பக்தி மாயை – ஆறு. கலைச்செல்வன்

2024 சிறுகதை மார்ச் 16-31, 2024

“முப்போகம் விளையும் நிலங்களையெல்லாம் அழித்துவிட்டு தொழிற்சாலை கட்டுவதா? கூடவே கூடாது. இதை ஒரு போதும் நாம் அனுமதிக்க மாட்டோம். மக்களே! இது நம் மண். இதை நாம் விட்டுக் கொடுக்கக்கூடாது. அரசு கட்ட நினைக்கும் தொழிற்பேட்டையை நாம் அனுமதித்தால் இந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே குடியிருக்க முடியாது. அதிலிருந்து வெளியேறும் வாயு நம் நுரையீரலைப் பாதித்து சுவாசக் கோளாறுகளை உண்டு பண்ணும். பூமி கெட்டு நிலத்தடி நீர் மாசுபடும். இதனால் நஞ்சு கலந்த நீரை நாம் குடிக்க நேரிடும். அதனால் தொற்று நோய்கள் ஏற்பட்டு சாகவும் நேரிடும். ஆகவே அரசின் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை நாம் முறியடிக்க வேண்டும். நம் மூச்சு இருக்கும்வரை ஒரு பிடி மண்ணைக்கூட நாம் இழக்கக்கூடாது.”

ஒலிபெருக்கியைக் கையில் பிடித்த இளவரசனின் பேச்சு சரவெடியென வெடித்தது. அவன் வாயிலிருந்து புறப்பட்ட ஒவ்வொரு சொல்லும் கூடியிருந்த மக்களின் நாடி நரம்புகளில் பட்டுத் தெறித்து அவற்றை முறுக்கேற்றின. இரத்தம் சூடேறி, கேட்கும் அனைவர் உள்ளங்களிலும் உணர்ச்சித் தீயானது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அவன் மேலும் தொடர்ந்தான்.

“நாம் எல்லோரும் ஓர் உறுதிமொழியை இன்று எடுத்துக்கொள்ள வேண்டும். நம்மை மீறி அரசு நம் நிலங்களை கையகப்படுத்தி பெரு முதலாளிகளிடம் ஒப்படைக்க முயன்றால் நாம் நம் உயிரையும் துச்சமென மதித்து அதைத் தடுக்கவேண்டும். சுற்றுச்சூழலைக் கெடுக்கும் எந்த ஒரு திட்டத்தையும் நாம் அனுமதிக்கக் கூடாது. நாம் அறிவிக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வேன் என்று உங்கள் கைகளை உயர்த்தி கடவுள் சாட்சியாக வாக்குறுதி கொடுங்கள்.”
இவ்வாறு இளவரசன் கேட்டதும் கூட்டத்தில் இருந்த அனைவரும் கைகளை உயர்த்தி அவன் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால், கூட்டத்தில் இருந்த அகிலன் மட்டும் எதுவும் செய்யாமல் இளவரசனையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகப் பேசுபவர்களை அவன் எப்போதும் நம்புவதில்லை.

வேதியியல் துறையில் பொறியாளராகத் தேர்ச்சி பெற்ற அகிலன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேலை தேடும் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தான். குறைந்த ஊதியத்தில் படிப்பிற்குத் தொடர்பில்லாத வேலைகளை சில காலமாகச் செய்துவந்தான்.

இப்போது அவன் வாழும் கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க அரசு முயற்சித்து வந்தது. மிகவும் பின் தங்.கிய பகுதி என்பதால் அந்தப் பகுதியை அரசு தேர்வு செய்தது. அதற்கு நூறு ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தால் வேதித் தொழிற்சாலைகள் உட்பட பல சிறுதொழில் நிறுவனங்களைத் தொடங்க தொழிலதிபர்கள் முன்வருவார்கள். அப்போது அப்பகுதியில் உள்ள படித்த பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்குத் தடையாக யாரும் இருக்கக்கூடாது என நினைத்தான் அகிலன். இவை பற்றி கலந்தாலோசிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுதான் இந்த ஊர்க்கூட்டம்,

அகிலன் தன் கருத்தைத் தெரிவித்தான்.

