அரசமைப்புச் சட்டத்தை வணங்குவோம்! மூடநம்பிக்கைகளை கைவிடுவோம்! உச்சநீதிமன்ற நீதிபதிகள் முழக்கம்! – மஞ்சை வசந்தன்

2024 மார்ச் 16-31, 2024 முகப்பு கட்டுரை

கடந்த 03.03.2024 ஞாயிறன்று புனே மாவட்ட பிம்ப்ரி சின்ச்வாட் நகரில் புதிய நீதிமன்றக் கட்டிடம் ஒன்றின் அடிக்கல் நாட்டுவிழா நடந்துள்ளது.உச்சநீதிமன்ற நீதிபதி பூஷன் ஆர் கவாய் பூமி பூஜை நடத்தி நிகழ்வைத் துவக்கி வைத்துள்ளார். மற்றொரு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் ஓகா உட்பட வேறு சில நீதிபதிகளும் மூத்த வழக்குரைஞர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் உரையாற்றிய அபய் ஓகா கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:
“இத்தகைய விழாக்களின் போது மதம் சார்ந்த சடங்குகளை சட்டம் மற்றும் நீதித்துறை வல்லுநர்கள் இனிமேல் தவிர்க்க வேண்டும். பூஜைகள், அர்ச்சனைகள், விளக்கேற்றுதல் போன்றவை கூடாது. அரசமைப்புச் சட்டத்தின் முகவுரை நகல் ஒன்றை வைத்து, சிரம் தாழ்த்தி அதை வணங்கி விழாவைத் துவக்க வேண்டும்.”
“பாபா சாகேப் அரசமைப்புச் சட்டத்தை நமக்கு வழங்கி, வரும் நவம்பர் 26ஆம் நாளன்று 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. என்னைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டம் தான் நீதித்துறையின் அடிப்படை மய்யம்!”

“அரசமைப்புச் சட்டத்தில் உள்ள இரண்டு சொற்கள் முக்கியமானவை. ஒன்று “மதச்சார்பின்மை”. மற்றொன்று “ஜனநாயகம்”. – மதச்சார்பின்மைக்கு சிலர் “தர்ம நிர்பேகஷா” அல்லது “சர்வ் தர்ம் சம்பவ்” என்றெல்லாம் பொருள் விளக்கம் அளிப்பதுண்டு. “என்னைப் பொறுத்தவரை அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையே வழிபாட்டிற்குரியது. நீதிமன்ற வளாகங்களில் மதம் சார்ந்த சடங்குகள் நடக்கக்கூடாது. அதுவே அரசமைப்புச் சட்டத்தின் மதிப்பையும் சிறப்பையும் நாம் போற்றுவதற்கான அடையாளமாகும். கர்நாடக மாநிலத்தில் நான் பணியாற்றிய காலத்தில் மதச் சடங்குகளை அடியோடு நிறுத்த நான் பல முயற்சிகள் செய்தேன்.
அதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. இருப்பினும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தினேன் என்று கூறலாம்.

நீதிமன்ற வளாகங்களில் மதம் சார்ந்த வழிபாடுகளும் சடங்குகளும் இனிமேல் எங்கும் நடைபெறக் கூடாது.” – என்றார் அபய் ஓகா.
இவருடைய கூற்றை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பூஷன் கவாய் அதற்கு ஆதரவாக இவ்வாறு கூறியுள்ளார்:

“அபய் ஓகா அவர்கள் நல்ல யோசனை தெரிவித்துள்ளார். அது இனிமேல் பின்பற்றப்பட வேண்டும். எங்கள் சக வழக்குரைஞர் அனில் கிஷோர் அவர்கள் இன்னொரு நல்ல யோசனை வழங்கியுள்ளார். “நீதிமன்றக் கட்டிடங்களின் அடிக்கல் நாட்டு விழாக்களின் போது மரங்கள் நடுவது பயனுள்ளதாக இருக்கும்.
செடிகளுக்கு நீரூற்றியபின் நிகழ்ச்சியைத் துவக்கலாம். பூஜைகளையும் மதம் சார்ந்த சடங்குகளையும் தவிர்க்கலாம்” என்று நல்ல யோசனை அளித்துள்ளார்.
அதன்படி இனி நாம் செயல்பட்டால் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வும் சமூகத்தில் ஏற்பட அது வழிவகுக்கும். நீதித்துறை மற்றும் சட்டத்துறை சம்பந்தப்பட்ட நிகழ்வுகளில் மதம் சார்ந்த சடங்குகளை இனி தவிர்ப்போம். பூஜைகள், அர்ச்சனைகள், வழிபாடுகள், விளக்கேற்றுதல் போன்றவை இனி வேண்டாம்” — என்று அபய் ஓகாவுக்கு ஆதரவாக பூஷன் கவாய் கூறியுள்ளார்.

