ஹோமோ சேப்பியன்ஸ் ஷாம்பியாவில் நடந்த ஆய்வில் புதிய திருப்பம்

2023 கட்டுரைகள் நவம்பர் 1-15, 2023 மற்றவர்கள்

சரவணா இராஜேந்திரன்

முதன்முதலில் நடக்கத் துவங்கிய மனித இனம் உருவாக்கிய மரத்தால் ஆன கூடாரம் கண்டுபிடிப்பு!

தென்மேற்கு ஆப்பிரிக்கா நாடான ஜாம்பியாவில் உள்ள ஸாம்பி ஆற்றின் கரையில் பண்டைய கால மரக்கட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பழங்கால மனித வாழ்க்கை பற்றிய இன்றுவரையிலான கருத்தியலையே மாற்றிவிடும் வகையில் உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுமார் அய்ந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மனிதர் தமக்கான கட்டமைப்பை உருவாக்க மரத்தைப் பயன்படுத்தி இருப்பதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள இந்தச் சான்றுகள், கற்கால மனிதனின் தங்குமிடங்களாக இருந்ததைக் காட்டுவதாக, ‘நேச்சர்’ ஆய்விதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது “இந்தக் கண்டுபிடிப்பு நமது ஆரம்பகால மூதாதையர்
களைப் பற்றி இதுநாள் வரையில் நமக்கு இருந்த புரிதலை மாற்றியுள்ளது,”

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் தலைமையிலான குழு, மனித இனத்தின் ஆழமான வேர்களைத் தேடி ஆய்வு மேற்கொண்டது. குறிப்பாக, பழங்காலத்தில் மரங்கள் பயன்பாட்டில் இருந்தனவா என்பது குறித்து இந்தக் குழு ஆய்வு செய்தது.

இதன்படி ஜாம்பியாவில் உள்ள மேய்ச்சல் குழு ஒன்று இதுவரை காணாத ஒரு பொருளைக் கண்டதாகக் கொடுத்த தகவலின்படி அந்த நாட்டு அரசு தொல்பொருள் ஆய்வுக்குழுவை அனுப்பியது. பேராசிரியர் லாரி பர்ஹாம் தலைமையில் அக்குழு அங்கு சென்று ஆய்வு செய்து அது பழங்காலத்தில் மனிதர்களால் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டை என்பதை உறுதி செய்தனர்

இந்தக் கண்டுபிடிப்பு பழங்கால மனிதர்கள் எளிமையான, நாடோடி வாழ்க்கை நடத்தியதாகக் கருதும் தற்போதைய நமது எண்ணத்தை மாற்றியமைக்கக்கூடும்.
பண்டைய கால மனிதர்கள் மரத்திலிருந்து அவர்கள் தங்களின் புத்திசாலித்தனம், கற்பனை மற்றும் திறன்களைப் பயன்படுத்தி, தங்களது காலத்துக்கு முன்பும், பின்பும் பார்த்திராத ஒன்றை உருவாக்கினர்’’, என்கிறார் பர்ஹாம்.

மரக்குச்சிகள் உள்ளிட்ட பழங்கால மரப் பொருள்களை ஆராய்ச்சியாளர்கள் தங்களது ஆய்வில் கண்டுபிடித்தனர். ஆனாலும் அவற்றில், ஒன்றுக்கொன்று செங்குத்தான நிலையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு மரக்கட்டைகள் தான் அவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.

“ஒன்றன் மீது ஒன்று சாய்த்து வைக்கப்பட்டது போன்ற நிலையில் காணப்பட்ட அவற்றில் வெட்டுகளும் இருந்தன என்கிறார் ஆய்வுக் குழுவின் உறுப்பினரும், அபெரிஸ்ட்வித் பல்கலைக்கழகத்தின் புவியியல் பேராசிரியருமான ஜெப் டல்லர் கூறினார்.

