முகப்புக் கட்டுரை : பெரியார் உலகம் சுயமரியாதையின் தலைமையகம்

2022 அக்டோபர் 01-15 2022 முகப்பு கட்டுரை

மஞ்சை வசந்தன்

உலக அளவிலான ஓர் உயரிய செயல் திட்டத்தின் கால்கோள் விழா! சமூகநீதி சரித்திரத்தில் ஒரு பொன்னாள்!
சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா. மன்றத்தில், திருச்சி சிறுகனூர் “பெரியார் உலகம்’’ ஆய்வகம்_பெரியாரியப் பயிலகம் (Research and Training Centre) அடிக்கல் நாட்டு விழா, 17.9.2022 அன்று பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன ஆயுள் செயலாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் பெரியார் உலகம் அடிக்கல் நாட்டிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார்.

’இது வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றாலும், வரலாற்றுச் சிறப்புக்கு மகுடம் சூட்டக்கூடிய நாளாக, “மண்டைச் சுரப்பை உலகு தொழும்” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 1958இல் சொன்ன செய்தி நனவாகும் வண்ணம், இன்றைக்கு பெரியாரின் 144ஆவது பிறந்தநாள் விழா _ திருச்சி சிறுகனூரில் மிகப் பெரிய அளவில் உருவாகும் “பெரியார் உலகம்” அடிக்கல் நாட்டு விழா, இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் வருகை தந்திருக்கும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களையும், தலைமை உரை நிகழ்த்த இருக்கும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் ஆயுள் செயலாளர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும், முன்னிலை வகிக்கும் அமைச்சர் பெருமக்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவேற்கிறோம்.
113 நினைவுச் சின்னங்கள் உலக அரங்கில் பாராட்டப்படுகின்றன. பெரியார் உலகம் என்பது அந்த 113இல் ஒன்றாக அல்ல; பார்ப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமல்ல; பெரியார் உலகம், அறிவு பரப்பக்கூடிய சின்னம்.

தந்தை பெரியார் மறைந்து 49 ஆண்டுகள் கழிந்தும், அன்றாடம் பெரியார் பல்வேறு தளங்களில் மய்யப் புள்ளியாக இருக்கிறார். ஆதரவு நிலையோ, எதிர்ப்பு நிலையோ அது பெரியாரைச் சுற்றியே இருக்கிறது. பெரியாரை விட்டு வெளியில் செல்ல முடியாது. பெரியார் சிலையைக் கண்டாலே இன்றும் நடுங்கும் கூட்டம் இருக்கிறது. அரசியலுக்கு பெரியார் செல்லவில்லை, ஆனால், சமூகப் புரட்சிப் படையைக் கட்டமைத்தார். மக்கள் சிந்தனை முன்னே சென்றால், சட்டம் நொண்டிக் கொண்டு தானே வரும் என்பதற்கேற்ப சமூக மாற்றத்தை ஏற்படுத்தினார். அறிஞர் அண்ணா, தனது அமைச்சரவையை பெரியாருக்குக் காணிக்கையாக்குகிறேன் என்றார். கலைஞரிடத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் இது மூன்றாம் தர அரசு என்று சொன்னபோது, இல்லை, பெரியார் மொழியில் இது சூத்திரர்களுக்காக சூத்திரர்களே ஆளும் நான்காம் தர அரசு என்றார். அந்த வழியில் வந்த முதல்வர், Ôதிராவிட மாடல்Õ என்ற பெருமைக்குரிய முதல்வர் இன்றைக்கு திராவிடம் ஆடல் ஒளியைப் பாய்ச்சுகிறார். தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்திய ஒன்றியம் முழுவதும் இந்த ஒளி பாய இருக்கிறது. சில பத்திரிகைகள் _ பெயர் சொல்ல விரும்பாத பத்திரிகைகள் எதிர்ப்புகளை அதிகம் பேசினாலும், அவர்களுடைய எதிர்ப்புகளே இந்த ஆட்சி சரியான பாதையில் செல்கிறது என்பதற்கு சான்று.
இந்நாளில், பெரியார் போட்டுத் தந்த பாதையில் இச்சமூகம் வீரநடை போட, பெரியார் உலகத்தை அமைத்து, அந்த உலகத்தில் வீரநடை போடுவோம் என்று தமது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.
திருச்சி சிறுகனூரில் அமையப்பெறுகின்ற பெரியார் உலகம் குறித்த விளக்கக் காட்சிப்பதிவு பெரியார் சுயமரியாதை ஊடகத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது.

