சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

2024 சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள் மார்ச் 16-31, 2024

முனைவர் ப.மருதநாயகம் தம் நூல்கள்
வழி உணர்த்தும் ஆய்வு முடிவுகள்

நூல் குறிப்பு :
நூல் பெயர் : சமற்கிருதம் செம்மொழியல்ல
(முனைவர் ப.மருதநாயகம் ஆய்வுரை)
ஆசிரியர் : இலக்குவனார் திருவள்ளுவன் 
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி)லிட்,
சென்னை _ 600 050.
பக்கங்கள் : 88;  விலை. ரூ.100/-

1. தொல்காப்பியப் பொருளதிகாரத்தை ஒத்த ஓர் அறிவு சார்ந்த ஆவணத்தை மேலை அறிஞர்கள் படைக்கவில்லையென்பதே வரலாற்று உண்மை.
2. தொல்காப்பியம் கூறும் இலக்கண விதிகள் பல இருக்கு வேதத்தில் இடம் பெறுகின்றன.
3. நாட்டிய சாத்திரம் தொல்காப்பியத்தின் மூலம் அன்று; அது காலத்தால் பிந்தியது.
4. தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் இருந்து கடன் வாங்கிய பரதமுனிவரின் நாட்டிய சாத்திரத்தைத் தொல்காப்பியத்திற்கு மூலமாகக் காட்டும் வரலாற்றுப் பிழையை இனியும் செய்யக் கூடாது.
5. சமற்கிருத இலக்கண, இலக்கிய நூல்கள் பலவும் தொல்காப்பியத்திற்குக் கடன் பட்டிருக்கின்றன.
6. தொல்காப்பியத்திற்குப் பின் வந்த தமிழ் இலக்கண நூல்களும் கன்னட மலையாள மொழிகளில் எழுதப்பெற்ற கவிசரா மார்க்கம், (இ)லீலா திலகம், போன்றவையும் தொல்காப்பியத்தின் வழி நூல்களே.
7. பிற மொழி நூல்களுக்கும் தொல்காப்பியம் மூல முதல் நூலாக இருக்கிறது.
8. தொல்காப்பியத்தில் உள்ள இடைச்செருகல்களை முதலில் கண்டறிந்தவர் பேராசிரியர் முனைவர்
சி. இலக்குவனார்.
9. சங்கச் சான்றோர் பெற்றிருந்த உளவியல் அறிவு அவர் காலத்தே உலகில் வேறு எந்த இனமும் பெற்றிருந்த உளவியல் அறிவினும் பெருஞ்சிறப்புடையது, பெருவியப்பிற்குரியது.
10. சங்க இலக்கியங்களின் செல்வாக்கு காளிதாசனின் காவியங்களில் இருப்பதை மேலை இலக்கிய விற்பன்னர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
11. காளிதாசனின் குமாரசம்பவம், இரகுவம்சம் முதலான காவியங்களில் புறநானூற்றுப் பாடல்களின் தாக்கம் உள்ளன.
12. புறநானூற்றுப் பாடல்களிலும் கிரேக்கப் பாடல்களிலும் ஒப்புமைக் கருத்துகள் உள்ளன.
13. புறநானூறு வீரயுக இலக்கியமன்று; தமிழ் இலக்கிய வரலாற்று வீரயுகம், இன்னும் பல நூற்றாண்டுகள் முந்தியதாக இருக்க வேண்டும்.
14. திருக்குறளை மூலமாகக் கொண்டே வட நூல்களாகிய சுக்கிரநீதி, கவுடலீயம், அருத்தசாத்திரம் ஆகியவை தோற்றம் பெற்றிருக்க வேண்டும் – ஆபிரகாம் பண்டிதர்.
15. 1831ஆம் ஆண்டு வெளிவந்த திருக்குறள் நூலிலும் எல்லீசர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட நூலிலும் வள்ளுவரின் கற்பனை வரலாறு சொல்லப்படவில்லை. விசாகப் பெருமாள் (அய்யர்) 1855 ஆம் ஆண்டில் அச்சிட்ட திருக்குறள் நூலின் இறுதியில் ஆதி என்னும் பறைச்சிக்கும் பகவன் என்னும் பிராமணனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன என்பது முதலான கதைகளைப் புகுத்தியுள்ளார்.
