“நாங்கள் இந்துக்கள் அல்ல!” லிங்காயத்துகள் அறிவிப்பு!

2024 Uncategorized கட்டுரைகள் மற்றவர்கள் ஜனவரி 1-15, 2024

ஜாதிவாரியாக புதியதாக கணக்கெடுப்பு நடத்தினால் ‘லிங்காயத்துகள்’ தங்களை இந்துக்கள் அல்ல என பதிவு செய்ய வேண்டும் என கருநாடகாவின் வீரசைவ லிங்காயத்துகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது _ பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கருநாடகாவில் லிங்காயத்துகள், ஒக்கலிகா, கவுடாக்கள் ஆகியவை பெரும்பான்மைப் பிரிவுகள். லிங்காயத்துகள் தற்போது இந்துக்களாக இருந்தாலும் தங்களை வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே அங்கீகரிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்டகால கோரிக்கை.

இந்த நிலையில் கருநாடகாவின் தாவணகெரேவில் வீர சைவ லிங்காயத்துகளின் மகாசபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் காங்கிரஸ், பாஜகவைச் சேர்ந்த லிங்காயத் தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், பி.ஒய். விஜயேந்திரா, பசவராஜ் பொம்மை, லக்‌ஷ்மி ஹெப்பல்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சாமனூர் சிவசங்கரப்பா, லிங்காயத் அமைப்பின் பன்னாட்டு தலைவர் என்ற முறையில் தலைமை வகித்தார்.
கருநாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு காந்தராஜ் கமிட்டி அமைக்கப்பட்டது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதலமைச்சர் சித்தராமையாதான் இந்தக் கமிட்டியை அமைத்தார்.

ஆனால் இந்தக் கமிட்டியின் அறிக்கை ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இதனால் காந்தராஜ் கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என கருநாடகாவின் பெரும்பான்மை ஜாதி அமைப்புகள் வலியுறுத்துகின்றன. கருநாடகாவில் ஆளும் காங்கிரஸிலும் இந்த காந்தராஜ் கமிட்டி அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்கிற குரல்கள் வலுத்துள்ளன. இதனால் புதியதாக அறிவியல் பூர்வமாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அப்படி புதியதாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் போது, லிங்காயத்து ஜாதியினர் தங்களை “‘இந்து மதம்’ ‘இந்து’க்கள் என பதிவு செய்யக் கூடாது; வீரசைவ லிங்காயத்துகள் என தனி மதமாகவே பதிவு செய்ய வேண்டும்” என அழைப்பு விடுத்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது _ லிங்காயத் மாநாடு! மேலும் வீரசைவ லிங்காயத்துகளின் கீழ் வரும் உள்ஜாதிகளை ஓபிசி (இதர பிற் படுத்தப்பட்டோர்) பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

”லிங்காயத்திசம் -_ ஒரு தனி மதம்” என்ற புத்தகத்தை எழுதியவரும், 29 ஆண்டுகள் தத்துவத்துறையின் பேராசிரியராகப் பணி புரிந்தவருமான முனைவர் என்.ஜி. மகாதேவப்பா, “மூடநம்பிக்கைகளைப் பெரிதும் எதிர்க்கும் மதமாக 12ஆம் நூற்றாண்டில் பசவண்ணா லிங்காயத்து மதத்தை உருவாக்கினார்” என்கிறார்.
”வேதங்கள், புராணங்கள், ஆகமங்களை நிராகரிக்கும் மதமாகவும், யாகங்கள் தேவையற்றவை என்றும் பசவண்ணா லிங்காயத்து மதத்தை ஏற்படுத்தினார். கடவுளுக்குப் பலி கொடுக்கும் வழக்கம் லிங்காயத்து வழிபாட்டில் இல்லை. 12-ஆம் நூற்றாண்டில் பசவண்ணா எழுதிய கருத்துகள், பின்னர் வந்த அக்கம்மா தேவி போன்றோர் வகுத்த நெறிகளைக் கொண்டதாக இந்த வழிபாடு உள்ளது என்பதால், தற்போது இந்து மதம் என்று அறியப்படும் வழிபாட்டு முறையில் இருந்து லிங்காயத்து சமூகம் முற்றிலும் வேறுபடுகிறது” என்கிறார். லிங்காயத்து வழிபாடு தொடர்பாக 18 புத்தகங்களை எழுதியுள்ள மகாதேவப்பா, “தற்போது இந்து மதத்தின் கீழ் ஒரு ஜாதிப் பிரிவாக லிங்காயத்து வழிபாடு கருதப்படுகிறது. ஜாதிப் பாகுபாட்டை எதிர்த்தவர் பசவண்ணா. லிங்காயத்து மக்கள் அணிந்துள்ள லிங்கம், சைவக் கோயில்களில் உள்ள லிங்க வடிவம் அல்ல. பீடம் இல்லாமல், ஆதிகால லிங்க வடிவத்தைக் கொண்ட அமைப்பு அது,”

”லிங்காயத்து மக்கள் அணியும் லிங்கத்தை சைவ மதத்தோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் குழப்பம் தான் இது; வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்து என்ற ஒரு மதமே கிடையாது. ஆறுவகையான மதங்களைத் தொகுத்து, தற்போது பழக்கத்தில் இருப்பது இந்துமதம். சிவன், திருமால், முருகன், கணபதி, சக்தி, சூரியன் என ஒவ்வொரு கடவுளும் தனித்தனி மதங்களாக வழிபடப்பட்ட தெய்வங்கள். அரசியல் காரணங்களுக்காகவும், கோயில்களை நிருவாகம் செய்யவும், பூர்வ ஆச்சாரியர்கள் இந்த மதங்களை இணைத்தனர்,” என்று குறிப்பிடுகிறார். ♦