‘விடுதலை’ மலர் வெளியீடு
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ‘விடுதலை’ மலரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து, சிறப்பு செய்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையுரை
எந்தக் கரங்கள் _ அந்த அரும்பு பிஞ்சுகளுக்கெல்லாம் உணவை எடுத்து எடுத்துப் பரிமாறியதோ, அந்தக் கரங்கள்தான் பெரியாருடைய உலகத்திற்கு அடிக்கல் நாட்டியிருக்கிறது.
இது வெறும் கட்டடத்திற்கு அடிக்கல்லா? இல்லை! ஒரு புதிய சமுதாயத்திற்கான _ புது உலகிற்கு ‘திராவிட மாடல்’ அடிக்கல் என்று நீங்கள் மாற்றியிருக்கிறீர்கள்.
எதிரிகளுக்குப் பதில் சொல்வதற்கும் இந்தக் கை _ பெரியார் பிறந்த நாளை, சமூகநீதி நாள் என்று சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில் அறிவித்து, கையொப்பமிட்ட கரங்கள் அல்லவா இந்தக் கரங்கள்! அதைவிடத் தகுதி, பெரியார் உலகத்தினுடைய அடிக்கல்லை நாட்டுவதற்கு வேறு எந்தக் கரங்களுக்கு உண்டு?
எனவேதான், உங்களுக்கு நாங்கள் அன்புத் தொந்தரவு கொடுக்கிறோம். இவ்வளவு நெருக்கடியிலும் எங்கள் அன்புக்காக இங்கே வந்து, இந்த விழாவில் பங்கேற்று இருக்கின்றீர்கள்.

அடிக்கல் நாட்டியது மட்டுமல்ல, அடிக்கல்லாகவும் இருக்கிறீர்கள்!
அதிகமாகச் சொல்லவேண்டிய அவசிய-மில்லை இந்த அரங்கத்திற்கு _ இந்தத் திட்டத்திற்கு அடிக்கல்லாக நீங்களே இருக்கிறீர்கள். வெறும் அடிக்கல் நாட்டியது மட்டுமல்ல; அடிக்கல்லாகவும் இருக்கிறீர்கள்.
பெரியாரின் தொண்டர்களுக்குத் தொண்டன் _ பெரியார் வைத்த நம்பிக்கையை, அன்னை மணியம்மையார் அவர்கள் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்த உழைத்துக் கொண்டிருக்கின்ற ஓர் எளிய தொண்டன் நான்.

கலைஞரின் கரமும் – இந்தக் கரமும்!
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்த அந்தக் கரங்கள் கலைஞருடைய கரங்கள்.
அதற்கடுத்து ‘பெரியார் உலகத்தைத்’ தொடக்கி வைக்கக் கூடிய கரங்கள், இன்றைக்கு உங்களுடைய கரங்கள்.