நன்றி : ‘தி இகனாமிக் டைம்ஸ்’
வலைதளம் 4.3.2024

நீதிபதிகளின் அடிப்படை அறிவுறுத்தல் என்னவென்றால் அறிவியல் மனப்பான்மையே ஆக்கத்திற்கு அடிப்படை, உயர்வுக்கு உந்து சக்தி, வளர்ச்சிக்கு வழித்தடம் என்பதாகும்.

மரபின்வழி மடமைக் கருத்துகளை அப்படியே ஏற்று நடக்காமல், அறிவினால் ஆய்வு செய்து அறிவுக்கு உகந்ததை ஏற்று வாழ்ந்தால் மூடநம்பிக்கை தகரும்; தன்னம்பிக்கை வளரும்.

நம் முன்னேற்றம் நம் கையில், நாம் முயன்றால் எதையும் சாதிக்கலாம், எதையும் எட்டலாம், நம் வாழ்வை கடவுள் தீர்மானிப்பதில்லை என்ற அறிவின்பாற்பட்ட விழிப்பு வந்தால், மரபு வழி மடமைகள், மதவழி மடமைகள் அகல, அறிவின்பாற்பட்ட அர்த்தமுள்ள, காரணங்களோடு கூடிய வாழ்வு அமையும்.
சரியான தீர்வு: எந்த ஒன்றுக்கும் தீர்வு காண்பதில் மனிதனுக்கு மனிதன் வேறுபாடு உண்டு. அவன் பெற்றுள்ள அறிவு, தெளிவு, விழிப்பு, சிந்தனைத் திறன் இவற்றைப் பொறுத்து தீர்வுகளும் மாறும்.

நோய் வந்தால் ஒருவர் மந்திரவாதியிடம் செல்கிறார்; மற்றொருவர் கோயிலுக்குப் போய் வேண்டுகிறார்; இன்னொருவர் மருத்துவரிடம் போகிறார். இதில் சரியான தீர்வு எது?

மந்திரம் ஓதினால் நோய் குணமாகுமா? மந்திரவாதிக்கே நோய் வந்தால் மருத்துவரிடம் தானே செல்கிறார்? மந்திரம் நோயைத் தீர்க்கும் என்றால் மருத்துவர்கள், மருத்துவமனைகள் ஏன்? என்று சிந்தித்தால் மந்திரம் பொய் என்பது விளங்கும்.
கடவுள் நோய் தீர்க்கும் என்றால், நோய் வந்தவர்கள் எல்லாம் கடவுளை வேண்டிக் கொண்டு வீட்டிலேயே இருப்பார்களா? விளைவு என்னாகும்?
எந்தப் பக்தனும் நோய்க்கு மருத்துவரிடம் தானே செல்கிறான்? மருத்துவர் செய்யும் மருத்துவம்தானே நோயைக் குணப்படுத்துகிறது? இதில் கடவுளுக்கு என்ன வேலை?

கொரோனா தொற்று வந்தபோது கோயில்களே மூடப்பட்டனவே! கடவுள் நோயைக் குணப்படுத்தும் என்றால், கோயிலை ஏன் மூடவேண்டும்? அறிவோடு சிந்தித்தால் – அறிவியல் அடிப்படையில் சிந்தித்தால் உண்மை தெரியும், சரியான தீர்வும் கிடைக்கும்.
நோய் வந்தால் மருத்துவரிடம் செல்வதே சரி என்ற உண்மை உறுதியாய், தெளிவாய்த் தெரியும். எனவே, நோய் வந்தால் அறிவின் அடிப்படையில் அணுகி, தீர்வு காணவேண்டும்.

