ஆட்டோ ஓட்டுநர் தோழர் பவானி!

2023 அக்டோபர் 16-31, 2023 பெண்ணால் முடியும்

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் பவானி, எத்துறையிலும் பெண்களால் பணிபுரிய முடியும். சாதிக்க முடியும் _ என முன்னுதாரணமாகத் திகழ்பவர் 50 வயதான இவர் எவர் சார்பும் இன்றி, தன் கடின உழைப்பால் வாழ்ந்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ஊரைச் சேர்ந்தவர் பவானி. இவரின் கணவர் 2010இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது இவருக்கு 37 வயது. கணவரின மரணத்தால் இவரின் வாழ்க்கையே மாறிப்போனது. கட்டட வேலை, மருத்துவமனையில் ஆயா வேலை எனப் பல வேலைகளுக்குச் சென்றுள்ளார். இவ்வேலைகளில் கிடைத்த வருமானம் போதுமானதாக இல்லாததாலும், வேலை காரணமாகவும் இவரால் தன் குழந்தைகளையும் சரியான முறையில் கவனிக்க முடியவில்லை.

பவானி தன் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய கடினமான சூழ்நிலையில் சுயதொழில் செய்ய எண்ணியுள்ளார். ஆனால், கையில் பணம் இல்லாத காரணத்தால் தன் கணவர் போல் ஆட்டோ ஓட்ட முடிவு செய்தார். ஓட்டுநர் உரிமம் பெற்று ஆட்டோவும், காரும் ஓட்டக் கற்றுக்கொண்டார். ஆட்டோ ஓட்டிப் பிழைத்துக்கொள்ளலாம் என நினைத்தால், பெண் என்பதால் ஆட்டோ உரிமையாளர்கள் எவரும் இவரை நம்பி ஆட்டோ ஓட்டக் கொடுக்கவில்லை. நண்பர்கள் மூலமாக ஏற்பாடு செய்து, ஒரு நாளைக்கு ரூ.100 வாடகைக்கு ஆட்டோ எடுத்துக்கொண்டார்.

ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ நிறுத்தச் சென்ற சூழலை பவானி அவர்கள் கூறுகையில்,

“என் கணவர் ஆட்டோஸ்டாண்டில் நிறுத்துவதற்கான உரிமை அட்டையை வேரொருவருக்கு விற்றுவிட்டதாகவும், நான் அங்கே ஆட்டோ நிறுத்த ரூ.50,000 வைப்புத் தொகை கட்ட வேண்டும் எனச் சொன்னார்கள்.

என்னிடம் எந்தப் பணமும் இல்லை. ஸ்டேண்டை விட்டுவிட்டு, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் என ஆட்டோ ஓட்ட ஆரம்பித்தேன், சில மாதங்கள் நல்ல முறையில் சென்றுகொண்டிருக்க, ஆட்டோவை அதன் உரிமையாளர் வாங்கிக்கொண்டார். மீண்டும் வாடகைக்கு ஆட்டோ ஓட்ட கிடைக்குமெனத் தேட ஆரம்பித்தேன். யாரும் எனக்கு ஆட்டோ தர முன்வரவில்லை. இதை அறிந்த என் பள்ளி நண்பர் அவரிடமிருந்த ஆட்டோவை நாள் வாடகைக்கு எனக்குக் கொடுத்தார். அதை ஓட்டத் தொடங்கி பணம் சேர்த்து சொந்தமாக ஆட்டோ வாங்கியுள்ளேன்” என நெகிழ்வுடன் நினைவுகளைப் பகிர்ந்தார்.

தன் குடும்பத்தைப் பற்றிக் கூறுகையில், ‘‘எனக்கு ஒரு மகன், ஒரு மகள் இருவருக்கும் திருமணம் முடிந்து நலமுடன் உள்ளனர். குடும்பச் சூழல் காரணமாக என் பேத்தியை என்னுடன் ஆட்டோவிலே அழைத்துச் செல்கிறேன். ஸ்கூல் டிரிப் ஓட்டி வரும் போது என் பேத்தியையும் பள்ளியில் விட்டுவிட்டு, பள்ளி முடிந்ததும் என்னுடனே ஆட்டோவில் அழைத்துச் செல்கிறேன்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

சமூக செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்களின் முயற்சியுடன், தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி அவர்களிடம் அழைத்துச் சென்றனர். பவானியின் கோரிக்கையை நிறைவேற்ற அமைச்சர் மாண்புமிகு சு. முத்துச்சாமி அவர்கள், பவானியிடம் விவரங்களைக் கேட்டறிந்து, “ஈரோடு சோலார் பகுதியில் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணி முடிவடைந்து அந்தப் பேருந்து நிலையம் திறந்தவுடன், நீங்கள் நிரந்தரமாக உங்கள் ஆட்டோவை அங்கு நிறுத்திக்கொள்ளலாம்” என்று பவானியிடம்
தெரிவித்தார். அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்துகொடுத்துள்ளார். ♦