16. உரேமானிய மெய்யியல் அறிஞர் செனகா, தமது கட்டுரை ஒன்றில் திருவள்ளுவர் பெயரைக் குறிப்பிட்டுள்ளார். இதனை பிரான்சுவாகுரோ எழுதிய நூலில் கண்ட அறிஞர் ப. மருதநாயகம் செனகாவின் கட்டுரைகளைப் படித்து அவற்றில் வள்ளுவத்தின் தாக்கம் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.
17. சங்கரர் தமது அத்துவைதத் தத்துவத்தை எழுத மாணிக்கவாசகர் முதலான சமயக் குரவர்களின் பாடல்கள் துணை செய்திருக்க வேண்டும். – அறிஞர் எல்லீசு.
18. சமற்கிருத மொழி உள்ளிட்ட எல்லா இந்திய மொழிகளிலும் தமிழின் தாக்கம் இருக்கின்றது.
19. எல்லா இந்திய மொழி இலக்கியங்களிலும் தமிழ் இலக்கியங்களின் தாக்கம் இருக்கின்றது.
20. தென்னகத்து அறிஞர்களின் சமற்கிருத நூல்களில் தமிழின் தாக்கம் மிகுதியாக உள்ளது.
21. சமற்கிருதம் என்றைக்கும் மக்கள் மொழியாகப் பேச்சு நிலையில் இருந்ததில்லை.
22. சமற்கிருதத்தை அறிவியல் மொழிபோல் பொய்யுரையாகப் புகழ்ந்து அதை மேற்கோளாகக் காட்டிப் பரப்பி வருகின்றனர்.
23. பிராகிருத மொழியினர் சமற்கிருதத்தை எள்ளி நகையாடி வந்துள்ளனர்.
24. சமற்கிருத இலக்கியங்களிலெல்லாம் பிராகிருதமே பெருமளவு கையாளப்பட்டுள்ளது.
25. சமற்கிருத நாடகங்களின் தோற்றமும் மூலமும் கிரேக்க நாடகங்களே!
(சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி (பட்டாச்சார்), சமற்கிருதச் செவ்விலக்கிய வரலாறு (History of Classic Sanskrit Literature, 1993)
26. சமற்கிருத இலக்கியங்கள் பேரளவினவை என்பதைக் காட்டுவதற்காகப் பாலிமொழி நூல்களையும் பிராகிருத மொழி நூல்களையும் மொழிபெயர்த்துக் கொண்டு அல்லது அவற்றின் அப்பட்டமான தழுவல்களை எழுதிவைத்துக் கொண்டு மூலங்களை அழித்துவிட்டு அவையெல்லாம் சமற்கிருத நூல்கள் என்று பொய்யான வரலாற்றை உருவாக்கியுள்ளனர்.
– சமற்கிருதப் பேராசிரியர் சுகுமாரி (பட்டாச்சார்)
27. தமிழ் அக இலக்கியங்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்குச் சமற்கிருத நூல்களுக்குத் தகுதியே இல்லை.
28. தமிழ்ப்பாடல்கள் பலவற்றைச் சமற்கிருதத்தில் மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு அவையே மூலமென்று சொல்லும் வடமொழிச் சார்பாளர்கள் உண்டு;
அவர்களே திருமூலரின் திருமந்திரம் போன்ற நூல்களில் இடைச் செருகல்களைப் புகுத்தி அவற்றின் மூலக்கருத்துகளுக்கு நேரெதிரான கொள்கைகளை அவை பேசுமாறு செய்தனர்.
– சார்லசு கோவர் (Charles Gover)
29. திட்டமிட்டுக் கெடுக்கப்படாத, சிதைக்கப்படாத
எந்தவொரு அச்சிடப்பெற்ற தமிழ்ப்படியும் கிடைக்காத அளவிற்குத் தமிழ் நூல்கள் பிராமணர்களால் சிதைக்கப்பட்டன. -சார்லசு கோவர் (Charles E.Gover) 1871, தென்னிந்தியாவின் நாட்டுப்புறப் பாடல்கள் (The Folk Songs of Southern India).
30. பிராமணர்களால், இந்நிலத்திற்குரிய கவிதைகள் தகாத முறையில் இழிவுபடுத்தப்பட்டன; அதற்கு இயலாத பொழுது, சற்றும் நேர்மையற்ற முறையில் வஞ்சக எண்ணத்தோடு பாழ்படுத்தப்பட்டன.