பொருளாதாரம்: பொருளாதாரத்தின் பெரும்பகுதி வீண் செலவுகள், சடங்குகள், மூடநம்பிக்கைகளுக்காகவே செலவிடப்படுகின்றன. பொருளாதாரம், சிக்கனமாகவும், ஆக்கபூர்வமாகவும் வளர்ச்சிக்கு உரிய வகையிலும் செலவிடப்பட வேண்டும் என்றால் அறிவியல் அணுகுமுறை கட்டாயம்.
பிறப்பு முதல் இறப்பு வரை அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத, எதிரான பல சடங்குகள். ஒவ்வொரு சடங்கிற்கும் பெரும் பொருள் செலவுகள்.
பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்ட ஒரு விழா. காது குத்துவதற்கு ஒரு விழா, பெண் பிள்ளை பருவம் அடைந்தால் ஒரு விழா, திருமணம் நடத்த பெரும் பொருள் செலவு, கருவுற்ற பெண்ணுக்கு வளையல் காப்பு விழா, இறந்த பின் அடக்கம் செய்ய பொருள் செலவு, கருமாதி, ஓர் ஆண்டு ஆன பிறகு திவசம் இப்படி ஒவ்வொன்றுக்கும் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான ரூபாய் செலவு. கடன் வாங்கி பெரும்பாலும் இவ்விழாக்களுக்குச் செலவு செய்யப்படுகிறது. அக்கடனை அடைக்கும்வரை வட்டி கட்டியே வாழ்நாள் எல்லாம் துன்பப்படுகின்றவர்கள் பலர்.
பெயர் சூட்டவும், காது குத்தவும், பருவம் அடைந்தாலும் விழா வேண்டுமா? ஒரு மனிதன் அடையாளம் காண – அழைக்கப்பட- பெயர் வேண்டும். அதற்கு எதற்கு விழா?

காதில் நகை அணிய ஓட்டை போட ஒரு விழாவா? குழந்தை மருத்துவரிடம் சென்றால் 10 நிமிடத்தில ஓட்டை போட்டு நகையை மாட்டி விடுவார். இதற்கு எதற்கு விழா? ஒரு ஆணோ பெண்ணோ பருவம் அடைவது 13 வயதுக்கு மேல் நடக்கும் இயற்கை நிகழ்வு. இதற்கு எதற்கு விழா?
திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து இல்வாழ்வு நடத்த ஒப்பந்தம் மூலம் ஒன்று சேர்வதே திருமணம். இதற்கு ஏன் இலட்சக்கணக்கான தொகையில் விழா? பதிவு அலுவலகத்தில் சென்று பதிந்தால் போதாதா?

வீண் செலவு செய்வதில் மதிப்பு, மரியாதை வருகிறதா? கடனை அடைக்க முடியாமல் மானம் இழப்பதைவிட, கடன் வாங்காமல், செலவு இல்லாமல் எளிய முறையில் திருமணத்தை நடத்திக் கொள்வதுதான் அறிவுக்கு உகந்தது!

வயிற்றில் வளரும் குழந்தையைப் பாதுகாக்க வளையல் அணிவிழா! தாயும், குழந்தையும் நலமாக இருக்க மருத்துவர் கண்காணிப்பும், நல்ல உணவும்தான் தேவை. வளையல் காப்பு எந்த வகையில் இதற்கு உதவும்? அறிவோடு சிந்தித்தால், அறிவியல் கண்ணோட்டத்தில் ஆராய்ந்தால், இவையெல்லாம் வீண் செலவுகள் என்பது விளங்கும்.

