காலத்தால் அழியா கலைவாணர்…

2022 2022 நவம்பர் 16-30 2022 மற்றவர்கள்

“எவனொருவன் தன்னலமில்லாமல்,பயமில்லாமல் தொண்டாற்ற முயலுகிறானோ அவன் வெற்றி பெறுவான் என்பதோடு ஒரு புரட்சி வீரனுமாவான் என்பதற்கு நமது கிருஷ்ணன் அவர்களே எடுத்துக் காட்டாகும்” என்று தந்தை பெரியாராலும், “சமூக விஞ்ஞானி” என்று அறிஞர் அண்ணாவாலும், கலையுலகம் கண்டெடுத்த முத்து, நல் உழைப்பால் உயர்ந்த உத்தமர்,
கலையுலகிற்கு குளிர் தருவாக அவர் இருந்தார்.

ஏழை எளிவர்களின் பக்கம் அவரது கொடைக்கரம் நீண்டு கொண்டே இருந்தது. அவரில்லாமல் படங்கள் வெற்றி பெறுவது இயலாத ஒன்றாயிருந்தது என்று டாக்டர் கலைஞராலும் பாராட்டப்பட்டவர்தான். திரையுலகின் தவிர்க்க இயலா அங்கமாகத்
திகழ்ந்து நகைச்சுவையால் தன் வித்தகத் தன்மையை விரித்து பாமர மக்களிடத்தும் சிந்தனையைத் தூண்டி சீர்திருத்தக் கருத்து-களைப் பரப்பிய சீரிய பண்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன்.

இவர் நாஞ்சில் நாட்டில் நாகர்கோவிலை அடுத்துள்ள ஒரு சிறிய கிராமமான ஒழுகினசேரியில் சுடலைமுத்து –_ இசக்கியம்மாள் இணையாருக்கு 1908ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் நாள் பிறந்தார். வறுமையின் தாக்கத்தால் அய்ந்தாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடராத என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள், திரைப்படங்கள் மூலம் மூடநம்பிக்கை ஒழிப்பு, அறிவியல் கருத்துகள் பரப்பல், சமூக சமத்துவம் உருவாக்கல் போன்றவற்றிற்குப் பாடுபட்டார்.

1924 முதல் 1957 வரை முப்பத்து மூன்று ஆண்டுகள் நடிப்பில் கோலோச்சிய காலங்களில் அவர் ஈட்டிய செல்வமனைத்தையும் வறியோர்க்கும், வீடு தேடி வந்து உதவி கோரியோர்க்கும் இல்லையெனாது வாரி வழங்கி வள்ளலாகத் திகழ்ந்தார். பண்பில் சிறந்தவராய், பழகுதற்கெளியராய் விளங்கி ரசிகப் பெருமக்களிடம் மட்டுமின்றி, தமிழகத் தலைவர்களிடையும் நன்மதிப்பும், நட்புறவும் பெற்று விளங்கினார்.
1944இல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையிலிருந்தபோது, தந்தை பெரியார் அவர்கள் “இந்த மாணிக்கத்தை விடுவிக்க தமிழக மக்கள் கட்சி பேதம் இன்றி ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் அய்ம்பதாயிரம் ரூபாய் திரட்டி இந்தக் கலைஞர்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டுவோம்’’ எனக் கூறி அய்ம்பதாயிரம் திரட்டிக் கொடுத்தார். இது பெரியார் இவர் மீது வைத்திருந்த மதிப்பு, பற்று, பாசத்தை உணர்த்தியது. அந்தப் பணத்தைக் கொண்டு ‘லண்டன்’ ‘பிரிவி கவுன்சிலில்’ வழக்கு நடத்தியதால் அவர்கள் விடுதலை பெற்றனர்.

அண்ணாவின் திரைக்கதை வசனத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்ற ‘நல்லதம்பி’ திரைப்படத்தை என்.எஸ்.கே.தான் எடுத்தார். அதன்மூலம் சீர்திருத்தக் கருத்துகளைப் பரப்பினார். அக்கால திரைப்பட நடிகர்களில் முதன் முதலாக ரஷ்ய சுற்றுப் பயணம் மேற்கொண்ட பெருமைக்குரியவரும் இவரே. 1951 ஆம் ஆண்டு ரஷ்யா சென்று வந்து அந்நாட்டின் சிறப்பை பல பொதுக் கூட்டங்கள் மூலம் மக்களிடம் விளக்கிக் கூறினார்.
இவ்வளவு சிறப்புகளுக்குரிய கலைவாணர் அவர்கள் தன் கடைசிக் காலத்தில் வறுமையில் வாழ்ந்தார். இவர் நோய்வாய்ப்பட்டு மருத்துவ-மனையில் இருந்த போது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் உதவி செய்தார். எனினும் சிகிச்சை பலனின்றி 1957 ஆகஸ்ட் 30 ஆம் நாள் இயற்கையெய்தினார்.

இவருடைய சிலையை தியாகராயர் நகர் வாணிமகால் அருகில் 14.6.1969 அன்று அன்றைய முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்கள், தான் நோய்வாய்ப்பட்டு இயலா நிலையிலும் வருகை தந்து திறந்து வைத்து, தன் சீரிய நண்பருக்குச் சிறப்பு செய்தார்.
கலைவாணர் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும் சரித்திர நாயகர். றீ