“இளவரசா, தொழிற்சாலைகள் வருவதைத் தடுத்தால் படித்தவர்களுக்கு எப்படி வேலை கிடைக்கும். நம் மாவட்டத்தில் இருக்கும் ஒன்றிய நிறுவனத்திலும் நமக்கு வேலை தர மறுக்கிறார்கள். எல்லா வேலைகளையும் வேறு மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு இருக்கிறார்கள். இப்போது நம் பகுதியில் தொடங்க இருக்கும் தொழிற்பேட்டை நம்ம அரசு சம்பந்தப்பட்டது. அதைப்பற்றி நாம் விவாதித்து முடிவெடுப்பது நல்லது.”
அகிலன் இவ்வாறு பேசியவுடன் படித்த இளைஞர்கள் சிலர் அவன் பேசியதை வரவேற்றனர். அவனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இதனால் இளவரசன் மிகவும் கோபமடைந்து சற்றே ஆவேசத்துடன் மீண்டும் பேசினான்.

“நீ பேசுவது எனக்கு மிகவும் வியப்பாக உள்ளது. சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். நாம் உயிரோடும் உடல் ஆரோக்கியத்தோடும் இருந்தால்தான் வேலை செய்து சம்பாதிக்க முடியும். இந்தத் தொழிற்சாலை நம் உடல்நலத்தைச் சீரழிக்கும். வாங்கப்போகும் சம்பளம் மருத்துவச் செலவுகளுக்குத்தான் சரியாக இருக்கும். அதோடு நம் கண்ணாக மதிக்கிற மண்ணை நாம் இழக்கலாமா? சுற்றுச்சூழலை அழிக்க நீ விரும்புகிறாயா? என்று காட்டமாகக் கேட்டான்.

“இளவரசா, உன்னைவிட எனக்கு சுற்றுச்சூழலில் அதிக நாட்டம் உண்டு. அதற்காக நான் உன்னை விடவும் அதிகம் உழைத்தும் இருக்கிறேன். களமாடியும் இருக்கிறேன். இப்போதுகூட நாம் இருக்கும் இடத்தைப் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. காரணம் நமக்குத் தெரியும்,” என்று அகிலன் பேசிக்கொண்டிருந்தபோது மக்கள் பார்வை புகை வந்த திசையை நோக்கிச் சென்றது. அவர்கள் பார்த்த திசையிலிருந்து கரும்புகை கிளம்பி ஊர் முழுவதும் பரவியிருந்தது. கெட்ட வாடையும் பலமாக வீசியது.

“குப்பைகளைக் கொட்டி எரிக்கிறார்கள். பக்கத்து நகரத்தில் குவியும் குப்பைகளை நம் ஊர்ப்புறம் கொட்டி எரிக்கிறார்கள். அவை பெரும்பாலும் நெகிழிப் பொருட்கள். அதிலிருந்து கிளம்பும் டயாக்சின் என்ற நச்சு வாயு நம் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போக்கி வருகிறது. இதற்கெல்லாம் யார் காரணம்? அரசு மட்டும்தான் காரணமா? நாமும் தானே காரணம்! நமக்கும் பொறுப்பு இருக்கிறதல்லவா! இது ஒருபுறம் இருந்தாலும் வேலையின்மை என்பது மற்றொரு புறம். இரண்டையும் நாம் ஒன்றாகத்தான் பாவிக்க வேண்டியுள்ளது.”

இவ்வாறு பேசிய அகிலனின் கருத்தை இளவரசன் விரும்பவில்லை.