இறந்தவரை மரியாதையுடன் அடக்கம் செய்வது கட்டாயம். மாறாக, அதற்குச் சடங்குகள் செய்வது எந்த அறிவியல் காரணத்திற்காக? யாராவது விளக்குவார்களா?
ஆக, அறிவோடு சிந்தித்தால் பெரும் செலவு, கடன், அலைச்சல் போன்ற பலவற்றைத் தவிர்க்கலாம். கடன் இன்றி மன நிறைவுடன் மகிழ்வாக வாழலாம்.
உணவுப் பொருள்கள் பாழ்: அறிவுக்கும், அறிவியலுக்கும் எதிரான மூடநம்பிக்கைகளால் பொருளாதார இழப்புகள் ஏற்படுவதுபோலவே, உணவுப் பொருள்களும் பாழாக்கப்படுகின்றன.

திருஷ்டிப் பூசணி: கண்பட்டுவிடக் கூடாது என்பதற்காக நல்ல பூசணிக்காயில் கருப்பு மையால் படம் வரைந்து வீட்டில் வைத்து பின் சாலையில் போட்டு உடைப்பர். அவ்வாறு உடைக்கப்படும் பூசணிக்காயால் வழுக்கி விழுந்து அடிபடுபவர்கள் ஏராளம். உடல் குளிர்ச்சிக்குப் பயன்படக்கூடிய நல்ல உணவுப் பொருளான பூசணியை சாலையில் உடைத்துப் பாழாக்குவது அறிவுடைமையா? ஒரு பூசணியை வடகம் போட்டு வைத்துக்கொண்டால் ஆண்டு முழுவதும் புளிக்குழம்பு வைக்கலாம். பூசணி மோர்க் குழம்பு சிறப்பானது. பூசணி அல்வா மற்ற அல்வாவைவிட உடல் நலத்திற்கு ஏற்றது. அதைப் பாழாக்கலாமா?


பாலாபிஷேகம்: கற்சிலையைக் கடவுளாக நம்பி அதன் மீது பாலை ஊற்றி, தேனை ஊற்றிப் பாழாக்குகின்றனர். குழந்தைகளுக்குப் பால் பற்றாக்குறை இருக்கும்போது இப்படிப் பாழாக்கலாமா? பால் ஒரு சத்தான உணவு. அதன் பலனை கற்சிலை பெறுமா? அறிவுடன் சிந்தித்தால் இந்த அவலத்திலிருந்து விடுபடலாம்.

எலுமிச்சை: எலுமிச்சை ஒரு சிறந்த உணவுப் பொருள். சாறு குடிக்கலாம்; எலுமிச்சை சோறு தயார் செய்தால் இரண்டு நாள்கள் கெடாமல் இருக்கும். உடலுக்குக் குளிர்ச்சியும், நோய் எதிர்ப்பாற்றலும் தரும். அப்படிப்பட்ட உணவுப் பொருளை காவு கொடுப்பதாகச் சொல்லி, இரண்டாகப் பிளந்து வீசுவார்கள். வாகனங்களில் செருகி வைப்பார்கள். சக்கரங்களை எலுமிச்சை பழத்தின் மீது ஏற்றி நசுக்கிப் பாழாக்குவார்கள். இவையெல்லாம் ஏன் நடக்கின்றன? அறியாமை, மூடநம்பிக்கை. இவை அகல ஒரே தீர்வு _ அறிவுடன் சிந்திப்பதும், அறிவியல் கற்பதும்தான்.

அறிவியல்படி கல்லில் கடவுள் இல்லை, சக்தியும் இல்லை. எலுமிச்சை காவு கொடுத்தால் விபத்து நடக்காது என்பது உண்மையல்ல. கண்படுதல் என்பது (திருஷ்டி என்பது) மூடநம்பிக்கை. கண்பட்டு எந்தத் தாக்கமும் வராது. அறிவியல் அடிப்படையில் அணுகிச் சிந்தித்தால், இவையெல்லாம் பொய் என்பது உறுதி செய்யப்படும், உண்மை விளங்கும். உண்மை விளங்கினால், இந்த மடமைகள் விலகும். கேடும், பாழும் தவிர்க்கப்படும்.
மந்திரம்: படித்துப் பட்டம் பெற்றவர்கள்கூட மந்திர சக்தியை நம்புகின்றனர். மந்திரம் என்பது என்ன? வாயால் சொற்கள் உச்சரிக்கப்படுவது தான். வாயால் உச்சரிக்கப்படும் சொற்களுக்கு சக்தி எப்படி வரும்? சிந்திக்க வேண்டாமா?

