பூம்புகாரின் தொன்மை

2023 பிப்ரவரி 1-15, 2023 மற்றவர்கள்

பூம்புகார் துறைமுக நகரம் 15000 ஆண்டுகள் பழமையானது என்று பாரதிதாசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனமும் அரசுகளுக்கிடையேயான காலநிலை மாற்றத்திற்கான அமைப்பும் இணைந்து நடத்திய பூம்புகார்க்கு அருகேயான கடல்சார் ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பும் இதை உறுதி செய்கின்றது. இதுவரை பூம்புகாரின் பழைமை என்பது 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றே நம்பப்பட்டு வந்தது. ஆனால், தற்போதைய கண்டுபிடிப்பின்படி (15,000) பதினைந்தாயிரம் ஆண்டுகள் பழைமையானது எனத் தெரிய வருகிறது.

பூம்புகார் துறைமுகம் பதினோரு கிலோமீட்டர் நீளமும் மூன்று கிலோமீட்டர் அகலமும் கொண்டதாகவும், படகுகள் நிலையாக நிற்பதற்கான தூண்டில் வளைவுகளும் பொருள்களை கலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான கால்வாய்கள் இணைப்போடு கூடிய வர்த்தகப்பொருள் சேமிப்புக் கிடங்குகளையும் கொண்டதாகவும், ஒரே நேரத்தில் 70 முதல் 80 கப்பல்கள் தங்கி பொருள்களை ஏற்றவும் இறக்கவுமான கப்பல் தளத்தைக் கொண்டதாகவும் அமைந்திருந்ததற்கான சான்றுகள் உள்ளதாக பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியரும் பூம்புகார் திட்ட மேம்பாட்டுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளருமான சி.வி.ராமசாமி கூறுகிறார். 6000 ச.கி.மீ பரப்பை ஆராய்ந்ததில் கடற்படுகையில் இருந்து 25 மீட்டர் முதல் 50 மீட்டர் ஆழத்தில் அழிந்த நகரத்தின் எச்சங்களைக் கண்டதாகவும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத் தலைவர் D.இராஜசேகர் கூறுகிறார்.

மேலும் சுற்றுச்சுவர்களோடு கூடிய வரிசையான குடியிருப்புகளும், எகிப்தின் கிளியோபாட்ரா ஒளிவிளக்கு கோபுரம் போன்ற அமைப்பில் சுழல் படிக்கட்டுக்களைக் கொண்ட ஒளிவிளக்குக் கோபுரம் (Light House) இருந்ததற்கான தடயங்களும் காணப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தமிழ் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சாஸ்த்ரா பல்கலைக்கழகம் போன்ற 12 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் தங்களை இணைத்துக் கொள்ளவிருக்கின்றன. இந்த ஆராய்ச்சி இன்னும் ஓராண்டு காலம் நீடிக்கலாம். இந்த ஆராய்ச்சி குமரிக் கண்டத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்கும் ஊக்குவிக்கும் என ஆராய்ச்சிக் குழுவினர் கூறுகின்றனர்.