– சார்லசு கோவர்.
31. பிராமணப் பழங்கதைகள் ஏற்றமளிக்கப்பட்டுத் தொன்மையான தமிழ்ப் பனுவல்கள் புறக்கணிக்கப்பட்டன; அழிக்க முடியாதவற்றின் தூய்மையை இடைசெருகல்கள், பிற பாடங்கள் மூலமாகக் கெடுத்தனர் – சார்லசு கோவர்.
32. பிராமணர்கள், தமிழ் நூல்களை அழிப்பது, இயலாவிட்டால் சிதைப்பது (The Brahmins corrupted what they could not destroy.) என ஈடுபட்டனர்.
– சார்லசு கோவர்.
33. பிராமணர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் செல்வாக்கை வளர்த்துக் கொள்ளவும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும் சமயச் சடங்குகளில் மட்டுமல்லாமல் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் தம் பங்கை உறுதிப்படுத்திக் கொள்ளவும் சற்றும் அடக்க வுணர்வோ, கூச்சமோ, தயக்கமோ, மனச்சாட்சியின் உறுத்தலோ இல்லாமல் பேசுவதை வேதங்களின் காணலாம். (இருக்கு வேதத்தையும் மனுநீதியையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ள வேண்டி தோனிகர் (Wendy Doniger), சமயத்துறைப் பேராசிரியர், சிகாகோ பல்கலைக்கழகம்.)
34. நடுநிலையற்ற சமற்கிருத விற்பன்னர்களும் தமிழ் உட்பகைவர்களும் தமிழ் இலக்கியங்களைப் பார்த்து உருவாக்கப்பட்ட சமற்கிருத இலக்கியங்களை முன்னதாகக் காட்டுவதற்காகச் சங்க இலக்கியக் காலங்களைப் பின்னுக்குத் தள்ளியுள்ளனர். இப்பொழுதும் அவ்வாறு செய்கின்றனர்.
35. சங்க காலத்தைச் சேர்ந்தது பரிபாடல்.
36. எருமன் தீகென்(Herman Tieken) எழுதிய தென்னிந்தியாவில் காவியம்: பழந்தமிழ்ச்சங்கக் கவிதை எனும் ஆங்கில நூலின் (Kavya in south India: Old Tamil Cangam Poetry) முதல் நோக்கம் சங்க இலக்கியம் இதுகாறும் கருதப்பட்டு வந்த காலத்திற்கு மிகப் பின்னதென்று பொய்யாகக் காட்டுவதே! (முன்னுரையிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.)
37. மொழிக் கலப்பே மொழி வளர்ச்சி எனக் கூறுவோர் பிற நாட்டு மொழி வரலாற்றை அறியாதவர்கள்.
38. மொழிக் கலப்பினால் தத்தம் தாய்மொழி கேடுறுவதைத் தடுப்பதற்காக மொழித் தூய்மை இயக்கங்களைப் பிற மொழியினரும் பேணுகின்றனர்.
39. இறைவன் படைத்ததாக உயர்த்திச் சொல்லப்படும் வேதத்தைவிட மாணிக்கவாசகரின் திருவாசகம் உயர்ந்தெதன்று சிவப்பிரகாசர் கூறுவது மரபின் வழிதான்.
40. மணிமேகலை வடமொழிகளில் உள்ள புத்தசமயக் காப்பியங்கள் யாவற்றினும் உயர்ந்தது.
41. சங்கரரின் ‘விவேகசூடாமணி’யில் பழந்தமிழ் இலக்கியங்களின் செல்வாக்கைக் காணலாம்.
42. சவுந்தரியலகரி பழந்தமிழ் இலக்கியங்களுக்கும் காரைக்காலம்மையாருக்கும் கடன்பட்டுள்ளது.
43. ஆதிசங்கரர் தமது தத்துவக் கோட்பாட்டை உருவாக்க நாட்டார் பாடல்களுக்கும் நாயன்மார் பாடல்களுக்கும் கடன்பட்டிருப்பதையும் உறுதியாகச் செல்ல முடியும்.
44. ஞானசம்பந்தர் வடசொல்லும் தமிழ்ச்சொல்லும் கலந்து எழுதும் நடையைக் கண்டிக்கிறார்.
45. இறை இலக்கியப் புலவர்கள் தனித்தமிழ் நடையையே வலியுறுத்தினர்.
