதிராகப் பேசுகிறோம் என்ற பெயரில் வன்மத்தைக் கக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
அதுமட்டுமல்ல, பெரியார்மீது அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றத்தையும், நீதிமன்றத்தையும் சந்திக்க நேரும் என்றும் எச்சரிக்க விரும்புகிறோம் என்ற உண்மைகளை உறுதியுடன் கூறி, எச்சரித்துள்ளார் தமிழர் தலைவர் அவர்கள்.

இசை பற்றியும் அறியாத, இயக்கம் பற்றியும் அறியாத, இனப் பேராட்டத்தின் வரலாறும் புரியாத ஆர்.எஸ்.எஸ். அண்ணாமலை, சந்தில் சிந்து பாட முற்படுவது பரிதாபத்திற்குரியதாகும்.

அவதூறு பரப்புவோருக்குத் துணை நிற்போம் என்பது அகம்பாவமா? அறியாமையா?

பெரியாரைப் பற்றிப் பேசியது விருதுக்குரிய தகுதி இழப்பு என்பது எப்படிப்பட்ட பாசிச அணுகுமுறை!
யார் இந்த டி.எம்.கிருஷ்ணா?

‘சங்கீதம் அனைவருக்கு சமம்’ என்ற கருத்தை வலியுறுத்தி நிகழ்கால கர்நாடக சங்கீத வரலாற்றில் பல முற்போக்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருபவர், ‘மக்சேசே’ விருது பெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆவார். சாஸ்திரிய மேடைக் கச்சேரிகளில் ஒரு பிரிவினர் மட்டுமே பாடி, கேட்டு வந்த கர்நாடக சங்கீதத்தை மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் மார்கழி கச்சேரிகளுக்குப் பதில் ‘ஊரூர் ஆல்காட் குப்பம் விழாவை’ முன்னெடுத்தவர். இந்துப் பக்திப் பாடல்களே அதிகளவு பாடப்படும் கர்நாடக சங்கீதத்தில் அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் ‘ஊரூர் ஆர்காட் குப்பம் விழா’, அமைதியை வலியுறுத்தி தலையில் குல்லா அணிந்துகொண்டு கர்நாடக இசை மேடைகளில் இஸ்லாமியப் பாடல்களைப் பாடுவது, கேரள சமூகத்தில் ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெறியப் பாடுபட்ட கேரள மறுமலர்ச்சியின் தந்தை எனப் போற்றப்படும் நாராயண குரு குறித்த பாடல், சாமானியர்கள் பயணம் செய்யும் ரயில்களில் பாடல் பாடுவது எனத் தொடர்ச்சியாக இசைத்துறையில் முற்போக்கான முன்னெடுப்பிற்காக பலராலும் பாராட்டப்பட்டு வருபவர் டி.எம்.கிருஷ்ணா.
அவருடைய கொள்கைகளை அறிந்தவர்கள் அவரை உச்சத்தில் உயர்த்திப் போற்றுவர்.

எடுத்துக்காட்டாக, படகோட்டி அக்காலத்தில் துடுப்பசைத்து படகைச் செலுத்தப் பாடுவான். இன்றைக்கு மோட்டார் படகு வந்ததும் துடுப்பும் இல்லை, பாட்டும் இல்லை.

துடுப்பசைத்துப் பாடும் மீனவர் பாட்டைப் பற்றிக் கருத்துக் கூறும் உரிமை மீனவருக்கே உண்டு. மாறாக, கருத்துக் கூறும் உரிமை உயர் ஜாதியினருக்கு இல்லை.
ஒப்பாரி பாடும் பெண்ணின் பாடல் பற்றியே உயர்ஜாதியினர்க்கு உரிமை இல்லை. அவர்களின் துயரம் இவருக்குத் தெரியாது. சூழல், சமுதாயக் கட்டமைப்பைச் சார்ந்தது.

பறை இசையை சாவுக்குரியது என்று இழிவுபடுத்த உயர்ஜாதியினர்க்கு என்ன உரிமையுள்ளது? இன்றைக்கு பறை இசையை ஒடுக்கப்பட்ட மக்கள் உயர்த்திப் பிடித்து உச்சத்திற்குக் கொண்டு சென்றுவிட்டனர். இதை மறுக்கமுடியுமா?

ஜாதி, பால், பொருளாதார வேறுபாடுகள் இருப்பதுதான் இச்சமுதாயம். இதனால் பாதிக்கப்படுபவர்கள், ஒடுக்கப்படுபவர்கள் பக்கம் நிற்கவேண்டும் என்பதே
என் கொள்கை. நான் அதைத்தான் செய்கிறேன்.

எனது முதல் நூல் : ‘Sudden Music Karnatic Stories’
எனது அடுத்த நூல் : Sebastian Sons – இசைக் கருவி செய்வோர் பற்றியது.

