விழிப்புணர்வு – தேசிய, இன, மத, மொழி சிறுபான்மை சமூகத்தினர் உரிமை பற்றிய பிரகடனம்

2023 Uncategorized ஆகஸ்ட் 1-15,2023 கட்டுரைகள்

இப்பிரகடனம் அய்.நா. பொதுச் சபையால் 18.12.1992 அன்று நிறைவேற்றப்பட்டதாகும்.

தனது அமைப்புத் திட்டத்தில் அறிவித்திருப்பதுபோல் இனம், பால், மொழி, மதவேறுபாடின்றி அனைவருக்கும் மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் உண்டென்பதனைப் பேணுதலும் அதற்குரிய மரியாதை கிடைப்பதை ஊக்குவித்தலும் அய்.நா.வின் அடிப்படை நோக்கங்களில் ஒன்றென்பதை மீண்டும் உறுதி செய்யும் வகையிலும்,அடிப்படை மனித உரிமைகளிலும் மானிடனின் கண்ணியம், மதிப்பு ஆகியவற்றிலும், சிறிதும் பெரிதுமான நாடுகளின் ஆண்-பெண் அனைவரது சமமான உரிமைகளிலும் நம்பிக்கையை மீண்டும் உறுதிசெய்யும் வகையிலும்,

♦ அமைப்புத் திட்டத்திலும், பன்னாட்டு மனித உரிமைப்பிரகடனம், இனக்கொலை பாதகத்தைத் தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான உடன்படிக்கை, அனைத்துவிதமான இனப்பாகுபாடுகளையும் ஒழிப்பது பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை, குடிமக்களின் உரிமைகள், அரசியல் உரிமைகள் மீதான பன்னாட்டு உடன்படிக்கை, பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றிய பன்னாட்டு உடன்படிக்கை, மதம் – நம்பிக்கை இவற்றின் அடிப்படையிலான சகலவித சகிப்பின்மை, பாகுபாடு ஆகியவற்றை ஒழிப்பதற்கான பிரகடனம், குழந்தைகளின் உரிமைகள் பற்றிய உடன்படிக்கை மற்றும் இது போன்றவை தொடர்பாக உலகளாவியதாகவோ குறிப்பிட்ட பகுதிகளிலோ ஏற்படுத்தப்பட்டுள்ள ஆவணங்கள், அய்.நா. உறுப்பு நாடுகளுக்குள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைகள் முதலியவற்றில் ஒளிர்கின்ற தத்துவங்களை நனவாக்குவதற்கு உறுதுணை செய்ய விழைந்தும்,

♦ இன, மத, மொழிச் சிறுபான்மை மக்களின் குடிமக்கள் உரிமை, அரசியல் உரிமை பற்றிய பன்னாட்டு உடன்படிக்கையில் 27ஆம் பிரிவின் வாசகங்களால் உந்தப்பட்டும்,

♦ தேசியவழி, மொழிவழி, மதவழி, இனவழி, சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதும், பேணப்படுவதும், அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல் சமூக உறுதித்தன்மைக்கு உதவும் என்பதைக் கருதியும்,

♦ ஒட்டுமொத்தமான சமூக வளர்ச்சியின் பிரிக்க முடியாத பகுதியாக சட்டத்தின் ஆட்சி என்ற அடிப்படையிலான ஜனநாயக அமைப்புக்குள் இன, மத, மொழி, தேசியச் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்ந்து பேணப்படுவதும் பாதுகாக்கப்படுவதும் மக்களிடையிலும் நாடுகளுக்கிடையிலும் நட்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்தும் என்பதை வலியுறுத்தியும்,

♦ சிறுபான்மையோர் பாதுகாப்பில் அய்.நா.வின் முக்கியப் பங்கினைக் கருதியும்,

♦ அய்.நா. அமைப்பின்மூலம், குறிப்பாக மனித உரிமை ஆணையம் மூலமும், சிறுபான்மையினர் பாகுபாட்டுத் தடுப்பு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான துணை ஆணையம் மூலமும் பன்னாட்டு மனித உரிமை உடன்படிக்கைகள் மற்றும் இது தொடர்பான பன்னாட்டு மனித உரிமை உடன்படிக்கைகள் மூலம் அமைக்கப்பட்ட பிற நிறுவனங்கள் வழியாகவும், இன, மொழி, மத, தேசிய சிறுபான்மையினர் உரிமைகளைக் காப்பதிலும், பேணுவதிலும் இதுவரை செய்யப்பட்டிருக்கும் பணிகளை மனதில் இருத்தியும்,