நம்முடைய சமுதாயத்தைத் தலைநிமிர வைத்த தலைவர்!
இது ஒரு நீண்ட திட்டம் _ அதைப்பற்றிச் சொன்னார்கள் _ 95 அடி உயர சிலை; ஆம், தலைகுனிந்த நம்முடைய சமுதாயத்தைத் தலைநிமிர வைத்த தலைவர் அல்லவா! எனவே, அந்தத் தலைவருடைய சிலையைப் பார்க்கும் பொழுது, தலைநிமிர்ந்து பார்க்கவேண்டும். இவர்தான் எங்கள் தலைநிமிர்த்தியவர் என்பதற்காக _ தலைநிமிர்ந்து பார்க்கவேண்டும் என்பதற்காகத்தான் _ 95 அடி சிலை _ 60 அடி பீடம் _ ஆக மொத்தம் 155 அடி உயரத்தில் திருச்சி சிறுகனூரில் உருவாக்கவிருக்கின்றோம். உங்களுடைய ஆட்சியில் உருவான ஒரு பெரிய புதிய நகரமாக _ புதிய உலகமாக அது இருக்கும். இன்னொரு மாமல்லபுரமாக அது திருச்சி பகுதியில் அமையும். ‘டிஸ்னி வேர்ல்ட்’ என்று எப்படி குழந்தைகளுக்கான சுற்றுலாத் தலம்போல் இருக்கிறதோ _ அப்படிப்பட்ட அமைப்புகள் அங்கே உருவாகவிருக்கின்றன.
இப்படிப்பட்ட அமைப்புகளை உருவாக்குவதற்கு நாங்கள் துண்டைத்தான் நம்பியிருக்கிறோம். துண்டை விரிப்போம் _ பிச்சை எடுப்போம் _ எங்களுக்கு அதில் பெருமை இருக்கிறது.
அய்யாவினுடைய 144ஆம் பிறந்த நாளான இன்று பெரியார் உலகத்திற்கு நீங்கள் அடிக்கல் நாட்டியிருக்கிறீர்கள். இந்தத் திட்டம் முழுமையாக நிறைவு பெறுவதற்கு தந்தை பெரியாரின் 150 ஆம் ஆண்டு பிறந்த நாள் _ இன்னும் 6 ஆண்டுகளில் முழுமையாக நிறைவடையும் _ மூன்று கட்டங்களாக.
அதற்கு மொத்தச் செலவு சுமார் 60 கோடி ரூபாய் ஆகலாம் என்று நிபுணர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
எனவேதான், பெரியார் உலகத்தில் அத்தனை அரங்கங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், குழந்தைகள் காட்சியகங்கள் _ இவை அனைத்தும் அதில் அமையக் கூடிய பெரிய நகரம் 27 ஏக்கராவில் அமையவிருக்கிறது.
இன்னும் 6 ஆண்டுகளில் அந்தத் திட்டத்தை முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கின்றோம். ஒரு வேளை அது நீண்டாலும் நீளலாம். அதற்குப் பல்வேறு தடங்கல்களும், நிதித் தட்டுப்பாடுகளும் ஏற்படலாம்.
இருந்தாலும், இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த கரங்கள் _ நம்பிக்கை தரக்கூடிய கரங்கள் என்கிற காரணத்தினால், இதைத் தொடங்கி வைத்தது மட்டுமல்ல; இந்தத் திட்டத்தை நிறைவு செய்வதும் உங்கள் பொறுப்பு என்று சொல்லிக் கொள்கிறோம்.
என்னைப் போன்றவர்கள் இந்தத் திட்டம் நிறை வேறுவதைப் பார்ப்போமோ இல்லையோ _ இந்தத் திட்டம் தொடங்கி வைப்பதைப் பார்த்துவிட்டோம். இந்தத் திருப்தி போதும்.
நாங்கள் இப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
எத்தனையோ முறை உங்களை நாங்கள் அழைத்திருக்கின்றோம். ஆனால், இன்றைக்கு எங்கள் வாழ்நாளில் ஒரு பொன்னாள்! நேற்று முன்தினம் உங்களுக்குப் பொன்னாள் _ இன்றைக்கும் பொன்னாள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய சிறப்புரை:
“பெரியார் உலகம்’’ அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்று எழுச்சியோடு உரையாற்றி மகிழ்ந்திருக்கக்கூடிய மானமிகு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர்அவர்களே! வருகை தந்திருக்கக்கூடிய பெரியோர்களே! தாய்மார்களே!
திராவிடர் கழகத்தினுடைய நிருவாகிகளே, தோழமைக் கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தோழர்களே, தொலைக் காட்சி, பத்திரிகையுலக நண்பர்களே, அன்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்!

தாய் வீட்டுக்கு வந்துள்ளேன்!
பெரியார் திடலுக்கு வந்திருக்கிறேன், என்று சொன்னால் நான் எனது தாய் வீட்டிற்கு வந்திருக்கிறேன் என்றுதான் பொருள். தாய் வீட்டுக்கு மகன் வருவது ஆச்சரியம் அல்ல. பெரியார் திடலுக்கு வருவதன் மூலமாக, உள்ளபடியே சொல்கிறேன், நாங்கள் புத்துணர்ச்சி பெறுகிறோம், உற்சாகம் அடை கிறோம், எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்கிறோம்.
செப்டம்பர் 17 ஆம் நாள் அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாள் என்பதற்காக, அந்த நாளில் மட்டும் இந்தத் திடலுக்கு நாங்கள் வந்தவர்கள் அல்லர்; என்றைக்கும் வந்திருக்கிறோம், என்றைக்கும் வந்துகொண்டிருப்போம். ஆக, இப்படி அடிக்கடி வரக்கூடியவர்கள் நாங்கள். அடிக்கடி வருவதால் எங்களை விருந்தினர் என்று சொல்ல முடியாது. நாங்களும் இந்த வீட்டிற்கு உரியவர்கள், இந்த வீட்டைச் சார்ந்தவர்கள், அந்த முறையில்தான் வந்திருக்கிறோம்.

