ஜல்லிக்கட்டு – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு – 2023 சிந்துவெளி நாகரிகம் முதல் தொடரும் திராவிடர் அடையாளத்திற்கு கிடைத்த பெரு வெற்றி!

2023 கட்டுரைகள் மற்றவர்கள் ஜூன் 1-15, 2023

உடுமலை வடிவேல்

இந்தியா ஒரு துணைக் கண்டமாக இருப்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. போன்ற பாசிச அமைப்புகளின் அகண்ட பாரதம் கனவுக்குப் பெரும் தடையாக இருக்கிறது. இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருந்தாலும், அரசியல் சாசனப்படி இயங்கினாலும், ஒவ்வொரு மாநிலமும் தனித்தனியான பண்பாட்டையும், அடையாளங்களையும் கொண்டவையாக இருக்கின்றன. போதாததற்கு முகலாயர்கள், பிரித்தானியர்கள் போன்றவர்களின் அடையாளங்கள் என பல்வேறு பண்பாடு, அடையாளங்களைக் கொண்டுள்ளது இந்தியா. ஆகவே, வேற்றுமையில் ஒற்றுமை என்கின்ற அளவில்தான் இந்தியா ஒன்றுபட்டு இருக்கிறது. ஒற்றுமை மறந்து வெறும் வேற்றுமை மட்டுமே கோலோச்சுமானால் இந்தியா என்ற நாடு சிதறுண்டு போகும். இப்படிப்பட்ட கத்தி மேல் நடக்கும் காரியத்தைத்தான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. தங்களின் கனவாக –  கொடுங்கனவாகக் கண்டுகொண்டிருக்கின்றன. அதற்கான திட்டங்களையும் தீட்டிக்கொண்டும் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் மாநிலங்களின் தனி அடையாளங்களைத் தகர்ப்பது. இதுதான் ஜல்லிக்கட்டில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆகிய அமைப்புகளின் பார்வை.
2014ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனேயே தொடங்கிவிட்டது இவர்களின் சூழ்ச்சி. அதற்கு முன்பாகவே 1998 தொடங்கி, 2004 வரை பிரதமர் அடல்பிகாரி வாஜ்பேயி அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோசி, சிந்துசமவெளி நாகரிகம் ஆரிய நாகரிகம்தான் என்று திரிபு செய்ய, கணினி மூலமாக காளை மாட்டை குதிரை ஆக்கினார். வரலாற்றாசிரியர்கள், ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்த பலத்த எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைவிடப்பட்டது. அன்று அவர்கள் பதுங்கியிருந்தார்கள். கல்வியறிவும், விழிப்புணர்வும் பெற்றுவிட்ட மக்களை கணினி வரைகலை மூலமாக ஏமாற்ற முடியாது என்பதால்தான் சட்டப்படியாகவே ஏமாற்றிவிடலாம் என்று துணிந்து பீட்டா அமைப்பு மூலமாக முயற்சித்தனர். இதை ஜல்லிக்கட்டு வழக்கின் வரலாற்றைப் பார்த்தாலே புரிந்துவிடும்.

‘ரேக்ளா ரேஸ்’சுக்கு தடை கோரும் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை 2006 இல் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. 2007 மேல்முறையீட்டு விசாரணையில், அறுவடை காலங்களில் நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி வழங்கியது. அதே ஆண்டில் இவ்வழக்கு உச்சநீதிமன்றம் சென்று, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. 2008 ஜனவரியிலும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சீராய்வு மனுவை ஏற்று, அனுமதி வழங்கப்பட்டது. 2011இல் வித்தை காட்ட தடைவிதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளையும் சேர்க்கப்பட்டது. இது மறைமுகமாக வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2012இல் மதுரை, திருச்சி, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. 2013இல் ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டது. 2014இல் தடை கோரப்பட்ட இவ்வழக்கில், நிரந்தரமாக ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. 2015இல் தடையை நீக்கக் கோரிய தமிழ்நாடு அரசின் மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்த நிலையில் 2016இல் காட்சிப்படுத்தும் பட்டியலில் காளையையும் சேர்த்து உத்தரவிட்டது. இதற்கும் உச்சநீதிமன்றம் தடைவிதிக்க, மொத்தமாக ஜல்லிக்கட்டு தடைப்பட்டது. 2017இல் இதை எதிர்த்துக் கனன்று கொண்டிருந்த இருபால் இளைஞர்கள் மூலமாக தமிழ்நாட்டில் மெரினா புரட்சி வெடித்தது. வேறு வழியின்றி தமிழ்நாடு அரசு ஓர் அவசரச் சட்டத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்றது. அதுவரையிலும் பின்னிருந்து இயங்கிய ஆரியம், இப்போது நேரிடையாகவே ’பீட்டா’ எனும் அமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு கூடாது என்று வழக்கு தொடர்ந்தது. 2018இல் இவ்வழக்கு 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், ”தமிழ்நாடு அரசுக்கு சட்டம் இயற்ற உரிமை உள்ளது. இதில் நீதிமன்றம் தலையிடாது’’ என்று 2023இல் தீர்ப்பளித்துள்ளது. ”ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு கொண்டுவந்திருக்கும் சட்டம் மிகவும் திருப்தி அளிக்கும் வகையில் இருக்கிறது. இதனால் யாருக்கும் எந்தச் சிக்கலும் கிடையாது. ஜல்லிக்கட்டு நடத்துவதை உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கிறது’’ இது தீர்ப்பின் வாசகங்கள்.

