கட்டுரை – மதத்தை அரசியலிலிருந்து பிரிக்கவேண்டும்!

2023 ஏப்ரல் 1-15,2023 கட்டுரைகள் மற்றவர்கள்

மாவீரன் பகத்சிங்

 

(பகத்சிங் 20 வயது நிறையும்போதே பல்வேறு சிந்தனைகளை எழுதியுள்ளார்; பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க தீர்வுகளும் கூறியுள்ளார்.

சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டபோது, பகத்சிங் தனிநபர் பயங்கரவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்றும், அவர் சிறையில்தான் மார்க்ஸியத்-தையே கற்றுக் கொண்டார் என்றும் சிலர் அவருடைய ஆய்வு பற்றியும், முதிர்ச்சி பற்றியும், அறியாமையால் தவறாகக் கூறுகின்றனர். உண்மையில் அவர் சிறைக்குச் செல்லும்போதே முழு முதிர்ச்சியுடனும், தெளிவுடனும் இருந்தார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை சாண்டர்ஸ் கொலைக்கு6 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலம் முழுவதையும் படித்தால், அவரைப் பற்றித் தவறாகக் குறிப்பிடுகின்றவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள முடியும். அது பின்வரும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரையின் கருத்துகளை, மத மோதல்கள் நிறைந்த இக்காலத்தில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்.

இக்கட்டுரை 1928 ஜூன் ‘கீர்த்தி’ இதழில் பகத்சிங்கால் எழுதப்பட்டது. அதன் சாரத்தை அடியில் வடிக்க விரும்புகிறேன்.)

“இந்தியாவின் தற்போதைய நிலை மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. ஒரு மதத்தார் மற்றொரு மதத்தாருக்குப் பிறவி எதிரியாகக் கொள்ளப்படுகிறார். அண்மையில் லாகூரில், சீக்கியர்களையும், இந்துக்களையும் எவ்வளவு கொடுமையாக முஸ்லிம்கள் கொலை செய்தார்கள்! சீக்கியர்களும் அதே விதத்தில் பதிலுக்குச் செய்தார்கள். இக்கொலைகளில் தனிப்பட்ட மனிதரின் வெறுப்பு காரணமாக அமையவில்லை. மாறாக, அவர்கள் குறிப்பிட்ட மதத்தார் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டார்கள். தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களைக்கூட, தனக்கு எதிர் மதத்தார் என்பதால் கொலை செய்கிறார்கள்.

இப்படிப்பட்ட மதம் சார்ந்த கொலைகள் இந்தியாவின் மதிப்பைக் குலைத்துவிட்டன.
பொதுவாக மதவாதத் தலைவர்களும், செய்தித்தாள்களுமே, இக்கலவரங்களின் பின்னணியில் உள்ளார்கள். புனிதமாகக் கருதப்பட்ட பத்திரிகைத் தொழில்கூட இன்றைக்கு மோசமாகச் சீரழிந்து வருகிறது. பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளால் மூண்ட கலவரங்கள் ஏராளம்.

மக்களுக்கு அறிவூட்டி, குறுகிய மனப்பான்மையிலிருந்து அவர்களை விடுவித்து, மத நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டியது பத்திரிகைகளின் உன்னதமான கடமையாகும். ஆனால், மாறாக அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, மதத்தைப் பரப்ப, உணர்வைத் தூண்டி மோதச் செய்கின்றன. இக்கலவரங்களால் ஒரே நாட்டு மக்கள் என்கின்ற உணர்வு சிதைக்கப்படுகிறது. இதை எண்ணும்போது எம் கண்களில் ரத்தக்கண்ணீர் வருகின்றது. இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி பிறக்கிறது. அது நம் இதயத்தைப் பிளக்கிறது.
ஒத்துழையாமை இயக்கத்தின்போது நம் மக்களிடையே இருந்த நாட்டுப்பற்று, இன்று மதப் பற்றாக மடை மாற்றப்பட்டு, சிதறுண்டு சீர்கெட்டு நிற்கிறார்கள். இந்த நிலை பிரிட்டிஷாருக்கு எவ்வளவு ஆதரவானது என்பதை உணர வேண்டும்.