“இந்த மரக்கட்டைகளில் உள்ள வெட்டுகள், கல்லால் ஆன கருவியால் ஏற்பட்டவை “இது இரண்டு மரக்கட்டைகளையும் ஒன்றாகப் பொருத்தி ஒரு கட்டமைப்பாக ஆக்குகிறது” என்கிறார் டல்லர். பெரிய மரக்கட்டைகள் ஒன்றுக்கொன்று செங்கோணத்தில் இருந்தன, அவற்றில் கல் கருவிகளால் வெட்டப்பட்ட அடையாளங்கள் இருந்தன.

இந்த மரக்கட்டைகள் சுமார் 4.76 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பது மேற்கொண்டு செய்யப்பட்ட பகுப்பாய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெருப்பை உருவாக்குவதற்கும் குச்சிகள், ஈட்டிகள் போன்ற தற்காப்புக் கருவிகளை உருவாக்குவதற்கும் தான் மனிதன் மரத்தைப் பயன்படுத்தி வந்தான் என்பதே இதுவரை நமது புரிதலாக உள்ளது.

பிரிட்டனின் எசெக்ஸுக்கு உட்பட்ட கிளாக்டன் பகுதியில் மணலில் புதைந்திருந்த மர ஈட்டி ஒன்று கடந்த 1911இல் கண்டெடுக்கப்பட்டது. உலகின் பழமையான மரக் கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்பட்ட அது, 4,00,000 ஆண்டுகள் பழமையானது என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், ஜாம்பியா -தான்சானியா எல்லைக்கு அருகில் உள்ள கலம்போ நீர்வீழ்ச்சிக்கு மேலே வளைந்து செல்லும் ஆற்றங்கரையில் தற்போது இரு மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவை தண்ணீரில் மூழ்கியிருந்ததாகக் கருதிய ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் காலத்தை லுமினென்சென்ஸ் டேட்டிங் தொழில்நுட்பம் மூலம் கணக்கிட்டனர்.

அதில், எந்த வகையான பண்டைய மனிதர்கள் அல்லது மனித இனங்கள் இவற்றை உருவாக்கினர் என்பதைத் தெளிவாகக் கணிக்க இயலவில்லை. மேலும், இந்த மரக்கட்டைகள் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இதுவரை எலும்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

ஆனால், 3,15,000 ஆண்டுகள் பழமையான நாகரிக மனிதன் அல்லது ஹோமோசேப்பியன் புதைபடிவங்களைவிட இந்த மரக்கட்டைகள் மிகவும் பழமையானவை என்பது மட்டும் டேட்டிங் தொழில்நுட்ப ஆய்வில் தெரிய வந்தது.

இரண்டு மரக்கட்டைகளில், சிறியதான ஒன்றின் நீளம் சுமார் 1.5மீ (5அடி). அதை மற்றொன்றுடன் பொருத்தி ஏதோவொரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கக் கூடும்.

ஆனால் அது ஒரு குடிசை அல்லது நிரந்தர வசிப்பிடமாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறும் ஆய்வுக் குழுவினர், அது ஒரு தங்குமிடத்திற்கான தளத்தின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். ஆற்றங்கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதற்கு வசதியான ஒரு கட்டமைப்பாக இருந்திருக்கலாம் என்றும் பேராசிரியர் டல்லர் கூறினார்.

ஆனால், அவை எந்த வகையான கட்டமைப்பாக இருந்திருக்கும் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்வது கடினம் எனவும் அவர் தெரிவித்தார். “ஜாம்பியா ஆற்றங்கரையில் கண்டெடுக்கப்பட்ட மரக்கட்டைகள் ஹோமோசேப்பியன் காலத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாமா என்று எங்களுக்குத் தெரியாது. ஏனெனில் அந்தக் காலத்தைய புதைபடிவங்களை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை,” என்கிறார் பேராசிரியர் டல்லர். ஆனால், “தென்னாப்பிரிக்காவில் அந்த நேரத்தில் பல மனித இனங்கள் இருந்தன. எனவே ஹோமோ எரெக்டஸ் அல்லது ஹோமோ நலேடி மனித இனங்களின் காலத்தைச் சேர்ந்தவையாக இவை இருக்கலாம்,” என்கிறார் அவர்.