தலைமையகம் பெரியார் திடலே!
திராவிடர் கழகத்துக்கு மட்டும் பெரியார் திடல் தலைமையகம் அல்ல; இந்தத் தமிழினத்திற்கே இதுதான் தலைமையகம் என்று சொல்லத்தக்க வகையில் இந்தத் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
சமூகநீதியின் தலைமையகமாக _
சமத்துவத்தின் தலைமையகமாக _
பகுத்தறிவின் தலைமையகமாக _
தமிழின எழுச்சியின் தலைமையகமாக_
பெண்ணுரிமையின் தலைமையகமாக _
இந்தப் பெரியார் திடல் செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவினுடைய சமூகநீதிக்காகவும் தலைமையகமாகத்தான் இந்தப் பெரியார் திடல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள் தொடங்கி, அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் இந்தப் பெரியார் திடலுக்கு வராத தலைவர்களே நிச்சயமாக இருக்க முடியாது. இத்தகைய வரலாற்றைப் படைத்துக் காட்டியிருக்கக்கூடிய மானமிகு ஆசிரியர் அவர்கள், தந்தை பெரியார் அவர்களை உலகத் தலைவராக உயர்த்திக் காட்டவே “பெரியார் உலகம்” என்பதை அவர் தொடங்கியிருக்கிறார். தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கியது பெரியார் திடல். அய்யா ஆசிரியர் அவர்கள் உருவாக்கியிருப்பது பெரியார் உலகம்! அத்தகைய உலகச் சிறப்புமிக்க பெரியார் உலகத்தின் அடிக்கல் நாட்டக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது, நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். பெரியார் கொள்கை வாழக் கூடிய காலமெல்லாம் என் பெயரும் நிலைத்து நிற்கும் என்று எண்ணி இப்போதே நான் மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறேன், பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறேன், புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கிறேன்.

சமூகநீதி நாள் என்ற அறிவிப்பால் யாருக்குப் பெருமை?
தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாளை, சமூகநீதி நாளாக நான் அறிவித்து, அந்த நாளில் எல்லோரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டுமென்று உத்தரவிட்டிருக்கிறேன். இது பெரியாருக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை என்று மட்டும் நீங்கள் கருத வேண்டாம் _ இந்த ஆட்சிக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை! உங்களுக்குக் கிடைத்திருக்கக் கூடிய பெருமை! இந்த நாட்டுக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெருமை!
அதேபோல் பெரியாரின் சிந்தனைகளை மொழிபெயர்த்து உலகின் பல்வேறு மொழிகளில் வெளியிடவும் இருக்கிறோம் என்பதை நான் அன்றைக்கு அறிவித்திருக்கிறேன். உலகின் பல்வேறு நாடுகளில் செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள், பகுத்தறிவு இயக்கங்கள், பெண்ணுரிமைச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் பெரியாருடைய சிந்தனைகளைத் தேடித் தேடி அவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், தந்தை பெரியார் அவர்கள், உலகத் தலைவர் என்பதை உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவுக்கு மட்டுமல்ல; உலகத் தலைவர் பெரியார்!
இந்தியாவிற்கு மட்டுமான தலைவர் அல்ல _ உலகம் முழுமைக்குமான தலைவராக நம்முடைய தந்தை பெரியார் அவர்கள் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், “பெரியார் உலகம்” என்று நம்முடைய ஆசிரியர் அவர்கள் இதற்குப் பெயர் சூட்டி, அந்தப் பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இதன் மூலமாக பெரியாருக்கு இணையான புகழை நம்முடைய ஆசிரியர் அவர்களும் நிச்சயமாகப் பெறுகிறார்கள், அதில் எந்தச் சந்தேகமும் கிடையாது. பத்து வயதில் பெரியாரின் தொண்டராக இணைந்து, இந்த 90 வயதிலும் இளைஞராகவே தொண்டாற்றி வருகிறார்.

