சிறுகதை : அம்மாவின் கண்கள்

2022 உங்களுக்குத் தெரியுமா? சிறுகதை செப்டம்பர் 1-15-2022

ஆறு.கலைச்செல்வன்

மரகதம் அம்மாவுக்கு மிகப் பெரிய குறை என்னவென்றால், அவருக்குக் கண் பார்வை நாளுக்கு நாள் மங்கிக் கொண்டு வந்ததுதான்.
அவரது ஒரே மகன் கண்ணப்பன். தீவிரமான கடவுள் நம்பிக்கையாளன். விவசாயத் தொழில் செய்து வந்தான். ஓரளவு படித்தவன்.
மரகதம் அம்மாள் தன் மகனிடம் தன்னை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என பல நாள்களாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் அதை அவன் கண்டு கொள்ளவே இல்லை. சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவன் வயதாகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. எப்போது பார்த்தாலும் கோயில்-களுக்குச் செல்வது, பக்தியைப் பரப்புவதையே தலையாய பணியாகச் செய்து கொண்டிருந்தான். வயதான நிலையிலும் சிரமத்தைப் பாராமல் மரகதம் அம்மாள் அவனுக்கு சோறு ஆக்கி போட்டுக் கொண்டிருந்தார். அவர் எவ்வளவு வற்புறுத்தியும் அவன் திருமணம் செய்து கொள்ளவில்லை.

நாள் தோறும் மற்றவர்கள் மூலமும் அவனுக்கு புத்திமதி கூறச் செய்தார். ஆனால் கண்ணப்பன் யாருக்கும் செவி மடுக்கவில்லை.
ஒரு நாள் கண்ணப்பன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது சோற்றில் இருந்த ஒரு கல் அவன் பற்களில் பட்டுத் தெறித்தது.
“அம்மா, சோத்துல ஒரே கல்லாயிருக்கு. பொறுக்கி எடுக்கக் கூடாதா?” என்று அம்மாவைக் கடிந்து கொண்டான் கண்ணப்பன்.
“ஏண்டா, நானும்தான் ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருக்கேன். எனக்கு கண்பார்வை மங்கிகிட்டே வருது. டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போகச் சொல்றேன். ஆனா நீ கேட்கவே மாட்டேங்கிறே. இப்ப கல்லு இருக்கு பல்லு போச்சுன்னா நான் என்ன பண்றது?’’ என்று பதில் கூறினார் மரகதம் அம்மாள்.
“அம்மா, உங்கம்மா அதாவது என் பாட்டிக்கு சாகும் போது தொண்ணூற்று அஞ்சு வயசு. அவங்க கடைசி வரைக்கும் டாக்டரிடம் போகவே இல்ல. ஆனா நீ மட்டும் டாக்டரிடம் போகணும்னு அடம் புடிக்கிறீயே!”, என்று அம்மாவைக் கடிந்து கொண்டான் கண்ணப்பன்.

ஏம்பா, எனக்காகவா கண்ணு சரியா வௌங்கணும்னு சொல்றேன்! எல்லாம் உனக்காகத்தான். உனக்கு சோறு ஆக்கிப் போடத்தானே கேக்குறேன். கல்யாணம் பண்ணிக்கச் சொன்னா அதையும் கேக்க மாட்டேங்கிறே. நான் என்னதாண்டா செய்யறது”, என்று பெருமூச்சு விட்ட வண்ணம் ஏக்கத்துடன் சொன்னார் மரகதம் அம்மாள்.
“அம்மா, உனக்கு நல்லா கண்ணு தெரிய நான் என்ன செய்யப் போறேன்னு உனக்குத் தெரியுமா?”
மகன் ஏதோ செய்யப் போகிறான் என மகிழ்ந்து அதை அறிய ஆவல் கொண்டார் மரகதம் அம்மாள்.

“அம்மா, கடவுளால் கை கூடாதது எதுவுமே இல்லை. அதனால் உனக்கு கண்பார்வை நல்லா வௌங்க சாமிக்கு வேண்டி, யாகம் ஒன்று நடத்தப் போறேன். பத்து புரோகிதர்களைக் கூப்பிட்டு இந்த யாகத்தை நடத்தப் போறேன். அதுக்குப் பிற்பாடு பாரேன், உனக்கு கண்ணு பளிச்சுன்னு தெரியும்,” என்று உணர்ச்சி பொங்கக் கூறினான் கண்ணப்பன்.
பக்தியில் யாருக்கும் சளைத்தவர் அல்ல மரகதம் அம்மாள். தன் மகன் கண்ணப்பனுக்கு பக்தி நெறியை ஊட்டியதே அவர்தான். ஆனாலும் அவன் கூறியதை அவ்வளவாக இரசிக்கவில்லை. இருப்பினும் மகன் செய்வதைச் செய்யட்டும் என அவன் விரும்பியபடியே விட்டுவிட்டார்.

