உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவற்றுக்கான கல்வி பற்றிய திட்ட வரையறை

2024 தொடர்கள் மார்ச் 16-31, 2024

பிப்ரவரி 16-29 இதழின் தொடர்ச்சி…

அந்நிய மொழிகளைப் படிக்கவும், பயன்படுத்தவும், பேணவுமான திட்டங்கள்

19. உலக அமைதி, மக்களாட்சி. மனித உரிமைகள் பற்றிய கல்வியின் மேம்பாட்டுக்கு எழுத்து, படிப்பு, பேச்சு ஆகியவை தொடர்பான
திட்டங்கள் சரியான அளவு வலுப்படுத்தப்பட வேண்டியது அத்தியாவசியம். தகவல் அறியவும்,
நாம் வாழும் நிலையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், தேவைகளைத் தெரியப்படுத்தவும், சமூக சுற்றுச்சூழலில் நடைபெறும் நடவடிக்கைகளில் பங்கு பெறவும் எப்படி எழுதவும், படிக்கவும், பேசவும் விரிவான பயிற்சி இருப்பது மிகவாக உதவுகிறதோ அப்படி அயல்மொழி அறிவும் மற்றப் பண்பாடுகளைப் பற்றிய ஆழமான அறிவு பெறவும் ஒரு வழியாகிறது. சமுதாயங்களிடையிலும் நாடுகளிடையிலும் நல்லவிதமான புரிந்துக்கொள்ளுதலை உருவாக்க இது அடித்தளம் அமைக்கிறது. யுனெஸ்கோவின் லிங்குவா பாக்ஸ் (மொழி மூலமாக அமைதி) திட்டம் அந்த வகையில் சிறந்ததோர் எடுத்துக்காட்டு.

கல்விக்கூடங்கள்

20. கல்வித்துறை மாற்றங்களுக்கு இயல்பான உரிய இடம் பள்ளிகளும் வகுப்பறைகளும் ஆகும். கற்பிக்கும் – கற்கும் முறைகள், நடவடிக்கை முறைகள், நிறுவனக் கொள்கைகள் ஆகியவை உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றை அன்றாட வாழ்வின் பழக்கமாக ஆக்கவேண்டும். கற்றுக் கொள்ளக்கூடிய பாடமாகவும், காட்டவேண்டும். முறைகளைப் பொறுத்தவரை, தீவிர முறைகளைப் பயன்படுத்துதலும், குழுவாக வேலை செய்தலும், தார்மீக விஷயங்களை விவாதித்தலும் நேருக்கு நேராகப் பயிற்றுவித்தலும் ஊக்குவிக்கப்படுவதற்குரியன. அதேபோல், நிறுவனக் கொள்கைகள் தளத்தில் திறமையான மேலாண்மை முறைகளும் பங்கெடுத்தலும் மக்களாட்சி பூர்வமாக பள்ளி நிருவகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஆசிரியர், பெற்றோர், மாணவர் – ஏன் ஒட்டுமொத்த சமூகமும் அதில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.

21. வெவ்வேறு நாட்டையும், வெவ்வேறு பண்பாட்டுப் பின்புலத்தையும் சேர்ந்த மாணவர், ஆசிரியர், பிற கல்வியாளர்கள் ஆகியோரிடையே நேரடியான சந்திப்புகளும் பரிமாற்றங்களும் ஊக்குவிக்கப்படவேண்டும். பரிசோதனைகளும் புதிய முயற்சிகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ள இடங்களுக்கு பிறர் சென்று பார்க்க வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் குறிப்பாக பக்கத்து நாடுகளுக்குள் நடத்தப்படுவது நன்று. பொதுவான சிக்கல்களைத் தவிர்ப்பது குறித்து வெவ்வேறு நாட்டு நிறுவனங்களுக்கு இடையிலும் கல்விக்கூடங்களுக்கு இடையிலும் இணைந்து பணி செய்யும் திட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். நோக்கத்தில் ஒன்றுபடும் பள்ளிச் சிறார், மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்களின் இணையங்களைச் சர்வதேச அளவில் உண்டாக்க வேண்டும். அத்தகைய இணையங்களில் பாதுகாப்பின்மைக்கோ, தீவிர வறுமைக்கோ ஆளான பள்ளிகள் இடம்பெற முன்னுரிமை காட்டப்படவேண்டும். இதனை நெஞ்சிலிருத்தி யுனெஸ்கோவின் இணைக்கப்பட்ட பள்ளிகள் அமைப்பினை வலுப்படுத்துவதும் மேம்படுத்துவதும் அவசியமாகும். இந்தவித நடவடிக்கைகள் யாவும் ஒருங்கிணைந்த கல்வித்திட்டங்களின் பகுதியாக இருக்கிற வசதிக்குத் தக்கவாறு துவக்கப்பட வேண்டும்.

22. தேறாதவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். எனவே, தனியொரு மாணவனின் சக்திக்கேற்ப கல்வி நீக்கப்போக்குடன் கூடியிருக்க வேண்டும். தன்னம்பிக்கை வளர்ச்சியிலும் கல்வியிலும் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற உறுதியினை வலுப்படுத்தலும் சமூக ஒருமைப்பாட்டினை அடைவதில் கணிசமான முறையில் அடிப்படைத் தேவைகளாய் உள்ளன. பள்ளிகட்கு அதிக சுயாட்சி என்னும்போது, கல்வியின் வெற்றிக்கு சமுதாயமும் ஆசிரியர்களும் அதிகப்படி பெறுப்பேற்க வேண்டும் என்பதும் உட்பொருளாய் விளங்குகிறது. கல்வி அமைப்புகளின் மேம்பாட்டு அளவுகளுக்கிடையில் வேறுபாடு இருப்பதால் அதை வைத்தே சுயாட்சியின் அளவு நிர்ணயிக்கப்பட வேண்டும். இல்லையேல் கல்வியின் உள்ளடக்கம் பலவீனமடைய நேரிடலாம்.

ஆசிரியர் பயிற்சி

23. ஆசிரியர், நிர்வாகியர், திட்டமிடுவோர், ஆசிரியப் பயிற்சியாளர்கள் என்று கல்வியமைப்பின் எல்லாத்தளத்தில் பணிபுரிகின்றவர்களுக்கும் தரப்படும் பயிற்சிகளில் சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியன பற்றிய கல்வியும் இடம்பெறவேண்டும். அத்தகைய பணிக்கு முந்தைய, பணியில் பொதித்த பயிற்சிகள், மறு பயிற்சிகள் ஆகியவை நிகழிடத்தில் உள்ள முறைகள், சோதனைகளைக் கவனித்தல், பயன்களை மறு மதிப்பீடு செய்தல் ஆகியவற்றை அறிமுகம் செய்து நடத்திப் பார்க்க வேண்டும். தமது பணிகளைச் செவ்வனே முடிக்க பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், முறை சாராக் கல்வித்திட்டங்களின் பொறுப்பாளர்கள் ஆகியோர், சமாதானம், மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றில் அனுபவம் உள்ளவர்கள் (அரசியல்வாதிகள், சட்டத்துறையினர், சமூக இயல்/மன இயல் அறிஞர்கள் ஆகியோர்) உதவியையும் மனித உரிமைப் பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வரும் அரசுசாரா அமைப்புகளின் உதவியையும் நாடவேண்டும். எல்லாவித கற்பிப்போர்களுக்கான பயிற்சிகளிலும் ஒரு பகுதியாக மனித சக்திப் பரிமாற்றங்களும் கற்பிக்கும் கலையும் இடம்பெறவேண்டும்.

