அறிவுலக மேதை அம்பேத்கர் ! – தந்தை பெரியார்

2024 ஏப்ரல் 1-15, 2024

காலஞ்சென்ற அறிவுலக மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 74ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு அளித்த இந்த விழாக் குழுவினர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இந்த விழா மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற வேண்டிய விழாவாகும். தாழ்த்தப்பட்ட மக்கள் நலச் சங்கத்தினர் மட்டும் அல்லாமல் எல்லா மக்களாலும் கொண்டாடப்பட வேண்டிய விழாவாகும். இந்த விழாவிற்கு மக்கள் ஏராளமாகக் கூட வேண்டும். அம்பேத்கர் தொண்டின் பெருமையை எடுத்துக் கூற வேண்டும். அவரால் நாம் அடைந்துள்ள நன்மைகளை எண்ணிப் பார்க்க வேண்டும்.

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மக்களுக்குமாகப் பாடுபட்டவர் ஆவார். டாக்டர் அம்பேத்கர் படத்தைத் திறக்கப் பணித்தீர்கள். திறந்துவைத்தேன். இங்கு மட்டும் அல்ல – டெல்லி, பம்பாய் போன்ற இடங்களிலும் திறந்து வைத்து உள்ளேன். டாக்டர் அம்பேத்கர் 1891இல் பிறந்தார். அவர் உயர்ந்த பட்டதாரி. மேல் நாடுகளுக்குச் சென்று படித்த மேதை. மத்திய அரசாங்கத்திலும் மந்திரியாக இருந்தவர்.

இந்தப் பெருமை எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் அவருடைய திறமை, சொந்த இயற்கைப் பெருமை மிக மிக அதிகம். இந்தியாவிலேயே மிகவும் துணிவு கொண்ட மனிதர் அம்பேத்கர் ஆவார். சமுதாயத் துறையில் இவரைப்போன்ற துணிவுடைய மற்றவரைக் கூற முடியாது. தமது கருத்தை எடுத்துக் கூறுவதில் எதிரிகள் பலம், மற்ற மற்ற எதிர்ப்பு ஆகியவைகளுக்கு அஞ்சமாட்டார்.

அவரை நான் இந்தியாவின் பெர்னார்ட்ஷா என்றே கூறுவது உண்டு. பெர்னார்ட்ஷா அறிவுத் தெளிவு உடையவர்.
எந்த விஷயத்தையும் யாருக்கும் பயப்படாமல் பட்டென்று கூறுபவர். அவர் போன்றவர்தான்
நமது அம்பேத்கர். அவர் இந்து மதத்தை ஒத்துக்கொள்ளவில்லை.இந்து மதத்தை ஒத்துக்கொண்டு சமுதாயச் சீர்திருத்தம் செய்வது என்பது பித்தலாட்டமான காரியம் என்று கூறியவர்.

காந்தியாரை எதிர்த்துக் கண்டித்தவர் அம்பேத்கர் ஆவார். காந்தியால் நாட்டில் சீர்திருத்தமோ, நன்மையோ
ஏற்படாது. காந்திக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவர் எங்கள் பிரதிநிதியும் அல்ல என்று கூறியவர் ஆவார்.
வெள்ளைக்காரன் இந்தியர்களின் குறைகளை எடுத்துக்கூற பலரை அழைத்து இருந்தான். அதில் காந்தியார், நான் இந்திய மக்களின் பிரதிநிதியாகப் பேசுகின்றேன் என்று ஆரம்பித்தார். உடனே அம்பேத்கர், காந்தியார் இந்துக்களுக்குப் பிரதிநிதியே ஒழிய, தாழ்த்தப்பட்ட மக்களுக்குப் பிரதிநிதி அல்ல; நாங்கள் இந்துக்களும் அல்ல என்றார்.

காந்தி அம்பேத்கர் கூறியதை அலட்சியம் செய்வது போல மேலும் பேசத் தொடங்கினார். அம்பேத்கர் அவர்கள், நீங்கள் எங்களுக்கு பிரதிநிதி அல்ல என்று நான் கூறுகிறேன். நான்தான் பிரதிநிதி என்று மீண்டும் காந்தியார் கூறுகின்றாரே! கொஞ்சமாவது வெட்கம் வேண்டாமா? என்று கேட்டார். காந்தியாரும் சிரித்துக்கொண்டே அமர்ந்துவிட்டார். வெள்ளைக்காரரும் அம்பேத்கரையே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாகப் பாவித்து விசாரித்தார்கள்.
இந்தியா திரும்பியதும் இந்த நாட்டுப் பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாம் அம்பேத்கரைக் கண்டித்தார்கள். அதற்கு அவர் பயப்படவில்லை. அம்பேத்கர், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இந்துக்களுக்கும் சம்பந்தம் இல்லை. தேர்தல் போன்றவற்றில் தனித்தொகுதி வேண்டும்; தாழ்த்தப்பட்ட மக்கள்தான் நிற்கவேண்டும்; தாழ்த்தப்பட்ட மக்கள்தான் ஓட்டுச் செய்ய வேண்டும் என்று வாதாடி தனித்தொகுதியும் பெற்றுவிட்டார்.
காந்தியார் இதனை ஒழிக்கவேண்டும் என்றும் தனித்தொகுதி முறை ஒழியும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்று கூறி பட்டினி கிடந்தார். நான்