பாம்பு கடித்தவரின் உடலில் ஏறிய விஷம் மந்திரம் சொன்னால் இறங்கும் என்று மந்திரம் ஓதுகிறார்கள். உடலில் ஏறிய விஷம் மந்திரத்தால் இறங்கவே இறங்காது. இது உறுதி செய்யப்பட்ட உண்மை. இந்த உண்மை புரிய, மடமை விலக அறிவியல் பார்வை வேண்டும். சோதித்துப் பார்க்க வேண்டும். சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மந்திரம் ஓதித் தயாரித்த தகடு, கயிறு என்று சொல்லி ஆயிரக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் மோசடிகள் நடப்பது எதனால்? மூடநம்பிக்கையினால்தான்.
கண்ணை மூடிக்கொண்டு பிறர் கூறுவதை நம்பாமல், அறிவியல் பார்வையில் சிந்தித்தால், சோதித்தால் மந்திரம் இல்லை என்பது உறுதி செய்யப்படும். அப்படி உறுதியானால், மடமை அகல, அறிவு துலங்கும். மூடச் செயல்கள் தவிர்க்கப்படும். அதனால் வரும் கேடுகளும் இல்லாமல் போகும்.

ஜாதி: ஜாதி நம்பிக்கை, பற்று எதனால் வருகிறது? அறியாமையால். ஜாதி என்றால் என்ன? சிந்தித்தால் ஜாதியை எவரும் நம்ப மாட்டார், ஏற்க மாட்டார்.
அறிவியல்படி எல்லா மனிதர்கள் உடலும் ஒரே அமைப்பும், இயல்பும் உடையவை. ஜாதிக்கு ஜாதி எந்த வேறுபாடும் இல்லை. ஜாதி என்பது ஒரு கற்பிதம். அது பிறப்பால் வருவது இல்லை என்பது விளங்கும். இதை விளங்கிக் கொள்ள அறிவியல் பார்வை வேண்டும்.
உனக்குக் கல்வி வராது, எனக்குத்தான் வரும், நான் மட்டுமே படிக்க வேண்டும். நீ ஏர் ஓட்டு, மலம் அள்ளு. உனக்கு அதற்குத்தான் தகுதி என்று ஜாதியால் கட்டாயப்படுத்தப்பட்டது.

சில ஜாதியினர் படிக்கக் கூடாது என்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தடை செய்யப்பட்டது அறியாமையால். ஜாதி அடிப்படையில் எவருக்கும் அறிவும், திறமையும் வருவதில்லை. வாய்ப்பு அளித்தால் எல்லா மக்களும் படிப்பர்; சாதிப்பர். இன்று அறிவியல் வளர்ச்சியால், ஜாதியால் வந்த சதி முறியடிக்கப்பட்டுவிட்டது. எல்லோருக்கும் கல்வி வாய்ப்பு கிடைத்து, எல்லோரும் கற்று ஏற்றம் பெறுகின்றனர்.

பெண்ணடிமை: பெண்கள் கற்கக் கூடாது, பெண்கள் வலுவற்றவர்கள், பெண்கள் ஆணுக்கு இணையானவர்கள் இல்லை என்ற எண்ணங்கள் அறியாமையால் வந்தவை. அறிவியல்படி பெண் ஆணுக்கு இணையானவள். இன்னும் சொல்லப்போனால் ஆணைவிட அறிவும் ஆற்றலும் நுட்பமும் உடையவள் என்பது இப்போது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டு, பெண் ஆணையும் வென்று சாதிக்கிறாள். ஆக, அறிவியல் அணுகுமுறை வந்தால் அறியாமை, அகலும். சிக்கல்கள், அநீதிகள், ஏற்றத்தாழ்வுகள் அகலும்.

