கட்டுரை : பெரியாரை விமர்சிக்கும் முன்…

2022 அக்டோபர் 16-30 2022 கட்டுரைகள்

வில்வம்

பெரியார் என்பவர் யார்?
கடவுள் இல்லை என்று சொன்னவரா? மதம் வேண்டாம் என்று சொன்னவரா? ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொன்னவரா? ஆம்! இவை மூன்றையும் சொன்னவர் பெரியார் தான்! இந்த மூன்று மட்டும் தான் பெரியார் சொல்லி இருக்கிறாரா? இல்லையில்லை!
அவர் சொன்ன பல நூறு செய்திகளில் இந்த மூன்றும் அடக்கம்! ஆனால், இந்த மூன்றை மட்டுமே அடிக்கடி குறிப்பிட்டு எதிரிகள் அவரைச் சுருக்கிவிட்டார்கள்!

உலக மக்களைப் போல் தமிழர்கள்!
பெரியார் கொள்கைகளைத் தமிழர்கள் பின்பற்றினால் ஆரியத்தின் கட்டுமானம் சுக்கு நூறாய் உடைந்து போகும். அந்தப் பயம் எப்போதும் அவர்களுக்கு உண்டு! மேலும் பெரியாரின் கொள்கைகளைத் தமிழர்கள் பின்பற்றினால் அனைத்து மனிதர்களும் சமமாக ஆகிவிடுவார்கள்! கல்வி, வேலை வாய்ப்பு, சுயமரியாதை, நல்வாழ்க்கை எனத் தமிழர்கள் நிலை, உலக மக்களைப் போல உயர்ந்தோங்கிச் செழிக்கும்! குறிப்பாக விழிப்புணர்வும், பகுத்தறிவும் பல்கிப் பெருகும்! இப்படி ஒரு சமூகம் அமைந்துவிடக் கூடாது என்றுதான் தமிழர்களைப் பல கூறுகளாகப் பிரித்து, பகை வளர்த்து வருகிறார்கள்!

பகுத்தறிவு என்றால் என்ன?
ஒரு மனிதருக்குப் பகுத்தறிவு எவ்வளவு முக்கியம் என்பதை தம் வாழ்நாள் முழுவதும் பிரச்சாரம் செய்துவிட்டுப் போனவர் பெரியார்!
இளைஞர்களுக்குப் பொருளாதாரம் பிரச்சினையாக இருக்கிறது! மாணவர்களுக்குக் கல்வி பிரச்சினையாக இருக்கிறது! அதை முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது பிரச்சினையாக இருக்கிறது! திருமணம் ஆனவர்களுக்குக் குடும்பம் மற்றும் உறவுகள் பிரச்சினையாக இருக்கின்றன! ஆக பிரச்சினைகள் என்பது ஒவ்வொருவருக்கும் அந்தந்தக் காலத்திற்கு ஏற்ப தொடர்ந்து கொண்டே இருக்கின்றன!
இவற்றில் இருந்து மீள்வது எப்படி? ஜாதகம் பார்த்துக் கொண்டிருந்தால் தீர்வுகள் கிடைத்துவிடுமா? அர்ச்சனை செய்து அய்யருக்குக் காசு கொடுத்தால் கவலைகள் போய்விடுமா? சாஸ்திர, சம்பிரதாயங்கள் மகிழ்ச்சியைத் தந்துவிடுமா? எங்கள் மதம் தான் சிறந்தது என மதத்திற்குப் பின்னால் சென்றால் குடும்பம் முன்னேறிவிடுமா? அல்லது என் ஜாதி தான் உயர்ந்தது என்று ஜாதியை உயர்த்திப் பிடித்தால் நம் வாழ்க்கை உயர்ந்துவிடுமா? நமக்கு எது தேவை? எது முக்கியம்?
“தமிழர்களே சிந்தியுங்கள்; தமிழர்களே கல்வி கற்றுக் கொள்ளுங்கள்; தமிழர்களே நல்ல வேலைக்குச் செல்லுங்கள்; தமிழர்களே சுயமரியாதை வாழ்வை அனுபவியுங்கள்!” என இயக்கம் கட்டி பிரச்சாரம் செய்தவர் தானே பெரியார்!