‘‘பேசநா இரண்டுடையாய் போற்றி! போற்றி!’’ என்று அண்ணா ஆரிய மாயையில் குறிப்பிட்டுள்ளதை நினைவு படுத்திக்கொண்டால், பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை, ”மாண்புமிகு மோடி வந்தபிறகுதான் இந்த வெற்றி வந்திருக்கிறது. ஆகவே பிரதமருக்கு நன்றி’’ என்று டிவிட்டரில் குறிப்பிட்டிருப்பது நமக்கு வியப்பாகத் தோன்றாது. உண்மையாகவே இந்த வெற்றி யாரால் சாத்தியத்தப்பட்டது? உச்சநீதிமன்றத்தின் விசாரணையின் போது என்ன நடந்தது?

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணை நடந்துகொண்டிருந்தது. தமிழ்நாடு அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர்கபில்சிபில், “கடமை, உரிமை என்று இரண்டு விசயங்கள் இருக்கின்றன. இந்த நாட்டினுடைய தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தவேண்டியது கடமை! அது உரிமை அல்ல! அதே போல மனிதர்கள் விலங்குகளிடம் கரிசனத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது கடமைதானே தவிர, அது விலங்குகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமை அல்ல’’ என்று வாதாடியிருந்தார்.

தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காளைகளைப் பயன்படுத்தி நடத்தப்படும், பல்வேறு பண்பாட்டு நிகழ்வுகளுக்குத் தடைகோரி, வழக்குத் தொடர்ந்தது Animal welfare board of India. இது ழிநிளி அல்ல. இந்திய அரசாங்கத்திற்கு விலங்குகள் குறித்தான அறிவுரைகள் வழங்கக்கூடிய வழிகாட்டும் அமைப்பு. இந்தத் துறையை நிர்வகிப்பவர் ஒன்றிய இணையமைச்சராகப் பதவிபெற்றுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாண்புமிகு எல்.முருகன். Ministry of Animal welfare board and husbendary என்ற துறையின் வழிகாட்டும் அமைப்புதான் இந்த Animal welfare board of India.  இந்த அமைப்புதான் வழக்கை நடத்திக்கொண்டிருக்கிறது. ஆக, பா.ஜ.க. அரசுதான் இந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதிக்க வேண்டும் என்று வாதாடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கையில், ‘இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி எப்படி காரணமாவார்? இது அக்கப்போர் அண்ணாமலைகளுக்குத்தான் வெளிச்சம்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஜல்லிக்கட்டை அனுமதிக்க வேண்டும் என்று மனதார விரும்பியிருந்தால், தமிழர்களின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருந்திருந்தால் இந்த வழக்கை தாக்கல் செய்யவேண்டாம் என்று அந்தத் துறைக்கு அறிவுறுத்தியிருக்கலாமே? ஒருவேளை அவருக்கு தமிழர்களின் பண்பாடு பற்றி அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று வைத்துக்கொண்டாலும், தமிழ்நாட்டிலிருந்து இணை அமைச்சராகச் சென்ற எல். முருகன் அறிவுறுத்தியிருக்கலாமே? அவருக்குமா தெரியாது? மாறாக வழக்கின் இறுதிவரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்பதுதான் கிஸீவீனீணீறீ ஷ்மீறீயீணீக்ஷீமீ தீஷீணீக்ஷீபீ வைத்த வாதம். இதை எதிர்த்து வழக்காட மூத்த வழக்கறிஞரான கபில்சிபில் அவர்களை நியமித்த திராவிட மாடல் அரசான தமிழ்நாடு அரசுக்குத்தான் இந்த வெற்றி சாரும். அரசமைப்புச் சட்டப்படியும், தமிழர்களின் உரிமைகள் பறிபோகாவண்ணம் வாதாடியதால்தான் இந்த வெற்றி சாத்தியமாகியிருக்கிறது.