ஆதிக்கம் நிலைக்க அறியாமையே அடிப்படை:

ஆதிக்கவாதிகள் எப்போதும் மக்கள் அறியாமையில், மூடநம்பிக்கையில் இருக்க வேண்டும் என்றே முயற்சி செய்வர். அதற்கான திட்டங்களையே செயல்படுத்துவர். காரணம், விழிப்பு வந்தால் மக்கள் எழுச்சி வரும், ஆதிக்கம் வீழ்ச்சியுறும். எனவேதான் ஆதிக்கம் செலுத்த விரும்பும் எவரும் மக்கள் அறிவியல் சிந்தனையுடன் வளர்ச்சி அடைவதை விரும்ப மாட்டார்கள். அவர்களை மடமையில், மூடநம்பிக்கையில் மூழ்கியிருக்கச் செய்யவே விரும்புவர்.
ஆதிக்கம் தகர்க்க அறிவு வளர்ச்சி வேண்டும்

எனவே, ஆதிக்கம் தகர்க்க அறிவு வளர்ச்சி மக்களிடையே வேண்டும். உண்மை எது, சரி எது, நீதி எது, அநீதி எது, நல்லது கெட்டது எது, சதி எது, சூழ்ச்சி எது என்பதை அவர்கள் பகுத்தாய்ந்து புரியும்படி செய்ய அவர்களுக்கு அறிவு வளர்ச்சி வேண்டும்.

எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் ஆதிக்கம் அகற்ற பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தார். மனிதன் ஆதிக்கத்திலிருந்து விடுபட மானமும் அறிவும் வேண்டும் என்றார். இந்த இரண்டுமே ஆதிக்கம் தகர்த்து, இழிவு நீக்கி, உரிமை மீட்டு சமத்துவத்தையும் சமூகநீதியையும் நிலைக்கச் செய்யும்.

தன்மான உணர்வுக்கு அறிவியலே அடிப்படை

மனிதனை மனிதன் சுமக்கும் அவலம் ஏன் வருகிறது? மனிதனுக்குத் தன்மான உணர்ச்சி இல்லாததால். தன்மான உணர்ச்சி இல்லாததற்கு என்ன காரணம்? அவனது அறியாமை மூடநம்பிக்கை. பல்லக்கில் ஏறுகிறவன் என்ன நினைக்கிறான்? நாம் செய்த புண்ணியத்தால் நமக்கு இந்த உயர்வு என்று. பல்லக்கைத் தூக்குகிறவன் என்ன நினைக்கிறான்? நாம் செய்த பாவம் பல்லக்குச் சுமக்கிறோம் என்று. பாவமும் இல்லை, புண்ணியமும் இல்லை. பல்லக்கில் ஏறுவது ஆதிக்க எண்ணம். பல்லக்கைச் சுமப்பது அடிமை எண்ணம். இதற்கு காரணம் என்ன என்று அறிவு கொண்டு சிந்தித்தால் இந்த நிலை மாற உதவும்.
மூடநம்பிக்கைகள் மனிதர்களின் மூளைக்கு விலங்கிடுவது மட்டுமல்ல,ஆதிக்கவாதிகளின் அடிக்கட்டுமானமாகவும் அது அமைகிறது என்பதை அனைவரும் ஆழமாய்க் கருத்தில் கொள்ள வேண்டும்.

மூடநம்பிக்கை தனிமனிதர்களின் தன்னம்பிக்கையைக் குறைக்கிறது.. அல்லது தகர்க்கிறது. படிக்கின்ற மாணவராயினும் மருத்துவம் பார்க்கிற மருத்துவராயினும், பிரச்சனைகளை எதிர்கொள்ளுகின்றவர்களாயினும், நாம்தான் அதைச் சாதிக்கப் போகிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும். மாறாக கடவுள், மந்திரம், தாயத்து, கிரகம், ஆசீர்வாதம், பிரார்த்தனை போன்றவற்றின் மூலம் நாம் சாதிக்கலாம் என்ற நம்பிக்கை வந்தால், அது அச்செயலின் வெற்றியை வெகுவாகப் பாதிக்கும்.