இம்மதக் கலவரங்களின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று ஆழமாகச் சென்று பார்த்தால், அது பொருளாதாரக் காரணிகளில் இருப்பதை நாம் அறியலாம். அது மட்டுமல்ல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதாரக் காரணிகளேயாகும். இது ‘கார்ல் மார்க்ஸ்’- கோட்பாடுகளில் ஒன்று.

இந்தியாவில் ஒருவனுக்கு வெறும் நாலணா கொடுத்து, மற்றொருவனைத் தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினி கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்ற இயலாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான்.

நம் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வைத் தட்டியெழுப்ப வேண்டும். ஏழை விவசாயிகளும், உழைப்பாளிகளும் தங்கள் உண்மையான எதிரிகள் முதலாளிகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் முதலாளிகளின் கைப்பாவையாகி விடக்கூடாது.

தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, தங்கள் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீறி, ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலே குறியாக இருக்க வேண்டும். அதன் மூலமே அவர்கள் நலமும், வளமும், சமநிலையும் பெற முடியும். இதற்காக அவர்கள் இழக்கப் போவது எதுவும் இல்லை அவர்களது அடிமை விலங்குகளைத் தவிர.

இரஷ்யாவின் வரலாற்றை அறிந்தவர்கள், அவர்களது நிலையும், நம்முடைய நிலையைப் போன்றே இருந்தது என்பதை நன்கு உணர முடியும். ஜார் மன்னனின் ஆட்சிக் காலத்திலும், அந்நாட்டு மக்கள் நம்மைப் போன்றே பல குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டனர். ஆனால், தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஒட்டுமொத்த சூழலும் மாறிவிட்டது. இப்போது அங்கு கலவரங்கள் நடப்பதில்லை. மனிதர்கள் அங்கே மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள். பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக நடத்தப்படுவதில்லை. மக்கள் அங்கே வர்க்க உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.

கல்கத்தாவில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு ஒருங்கிணைந்தவர்கள், மதக் கலவரங்களில் ஈடுபடுவதில்லை. வேறுபட்ட மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். கலவரங்களைத் தடுக்கவும், ஒடுக்கவும் அவர்கள் பணியாற்றும் மனப்பக்குவத்தையும் பெற்றிருந்தனர். இதற்கு என்ன காரணம்? அவர்கள் வர்க்க உணர்வு பெற்று இருந்தமையே அதற்குக் காரணம்.

இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத வேறுபாடு இல்லாமல், முதலில் மனிதர்கள், அதன்பின் இந்தியர்கள் என்ற உணர்வுடன் உள்ளனர். அவர்களிடையே வர்க்கவுணர்வை வளர்த்துவிட்டால் அவர்கள் இதே உள்ளத்துடன் உறுதியாய் இருந்து ஒற்றுமை வளர்ப்பர். அதன் வழி இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்.

மதத்தை அரசியலிலிருந்து பிரித்துவைக்க வேண்டும். மதம் என்பது தனிநபர் விவகாரம் – தனிப்பட்ட விவகாரம். அதைச் சமூக வாழ்க்கையில் கலக்கவிடக்கூடாது. ஏனென்றால், அது சமூகம் ஒன்றுபடுவதற்கான வளர்ச்சிப் போக்கைக் தடை செய்கிறது என்று 1914இல் தியாகிகள் கூறினர். அதன்படியே செயல்பட்டனர். அப்போது அனைத்து மதத்தவரும் ஒன்றுபட்டு, நாட்டிற்காக இன்னுயிரைத் தியாகம் செய்தனர். எனவே, மதத்தை அரசியலிலிருந்தும், சமூக வாழ்க்கையிலிருந்தும் பிரித்து வைத்து, அதனைத் தனிப்பட்ட விவகாரமாகக் கொள்வதோடு, வர்க்க உணர்வை ஊட்டி, ஒன்றிணைத்து ஆதிக்கத்தை அழிக்க வேண்டும்.