“அகிலன், நீ தவறான பாதையில் செல்கிறாய். தொழிற்சாலை முதலாளிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறாய். அவர்களின் கைப்பாவையாக மாறிவிட்டாய் என நினைக்கிறேன்”, என்று அகிலன் மீது பகிரங்கமாகக் குற்றம்சாட்டினான் இளவரசன். அவன் கூற்றை ஊர் மக்கள் பலரும் ஒப்புக்கொள்ளவே செய்தனர். தொழிற்பேட்டை எதுவும் அமைக்கக்கூடாது என்று அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுத்தனர். முதலில் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும், பிறகு முற்றுகைப் போராட்டம், கடையடைப்புப் போராட்டம் எனப் பல்வேறு வழிகளில் போராடுவது எனவும் முடிவு செய்தார்கள்.
ஆனால் அகிலன் வேறு வகையில் சிந்திக்கலானான்.

உணர்ச்சி வசப்பட்டு போராட்டம் நடத்தினால் மக்களுக்குப் பல இழப்புகள் ஏற்படலாம் என நினைத்தான். அதற்கு முதலில் மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும், தொழிற்பேட்டை நிறுவுவதால் ஏற்படும் நன்மை, தீமை பற்றியும் புரிதலை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினான். அதற்காகக் கருத்தரங்கம் பலவற்றை நடத்த விரும்பி அதற்கான பணிகளில் ஈடுபடலானான்.

அடுத்த சில நாட்களிலேயே ஒரு திருமண மண்டபத்தில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், பொதுப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்களையும், காலநிலை மாற்றங்கள் குறித்துத் தெளிவான விளக்கங்களை அளிக்கவல்ல அறிஞர்களையும் அழைத்து வந்து பேச வைத்தான்.

அதில் கருத்துரை வழங்கிய அருள் அமுதன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் தெளிவாகப் பல கருத்துகளை எடுத்து வைத்தார்.
“வேலைவாய்ப்புகள் பெருக வேண்டும் என்பது நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதான். அதற்காக விளைநிலங்களை அழித்து அதன்மீது மக்களுக்குப் பிணிகளை உண்டாக்கும் தொழிற்சாலைகளை அமைப்பது தவறானதாகும். மக்களுக்குப் பாதுகாப்பான தொழிற்சாலைகளை நாம் வரவேற்கத்தான் வேண்டும். உதாரணமாக, இந்தப் பகுதியில் முப்பது ஆண்டுகளுக்குமுன் அரசு ஒரு கூட்டுறவு சர்க்கரை ஆலையை அமைத்தது. இதனால் இப்பகுதியில் உள்ள பல படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைத்தது. தொடக்க காலத்தில் ஆலையிலிருந்து வந்த புகையில் கரித்துகள் கலந்து ஊர் முழுவதும் பரவியது. முன்பெல்லாம் நிலக்கரியில் இயங்கிய புகைவண்டியில் நீண்டதூரம் பயணம் செய்தால் நம் உடல் முழுவதும் கரி படிந்திருக்கும். அதுபோல் சர்க்கரை ஆலையின் கரி நம் வீடு முழுவதும் பரவியிருந்தது. ஆலையின் கழிவுகளையும் ஆற்றில் திறந்துவிட்டனர். இதனால் ஆற்று நீரும் கெட்டு விட்டது. மீன்கள் செத்து மிதந்தன. ஆனால், நாம் போராடியபின் அனைத்தும் சரி செய்யப்பட்டது. இப்படி முடியும் என்ற நிலையில் உள்ள தொழிற்சாலைகளை நாம் அனுமதிப்பதில் தவறில்லை. இப்போது சர்க்கரை ஆலையால் விவசாயிகளும் இளைஞர்களும் மகிழ்ச்சியாக உள்ளதையும் நாம் மறந்துவிடலாகாது.”

இவ்வாறு அருள் அமுதன் பேசிய பிறகு அதியமான் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் பேசினார்.

