சளைக்காத சமூக நீதிப் போராளி சரத் யாதவ்

2023 கட்டுரைகள் பிப்ரவரி 1-15, 2023

– வை. கலையரசன்

சமூக நீதியில் மிக ஆழமான, அழுத்தமான ஈடுபாட்டைக் கொண்டு சமரசம் இல்லாமல் போராடிய சமூகநீதிப் போராளி சரத் யாதவ்.

மத்தியப் பிரதேசத்தில் பாபாய் என்னும் கிராமத்தில் ஒரு வேளாண் குடும்பத்தில் 1.7.1947அன்று பிறந்தவர். பொறியியல் பட்டம் பெற்றதுடன், தங்கப் பதக்கமும் பெற்றவர். மாணவர் பருவத்திலேயே அரசியலில் ஈடுபட்டவர். காந்தியவாதியான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவர்.

1974ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஜபல்பூர் நாடாளுமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் கல்லூரி மாணவரான சரத் யாதவை வேட்பாளராக நிற்க வைத்து இந்திரா காந்திக்கு சவால் விட்டார் ஜெயப்பிரகாஷ் நாராயணன். அந்த இடைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான சரத் யாதவ் அமோக வெற்றி பெற்றார்.

பிறகு, இந்திரா காந்தி (MISA) நெருக்கடி நிலையை அறிவித்து, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடிவு செய்த போது, அதை எதிர்த்து சரத் யாதவ் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மார்ச் 1976இல் ராஜினாமா செய்தார்.பிறகு, மீண்டும் 1977இல் நடந்த பொது தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் இளம் தலைவராக மிகப் பெரிய தலைவர்கள் எல்லாம் பாராட்டும் வகையில் அறிவார்ந்த முறையில் பணியாற்றினார்.

மண்டல் குழு அறிக்கையை அமல்படுத்த வேண்டி திராவிடர் கழகம் நடத்திய பல மாநாடுகளில் பங்கேற்றவர். வடஇந்தியர் தலைவர்களை ஒருங்கிணைப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.
12.6.1993 அன்று சென்னையில் திராவிடர் கழகம் நடத்திய சமூகநீதி மாநாட்டில் பங்கேற்று, “தந்தை பெரியார் மட்டுமே பார்ப்பனரை எதிர்க்கும் போராட்டத்தில் வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி தமிழ்நாட்டோடு முடிந்து
விடக்கூடாது. தந்தை பெரியாரின் கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் பரப்பி பார்ப்பனர் ஆதிக்கத்தை, கலாச்சாரத்தை வீழ்த்தியாக வேண்டும். நமது ஒரே வேலை, ஒரே குறிக்கோள் அதுதான்.

தந்தை பெரியாருக்குப் பின் நண்பர் கி.வீரமணி அதனைச் சிறப்புறச் செய்து வருகிறார்’’ என்று உணர்ச்சிமிக்க உரையாற்றியவர்.
எல்லா மக்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால், ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் எனத¢ தொடர்ந்து பாடுபட்டார். பெண்கள் முன்னேற்றம்,பெண் கல்வி, பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் இடஒதுக்கீடு ஆகியவற்றுக்காக உறுதியாகக் குரல் கொடுத்தவர். பெண்-களுக்கு சட்டமன்ற, நாடாளு-மன்றத் தொகுதிகளில் உள் ஒதுக்கீட்டுடனான இட ஒதுக்கீடு வேண்டும் என்று மசோதா
வைத் திருத்தி அமைக்கக் குரல் கொடுத்தார்.

காரணம், ”பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கின்ற வேளையில் அதிலும், இட ஒதுக்கீட்டைப் பின்பற்றினால்தான் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்கள் முன்னேற முடியும் என்பதால் பெண்கள் இட ஒதுக்கீட்டில் சமூக நீதி வேண்டும்’’ என்று கூறி தொடர்ந்து குரல் கொடுத்தவர் சரத் யாதவ் !

”பெண்களைச் சமமாக மதிக்க வேண்டும். பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்க வேண்டும்’’ என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். அதன் விளைவாகவே, தான் இறந்த-வுடன்
தனக்கு தன் மகனும், மகளும் சேர்ந்து இறுதிச் சடங்குகளைச் செய்ய வேண்டுமெனக் கூறியவர்.

12.01.2023 தமது 75ஆம் வயதில் மறைந்தார். அவரது விருப்பப்படியே அவரது மகனும் மகளும் சேர்ந்து அவரின் இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.