கர்நாடக இசையில் உள்ள ஜாதிப் பிரச்சனைகள் என்று ஓர் அத்தியாயம் உள்ளது. மேடையில் ஜாதிப் பிரச்சனைகள் அதில் பேசப்பட்டுள்ளது. ஆனால், அந்த இசைக் கருவிகள் தயாரிப்பவர்கள் பற்றி எழுதவில்லை. அதை நான் உணர்ந்தேன். நம் ஜாதிய மனப்போக்கு அதை எண்ணத் தவறிவிட்டது என்ற உண்மையைக் கண்டேன்!
அக்காலத்தில் இசைக் கருவி செய்வோருடன், இசைக் கலைஞர்களுக்கு இருந்த தொடர்பு, இதற்கான கடைகள் வந்தபின் மாறிவிட்டது.
முரளி கடிதம் : உங்கள் கடிதம் கிடைத்தது. மூத்த கர்நாடக இசைக்கலைஞர் ஒருவருக்குத்தான் அந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அவரைப் பற்றி நீங்கள் கூறுவது அவதூறு கருத்துகள். உங்கள் கருத்தில் உள்நோக்கம் உள்ளது. நாங்கள் உயரிய கர்நாடக இசைக் கலைஞருக்குத்தான் அந்த விருதை வழங்கியிருக்கிறோம் என்று பதில் கூறியுள்ளார்.

முரளி கடிதம் பற்றி பொதுமக்கள் கருத்து.
இராஜ்கிருஷ்ணா?

பாலக்காடு மணி அய்யர் கூறியதாய் பர்லாந்து என்பவர் ‘‘மாட்டுத் தோலில் செய்த மிருதங்கம்; சோம ஆசாரி சந்தனக் கட்டையில் செய்த இதை வைத்துதான் நான் மிருதங்கம் வாசிப்பேன்; அரியக்குடி இராமானுஜ அய்யர் பாடுவார்.’’ எல்லா ஜாதியினர் சேர்ந்து உருவாக்குவதே. இதில் உயர்வு – தாழ்வு பேசுவது தப்பு.
Provoke T.V.க்கு T.M. கிருஷ்ணன் அளித்த பேட்டி (அய்ந்து மாதங்களுக்கு முன்)
இசைக் கருவிகள் செய்கிறவர்கள் பெரும்பாலும் தலித் சமுதாயத்தவர். வாசிக்கிறவர்கள் பிராமணர்கள். ஆனால், இவர்களுக்குள் தொடர்பு உண்டா என்றால் இல்லை.

மாட்டுத் தோலை உரித்து பிராமணர்கள் இசைக்கருவியை உருவாக்கமாட்டார்கள். அதைச் செய்ய தலித் வேண்டும்.
மாற்றங்கள் வந்துகொண்டே இருக்கும். அதை ஏற்காமல் பழைமையைப் பேசி அதை நிலை நிறுத்த முற்படுவது தப்பு.
எல்லா கலைகளும் சமம் – இதைச் சென்னை நாடகத்தில் நடத்திக் காட்டினோம். முதல் பரதநாட்டியம் நடக்கும். அடுத்து, தெருக்கூத்து நடக்கும். அதற்கடுத்து வயலின் வாசிப்பு, தொடர்ந்து பறையிசை என்று எல்லாவற்றிற்கும் சமஉரிமை கொடுத்தோம்.

சமத்துவப் பாடல், சமத்துவச் சிந்தனை, கலைஞர்களை உட்கார வைப்பதில்கூட சமத்துவத்தை உண்டு பண்ணினேன். பாடகர் நடுவில் என்பதை
மாற்றினேன். முக்கிய இடத்தை அனுபவித்தவர்
களுக்கு அதை விட்டுக் கொடுக்க மனம் ஒப்பாது. அதுவே ஆதிக்கத்திற்கு அடிப்படை. அதை நான் தகர்த்து வருகிறேன்.
சங்கீதம் ஒரு குறிப்பிட்ட ஜாதி வட்டத்திற்குள் அடைக்கப்பட்டிருப்பது சரியல்ல. அது பரவலாக்கப் பட வேண்டும் என்று கூறினார்.
மும்மூர்த்திகள் மட்டுமா?

கர்நாடக இசையின் மும்மூர்த்திகள் என்று திருவையாறு தியாகராயர், முத்துசாமித் தீட்சிதர், சியாமா சாஸ்திரி என்று மூன்று பேரைக் காட்டுகின்றனர்.
உண்மையில் இவர்களுக்கு முந்திய இசை மும்மூர்த்திகள் இருந்தனர். காலத்தால் மூத்தவர்கள். இசையில் இவர்களும் மேம்பட்டவர்கள்.
1. மாரிமுத்தாபிள்ளை, 2. முத்துத்தாண்டவர்,3. தண்டபாணி தேசிகர்.