“நான் பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளேன். பல நாடுகளில் ஒரு சிறு பொருள் வாங்கினாலும் அதை ஒரு நெகிழிப் பையில்தான் போட்டுத் தருவார்கள். ஆனால், அந்த நாட்டின் தெருக்களில் ஒரு சிறிய நெகிழிப் பையைக் கூட காணமுடியாது. படுசுத்தமாக இருக்கும். சிலர் கேட்கலாம், “நீங்கள் மிகச்சிறிய நாட்டிற்குச் சென்று வந்திருப்பீர்கள். அங்கு அது சாத்தியமாகி இருக்கலாம். ஆனால், நம் நாடு பெரியது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று”. ஆனால், நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கும் நான் சென்று வந்துள்ளேன். அங்கும் தெருக்களில் சிறு குப்பை, கூளங்களைக் கூட காண முடியவில்லை. காரணம், அங்கெல்லாம் மக்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். மக்கள் குப்பைத் தொட்டிகளைப் பயன்படுத்துகிறார்கள். நெகிழிப் பொருட்களை தெருவில் வீசி எறிந்தால் மழை நீர் பூமிக்கு அடியில் போகாத நிலை ஏற்பட்டு நிலத்தடி நீர் மட்டம் குறையும்.”

அடுத்து சமூக ஆர்வலர் சிவராஜ் பேசும்போது பல முக்கியமான கருத்தை எடுத்துவைத்தார். கருத்தரங்கில் கலந்துகொண்ட மக்களிடம் பல கேள்விகளைக் கேட்டு கலந்துரையாடல் செய்தார்.

முதலில், “சுற்றுச்சூழல் என்றால் என்ன?” என்ற வினாவைத் தொடுத்தார். அதற்கு அவரே விளக்கமும் கொடுத்தார்.

“மனிதன் மட்டுமல்ல, ஒவ்வொரு உயிரினமும் தான் வாழ்வதற்குரிய ஒரு சூழலை அமைத்துக்கொள்கிறது. அப்படிப் பார்க்கும்போது கணக்கற்ற உயிரியற்பியல் சூழல்கள் இருப்பதை நாம் உணரலாம். அந்தச் சூழல் கெடும்போது உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. காடுகளை அழிப்பதாலும் தொழிற்சாலைகளால் எழும் புகையால் அமிலமழை, ஓசோன் படலத்தில் ஓட்டை, பூமி வெப்பமடைதல், மக்கள் தொகைப் பெருக்கம், காற்று மாசு, ஒலி மாசு போன்றவற்றால் சுற்றுச்சூழல் கெடுகிறது. இதன்மூலம் காலநிலை மாற்றமும் ஏற்படுகிறது. பூமியின் வெப்பமும் அதிகரிக்கிறது. இதெற்கெல்லாம் காரணம் நாம் நிலக்கரி போன்ற புதை வடிவப் பொருட்களை எரிப்பதால்தான். காலநிலை மாற்றத்தால் தண்ணீர்ப்பஞ்சம், வறட்சி, காட்டுத்தீ, கடல்நீர் மட்டம் உயர்வு, பனிக்கட்டி உருகுதல், புயல், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும். இந்த நிலைமை எல்லாம் ஏற்படாமல் இருக்க முதலில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் போன்றவற்றில் நமக்கு நல்ல புரிதல் வேண்டும். எந்தெந்தத் தொழிற்சாலைகளால் நமக்குக் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதை நாம் நன்குணர்ந்து நல்ல புரிதலோடு போராட வேண்டும். தற்போது அரசு அனுமதியளித்துள்ள தொழிற்பேட்டையால் ஏற்படும் நன்மை, தீமைகளை நாம் ஆராய்ந்து முடிவு செய்ய வேண்டும்,“ என்று பேசினார்.

மற்றும் பல வல்லுநர்கள் பேசியபின் அகிலன் பேசினான்.
“இது தொடக்கம்தான். இன்னும் பல செயல்பாடுகள் பாக்கி இருக்கின்றன. அடுத்த கருத்தரங்கில் இன்னும் நாம் தெளிவாகப் பேசி முடிவெடுப்போம். உண்மையிலேயே இந்தத் தொழிற்பேட்டையால் நமக்குத் தீமை இல்லையென்று தெரிந்தால் நம் நிலங்களுக்குத் தேவையான இழப்பீடுகளை நாம் பெற்றாக வேண்டும். நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கேட்க வேண்டும். அதுவரை நாம் அமைதி காக்க வேண்டும். உணர்ச்சிகளுக்கு அடிமையாகிவிடக்கூடாது,” என்று பேசி முடித்தான்.

