பெண்ணால் முடியும்

2022 நவம்பர் 16-30 2022 பெண்ணால் முடியும்

கோலூன்றித் தாண்டுதலில்
கோலோச்சும் வீராங்கனை!

த ஞ்சாவூரைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைதான் ரோஷிமீனா. சிறு வயது முதல் ஈட்டி எறிதல், ஓட்டப் பந்தயம் ஆகிய தடகளப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அதனால் பெற்ற ஊக்கத்தால் முழுமையாக விளையாட்டில், ஈடுபட்டு சாதனைச் செல்வியாகத் திகழ வேண்டும் என்னும் ஆவலால். உந்தப்பட்டு இன்றளவில் ஒரு போல்வால்ட் வீராங்கனையாக மின்னிக் கொண்டிருக்கிறார்.
விளையாட்டுகளில் பரிசுகள் பல பெற்றமை
யால் விளையாட்டுத் துறை ஒதுக்கீட்டில் பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கையும், கல்வி ஊக்கத் தொகையும் இவருக்குக் கிடைத்தன. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது காமராஜ் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அவருக்கு “போல்வால்ட்” விளையாட்டை அறிமுகம் செய்து வைத்தார். அந்த விளையாட்டு இவருக்குப் பிடித்துப் போனது. இந்த விளையாட்டு சென்னையைத் தவிர வேறு எங்கும் அதிகமாக விளையாடப்படாத ஒரு விளையாட்டு. எனவே, இவர் இந்த விளையாட்டில் பயிற்சி பெற வேண்டுமானால் இவர் சென்னையில்தான் தங்க வேண்டும். அதற்கான அனுமதியையும், செலவுக்கான தொகையையும் வீட்டாரிடமிருந்து பெறுவதில் சிரமம் இருந்தது. எனினும் அவர்களிடம் தனது அபரிமிதமான ஆவலை எடுத்துக் கூறி இரண்டாண்டு காலத்துக்கு சென்னையில் தங்க அனுமதியும் அதற்கான செலவுத் தொகைக்கு உத்திரவாதமும் பெற்ற பின் சென்னை வந்து தங்கி பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இவருடைய பயிற்சியாளர் மெல்பர்ரஷல் என்பவராவார். பயிற்சியில் ஈடுபட்டாலும் அதற்கான உபகரணமான கோல் (POLE) வாங்க இயலவில்லை. போல் விலையோ ஒரு இலட்ச ரூபாய்! எனவே பயிற்சியாளரின் கோலிலேயே பயிற்சி மேற்கொண்டதோடு போட்டிகளுக்கும் அதையே எடுத்துச் சென்று விளையாட வேண்டியதாயிற்று. பயிற்சி நேரம் 4 மணி நேரமாகும். போட்டி நேரமோ 3 மணி நேரமாகும்.
முதல் மாநில அளவிலான போட்டி திருச்சியில் நடைபெற்றது. அதற்கு சில நாள்களுக்கு முன் இவருக்கு விஷக் காய்ச்சல் கண்டபோதும் அதிலிருந்து மீண்டு போட்டியில் கலந்து வெண்கலப் பதக்கம் வென்றார். பிறகு இந்தியா முழுவதும் பல்கலைக்கழகங்கள் சார்பாக நடந்த போட்டிகளில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். பின் கொரோனா அரக்கனின் குறுக்கீட்டால் எந்தப் போட்டியும் நடைபெறாத நிலை. கொரோனாவிற்குப் பின் இந்திய அளவில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட மூவரில் இவள் முதலிடத்தைப் பிடித்தார்.
இவருடைய கனவு, சீனாவில் ஆறு மாதங்
களில் நடக்க இருக்கும் ஆசிய அளவிலான போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதாகும். அதற்கான கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர் வெற்றி பெற
வாழ்த்துவோமே! றீ