பகுப்பாய்வு மற்றும் பாதுகாப்பிற்காக இந்த மரக்கட்டைகள் பிரிட்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. கடந்த அரை மில்லியன் ஆண்டுகளாக மிகவும் அழகாகப் பாதுகாக்கப்பட்ட நீர்த் தேக்கத்தைப் பிரதிபலிக்கும் தொட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ள அவை, விரைவில் மீண்டும் ஜாம்பியாவுக்குக் கொண்டு வரப்படும் என்கின்றனர் ஆய்வுக் குழுவினர்.

“இந்தக் கண்டுபிடிப்பின் மூலம், எங்கள் சேகரிப்பை வளப்படுத்தவும், ஜாம்பியாவில் மரவேலைப் பாரம்பரியத்தின் இருப்பு குறித்து விளக்குவற்கான ஆய்வுகளுக்கும் இந்த மரக்கட்டைகளைப் பயன்படுத்தலாம் என்று நம்புகிறோம்,” என்று என்கோம்ப்வே கூறினார். கொலம்போ நீர்வீழ்ச்சித் தளத்தில் பணியைத் தொடர்ந்த அவர், “பண்டைய மரவேலை நுட்பங்கள், கைவினைத்திறன் மற்றும் சுற்றுச்சூழல் உடனான மனிதத் தொடர்புகள் குறித்த நமது அறிவை ஆழப்படுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளன,” என்கிறார். ஹோமோசேப்பியன்ஸ் என்ற இன்றைய மனிதர்களுக்கு முன்பு ஹோமோ எரக்டன்ஸ், ஹொமோ நலேடி உள்ளிட்ட 14 வகை நிமிர்ந்து நடக்கும் இன்றைய மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் இருந்தனர். இதில் ஹோமோ சேப்பியன்ஸ்களுக்கு முன்பு ஜாம்பியாவில் 5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த எரக்டன்ஸ்களுக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அய்ரோப்பாவில் வாழ்ந்த ஹோமோ நியண்டர்தாலென்ஸிஸ் ஹோமோசேப்பியன்ஸ் ஆதிக்கத்தால் அழிந்தே போனார்கள். ஆனால் ஹோமோ எரக்டன்ஸ் ஹோமோ சேப்பியன்ஸ்களின் ஆதிக்கத்தையும் மீறி ஆசியக்கண்டங்களில் பரவி இருந்தனர் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதர ஹோமோ அந்தேசெசர், Homo antecessor எரக்டஸ் Homo erectus, பிலோரெசியன்சிஸ் Homo floresiensis ஹபிலிஸ் Homo heidelbergensis ஹெடெல்பர்கென்சிஸ் Homo habilis லோங்கி Homo longi, நியாண்டர்தாலென்ஸிஸ் Homo neanderthalensis ரொடொசியன்ஸிஸ் Homo rhodesiensis, ருடொல்ஃபென்ஸிஸ் Homo rudolfensis போன்றவை காலஓட்டத்தில் ஹோமோசேப்பியன்ஸ்களோடு போட்டியிட முடியாமல் அழிந்து போயின.

தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மரக்கட்டைகளைப் பயன்படுத்திய மனிதர்களை ஒத்த உயிரினத்திற்கும் தற்போது நிலநடுக்கோட்டுப் பகுதியில் வசிக்கும் மனிதர்களுக்கும் நெருங்கிய உறவு உள்ளது என்றும் இதன் மூலம் ஹோமோ சேப்பியன்ஸ் என்ற மனித இனம் மட்டுமே உயிரினவாழ்வியல் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றும் அதற்கு முன்பே ஓர் உயிரினம் இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. மரக்கட்டைகளின் பகுப்பாய்வு மேலும் அப்பகுதியில் கிடைக்கும் உயிரின எச்சங்கள் மூலம் மனித இனத் தோற்றத்தின் வரலாற்றில் மேலும் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்படும் என்பதில் அய்யமில்லை. ♦