24. ஆசிரியப் பணியை மேம்படுத்திக்கொள்ளும் விரிவானக் கொள்கையில் ஆசிரியர் பயிற்சி நடவடிக்கைகள் செவ்வனே பொருந்த வேண்டும். சர்வதேச மேதைகள், ஆசிரியர் சங்கங்கள், தொழில் அமைப்புகள் ஆகியோர் நடவடிக்கை முயற்சிகளை தயாரிப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஈடுபடுத்தப்பட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்களிடையிலேயே அமைதிக் கலாச்சாரத்தைப் பரப்புவதில் அவர்களுக்கெல்லாம் முக்கியப் பங்கு இருக்கிறது.
பலவீனமான பகுதியினருக்கான நடவடிக்கைகள்

25. பலவீனமான பகுதியினர், அண்மையில் பூசல்களுக்கு இடையில் வாழ நேர்ந்தோர், போர்சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டோர் ஆகியோருக்கு உடனடியாக சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயத்தேவை. விளிம்பில் வாழும் குழந்தைகளும் பால்முறை வன்முறைக்கோ பிற வன்முறைக்கோ ஆளான மகளிர்- சிறுமியர் ஆகியோருக்கும் சிறப்புக் கவனம் அத்தியாவசியம். கல்வியாளர்களுக்கும், போரிடும் குழுக்களைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள், செய்தியாளர்கள் ஆகியோருக்காக பூசல்களங்களுக்கு வெளியே பயிற்சிப் பட்டறைகளும் சிறப்பு மையங்களும் அமைத்தல், போருக்குப் பிந்தைய சூழ்நிலையில் கல்வியாளருக்கு சிறப்புப் பயிற்சி தருதல் ஆகியவற்றை நடைமுறையில் இயலக்கூடிய நடவடிக்கைகளுக்கு உதாரணங்களாகக் கூறலாம். இயன்ற இடமெல்லாம் இத்தகு முயற்சிகளை அரசாங்கக் கூட்டுறவுடன் மேற்கொள்ளல் நலம்.

26. கைவிடப்பட்ட குழந்தைகள், வீதிகளில் உள்ள குழந்தைகள், புலம் பெயர்ந்த குழந்தைகள், பொருளாதார ரீதியாகவோ பால் அடிப்படையிலோ வஞ்சிக்கப்பட்ட குழந்தைகள், குழந்தை அகதிகள் முதலியவர்களுக்காக கல்வித்திட்டங்கள் ஏற்படுத்தி செயல்படுதல் அவசரத் தேவையாகும்.

27. சுற்றுச் சூழல் பாதுகாப்பிலும், ஒருங்கிணைவு நடவடிக்கைகளிலும் குழந்தைகளும் இளைஞர்களும் பங்கு பெறுவதை வலியுறுத்தும் இளைஞர்களுக்கான சிறப்புத் திட்டங்களை ஏற்பாடு செய்வதும் அதே அளவுக்கு அவசரமானதாகும்.

28. மேலும், கல்வி பயில்வதில் சிரமங்கள் கொண்டோர் (இது மனவளர்ச்சி குன்றியவர்களைக் குறிக்கலாம்)களின் வித்தியாசமான தேவைகள் குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திவிடாமல், ஒருங்கிணைந்த கல்விச் சூழலிலேயே அவர்களுக் குரிய வகையான கல்வியை அளிப்பதன்மூலம் இதனைச் செய்யலாம்.

29. அத்தோடுகூட சமூகத்தின் பல்வேறு குழுவினர்க்கு இடையிலும் நல்லுணர்வை ஏற்படுத்தும் வகையில் தேசிய கலாச்சார இன-சமய மொழி சார்ந்த சிறுபான்மையினர், ஆதிகுடிகள் ஆகியோரின் கல்வி உரிமைகளுக்கும் மரியாதை இருக்கவேண்டும். பாடத்திட்டம், கற்பிக்கும் முறைகள், கல்வி வசதி ஏற்படுத்தப்படும் விதம் ஆகியவற்றில் இந்த அக்கறையும் எதிரொலிக்க வேண்டும்.
ஆராய்ச்சியும் மேம்பாடும்