46. தமிழகப் பார்ப்பனர்கள் தாய்லாந்துவரை பரவி இருந்தனர்; சயாமில் நடைபெற்ற அரசியல் சடங்குகளில் இவர்கள் தமிழ் மந்திரத்தையும் பாலி, தாய்லாந்து மொழியையும் பயன்படுத்தினர் – அறிஞர் வேல்சு. (அஃதாவது சமற்கிருதம் ஓதப்படவில்லை.)
47. தியாகராசர் தெலுங்கில் எழுதியிருந்தாலும் தான் வாழ்ந்த தமிழ்நாட்டின் இலக்கியச் செல்வாக்கிலேயே அவற்றைப் படைத்துள்ளார்.
– அறிஞர் அருணாசலம்
48. தியாகராசர் தமிழிசை மரபிற்குப் பெரிதும் கடன்பட்டிருப்பவர்.
49. பாரதியை உருவாக்கியவர்களில் தலைமையிடம்
பெறத் தக்கவர் இராமலிங்க அடிகளாரே!
50. பேச்சுத் தமிழிலிருந்து வேண்டிய சொற்களை எடுத்துக் கொண்டு தக்க இடத்தில் பயன்படுத்திக் கவிதைக்கு உயிரூட்டல் ஆகியவற்றிற்கெல்லாம் பாரதிக்கும் அவரது வழித் தோன்றல்களுக்கும் முன்னோடியாக இருந்து கல், முள்ளற்ற பெரும்பாதை அமைத்துக் கொடுத்தவர் இராமலிங்க அடிகளாரே!
51. கவிதை நடைக்கு முன்மாதிரிகளைத் தேடி, மேலை இலக்கியத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. நாயன்மார்களும் ஆழ்வார்களும் தாயுமானவரும் கோபாலகிருட்டிண பாரதியும் அண்ணாமலை ரெட்டியாரும் முன்னமேயே கவிதை நடையில் தடம் பதித்திருந்தனர்.
52. வேதங்களில் வன்முறையும் அதிகார வெறியும் போற்றப்படுவதோடல்லாமல் அவையே உலகநெறியென்றும் உலக நோக்கமென்றும் காட்டப்படுகின்றன.
53. சில்வியன் இலவி (Sylvian Levi) என்பார் வேதங்களின் அடிப்படை இலட்சியம் மிருகத்தனமானது (Brutal).
54. சமற்கிருத இலக்கியங்களைப் பிற மொழி இலக்கியக் காலங்களுக்கு மூத்ததாகவும் முதன்மையானதாகவும் காட்ட முயன்ற மோசடிகளால்தான் காலக் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
55. பெண் குழந்தைகளுக்கு எதிராகவே வேதங்கள் பேசுகின்றன.
56. வால்மீகி, இராமாயணத்தில் இராமனை ஒருபுறம் முன்மாதிரியாகத் திகழும் சான்றோருள் சான்றோனாகக் காட்ட முனைகிறார். மறுபுறம் சில சூழல்களில் தரக்குறைவான எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் இடம் கொடுப்பவனாகவும் நல்லவன்போல் நடிக்கும் வேடதாரியாகவும் இராமன் காட்சி தருகிறான்.
57. இராமாயணம் பொதுவான மக்கள் நலன் சார்ந்ததாக இல்லாமல் பார்ப்பனர் நலனை மட்டுமே முன்னிறுத்துவதாக உள்ளது.
58. பழைய காப்பிய மரபை எவ்வாறு பார்ப்பனர் ஜாதியின் கோட்பாடுகளைப் புகுத்தி மன்னரையும் மக்களையும் கவரும் இதிகாசமாக மாற்றுவதென்பதைப் பார்ப்பனர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். – மக்குடானெல்
59. மகாபாரதம் கி.பி.900 ஆண்டுகளுக்குப் பிறகு பார்ப்பனர்களால் தரும சாத்திரமாக மாற்றப்பட்டது. அதில் பல முழுநூல்கள் நுழைக்கப்பட்டன.
– பேராசிரியர் ஓல்சுமண் (Prof. Holtzmann)
60. கிரேக்கக் காப்பியமான இலியத்தின் சமற்கிருத மொழிபெயர்ப்பே மகாபாரதம். – கிரேக்க வல்லுநர் தியோ கிறிசோதமசு (Dio Chrysostomos).