♦ சிறுபான்மையினரைப் பாதுகாப்பதிலும் இன, மத, மொழி, தேசிய சிறுபான்மையோர் உரிமைகளைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் பல அரசுக் கூட்டுறவிலும் அரசுசாரா அமைப்புகள் மூலமும் செய்யப்பட்டு வரும் நற்பணிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டும்,

♦ இன, மத, தேசிய மொழிவழி சிறுபான்மையினர் உரிமை மீதான பன்னாட்டு மனிதஉரிமை ஆவணங்களை இன்னும் பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டிய தேவையினை ஒப்புக்கொண்டும்,

♦ அய்.நா. பொதுச்சபை இந்த தேசிய, இன, மத, மொழிச் சிறுபான்மையினர் உரிமைகள் மீதான பிரகடனத்தை முழங்குகிறது.

விதி 1:

1. சிறுபான்மையினரின் தேசிய, இன, கலாச்சார, மத, மொழிஅடையாளங்களை தமது ஆட்சிப் பரப்புக்குள் அரசுகள் அங்கீகரிக்கும்; பாதுகாக்கவும் செய்யும். அவர்களின் அவ்வித அடையாளங்கள் பேணப்படுவதை ஊக்குவிக்கும்.
2. இந்த நோக்கங்களை நிறைவு செய்ய சட்டமியற்றல் மற்றும் பிறவகை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

விதி 2:

1. தம்முள்ளும், வெளியிலும், சுதந்திரமாகவும், குறுக்கீடோ, எவ்வகைப் பாகுபாடோ இன்றி தமது சொந்தக் கலாச்சாரத்தை அனுபவிக்கவும், தமது மதத்தை நம்பவும், கடைப்பிடிக்கவும், தமது மொழியைப் பயன்படுத்தவும், தேசிய, இன, மத, மொழிச் சிறுபான்மையினருக்கு (இனி இங்கு சிறுபான்மையினர் என்று குறிக்கப்படவிருப்போருக்கு) உரிமை உண்டு.

2. பண்பாட்டு, மத, சமூக, பொருளாதார, பொதுவாழ்வில் பயனுள்ள வகையில் பங்கு பெற சிறுபான்மையினருக்கு உரிமை உண்டு.

3. அந்தந்த தேச சட்டங்களுக்கு உட்பட்ட வழியில், தங்கள் வாழிடங்களிலும் தமது சிறுபான்மை இனத்துள்ளும் தேசிய அளவிலும் வட்டார அளவிலும் முடிவுகளெடுப்பதில் பயனுள்ள முறையில் பங்கெடுக்க சிறுபான்மை-யினருக்கு உரிமையுண்டு.

4. சிறுபான்மையினருக்கு தமக்கென்று சங்கங்கள் அமைத்துக் கொள்ளவும் அவற்றை நடத்திச் செல்லவும் உரிமையுண்டு.

5. சிறுபான்மையினருக்கு, எந்தவிதப் பாகுபாடுமின்றி, தமது குழுவின் பிற உறுப்பினர்களுடனும், பிற சிறுபான்மை இனத்தாருடனும், எல்லை தாண்டியும் பிற அரசுகளின் குடிமக்களுடன் தேசிய வழியிலோ, இன, மொழி, மத வழியிலோ இணைக்கும் உறவுகள் இருந்தால்அவர்களுடனும் தன்னிச்சையாக அமைதி
பூர்வமான தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளவும், வளர்த்துக் கொள்ளவும் உரிமை உண்டு.

விதி 3:

1. இந்தப் பிரகடனத்தில் பொதிந்துள்ளவை உள்பட தமது எல்லா உரிமைகளைத் தனியாகவோ, தம் குழுவினருடன் இணைந்தோ எவ்விதப் பாகுபாடுமின்றிப் பயன்படுத்தலாம்.

2. இந்தப் பிரகடனத்தில் பொதிந்துள்ள உரிமைகளைப் பயன்படுத்துவதாலோ பயன்படுத்தாமையாலோ எந்தச் சிறுபான்மை மனிதருக்கும் எவ்வித சிரமமும் ஏற்படாது.

விதி 4:

1. தமது மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் அனைத்தையும் எவ்விதப் பாகுபாடு இன்றியும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற அடிப்படையிலும் சிறுபான்மையினர் முழுமையாகவும் பயனுள்ள வகையிலும் அனுபவிப்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை அரசுகள் தேவைப்படும்போது மேற்கொள்ளும்.