30. சிக்கல்கள் புதியனவாயிருக்கும்போது தீர்வுகளும் புதிதாய்க் காண வேண்டியிருக்கிறது. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமை ஆகியவை பற்றிய கல்வியின் சிக்கலான இயல்பைப் பயனுள்ள முறையிலும் அதற்கேற்ற முறையிலும் எதிர்கொள்வதற்கு ஆராய்ச்சி முடிவுகளை இன்னும் நன்றாகப் பயன்படுத்துவதற்கான உத்திகளைக் கண்டாக வேண்டும். புதிய கற்பிப்பு முறைகளையும், புது அணுகல் நெறிகளையும் வளர்த்தெடுக்க வேண்டும். சமூகப் பாடங்களில் ஆய்வு செய்யும் நிறுவனங்கள், கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆகியவற்றிடையே ஆய்வுக்கான விஷயங்களைத் தெரிந்தெடுப்பதில் ஒருங்கிணைப்பை அதிகப்படுத்த வேண்டும். கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள அனைவரும் (அரசாங்கம், பெற்றோர், ஆசிரியர், இன்ன பிறர்) ‘முடிவெடுத்தல்’ குறித்த ஆய்வுகள் நிகழ்த்தி அதன்மூலம் கல்வி நிருவாகம் பயனுள்ள முறையில் நடப்பதை மேம்படுத்த வேண்டும். மனித உரிமைகள் அதிலும் மகளிர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை பற்றி மனிதர்களின் அணுகுமுறையை மாற்றுவதற்கான புதிய வழிகளைக் காணுவது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் முடிவுகளை அளந்து அறிவிக்கும் காரணிகளையும் அமைப்பையும் உருவாக்குதல்,
அ. புதுமையான பரிசோதனைகள் குறித்து விபர வங்கிகள் அமைத்தல்,
ஆ. ஆராய்ச்சி முடிவுகளையும் பிற தகவல்களையும் பரப்பவும், பகிர்ந்து கொள்ளவும் ஏற்பாடுகளை வலுப்படுத்துதல் ஆகியவை மூலம் கல்வித் திட்டங்களின் பலாபலன்களை நன்றாக அனுமானிக்கலாம்.

உயர்கல்வி

31. உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவை பற்றிய கல்வியில் உயர்கல்வி நிறுவனங்கள் பல வழிகளில் பங்களிக்கலாம். இந்தத் துறையில், உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் நியாயம், தொழில் நியாயங்கள், குடிமைக் கடப்பாடுகள், சமூகப்பொறுப்பு ஆகியவற்றுடன் தொடர்புள்ள திறமைகள், மதிப்பீடுகள், அறிவு ஆகியவற்றை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வழிவகைகள் செய்யப்படவேண்டும். உலகமே நெருங்கி வரும் சூழ்நிலையில் அரசுகள் ஒன்றையொன்று மேன்மேலும் சார்ந்திருப்பதை மாணவர்கள் உணர்வதையும் உயர்கல்வி நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
கல்வித் துறைக்கும் பிற சமூக இயல் ஊக்கிகளுக்கும் ஒருங்கிணைப்பு

32. குடிகளின் கல்விக்குக் கல்வித்துறை மட்டுமே முழுதும் பொறுப்பல்ல. அது இப்பணியினைப் பயனுள்ள முறையில் செய்வதற்கு, குறிப்பாக குடும்பம், மரபுசார் தகவல் அமைப்புகள் உள்ளிட்ட தகவல் ஊடகங்கள், தொழில்துறை, அரசு சாரா அமைப்புகள் ஆகியவற்றுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்ற வேண்டும்.

33. பள்ளிக்கும் குடும்பத்துக்குமிடையே ஒருங்கிணைவுக்கு, பள்ளி செயல்பாடுகளில் பெற்றோர் பங்கெடுப்பதை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அத்துடன், வயதுற்றோருக்கும் பொதுவாக ஊரார் அனைவருக்கும் கல்வி வழங்கும் திட்டங்களை வரைந்து செயலாக்குவதும் பள்ளியின் பணியை வலுப்படுத்துவதற்கான அவசியத் தேவையாகும்.

