வர்ணப் பிரிவுகள் பிறப்பாலா? குணத்தாலா?

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூன் 1-15, 2023

– நேயன்

சனாதன ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் சமயத்-திற்கு ஏற்ப தங்கள் கருத்துக்களை திரித்தும், மாற்றியும் கூறி மக்களை ஏமாற்றுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வர்ணப் பிரிவுகள் மக்களால் இக்காலத்தில் ஏற்கப்படவில்லை, எதிர்க்கப்படுகின்றன என்றவுடன், அதற்கேற்ப வர்ணப் பிரிவுகளுக்கும் திரித்து விளக்கம் அளித்துவருகின்றனர்.

வர்ணப் பிரிவுகள் பிறப்பால் வருவன அல்ல. அவை ஒருவரின் இயல்பால் செயலால் வருபவை என்கின்றனர். அதற்கு ஆதரவாக,
சதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம் குண-கர்மவிபாகஸ:என்ற பகவத்கீதை வரியை எடுத்துக்காட்டி, ‘‘குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களை உருவாக்கினேன்’’ என்று கண்ணன் கிருட்டிணன் கூறியுள்ளார் என்கின்றனர்.

முதலில் வர்ணங்களை உருவாக்கியவர் யார்? என்பதிலே மிகப்பெரிய பித்தலாட்டமும் மோசடியும், அயோக்கியத்தனமும் அடங்கியுள்ளன.
சனாதனவாதிகளின் ஆதாரநூலான மனுஸ்மிருதி நான்கு வர்ணங்களை உருவாக்-கியவர் பிரம்மா என்கிறது.

“அந்த பிரம்மாவானவர் உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், துடை, கால் இவைகளிலிருந்து முறையே, பிராமணன், ஷத்திரியன், வைசியன், சூத்திரன் இவர்களைவுண்டு பண்ணினார்.’’ என்கிறது மனுஸ்மிருதி.
(மனு – முதல் அத்தியாயம் 31ஆவது ஸ்லோகம்)

மனுஸ்மிருதியின் இக்கருத்துப்படி வர்ணப்பிரிவுகள் படைக்கப்பட்டவை. அதாவது பிறப்பால் வருபவை என்றாகிறது.
அது மட்டுமல்ல, நான்கு வருணத்தாருக்குரிய கடமைகளையும் பிரம்மாவே படைத்தார் என்கிறது.

87. அந்தப் பிரம்மாவானவர் இந்த வுலகத்தைக் காப்பாற்றுதற்காக தன்முகம் தோள் துடை பாதம் இவைகளினின்று முண்டான பிராமண க்ஷத்திரிய வைசிய சூத்திரவருணத்தாருக்கு இம்மைக்கு மறுமைக்கு முபயோகமான கருமங்களைத் தனித்தனியாகப் பகுத்தார்.

88. பிராமணனுக்கு ஓதுவித்தல், ஓதல், எக்கியஞ்செய்தல், எக்கியஞ் செய்வித்தல், தானங்கொடுத்தல், தானம் வாங்குதல் ஆகிய இவ்வாறு தொழிலையும் ஏற்படுத்தினார்.

89. ஷத்திரியனுக்கு பிரசைகளைத் தருமமாகக் காத்தல், தனங்கொடுத்தல், வேதமோதுதல் பாட்டு கூத்து ஸ்த்திரி முதலிய விஷயங்
களில் மநஞ்செல்லாமை இவை நான்கையும் ஏற்படுத்தினார். எக்கியஞ் செய்தல் முதலான தருமகாரியங்களும் அவனுக் குண்டு.

90. வைசியனுக்கு பசுவைக் காப்பாற்றுதல், தானங்கொடுதல், வேதமோதுதல், சலத்திலும் பூமியிலு முண்டான இரத்தினம் நெல்லு முதலியவைகளின் வியாபாரஞ் செய்தல், வட்டிவாங்குதல், பயிரிடுதல் இவ்வாறையும் ஏற்படுத்தினார்.