”When legislature has declare that, Jallikkattu is a part of cultural heritage of Tamizh Nadu State. Judiciary cannot take a different view. Legislature is best suited to decide that” என்று ஒருமனதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள், 5 நீதிபதிகளும்! ஏன் இந்த வரிகள் முக்கியமானதென்றால், “இந்த சட்டத்திற்கு அங்கீகாரம் கிடையாது. The legislature passed by the Tamizh Nadu legislative assembly is incompetent. இது திறனற்றது. இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இந்த சட்டத்தை இயற்றும் அதிகாரம் கிடையாது’’ என்பதுதான், இதை எதிர்த்தவர்கள் முன்வைத்த ஒரு முக்கியமான வாதம். இதற்கு எதிராகத்தான் தமிழ்நாடு அரசு போராடி, வெற்றியும் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த Legislative incompetence என்று அவர்கள் சொன்ன வாதத்திற்குத்தான், கே.எம்.ஜோசப் தலைமையிலான அமர்வு,”Judiciary cannot take a different view” என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அதாவது ஜல்லிக்கட்டைப் பொறுத்தவரை அது பாரம்பரியமானது என்று முடிவு செய்வதற்கான அதிகாரம் உங்களுக்கோ, எங்களுக்கோ கிடையாது. அது தமிழ்நாட்டின் சட்டமன்றத்திற்குத்தான் இருக்கிறது. சட்டமன்றம் மட்டும்தான் அதை தீர்மானம் செய்வதற்கான அமைப்பு! என்பதுதான் இதன் பொருள்.

ஜல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பாதுகாப்பு, அங்கு கூடுகின்ற மக்களுக்குப் பாதுகாப்பு என்று பல்வேறு வாதங்களை வைத்து எப்படியாவது ஜல்லிக்கட்டைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று போராடியிருக்கின்றனர் எதிர் தரப்பினர். ஆனால், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருக்கக்கூடிய சட்டத்திருத்தம் – அதாவது, Prevention of curelty to animals Act எனப்படும் ஒன்றிய அரசின் சட்டத்தில், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த திருத்தம் மிகத்தெளிவாக யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்தபிறகுதான் போட்டியை நடத்த அனுமதிக்கிறோம் என்று தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டின் மூலமாக மாடுகளின் உரிமை பறிக்கப்படுகிறது என்கிற வாதத்தை சிலர் முன்வைத்தார்கள். அரசமைப்புச் சட்டப்படி விலங்குகளுக்கு உரிமைகள் என்று எதுவும் வரையறுக்கப்படவில்லை. மாறாக விலங்குகளைக் காப்பாற்றும் கடமையைத்தான் சொல்கிறது அரசமைப்புச் சட்டம். எத்தனையோ விலங்கினங்கள் தோன்றி அழிந்திருக்கின்றன. ஆனால், நாட்டு மாட்டினங்கள் பாதுக்காக்கப்படுவதற்கு ஜல்லிக்கட்டும் ஒரு முக்கியமான காரணம். மாட்டை வெறுமனே பாலுக்காக வளர்க்காமல், மக்கள் நேயத்தோடுதான் வளர்க்கிறார்கள் என்றும் கபில்சிபில் கூடுதலாக ஒரு வாதத்தை எடுத்து வைத்திருக்கிறார்.