34. குழந்தைகளையும் இளைஞர்களையும் சமூக அங்கமாக ஒருங்கிணைப்பதில் செய்தி ஊடகங்களின் தாக்கத்தை அனைவரும் ஒப்புக்கொள்வது வளர்ந்து வருகிறது. எனவே, விமர்சனக் கண்ணோடு ஊடகங்களின் பணியை அலசவும் அவற்றால் பயனடையவும் ஆசிரியர்களுக்குப் பயிற்சி தருவதும் மாணவர்களை ஆயத்தப்படுத்துவதும் அவசியமாகிறது. இதற்கும் இவ்வூடகங்களினால் பயனடைவதில் திறமையை வளர்த்துவிடவும் சில தெரிந்தெடுத்த திட்டங்கள் தேவைப்படுகின்றன. அதேசமயம், குறிப்பாக வெறுப்பையும், வன்முறையையும், கொடுமையையும், மனித கவுரவத்துக்கெதிரான அவமரியாதையையும் தூண்டக்கூடிய நிகழ்ச்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் அமைதி, மனித உரிமைக்கு மரியாதை தருதல், மக்களாட்சி, சகிப்புத்தன்மை முதலிய மாண்புகளை வளர்க்குமாறு இவ்வூடகங்களையும் வலியுறுத்தவேண்டும்.

இளைஞர்களுக்கும் பெரியோர்களுக்கும் முறைசாராக் கல்வி

35. மனித உரிமைகள், மக்களாட்சி, உலக அமைதி ஆகியவற்றைக் கற்பிப்பதில், பள்ளிக்கு வெளியே நீண்ட நேரம் செலவிடுவோர், முறையான கல்விக்கான வாய்ப்பற்றோர், தொழில்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பற்றோர், பட்டாளத்தில் உள்ளோர் ஆகியோர் சரியான இலக்காக அமைவர். முறையான கல்விக்கும் தொழிற்பயிற்சிக்கும் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் இவர்களுக்கு, முறைசாராக்கல்வி மூலம் பயனடைவது ஏற்புடையது. அவர்களது தேவைகளுக்கேற்ப உருவமைக்கப்படுமானால், முறைசாராக் கல்வியே அவர்கள் பொறுப்புள்ள
வர்களாக, பயனுள்ள வகையில் குடிமக்கள் என்ற தளத்தில் தம் கடமைகளை ஆற்ற ஆயத்தப்படுத்திவிடும்.
உலக அமைதி, மனித உரிமைகள், சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றை சிறைகள், சீர்திருத்தப்பள்ளிகள், சிகிச்சையகங்களில் உள்ள சிறுவர் சிறுமியர்க்கும் கற்றுத்தர வேண்டும்.

36. அரசு சாரா அமைப்புகள் சிறப்பாகப் பங்களிக்கக்கூடியதான முதியோர் கல்வித் திட்டங்கள் உள்ளூர் வாழ்க்கை நிலைமைக்கும் உலகப் பிரச்சினைகளுக்கும் உள்ள சங்கிலியை அனைவரும் உணரச் செய்ய வேண்டும். உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய பாடங்களுக்கு அடிப்படைக் கல்வித் திட்டங்கள் குறிப்பான முக்கியத்துவமளிக்க வேண்டும். நாடோடிக் கதைகள், நாடகங்கள், சமூக விவாத அரங்குகள், வானொலி போன்ற பொருத்தமான கலை வடிவங்கள் யாவும் விரிவான அளவிலான ‘மக்கள் கல்வி’க்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

வட்டார அளவிலும் நாடுகளுக் கிடையிலும் ஒத்துழைப்பு

37. சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் வளர்த்தெடுப்பதற்கு, வட்டார ஒத்துழைப்பு, சர்வதேச ஒற்றுமை, சர்வதேச அமைப்புகள் – அரசாங்கம் – அரசுசாரா அமைப்புகள் அறிவியலார் உலகம், வணிகர் வட்டம், தொழில்துறை, தகவல் ஊடகங்கள் ஆகியவைகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் ஆகியன தேவைப்படுகின்றன. இந்த ஒன்றுகூடலும் ஒத்துழைப்பும் வளரும் நாடுகள் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றைக் கற்பிப்பதை வளர்ப்பதற்கான தேவையை நிறைவு செய்துகொள்ள உதவ வேண்டும்.