ஒரு பேருந்து ஓட்டுகின்ற ஓட்டுநர் வாகனத்தை முழுப்பாதுகாப்புடன் செலுத்த வேண்டிய பொறுப்பு உடையவர். அப்படிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஓட்டும்போது, கடவுள் பார்த்துக் கொள்வார் என்று ஓட்டினால் பெரும் விபத்தை ஏற்படுத்தும்.
குடும்பம் முன்னேற, வருவாய் பெருக முறையான திட்டமிடல், உழைப்பு, விடாமுயற்சி கட்டாயம். மாறாக பிரார்த்தனை, தாயத்து, முடிகயிறு போன்றவற்றால் இவற்றைச் சாதிக்க முயன்றால் தோல்வியே கிடைக்கும். மூடநம்பிக்கை தனிமனிதர்களைப் பாதிப்பது போலவே, சமுதாயத்தையும், தலைமுறையையும் பெரிதும் பாதிக்கிறது.

நம் வாழ்க்கையைக் கடவுள் விதிதான் தீர்மானிக்கிறது. அவர் விதித்த விதிப்படிதான் எல்லாம் நடக்கும் என்ற நம்பிக்கை இருந்தால் அவர்கள் எதையும் பெறமுடியாது, சாதிக்க முடியாது.படிப்பதற்கு மட்டுமே ஒரு ஜாதியினரைக் கடவுள் படைத்தார்; ஆட்சி, போர் செய்ய ஒரு ஜாதியினரைப் படைத்தார்; வணிகம் செய்ய ஒரு ஜாதியினரைப் படைத்தார். அடிமை வேலை செய்ய ஒரு ஜாதியினரைப் படைத்தார் என்ற மூடநம்பிக்கையை இச்சமுதாய மக்கள் மத்தியில் பதியச் செய்ததன் விளைவாய், ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் பெரும்பான்மையான மக்கள் கல்வி மறுக்கப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களாய் வாழ்ந்தனர்.

கடவுள் அப்படி யாரையும் படைக்கவில்லை,, அப்படிச் சொல்வது, ஆதிக்க ஜாதியினரின் சதி. எனவே அச்சதியைத் தகர்த்து அனைவரும் அனைத்து உரிமைகளையும் பெறத் தகுதியுடையவர்கள் என்ற விழிப்பு தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றவர்களால் மக்கள் மத்தியில் ஊட்டப்பட்டதன் விளைவாகவும்; அதற்கான சட்டங்களை, வாய்ப்புகளை உருவாக்கியதன் விளைவாகவும் இன்றைக்கு எல்லா மக்களும் கல்வி வாய்ப்பைப் பெறுகின்றனர். எல்லா வகையான பணிகளையும் ஏற்றுச் சாதிக்கின்றனர். படிக்க மட்டுமே படைக்கப்பட்ட ஜாதியினர் என்று சொல்லிக் கொண்டவர்களை விட மிகச் சிறப்பாக அடித்தட்டு மக்கள் படித்துச் சாதிக்கின்றனர்.

அறிவியல் முலாம்பூசும் அவலம்: அப்பட்டமான மூடநம்பிக்கைகளுக்கெல்லாம் அறிவியல் முலாம்பூசும் அவலச் செயலை ஆர்.எஸ்.எஸ்ஸும், பி.ஜே.பி. அரசும் செய்து வருகின்றன.

புராணக் கதைகளுக்கெல்லாம் அறிவியல் விளக்கங்களைக் கூறும் அடிமுட்டாள்தனம் அரங்கேறி வருகிறது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை வினாயகர் புராணம் கூறுகிறது. குளோனிங் முறையை மகாபாரதம் கூறுகிறது என்று ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர்களே கூறும் கேலிக் கூத்துகள் அடிக்கடி நடக்கின்றன.
மனித உடலுக்கு யானைத் தலையை உறுப்பு மாற்று செய்ய முடியாது, வெட்டி வைத்தால் உறுப்பு பொருந்தாது.
கருசிதைந்து வந்த உதிரத்தில் குழந்தை உண்டாகாது என்ற அடிப்படை அறிவுகூட இல்லாமல் இக்கருத்தைக் கூறுகின்றனர்.