91. சூத்திரனுக்கு இந்த மூன்று வருணத்தாருக்கும் பொறாமையின்றி பணி செய்வதை முக்கியமான தருமமா ஏற்படுத்தினார்.
இதனால் அவனுக்கு தான முதலியவையு முண்டென்று தோன்றுகிறது.

இந்துமத சனாதன பித்தலாட்டப் பேர்வழிகளை நாம் பார்த்துக் கேட்கும் கேள்வி, வர்ணங்களைப் படைத்தது பிரம்மாவா? கிருஷ்ணனா? அறிவு நாணயத்தோடு இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

உண்மையென்றால் அது ஒன்றாக இருக்கும்; பொய்யென்றால், மோசடியென்றால், பித்தலாட்டம் என்றால் அது பலவாக இருக்கும்.

வர்ணங்களை உருவாக்கியவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் என்பதுதான் உண்மை. தாங்கள் செய்த சதியை மறைக்க கடவுள் மேல் அந்தப் பழியைப் போட்டு ஏமாற்ற அவர்கள் பலவிதமாகக் கதைகளைச் சொன்னதால்தான், வர்ணத்தைப் படைத்தவர் யார் என்பதில் பல முரண்பட்ட செய்திகள் வருகின்றன என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

வர்ணப் பிரிவுகள் குண அடிப்படையில் என்றால் அது பிறப்பால், பரம்பரையாக வரமுடியாது அது தனிநபரின் குணத்தைப் பொறுத்து மாறும், மாறவேண்டும்.

ஒரு சூத்திரனுக்குப் பிறந்த பிள்ளை குணத்தால் பிராமணனாக ஆகமுடியும்¢; ஒரு பிராமணனுக்குப் பிறந்த குழந்தை குணத்தால் சூத்திரனாக ஆகமுடியும். அப்படி ஆனால்தான் வர்ணம் குணஅடிப்படையில் ஆனது என்று ஆகும். ஆனால், அப்படியில்லையே! பிராமணனுக்குப் பிறந்தால் அவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவன் பிராமணன்தான். சூத்திரனுக்குப் பிறந்தவன் எவ்வளவு சிறந்தவனாக இருந்தாலும் அவன் சூத்திரன்தான் என்ற நடைமுறைதானே உள்ளது? அப்படியிருக்க வர்ணம் குண அடிப்படையில் ஆனது என்று கூறுவது அசல் அயேக்கியத்தனம் அல்லவா?

மேலும் மனுதர்மம்,

பிராமணன் முதல்வருணத்தானானதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்தவிடத்திற் பிறந்ததினாலும் இந்தவுலகத்தில் உண்டாயிருக்
கிற சகலவருணத்தாருடைய பொருள்களையும் தானம்வாங்க அவனே பிரபுவாகிறான்.
(அத்.1, ஸ்லோகம் – 100)

ஆதலால் பிராமணன் ஒருவரிடத்தில்
தானம்வாங்கினாலும் தன்பொருளையே சாப்பிடுகிறான்; தன் வஸ்த்ரத்தையே உடுத்துகிறான்; தன்சொத்தையே தானஞ்செய்கிறான். மற்றவர்கள் அவன்றயையினாலேயே அவற்றையனுபவிக்கிறார்கள்.
(அத்.1, ஸ்லோகம் – 101)

அந்தப் பிராமணனுடையவும் மற்றவர்களுடையவும் கருமாநுஷ்டானங்களைப் பகுத்தறிவதற்காக இந்தச் சாஸ்திரத்தை யோனியிற்
பிறவாத புத்திசாலியான சுவாயம்பு மநுவானவர் பிரசித்தப்படுத்தினார்.
(அத்.1, ஸ்லோகம் – 102)

என்று கூறுகின்றது. அப்படியென்றால் வர்ணங்கள் பிறப்பால் உயர்வும், தாழ்வும் பெறுகின்றன என்பது உறுதியாகிறது.
எனவே, வர்ணங்கள் குணத்தால் என்பது முதல்தர மோசடியாகும். உண்மைக்கு மாறான பித்தலாட்டப் பிரச்சாரமாகும்.
ஆகவே, மனித தர்மத்திற்கு எதிரான வர்ணதர்மம் ஒழிக்கப்படவேண்டியதாகும்.