61. கிரேக்கத் தொன்மங்களின் தாக்கம் நிறைந்தது மகாபாரதம் – இசுபானிய நூலொன்று.
62. ஓமரின் காப்பியங்கள் இரண்டையும் பல கிரேக்கத் தொன்மங்களையும் மூலத்தில் படித்து அவற்றை அருகில் வைத்துக்கொண்டு அவற்றைத் தழுவி, சமற்கிருதமும் கிரேக்கமும் அறிந்த அறிஞர்களால் மகாபாரதம் எழுதப்பட்டிருக்க வேண்டும்.
63. ஆபாசமான கிரேக்கத் தொன்மங்களிலிருந்து அவற்றைவிட இழிகாமமான கதைகளைக் கற்பனை செய்து மகாபாரதம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
64. புத்த சமய இலக்கியங்களில் வடமொழியில் உள்ளவையும் பலவாயினும் அவற்றில் ஒன்றும் மணிமேகலைக்கு ஈடாகாது.
65. சங்கப்பாடல்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் நிலைத்திருக்கக் காரணம் அவை கையாளும் உத்திகளே. சங்கப் புலவர்களுக்கு ஈடானவர் உலகில் வேறு எம்மொழியிலும் இல்லை.
– பன்மொழியறிஞர் சியார்சு ஆர்த்து.
66. தமிழ்க்கவிதை மரபு மகாராட்டரி பிராகிருதம் மூலமாகக் காளிதாசனுக்கும் பிற மொழிக் கவிஞர்களுக்கும் சென்றிருக்க வேண்டும்.
67. தரந்தாழ்ந்த இலக்கியங்கள் உள்ள சமற்கிருத மொழியை எவ்வாறு செம்மொழியாகச் சொல்ல இயலும்.
68. இருக்கு வேதம் முழுமையும் பேராசை கொண்ட புரோகிதர்களின் தந்திர வேலை. அதில் உள்ள சில அழகிய வரிகள், அப்புரோகிதர்கள் மது, மாதர்பால் கொண்டிருந்த இச்சையையும் சூதாட்ட ஈடுபாட்டையும் காட்டுபவை.
– கே.கிருட்டினமூர்த்தி,
சமற்கிருதப் பேராசிரியர்,
தார்வார் பல்கலைக்கழகம்.
69. யசுர்வேதமும் சாம வேதமும் இலக்கியத்தரம் உடையவை அல்ல.
– பேரா.கே. கிருட்டினமூர்த்தி.
70. அதர்வவேதத்தை வேதமாகக் கொள்ள முதலில் எதிர்ப்பு இருந்தது.
– பேரா.கே.கிருட்டினமூர்த்தி
71. சமற்கிருத நூலார் போற்றியது மூடநம்பிக்கைகள் மலிந்த கீழான மன்பதையையே!
– பேரா.கே. கிருட்டினமூர்த்தி.
72. சமற்கிருதக் குப்பை நூல்கள் எங்ஙனம் செவ்வியல் இலக்கியமாகும்?
73. சமற்கிருத நூலார் கற்பித்த கோட்பாடுகள் நன்மையைவிடத் தீமையையே மிகுதியாகச் செய்தன.
74. சமற்கிருத நாடகங்களில் கலைமகள் தன் கணவனான பிரம்மனிடமும் சமற்கிருதம் தெரியாததால் பிராகிருத மொழியில் தான் பேசுவாளாம். ஆகக் கல்விக் கடவுளுக்கே சமற்கிருதம் தெரியவில்லை என்றால் அது மக்கள் மொழியாக விளங்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
75. சமற்கிருத நாடகங்களில் பரத்தையருக்கே முதலிடம் என்பதை விபுலானந்தர் விளக்கியுள்ளார்.
76. சூத்திரகரின் மிருச்சகடிகம், இலக்கியத் தரத்தில் சிலப்பதிகாரத்தை நெருங்க முடியாது.
77. தமிழ்ப்பனுவல்களின் தாக்கம் பாசனின் நாடகங்களில் இருக்கிறது.
78. காளிதாசன் படைப்புகள் தமிழிலக்கியம் தழுவியனவே!
79. “கவி சமயங்கள்” சங்க இலக்கியங்களிலிருந்து பெறப்பட்டவை.
– அறிஞர் சீக்ககுஃபிரீட்டு இலியன் ஆர்த்து.