இவர்களுக்குப் பல ஆண்டுக்குப் பின்
பிறந்தவர்கள் இந்த மும்மூர்த்திகள். இப்படி உண்மையை
மறைத்து தங்களுக்கு வேண்டியவர்களை முன்னிறுத்துவது மோசடியல்லவா?

அப்ரகாம் பண்டிதர் மிகச் சிறந்த இசை ஆய்வாளர். அவர் எழுதிய இசைப் பற்றிய நூல் மிக உயரியது. இவருடைய மகனும் சிறந்த இசை மேதை. இவர்களையெல்லாம் மறைத்துவிட்டு தியாகராயர் உட்பட்ட மூன்று பேரை மட்டும் முன்னிறுத்துவது நியாயமா?
அதுமட்டுமல்ல, இசையில் சிறந்த எம்.எஸ். சுப்புலட்சுமி அம்மையார் ஒரு தேவதாசியின் மகள். ஆனால், அவரை பார்ப்பனப் பெண்ணாகக் காட்டி வருகின்றனர். அந்த அம்மையாரின் கணவர் சதாசிவந்தான் பார்ப்பனர் என்பதே உண்மை.

இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், சீர்காழி கோவிந்தராஜன் போன்றவர்கள் இசையில் எப்படிப்பட்ட வல்லுநர்கள்!. அவர்களை மறைப்பது மோசடியல்லவா?
திருவையாற்றில் தொடக்கத்தில் தேவதாசிகள்தான் பாடுவர். பெங்களூர் நாகரத்தினம் அம்மாள் என்ற தேவதாசிப் பெண்தான் திருவையாற்றில் மண்டபம்
எழுப்பியவர். இவர் நடத்திய இசைக் கச்சேரிதான் திருவையாற்று வரலாற்றில் மிகச் சிறந்தது.

பார்ப்பனர்கள் இசை, நாட்டியம் செய்ய உரிமையாளர்களா?
தமிழிசையைத் திருடி உருவாக்கப்பட்டதே கர்நாடக இசை. இதை அப்பிரகாம் பண்டிதர் நிறுவியிருக்கிறார்.
இசைக்கல்லூரி வந்த பின்…

எல்லா ஜாதியினரும் கற்றுக்கொள்கின்றனர். ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்கு இதில் ஆர்வம் இல்லையென்று சொல்லப்பட்டுவந்த பொய், வாதம் இதன்மூலம் தகர்க்கப்பட்டது.

ஒடுக்கப்பட்டவர்கள் கற்றுக்கொள்ளும்போது உயர்ஜாதிக்கு வீட்டில் ஒத்துழைப்பும், சூழலும் இருக்கும். ஆனால், ஒடுக்கப்பட்டோருக்குச் சூழல்
இல்லை. இது சில தலைமுறைக்குப்பின்தான் சாத்தியம்.
இசைத்துறைக்கு வரும் ஒருவரின் திறமையை ஆர்வத்தைப் பார்க்காமல், அவன் என்ன ஊர், என்ன ஜாதி போன்றவையே பலரால் பார்க்கப்படுகிறது. இந்த அவலம் அகற்றப்படவேண்டும்.

அக்காலத்தில், இக்காலத்தில் எல்லோருக்கும் சாத்தியப்படுகிறது. அன்றைக்கு இசைத்துறையில் ஆதிக்கம் செலுத்தியவர்களுக்கு இது கசப்பைத் தருகிறது.
ஜாதி மத வன்முறையாளர்கள் யார்?

கணவன் இறந்தால் அவன் மனைவியை அவன் எரியும் நெருப்பிலே எரிக்கவேண்டும். அது குற்றமல்ல என்று கூறிய காஞ்சிப் பெரியவாள் மானுட எதிரியா? சமுதாயக் குற்றவாளியா?

பெண்ணுரிமைக்கு, பெண்ணின் மறுவாழ்விற்கு வாழ்நாளெல்லாம் பாடுபட்ட பெரியார் வன்முறையாளரா? குற்றவாளியா?
8000 சமணர்களைக் கழுவிலேற்றித் துடிக்கத் துடிக்கக் கொல்லச் செய்த ஈவு இரக்கமற்ற படுகொலை பாதகர் திருஞான சம்பந்தரைப் பாடலாம், மனித நேயத்தின் மறுவடிவான பெரியாரைப் பாடக் கூடாதா?
இதுதான் உங்கள் நீதியா? அறமா?

சரித்திரம் மாறும்; உங்கள் சாம்ராஜ்யம் தகரும்! எச்சரிக்கை! l