அடுத்த சில நாட்களுக்கு இந்தக் கிராமம் மட்டுமல்லாமல் நகர்ப்புறங்களிலும் இந்தக் கருத்தரங்கம் பற்றிய பேச்சாகவே இருந்தது. பலரும் அரசு திட்டமிடும் இந்தத் தொழிற்பேட்டையால் ஏற்படும் நன்மை, தீமை பற்றிப் பேசத் தொடங்கினர்.

ஆனால், இந்த நிலை சில நாட்களுக்கே நீடித்தது. பக்கத்து நகரத்தில் தேர்த் திருவிழாவிற்காகக் கொடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் கவனம் முழுவதும் தேரோட்டம் பக்கம் திரும்பியது. நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்துப் போராட்டம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது. மக்கள் அதைப்பற்றி துளியும் கவலைப்படாமல் பக்திப் போதையில் மூழ்கி தேர்த் திருவிழா பற்றியே பேச ஆரம்பித்துவிட்டார்கள். இளவரசனும் அதில் தீவிரமாக ஈடுபட்டு ஊர் மக்கள் பலரையும் தேர்த் திருவிழாவிற்கு அழைத்துச்செல்ல வேண்டுமென நினைத்து அதற்கான செயல்பாடுகளில் தீவிரம் காட்ட ஆரம்பித்தான்.
ஆனால், அகிலனுக்கு சுத்தமாக இவை பிடிக்கவில்லை. அடுத்த கருத்தரங்கம், விழிப்புணர்வுப் பரப்புரை ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்ய முயன்ற அவனது முயற்சிகள் எதுவும் பயன் அளிக்கவில்லை.

மக்கள் பக்திப் போதையில் மூழ்கிய இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி கடன் பிரச்சினைகளிலும், மேலும் பல சொந்தக் கவலைகளிலும் மூழ்கியிருக்கும் சில விவசாயிகளை தொழிலதிபர்கள் சிலர் கண்டறிந்து அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறி. அவர்களின் நிலங்களை எழுதி வாங்கிவிட்டார்கள். அந்த நிலங்கள் எல்லாம் சாலைக்கு அருகிலேயே இருந்தன. அந்த நிலங்கள் விற்கப்பட்டதால் மற்றவர்களும் தங்கள் நிலங்களை விற்றே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள். காரணம் விற்கப்பட்ட நிலங்களைத் தாண்டித்தான் மற்றவர்கள் தங்கள் நிலங்களுக்குச் செல்லவேண்டும். இந்தச் சூழ்நிலையை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள் தொழிலதிபர்கள்.

இளவரசன் தீவிரமாக தேரோட்டப் பணிகளில் ஈடுபடலானான். கிராம மக்களைத் திரட்டி சிற்றுந்துகள் ஏற்பாடு செய்து தேரோட்ட நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தான். மக்கள் அவன் சொல்வதையே விரும்பிக் கேட்டனர். பக்தியில் திளைத்த மக்கள் அவன் சொல்வதற்கெல்லாம் ஆமாம் போட்டனர்.
இந்நிலையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் அகிலனின் முயற்சிகள் எதுவும் பயன் அளிக்கவில்லை. மக்களிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தான். ஆனால், அவன் பேச்சை யாரும் கேளாமல் பக்தி மார்க்கத்தில் மூழ்கிவிட்டனர். இளவரசன் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அகிலன் மீது மக்கள் வெறுப்பு கொள்ளும்படி பரப்புரை செய்தான். அவன் கடவுளுக்கு எதிரானவன் என்றும், தேர்த் திருவிழாவைச் சீர்குலைக்க நினைக்கிறான் என்றும் அவதூறு பரப்பினான். மக்கள் பக்திப் போதையில் மூழ்கிய நிலையில் அவன் பேச்சை அப்படியே நம்பினார்கள். ஆனால், சில நாட்களில் நிலைமையைக் கூர்ந்து கவனித்துவரும் இளைஞர்கள் சிலர் அகிலனுக்கு ஆதரவாகப் பேச ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தேர்த்திருவிழா கொண்டாட்டங்கள் முடிந்தன. தன்னை ஊரில் பெரிய மனிதனாகக் காட்டிக் கொண்ட இளவரசன் ஊர் மக்கள் பலரையும் வாகனங்கள் மூலம் அழைத்துச் சென்றான். விழா முடிந்தவுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாப்பிட்டுப் போட்ட உணவுப் பொட்டலங்கள், நெகிழிப் பொருட்கள், தேநீர் நெகிழிக் கிண்ணங்கள், இன்னும் பல குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு அவை நகரத்திற்கு வெளியே கிராமப்பகுதிக்கு அருகில் கொட்டி எரிக்கப்பட்டன. அதிலிருந்து எழுந்த கரும்புகை கிராமம் முழுவதும் முன்பு எப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்து மக்களின் மூக்குத் துவாரங்களில் நுழைந்து நுரையீரல்களைப் பதம் பார்த்தது.

பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் தஞ்சமடைந்தனர். இளவரசனுக்கும் கடும் இருமலுடன் சுரமும் ஏற்பட்டது.
அதே நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சிலரது நிலத்தை வாங்கிய தொழிலதிபர்கள் தொழிற்சாலைகள் அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கினர். மற்ற விவசாயிகளும் வேறு வழியின்றி நிலங்களை விற்கும் படியான சூழ்நிலை உருவாகியது. மேலும் குறைந்த விலைக்கே கேட்டனர்.
அகிலன் மிகவும் வருத்தமடைந்தான். இளவரசன்மீது அவனுக்கு மிகவும் வருத்தம் ஏற்பட்டது.

ஒரு நாள் ஊர் மக்கள் அனைவரையும் வழக்கமான கூட்டம் நடத்தும் இடத்திற்கு வரச்சொன்னான் அகிலன். அவன் பேச்சைக் கேட்டு அனைவரும் வந்தனர். இளவரசனும் வந்தான்.

அகிலன் பேசினான்.

“நான் சொன்னதை யாருமே கேட்கவில்லை. இப்போது குறைந்த விலைக்கு நிலங்களை விற்கும் நிலை வந்துவிட்டது. நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வேண்டும் என்ற நம் கோரிக்கையும் வீணாகிவிட்டது. எல்லாவற்றிற்கும் காரணம் நீங்கள் எல்லோரும் நம் முன்பு உள்ள பிரச்சினைகளை மறந்து கோயில், தேர்த் திருவிழா என்று உங்கள் கவனத்தைச் சிதறடித்துவிட்டீர்கள். நம் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நாம் மத உணர்ச்சிகளுக்கு அடிமையாகி உரிமைகளை இழந்து நிற்கிறோம். நான் இந்தத் தொழிற்சாலைகளைப் பற்றி ஆய்வு செய்து முடிவெடுக்க விரும்பினேன். இழப்பீடு, வேலைவாய்ப்பு பற்றியும் நாம் தீர்மானம் போட்டு அரசுக்கு அனுப்புவதாக இருந்தோம். ஆனால் எல்லாமே பயனில்லாமல் போய்விட்டது. என்னைக் குறை சொன்ன இளவரசன் என்ன செய்தான்? போராட மக்களைத் திரட்ட வேண்டியவன் தேர் பார்க்க மக்களைத் திரட்டினான். இப்போது அவன் உட்பட அனைவருமே நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் தஞ்சமடைந்திருந்தனர். மத மாயையில் வீழ்ந்தால் வாழ்வாதாரம் பாழாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.”

அவன் பேச்சில் பொதிந்துள்ள உண்மையை உணர்ந்த மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற்று அகிலனைப் பின்தொடர வேண்டும் என முடிவு செய்தனர்.
இளவரசனும் தான் தவறு செய்துவிட்டதை உணர்ந்து வருந்தினான். ♦