38. இந்த நடவடிக்கைத் திட்ட வரையறைக்கு செயல்வடிவம் தரும் முயற்சிகளுக்கு உதவியாக யுனெஸ்கோ தனது நிறுவன ரீதியான திறமைகளைத் தந்துதவ வேண்டும். குறிப்பாக, வட்டார அளவிலும் உலகளவிலுமான தனது புதுமைகள் இணையத்தை இப்பணிக்குப் பயன்படுத்தச் செய்ய வேண்டும். ‘இணைத்துக் கொள்ளப்பட்ட பள்ளிகள் திட்டம்’ யுனெஸ்கோ சங்கங்கள், யுனெஸ்கோ மன்றங்கள், யுனெஸ்கோ கல்வி நிலையங்களுக்கான ஆய்வுரை, அறக்கட்டளை ஏற்பாடுகள், ஆப்பிரிக்கா – ஆசியா பசிபிக் – லத்தீன் அமெரிக்கா – கரீபியன்- அரபுநாடுகள்- அய்ரோப்பா ஆகிய இடங்களுக்கான பெரிய கல்வித்திட்டங்கள், ஜமேதியன் உலக மாநாட்டையடுத்த தொடர் நடவடிக்கைகளுக்கான அமைப்புகள்- குறிப்பாக, கல்வி அமைச்சர்களின் வட்டார மாநாடுகள், உலகளாவிய மாநாடுகள் ஆகியவை குறிப்பான பங்களிப்பு செலுத்த வேண்டும். இம்முயற்சிகளில் – குறிப்பாக தேசிய அளவில் – அந்தந்த நாட்டிலுள்ள யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையங்கள் உத்தேச நடவடிக்கைகளின் பயனுறுத்தன்மையை வளர்க்க ஒரு பெரும் அருட்கொடையாக அமைய வேண்டும்.

39. வட்டார அளவிலும், உலகளவிலும் நிகழவிருக்கும் உச்சநிலைக் கூட்டங்களில் இந்தத் திட்டவரையறையைப் பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை யுனெஸ்கோ எழுப்ப வேண்டும்; கல்வியாளர்களின் பயிற்சிக்கான திட்டங்களை வரைய வேண்டும்; நிறுவனங்களின் இணையங்களை உருவாக்க வேண்டும் – வலுப்படுத்த வேண்டும்; கல்வித்திட்டங்கள், முறைகள், கருவிகள் பற்றியெல்லாம் ஒப்பீட்டுமுறை ஆராய்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். உலக அமைதி, மனித உரிமைகள், மக்களாட்சி ஆகியவை பற்றிய கல்வி மீதான பிரகடனத்தில் பேசப்பெறும் கடப்பாடுகளுக்கு ஏற்ப திட்டங்கள் முறையாக கால ஒழுங்குப்படி மதிப்பீடு செய்யப்படவும் வேண்டும்.

40. உலகளாவிய நடவடிக்கைத் திட்டமொன்றை உருவாக்க வசதியாயும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கான முன்னுரிமை வேலைகளை முடிவு செய்ய வசதியாகவும் இந்தத் துறையிலும் அய்.நா.வின் ‘உலக அமைதிக்கான செயல்நிரல்’, ‘மேம்பாட்டுக்கான செயல் நிரல்’, ‘செயல் நிரல்-21’, ‘’, ‘மகளிர் பற்றிய நான்காவது உலக மாநாடு’ ஆகியவற்றின் வரிசையில் அய்.நா. சார்ந்த மற்ற நிறுவனங்களின் உதவியுடனும் பிற வட்டார சர்வதேசசமூக உச்ச மாநாடு நிறுவனங்களின் உதவியுடனும் இந்தச் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்ப முயற்சிகளைத் துவக்க வேண்டும். அவற்றில் உலக அமைதி, மக்களாட்சி, மனித உரிமைகள் பற்றிய கல்விக்கான பன்னாட்டுக் கூட்டுறவுக்காக யுனெஸ்கோ மேலாண்மையின்கீழ் ஒரு நிதியம் அமைக்கலாம்.

41. இந்தச் செயல்திட்ட வரையறையை நடைமுறைப்படுத்துவதில் தேசிய அளவிலான அரசுசாரா அமைப்புகளும் உலகளாவிய அரசுசாரா அமைப்புகளும் தீவிரமாக பங்கெடுப்பது ஊக்குவிக்கப்படவேண்டும். n