மதமும்! ஜாதியும்!
“மதமும், ஜாதியும் தான் முக்கியம்; மனிதர்கள் அல்ல”, என்பதே மதவாதக் கட்சிகளின் கொள்கை!
இந்துக்களே நன்கு படியுங்கள்; நாங்கள் வழிகாட்டுகிறோம்! இந்துக்களே நல்ல வேலைக்குச் செல்லுங்கள்; நாங்கள் உதவி செய்கிறோம்! இந்துக்களே மகிழ்ச்சியாக வாழுங்கள்; நாங்கள் பயிற்சி தருகிறோம்! என எந்த இந்து அமைப்பு நல்வழி சொல்லித் தருகிறது?
ஜாதியை வளர்க்க நினைக்கும் இவர்கள், அனைத்து ஜாதியினரும் கல்வி கற்று, வேலைக்குச் செல்ல இட ஒதுக்கீட்டை ஏன் அனுமதிப்பதில்லை? மதத்தை வளர்க்க நினைக்கும் இவர்கள் தம் மதத்தவர் மருத்துவம் படிக்கக் கூடாது என ஏன் நீட் தேர்வைக் கொண்டு வந்தார்கள்?
இவர்களது மதத்தில் உள்ளவர்கள் கடவுளைத் தூக்கிக் கொண்டு ஊர்வலம் போக வேண்டும், ஜாதியைக் காப்பாற்ற வேண்டும், பார்ப்பனீயத்தை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள், இந்துக்களாய் இருக்கும் அவர்கள் வாழ்வில் முன்னேற எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்!

பெரியார் என்ன சொன்னார்?
தமிழர்கள் நிறைய படிக்க வேண்டும், நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும், மகிழ்ச்சியான வாழ்வு வாழ வேண்டும், சக மனிதரை மதிக்க வேண்டும், மனிதருக்கு, மனிதர் உதவிக் கொள்ள வேண்டும் என்று தானே காலம் முழுவதும் பேசினார்! பிறகு வேறென்ன சொன்னார்?
கடவுள் வேண்டாம்; ஆனால், தமிழர்கள் நல்வாழ்வு வாழ வேண்டும்! மதம் தேவையில்லை; ஆனால், தமிழர்கள் சிறந்த நிலையை அடைய வேண்டும்! ஜாதி நமக்கு வேண்டியதில்லை; ஆனால், நம் மக்கள் உலக மக்களைப் போல உயர் வாழ்வு வாழ வேண்டும் என்று பேசினார், போராடினார்.
இது மட்டுமா பெரியார் செய்தார்? அவரின் வாழ்க்கை வரலாற்றை, அவரின் எழுத்துகளைப் படித்தால் மலைத்துப் போவீர்கள்!
பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, சமதர்மம், கல்வி, பெண்ணுரிமை, வாழ்க்கை ஒப்பந்தம், தொழிலாளர் நலன், தமிழ் வளர்ச்சி, கிராம முன்னேற்றம், பொது நலம், சுயநலம், மனித வாழ்க்கை, கலை, இசை, நாடகம், தமிழ்நாட்டு நன்மைகள், அயல்நாட்டு வாழ்க்கை முறை, எதிர்கால உலகம் என்று பெரியார் பேசாத துறைகளோ, கருத்துகளோ இல்லை!
பேசியதோடு மட்டுமின்றி அதற்கான கொள்கை வடிவமைப்பு, செயல் திட்டம், போராட்டம் எனத் தம் வாழ்நாள் முழுக்க உழைத்து அதில் வெற்றியும் பெற்றார். அந்த வெற்றியின் மூலம் இச்சமூகம் பலன் பெறுவதையும் பார்த்து மகிழ்ந்தவர் பெரியார்!

பெரியாரை நீங்கள் விமர்சிக்கலாம்!
“எனது சொந்த வாழ்க்கையை விட மதமும், ஜாதியும் தான் எனக்கு முக்கியம்”, என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், பெரியாரை விமர்சனம் செய்யலாம். அது உங்கள் உரிமை!
அதேநேரம் பெரியார் நூல்களை ஒருமுறை, படித்துவிட்டு, பிறகு அவரை நீங்கள் விமர்சனம் செய்யலாம்! அதுதான் அர்த்தமுள்ளதாய் இருக்கும். நாணயமான செயலாயும் அமையும்!