ஆசிரியர் பதில்கள்

2024 Uncategorized ஆசிரியர் பதில்கள் ஜனவரி 1-15, 2024
பிரதமர் வேட்பாளரை
முன்கூட்டியே அறிவிக்க வேண்டாம்!
1. கே: கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் ஆயிரக்கணக்கான நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக நிரப்பப்படாமல் இருப்பதற்கு அரசியல் காரணம் உண்டா?
– தேவராஜ், கோயம்புத்தூர்.
ப : நிச்சயம் உண்டு என்பதற்கு, கொலிஜியத்தில் இடம் பெற்று அண்மையில் 25.12.2023 அன்று பதவி ஓய்வு பெற்ற மூத்த நீதிபதி, கவுல் அவர்கள் பகிரங்கமாகவே அதை, போட்டுடைப்பதுபோல நியமனங்கள்‘Pick and Choose’ என்று ‘Selective’ஆக நடைபெறுகிறது, காலதாமதத்துடன் என்பதைச் சுட்டிக்காட்டி, இப்படி தாமதம் செய்வது வழக்குகள் பைசல்கள் ஆவதை மட்டும் பாதிக்கவில்லை; பதவியேற்க முன்வரும் நீதிபதிகளின் பணி வாழ்க்கையையும் பாதிக்கிறது என்று விளக்கியதற்கு, ஒன்றிய அரசின் சட்ட அமைச்சரின் பதில், மவுனம்தானே!
2. கே: மிக மிகக் கீழ்த்தரமான, வெறுக்கத்தக்க செய்திகளையும், கருத்துப்படங்களையும் தொடர்ந்து வேண்டுமென்றே வெளியிட்டுவரும் ‘தினமலர்’ நாளிதழை தமிழர்கள் வாங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அளவில் தீவிர பிரச்சாரமும் தீர்மானங்களும் செய்ய வேண்டியது கட்டாயம் “அல்லவா? தமிழர்க்கு சொரணை ஊட்ட வேண்டாமா?
– கோமதி, விருத்தாசலம்.
ப :  சொல்லி வருவதில்லை சொரணையும் சூடும்! தானே கொதித்து, பீறிட்டுக் கிளம்பிட
வேண்டும். தி.மு.க.வினர்கள் கூட பலர் இன்னமும் அந்த உதைக்கும் காலுக்கு உதவுவதுபோல விளம்பரம் தருவதுதான், மிகவும் வேதனை வெட்கம்! நாளையாவது மாறவேண்டும்.
பொய்ச் செய்தி, பள்ளிகளில் காலை உணவு என்றால் கழிவறைப் பக்கம் பார்க்கும் கழிசடை ஏட்டுக்கும் மானமா ஈனமா? படித்து,  சொறிந்து கொள்வது தேவையா?
3. கே: மூடநம்பிக்கைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் 
கே.பாலகிருஷ்ணன் அவர்களின் கோரிக்கையை அனைத்துக் கட்சிகளைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினால் என்ன?
– வெங்கட், புதுச்சேரி.
ப : நிச்சயமாக _ வரவேற்கத்தக்க தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் ஆலோசனையை வி.அய்.டி. பல்கலைக் கழக வேந்தர் விசுவநாதன் அவர்களும் நாமும் பல மேடைகளில் வற்புறுத்தியுள்ளோம். மாண்புமிகு முதலமைச்சர் கவனித்து ஆவன செய்வார் என்று நம்புகிறோம்.
4. கே: சந்தேக அடிப்படையில் தீர்ப்பு வழங்கும் போது அது குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகத்தானே வழங்கப்பட வேண்டும்? எதிராக வழங்கியிருப்பது எப்படி ஏற்புடையதாகும்?
– புஷ்பா, கிண்டி.
ப : சட்டம் _Bebenefit of doubt always go to inside accused Bebenefit of doubt always go to inside accused என்பதை நினைவூட்டுகிறீர்கள். அது போடப்பட்டதே அரசியல் கண்ணோட்டத்தில்தானே-? எங்கும் அரசியல். எனவே, அங்கும் அரசியல் போலும்!
5. கே: உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், கனக சபை மீதேற பக்தர்களுக்கு சிதம்பரம் தீட்சிதர்கள் அனுமதி மறுப்பதை எதிர்த்து என்ன செய்ய வேண்டும்?
– காந்தி, ஊரப்பாக்கம்.
ப : பக்தர்கள் திரள வேண்டும். திரட்ட வேண்டும். இதில் பக்தியைவிட மனித உரிமை இருப்பதால், மனித உரிமை அமைப்புகளும் ஈடுபட்டு உரிமைகளை நிலைநிறுத்த முன்வர வேண்டும்.
6. கே: “இந்து’’ என்று ஒரு மதமே இல்லை இதை ஆர்.எஸ். தலைவர்களே ஒத்துக்கொண்டுள்ளனர் என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் பிரசாந்த் மவுரியா அண்மையில் கூறியுள்ளது, வடபுலத்திற்கு பெரியார் புயல் புறப்பட்டுவிட்டது என்று கொள்ளலாமா?
– பாக்கியம், திருச்சி.
ப : நிச்சயமாக, ‘சச்சிஇராமாயண்’ அதாவது, ‘உண்மை இராமாயணம்‘ என்ற தந்தை பெரியாரின் நூல் உ.பி.யில் பல பதிப்புகள் அச்சாகி உள்ளன. உச்சநீதிமன்றத் தீர்ப்பே நூலுக்குப் போடப்பட்ட உ.பி. அரசின் தடையை உடைத்ததே!
அங்கே சமாஜ்வாடி கட்சித் தலைவர் பிரசாந்த் மவுரியா கூறியுள்ளது நியாயமான உண்மையாகும்.
பெரியார் பயணம் எங்கும் பாய்ச்சல் வேகத்தோடு, தடுக்க முடியாமல் பரவும் என்பதற்கு உ.பி.யே உதாரணம்!
7. கே: இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை முன்கூட்டியே  அறிவிப்பது ஏற்புடையதாகுமா?
– நல்லதம்பி, வேலூர்.
ப : நிச்சயமாக, தேவையில்லை. பி.ஜே.பி. வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களின் முதல்வர்களை முன்கூட்டியே அறிவித்தா
அவர்கள் தேர்தலை நடத்தினார்கள்? கேட்க அவர்களுக்கு உரிமையேது?
8. கே: மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை சரியா? மத்திய அரசு செய்வதுதானே சட்டரீதியான பலனைத் தரும்?
– சின்னப்பொண்ணு, வேப்பம்பட்டு.
ப : மத்திய அரசே மேற்கொள்வதுதான் நியாயமானது; தமிழ்நாடு அரசு ஏற்கனவே புள்ளி விவரங்களைத் திரட்டி தயார்நிலையில் வைத்துள்ளது!
9. கே: பி.ஜே.பியை கூட்டணியிலிருந்து அ.தி.மு.க. விலக்கியதால் சிறுபான்மையினர் வாக்குகள் அ.தி.மு.க.விற்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு சரியா?
– பர்வதம்மாள், காசிமேடு.
ப : ஆசைகளைக் குதிரைகளாக்கி எப்படியும் சிந்திப்பார்கள். அ.தி.மு.க.வின் கனவு பலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்.
உண்மை அழுகைக்கும் பொய் அழுகைக்கும் உள்ள வேறு பாட்டை சிறுபான்மையினர் நன்கு அறிந்தவர்கள்.  ♦