வீரமணி என்றால் வெற்றி மணி!
‘வீரமணி என்றால் வெற்றி மணி’ என்று நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை அவரைப் பாராட்டியிருக்கிறார். ‘நாங்கள் செல்லும் பாதை பெரியார் திடல் பாதை தான்’. இதை நான் பலமுறை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
60 ஆண்டுகள் ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராக இருந்து நமக்கெல்லாம் நாளும் வழிகாட்டிக் கொண்டு இருக்கிறார் நம்முடைய மானமிகு அய்யா ஆசிரியர் அவர்கள். அத்தகைய திசைவழியே ‘திராவிட மாடல்’ ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்ச் சமுதாயத்தை அறிவான சமூகமாக ஆக்கும் பணியை திராவிடர் கழகம் செய்து கொண்டிருக்கிறது. அந்த அறிவான தமிழ்ச் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமான வாய்ப்பு களையும் உன்னதமான வளர்ச்சியையும் உருவாக்கித் தரக்கூடிய கடமையைத் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நிச்சயமாகச் செய்யும்.
இதுவே தந்தை பெரியாரின் 144ஆம் பிறந்தநாளில், நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளக்கூடிய உறுதிமொழி!
அந்த உறுதிமொழியுடன் நம்முடைய கடமை ஆற்றுவோம்!
உறுதிமொழி எடுக்க நான் கோட்டைக்குச் செல்கிறேன்.
நன்றி! வணக்கம்!
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் தனது நன்றியுரையில் பெரியார் உலகம்-குறித்தும், அதன் விரிவான தொலை நோக்கான செயலாக்கத் திட்டம் குறித்தும் எடுத்துரைத்தார். பெரியார் உலகம் பற்றிய அனைத்து குறிப்புகளையும், அமைய இருக்கும் 155 அடி சிலை, நூலகம், ஆய்வகம், அறிவியல் அரங்கம், கண்காட்சி போன்ற அனைத்து செய்திகளையும் எடுத்துரைத்து, பெரியார் உலகம் எல்லா இயற்கைப் பேரிடர்களையும் தாங்கி நிற்கும் என்பதைச் சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அமைச்சர்கள் கே.என்.நேரு,
சு.முத்துசாமி, பி.கே.சேகர்பாபு, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், கணேசன், ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், ஆ.இராசா, சட்டமன்ற உறுப்பினர்கள் இ.பரந்தாமன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாராஜன், துணை மேயர் மகேஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், எழும்பூர் இரவிச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழாவில் கழகப்பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, க.பார்வதி, மோகனா வீரமணி, ஆம்பூர் வடசேரி மீரா ஜெகதீசன், மருத்துவர் மீனாம்பாள், பொறியாளர் ச.இன்பக்கனி, வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிச் செல்வி, பசும்பொன்செந்தில்குமாரி, உமா செல்வராசு, சுதா அன்புராஜ், நாகவள்ளி முத்தையன், சு.குமாரதேவன், த.க. நடராசன், வி.சி.வில்வம் உள்பட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திமுக, தி.மு.க. மகளிரணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
பெரியார் உலகம் தமிழ்நாட்டிற்கு மட்டுமோ, அல்லது இந்தியாவிற்கு மட்டுமோ உரியது, பயன்படக் கூடியது அல்ல. அது உலகிற்கே ஒளி வழங்கும் ஒளி விளக்கு! சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம் இவற்றை உலக அளவில் நிலைநிறுத்தப் போகும் தலைமையகம்! அது விரைவில் கட்டமைக்கப்பட்டுப் பயன்பட, உலகெங்கும் வாழும் தமிழர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டோரும் தங்கள் பங்களிப்பைச் செய்ய வேண்டியது கட்டாயக் கடமையாகும்!
90 வயதில் இந்த இமாலயப் பணியைச் சுமந்து நிற்கும் தமிழர் தலைவருக்கு, ஒவ்வொருவரும் தோள்கொடுத்து, விரைவில் பெரியார் உலகம் நிறைவு பெற துணை நிற்க உறுதி ஏற்போம்! பெரியார் உலகை அமைப்போம்! அவர்தம் சிந்தனை உலகு சமைப்போம்!