2. குறிப்பான சில வழக்கங்கள் தேசிய சட்டங்களை மீறுவனவாகவோ அனைத்துலகத் தரங்களுக்கு மாறாகவோ இருந்தாலன்றி சிறுபான்மைக் குழுவினர் தமக்கென உள்ள அடையாளங்களை வெளிப்படுத்துவதற்கும் தமது பண்பாடு, மொழி, மதம், மரபு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்ளவும் வசதியான சூழலை ஏற்படுத்தித் தரத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

3. அரசுகள், சிறுபான்மையினர் தமது தாய்மொழியைக் கற்கவும் தாய்மொழியில் கற்கவும் முடிந்தவரையில் தக்க நடவடிக்கை எடுக்கும்.

4. தேவையான இடங்களிலெல்லாம் அரசுகள் தமது எல்லைக்குள் வாழும் சிறுபான்மையினரின் வரலாறு, மரபுகள், மொழி, பண்பாடு பற்றி அறிவதை ஊக்குவிக்கும் வண்ணம் கல்வித்துறையில் நடவடிக்கைகள் எடுக்கும். ஒட்டுமொத்தமாக சமூகத்தைப் பற்றி கற்கவும் அவர்களுக்குப் போதிய வாய்ப்புகள் இருக்கும்.

5. தத்தம் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றில் சிறுபான்மையினர் முழுமையாகப் பங்கெடுக்க வகை செய்ய அரசுகள் தகுந்த நடவடிக்கைகளைப் பரிசீலிக்கும்.

விதி 5:

1. தேசியக் கொள்கைகளையும் திட்டங்
களையும் தீட்டுவதிலும், நடைமுறைப்படுத்து
வதிலும் சிறுபான்மையினரின் நியாயமான நலன்களுக்கு உரிய கவனம் தரப்படும்.

2. அரசுகளுக்கிடையிலான உதவித்திட்டங்கள், ஒத்துழைப்புத் திட்டங்கள் ஆகியவற்றைத் திட்டமிடுவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் சிறுபான்மையினரின் நியாயமான நலன்களுக்கு உரிய கவனம் தரப்படும்.

விதி 6:

சிறுபான்மையினர் பற்றிய பிரச்சினைகளில் தகவல்களையும் அனுபவங்களையும்
பகிர்ந்து கொள்வது உள்பட அரசுகள் பரஸ்பர நல்லெண்ணமும் நம்பிக்கையும் பேணும் வகையில் தம்முள் ஒத்துழைக்க வேண்டும்.

விதி 7:

இப்பிரகடனத்தில் பொதிந்துள்ள உரிமைகள் மதிக்கப்பட வசதியாக அரசுகள் தம்முள் ஒத்துழைப்பு தந்துகொள்ள வேண்டும்.

விதி 8:

1. சிறுபான்மையினர் தொடர்பாக அரசுகளுக்குரிய எந்தக் கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கும் இந்தப் பிரகடனத்தில் கண்டுள்ள எதுவும் தடையாக இராது.

2. இந்தப் பிரகடனத்தில் பொதிந்துள்ள உரிமைகளை அனுபவிப்பது உலகு ஒப்பிய மனித உரிமைகளையும், அடிப்படை சுதந்திரங்களையும் யார் அனுபவிப்பதையும் பாதிக்காது.

3. இந்தப் பிரகடனத்தில் பொதிந்துள்ள உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான அரசுகளின் எந்த நடவடிக்கையும் அதன்
அளவிலே அய்.நா. மனித உரிமைகள் பிரகடனத்தில் கண்டுள்ள சமத்துவத் தத்துவத்துக்கு முரணானதாகக் கருதப்படமாட்டாது.

4. இப்பிரகடனத்தில் கண்டுள்ள எதுவும், அரசுகளின் இறையாண்மை, சமத்துவம், எல்லை நிர்ணயிப்பு, அரசியல் சுதந்திரம் முதலிய அய்.நா.வின் கோட்பாடுகள், நோக்கங்கள் ஆகியவற்றுக்கு முரணான எவ்வித நடவடிக்கையையும் அனுமதிக்கிற வழியில் பொருள் கொள்ளப்படக்கூடாது.

விதி 9:

அய்.நா. அமைப்பைச் சேர்ந்த நிறுவனங்களும் சிறப்பு நிறுவனங்களும் தத்தம் துறைகளின் எல்லைக்குள் இப்பிரகடனத்தில் பொதிந்துள்ள உரிமைகளும் தத்துவங்களும் முழுதாக அனுபவிக்கப்பட தமது பங்களிப்பைத் தரும். ♦