80. சமற்கிருத நூலார் கூறும் காந்தருவ மணமும் தமிழின் களவு மணமும் வெவ்வேறு.
81. சகுந்தலை மன்னனுக்கு எழுதும் மடல் சிலப்பதிகாரத்தில் மாதவி கோவலனுக்கு எழுதும் மடலை ஒத்துள்ளது.
82. நூலில் ஆங்காங்கே சமற்கிருத நூல் மரபை மீறியுள்ள காளிதாசன் அங்கெல்லாம் தமிழ் மரபைப் பின்பற்றியுள்ளான்.
83. வருண அடிப்படையிலான திருமணம் குறித்து மநுநூல் கூறுகிறது.
84. அறவுணர்வு சற்றுமில்லாத பண்பாடற்ற பகுத்தறிவுக்கொவ்வாத மூடநம்பிக்கைகளின் அடிப்படையிலான விதிகளையெல்லாம் மநுநூல் அடுக்கிக்கொண்டே போகிறது.
85. மநுநூல் பலரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்;
86. வருணாசிரம தருமத்தைக் காப்பதே மநுநூலின் தலையாய நோக்கு.
87. மநுநூலின் மூன்றில் ஒரு பங்கு அல்லது பாதி மகாபாரதத்தில் அப்படியே இருக்கிறது.
88. பார்ப்பனருக்காக, பார்ப்பனரின் நலன் கருதி மநுநூல் எழுதப்பட்டது.
89. அரசனைவிடவும் பிராமணன் உயர்ந்தவன்; மரியாதைக்குரியவன் என்கிறது.
90. இல்லறச் சிறப்பைப் போற்றும் திருக்குறள் போன்ற அறநூலையோ சமய நூலையோ சமற்கிருதத்தில் காண இயலவில்லை.
91. பிறருடைய மனைவியரை ஏமாற்றிக் கெடுக்கும் வழிகளை வாத்துயாணர் காமசூத்திரம் நூலில் விரிவாகக் கூறுகிறார்.
92. பிறன்மனை விழையாமையை வலியுறுத்துவது தமிழறம். காமசூத்திரம் பாலுறவுக் கேட்டினை ஒழுக்கமாகக் கூறும்.
93. பிறர் மனைவியரோடு உறவுகொள்வது வடநூல் மரபு
– தேவதத்த சாத்திரி,
காமசூத்திர உரை ஆசிரியர்.
94. “உன்னைநாடி வரும் எப் பெண்ணையும் விரட்டி விடாததே”
– சந்தோக்கிய உபநிடதம்.
95. ஒருவனுடைய படுக்கைக்கு வரும் காமவிழைவு
கொண்ட பெண்ணைத் துரத்தக் கூடாது.
– சங்கரர்.
96. “புணர்ச்சியை விரும்பி இன்னொருவனுடைய மனைவி வருவாளானால் அவளோடு இணைந்து இன்பம் அளிப்பது சிவ வழிபாட்டின் ஒரு கூறாகும். இத்தகைய பிறன்மனை உறவு தருமத்தால் தடை செய்யப்படவில்லை.
– இராமானுசர்
97. வித்தியா, பாவசுதேவி போன்ற பெண் கவிஞர்கள் முறையற்ற உடலுறவால் பெறும் களிப்பைக் குறிக்கோள் இன்பமாகப் பெருமைப்படுத்திப் பேசினார்கள்.
98. காமசூத்திரம் ஆண் பெண் உடலுறவைப் படம் பிடித்துக்காட்டுவது; காமத்துப்பால் ஆண்- பெண் மன உறவுகளை நுட்பமாகக் காட்டுவது.
– மார்க்கு மக்கிளீசு (Mark Mcclish),
மவுரியர் காலத்து ஆவணமா?
(Is the Arthasastra a Mauryan Document?) (கட்டுரை)
99. காமசூத்திரம் உடல் வெறியைத் தூண்டும் நீலப்படம் (Blue Film); திருக்குறள் முருகியல் இன்பம் தரும் காவியம்.
100. சாணக்கியன் என்ற பெயரில் சந்திரகுபுத மவுரியன் எனும் மன்னனுக்கு அமைச்சராக இருந்தவர் என்று கருதப்படுபவர் அல்லர். அது சந்திரகுபுத மவுரியனுக்குப் பல நூற்றாண்டுகள் பின்னால் அறிஞர்கள் சிலரால் தொகுக்கப்பட்ட நூல்.