இத்தனைக்கும் பிறகுதான் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா அரசுகள் கொண்டு வந்திருக்கக்கூடிய, ஜல்லிக்கட்டு, கம்பாளா, மாட்டுவண்டிப் பந்தயம் ஆகியவை சட்டபடி செல்லும். இவற்றுக்கு அரசியல் சாசனப்படி உரிமை இருக்கிறது என்று உறுதிப்படுத்தியிருக்கிறது கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு! இந்த வழக்கில் அ.இ.அ.தி.மு.க.வுக்கும் பங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். அன்றைக்கிருந்த தமிழ்நாடு அரசின் பலவீனத்தால், ஒன்றிய அரசு செய்த பல்வேறு உரிமைப் பறிப்புகளால் கொதி நிலையில் இருந்த தமிழ்நாட்டு மக்கள், ஜல்லிக்கட்டு தடையை ஒரு காரணமாகச் சொல்லி, மெரினாவில் மக்கள் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தவிர்க்கவே முடியாமல் தமிழ்நாடு அரசு இந்தப் ‘போராட்டத்திற்கு அனுமதி வழங்குகிறது’ என்கிற வகையிலும், இதன் மூலம் அரசியல் ரீதியிலான சில அனுகூலங்களைக் கைப்பற்றிவிட வேண்டும் என்கிற வகையிலும்தான் மேனாள் முதல்வரான பன்னீர்செல்வம் அவர்கள், ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தார். மக்கள் புரட்சி மட்டும் இருந்திருக்காவிட்டால், மடியில் கனமிருந்த தமிழ்நாட்டு அரசுக்கு தலைமை தாங்கியவர்களால் ஒன்றுமே செய்திருக்க முடியாது. காரணம், இதே கோரிக்கையோடு அன்றைய முதல்வர் பன்னீர்செல்வம் டில்லிக்குச் சென்றபோது, ‘இதில் என்னால் எந்த உத்தரவாதமும் தரமுடியாது’ என்று விரட்டியடித்துவிட்டார் பிரதமர் நரேந்திர மோடி. இவர்களா ஜல்லிக்கட்டு வெற்றிக்கு உரிமை கோருவது? போராடிய மக்கள்தான் அந்த உரிமையைப் பெற்றுத்தந்தவர்கள். இப்போது தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசு நியமித்த வழக்கறிஞர் முன்வைத்த வாதத்தை இதற்குமுன்பு எந்த வழக்கறிஞரும் வைத்தது கிடையாது. அந்த அளவுக்கு தமிழ்நாடு அரசு ஈடுபாட்டுடன் சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடி, இந்த வெற்றி பெற்றுத் தந்திருக்கிறது.
தாய்க்கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வி.கி.,ஙி.லி., அவர்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று, அன்றே (18-.05.-2023) ‘விடுதலையில்’ அறிக்கை கொடுத்திருக்கிறார். அதில், ”மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய இந்தத் தீர்ப்பானது, சிந்துவெளி நாகரிகம் முதல் இன்று வரை தொடரும் திராவிடர் வரலாற்றுத் தொடர்ச்சியின் அடையாளத்திற்குக் கிடைத்த பெருவெற்றியாகும்! ஆரிய சூழ்ச்சிகளுக்கு சம்மட்டி அடி தீர்ப்பு! பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு எதிரான, பண்பாட்டு அடையாள மீட்புப்போரில் இது ஒரு முக்கிய மைல் கல்லாகும்” என்று மிகச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி இன்னும் ஏராளமான மாநில, சிறுபான்மை மத அடையாளங்களை அகற்றிவிட்டு அகண்ட பாரதம் அமைக்கத்தான் பிரதமர் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அமைத்திருக்கிறார். அதையும், மன்னிப்புக் கடிதங்களுக்கு பெயர் பெற்ற விநாயக் தாமோதர் சாவர்க்கர் பிறந்தநாளில் (28.05.2023) திறந்துவைத்து உள்ளார். நமது பார்வையில் அது நாடாளுமன்றக் கட்டடம் அல்ல; மன்னர்களின் அரண்மனை! அதை செங்கோலும் “ஆம்’ என்கிறது. அப்போதுதானே அகண்ட பாரதம் அமைக்க முடியும்? இதுதான் அவர்களின் கொடுங்கனவு. இதற்காக அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அந்தத் துணிச்சலில்தான், ”ஜல்லிக்கட்டை தடை செய்தது தடை செய்ததுதான். இனி எந்தக்காலத்திலும் ஜல்லிக்கட்டு நடக்காது’’ என்று கொக்கரித்தார், ஒன்றிய அரசின் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன். அந்தக் கொடுங்கனவைத்தான் திராவிட மாடல் அரசு, சட்டப்படியாகவே ஜல்லிக்கட்டு மூலம் இலேசாகக் கலைத்து விட்டிருக்கிறது. இலேசாகத்தான்!

அதற்கே ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டான 2025க்கு­­ள்,ஏதாவது செய்துவிடவேண்டும் என்ற அவர்களின் எண்ணத்தில் மண்ணையள்ளிப் போட்டிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு! தமிழ்நாட்டில் ’ஜல்லிக்கட்டு’ என்ற பண்பாட்டு அடையாளம், பெரியார் சொல்வது போல, கல்லுப்போல மேலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. இல்லாத இராமர் பாலத்தைக் காப்பாற்ற நினைக்கும் இந்தக் காவிக்கூட்டம், தமிழரின் தொன்மை மரபை, காழ்ப்பின் காரணமாய் தகர்த்திட முனைந்தால் தமிழர்கள் விடுவார்களா? என்றைக்கும் திராவிடம் வெல்லும்! ஆரியம் தோற்கும்! இதை வரலாறு சொல்லும்!