வாஸ்து என்ற அப்பட்டமான மூடநம்பிக்கையையும் சோதிடம் என்ற அறிவியலுக்கு எதிரான கணிப்பு முறையையும் பல்கலைக்கழகங்களில் பாடமாக ஆக்கியுள்ள அவலமும் நடந்துள்ளது. வர்ணாஸ்ரம அடிப்படையில் மனைத்தேர்வு, வாஸ்து புருஷன் என்ற மூடக்கருத்தின் அடிப்படையில் வீடு அமைத்தல் இன்றைய கட்டடக் கலைக்கு அறவே பொருந்தாது என்ற எளிய அறிவுகூட இல்லாமல் இக்காரியங்களைச் செய்கின்றனர்.

வாஸ்து சாஸ்திரம் உருவானபோது கட்டடங்கள் கட்டும் முறையே இல்லை. குடிசைகள்தான் அமைக்கப்பட்டன. கழிவறையை வீட்டிற்குள் வைக்கும் முறை அப்போது இல்லை. ஆனால், இன்றைக்குக் கழிவறைக்குக்கூட வாஸ்து சாஸ்திர விதிகளைக் கூறுகிறார்கள். இது எவ்வளவு பெரிய மோசடி!

சூரியன் நிலையாக நின்று சுழல்கிறது என்பது அறிவியல். ஆனால், சூரியன் ஒவ்வொரு கிரகத்திற்கும் இடம் பெயருகிறது என்கிறது சோதிடம். இன்றைக்குப் புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன. அப்படியிருக்க பழைய ஒன்பது கணக்கு எப்படிச் சரியாகும். அதிலும் சூரியன் கிரகம் அல்ல. அது நட்சத்திரம். கோளுக்கும் நட்சத்திற்கும் வேறுபாடு தெரியாதவர்களால் உருவாக்கப்பட்ட சோதிடத்தைப் பல்கலைக்கழகங்களில் பாடமாக்குவது பைத்தியக்காரத்தனமல்லவா?
மூடநம்பிக்கைகள் என்று நன்கு தெரிந்தும், அறிவியலுக்கு எதிரானது என்று புரிந்தும், தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்த, மக்களைச் சிந்திக்க விடாமல் செய்ய, அவர்களை அடிமையாகவே வைத்திருக்க தெரிந்தே இத்தவறை சங்பரிவாரங்களும், அதன் ஆட்சியாளர்களும் செய்கின்றனர்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தந்தை பெரியாரின் முயற்சியால், பரப்புரையால் பெருமளவிற்கு மூடநம்பிக்கைகள் அகன்றன. ஆனால், தொலைக்காட்சி போன்ற காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும், சமூக ஊடகங்களும் சுயநலத்திற்காக மூடநம்பிக்கைகளை முனைந்து பரப்புகின்ற காரணத்தால், மீண்டும் மூடநம்பிக்கைகள் தலையெடுக்கின்றன.

காட்டுமிராண்டிச் செயல்கள்: தலையில் தேங்காய் உடைத்தல், நெருப்பில் நடத்தல், அலகுகள் குத்துதல் போன்ற காட்டுமிராண்டி காலச் செயல்களை இன்றைக்கும் பக்தியின் பேரால் செய்வது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தலையில் தேங்காய் உடைப்பதால் மூளை பெரிதும் பாதிக்கப்படும். அதன் விளைவுகள் பின்னாளில்தான் தெரியும்.

குழந்தைகளைக்கூட தூக்கிக்கொண்டு தீயில் இறங்கும் கொடுமை நடக்கிறது. சில நேர்வுகளில் தீயில் வீழ்ந்து உடல் வெந்து கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட தீங்குகள் விளைந்தாலும் மதவாத சக்திகள் இப்படிப்பட்ட மூடச்செயல்களை நடத்தி வருகின்றன. இவற்றுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து மக்களுக்கு விழிப்பூட்டுவது அரசு, ஊடகங்கள் மற்றும் பகுத்தறிவு இயக்கங்களின் கடமையாகும்!
மூடநம்பிக்கைகளை ஒழிப்போம்! அறிவியல் சிந்தனைகளை அனைவரிடமும் வளர்ப்போம்! ♦