அம்பேத்கருக்குத் தந்தி கொடுத்தேன். காந்தி பட்டினி கிடக்கின்றார். இறந்துவிடுவாரோ என்று நீங்கள் பயந்து ஒரு பெரும் சமுதாயத்
துக்கே நன்மையான காரியத்தில் இருந்து பின்வாங்கிவிடாதீர்கள் என்று. இவ்விதம் பலத்த முயற்சி செய்து வகுப்புரிமை பெறவேண்டியதாயிற்று.
அம்பேத்கர் அவர்கள் முயற்சியால் தாழ்த்தப்பட்ட மக்கள் அவர்கள் விகிதாச்சார எண்ணிக்கைப்படி 100க்கு 16 ஸ்தானங்கள் கிடைக்கச் செய்தவர் ஆவார். அம்பேத்கர் இல்லாது இருந்தால் இந்த அளவு கண்டிப்பாய்க் கிடைத்து இருக்காது. வேறு யாராலும் இந்த அளவு போராடிப் பெற்று இருக்க முடியாது. அம்பேத்கர் இன்று இருந்தால் இன்னும் பெரிய மாறுதல்கள் எல்லாம் செய்து இருப்பார்.

நாம் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் என்ன என்ன செய்கின்றோமோ அவற்றை எல்லாம் வடநாட்டில் செய்தவர் ஆவார்.
வடநாட்டில் மாநாடு போட்டு இராமாயணத்தைக் கொளுத்தினார். சென்னைக்கு மந்திரியாக இருக்கும் போது வந்தார். கீதை என்பது முட்டாள்களுடைய உளறல் என்று கூறியவர் ஆவார். காந்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்ன சாதித்தார்? என்பது பற்றி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதில், காந்தியார் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை. அவரது தீண்டாமை ஒழிப்பு என்பது பித்தலாட்டம். ஜாதி அமைப்பை நிலைநிறுத்தவே இப்படிச் செய்கின்றார் என்று கூறியுள்ளார்.

காந்தியார் தீண்டாமை ஒழிப்புக்காக ஒரு கமிட்டி போட்டு இருந்தார். அதில் இருந்த இரண்டொருவர் தீண்டாமைக்கு மதம் தான் காரணம். மதம் ஒழிந்தால் ஒழிய தீண்டாமை ஒழியாது என்று கூறினார்கள். இது கேள்விப்பட்டு காந்தியார், தீண்டாமைக்கும் மதத்துக்கும் சம்பந்தம் இல்லை. தீண்டாமை ஒழிப்புப் பிரச்சாரம் செய்பவர்கள் மதத்தைத் தாக்கக் கூடாது என்று அறிக்கை வெளியிடலானார்.

இந்த அறிக்கையினை எல்லாம் அந்தப் புத்தகத்தில் அம்பேத்கர் எடுத்துப் போட்டு உள்ளார்.

அரசியல் சட்டம் எழுதிய குழுவுக்குத் தலைவராக இருந்தவர் அம்பேத்கர். அந்தச் சட்டத்தில் பல குறைபாடுகள் – கேடுகள் எல்லாம் உள்ளது. இதுபற்றி என்னிடம் கூறியபோது நான் தலைவனாக இருந்தேனே ஒழிய, பார்ப்பனர்கள் தான் மெஜாரிட்டியாக இருந்தார்கள். ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால், நான் கேடான இடங்களில் எல்லாம் எனது அபிப்பிராயம் அதாவது மறுப்பு எழுதி இருக்கிறேன் என்று கூறினார்.

அரசியல் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கிறது என்று கூறி நமது இயக்கத்தினர் போராட்டம் நடத்தி இங்கு அதற்குத் தீவைத்து, சிறைக்குச் சென்றோம்.
இவற்றை எல்லாம் கேள்விப்பட்டு அவர் கூறினார்- அரசியல் சட்டத்தை நான்தான் எழுதினேன் என்று கூறுகிறார்கள். நான்தான் எழுதினேன் அதனைக் கொளுத்த வேண்டுமானால் நானே முதல் ஆளாக இருந்து கொளுத்துவேன் என்று கூறினார். மற்றும் அரசியல் சட்டத்திற்குக் கீழ்ப்படிகி்றேன். ஆனால், அதனை மதிக்கமாட்டேன் என்று கூறியவர் ஆவார்.

ஒரு சமயம் அம்பேத்கர் ஒரு அறிக்கை வெளியிட்டார். நான் சாகின்ற போது இந்துவாகச் சாக மாட்டேன். முஸ்லிம் மதத்தில் சேரப்போகின்றேன் என்று கூறி இருந்தார். இது கண்டு காந்தி, மாளவியா போன்றவர்கள் எல்லாம் எப்படியாவது அவர் முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்று பாடுபட்டார்கள்.
உங்களுக்கு இன்று பொதுவாழ்வில் அரசியல் என்கின்ற உணர்ச்சி இருக்க வேண்டியதில்லை. இரண்டாவது, டாக்டர் அம்பேத்கர் அவர்களால் உங்கள் அரசியல் தேவை முற்றுப் பெற்றுவிட்டது. இனி உங்களுக்கு இதற்கு மேலே செய்ய எவராலும் முடியாது.

(தந்தை பெரியார் அவர்கள் 2.6.1965, 11.6.1965 ஆகிய தேதிகளில் தொட்டியம், திருச்சி ஆகிய ஊர்களில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 74ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் ஆற்றிய உரை)
– ‘விடுதலை’ 26.06.1965