அடுத்த நாளே யாகத்திற்கும், படையலுக்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான் கண்ணப்பன். கணிசமான தொகையை ஒருவரிடம் கடனாகப் பெற்றான். வீட்டிற்கு முன் தென்னங்கீற்றாலான பந்தல் அமைத்தான். புரோகிதர்களை அழைத்து வந்து யாகம் செய்வதற்கான இடத்தைத் தேர்வு செய்து பள்ளம் தோண்டி செங்கற்களை அடுக்கும் பணியை பணியாட்களின் உதவியுடன் செய்ய ஆரம்பித்தான்.
இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஊர்ப் பெரியவரான மகாதேவன் என்பவர் தற்செயலாக கண்ணப்பனைச் சந்தித்தார்.
“ஏம்பா, கண்ணப்பா! உங்கம்மாவுக்கு பார்வை சரியில்லைன்னு கேள்விப்பட்டேன். அவங்களை கண் டாக்டரிடம் அழைச்சிகிட்டுப் போனா என்ன? என்று கேட்டார்.
“அதுக்காகத்தானே நான் கடவுளுக்கு பூஜைகள் செய்யப் போறேன்; யாகமும் நடத்தப் போறேன்” என்று உற்சாகமாகப் பதில் சொன்னான் கண்ணப்பன்.
“அதையெல்லாம் அப்புறம் வச்சுகலாம்பா. முதலில் கண் டாக்டர்கிட்ட அழைச்சிகிட்டுப் போ! அதுதான் சரியாயிருக்கும்,” என்றார் மகாதேவன்.

“நான் கடவுளைத் தான் முதல்ல நம்புறேன் அய்யா’’
“தம்பி, உங்கம்மாவை நான் சென்று பார்த்தேன். என்னையே அவங்களுக்கு சரியாக தெரியலே. குரலை வைச்சுத்தான் கண்டுபிடிச்சதா சொன்னாங்க. அரிசியில் கல்லு பொறுக்க ரொம்ப கஷ்டப்படுறாங்க. இப்படியே போனா அவுங்க கண்ணிலேயிருந்து இரத்தமே வழிஞ்சுடும் போலிருக்கே தம்பி”
“அய்யா, என்னோட பேரு கண்ணப்பன். பெரிய புராணம் படிச்சிருக்கீங்களா? கண்ணப்ப நாயனார் என்ன செய்ஞ்சார் தெரியுமா அய்யா”
“என்னப்பா செய்ஞ்சார்?”
“சொல்றேன் அய்யா, கேளுங்க. ஒருமுறை கண்ணப்பன் வணங்கிய சிவலிங்கத்தின் வலப்பக்கக் கண்ணில் இரத்தம் வழிந்தது. அதைப் பார்த்துப் பதறிய கண்ணப்பன், தன்னோட கண்ணைப் பிடுங்கி சிவலிங்கத்தின் கண்ணில் அப்பினார். இது உங்களுக்குத் தெரியாதா?
“இப்ப நீ என்ன சொல்ல வர்ரே கண்ணப்பா?”
“எங்கம்மாவுக்கு கண்ணு சுத்தமா போயிட்டா நான் சும்மா இருப்பேனா? கண்ணப்ப நாயனார் செய்ஞ்சது போல என் ரெண்டு கண்களையும் பிடுங்கி எங்கம்மாவுக்குக் கொடுப்பேன்”
இதைக்கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தார் மகாதேவன்.

பிறகு அவனிடம் பேச ஆரம்பித்தார்.
“தம்பி, அது புராணம். அதையெல்லாம் நம்பி அம்மா கண்ணைக் கெடுத்துடாதே! புராணங்-களைப் படிச்சி இரசிப்பதோடு நிறுத்திக்க; அதெல்லாம் உண்மையில்லை தம்பி. கண்ணையெல்லாம் புடுங்கி அடுத்தவங்க கண்களில் அப்பி வைச்சுட முடியாது. கண் அப்பு நாயானார் என்பதெல்லாம் புராணக்-கதைகள். புராணங்களை நம்பி மோசம் போயிடாதே!” என்று கண்ணப்பனுக்கு அறிவுரை கூறினார் மகாதேவன்.
“அய்யா, கண்ணப்பன் என்கிற பெயரை வைச்சிகிட்டு நான் கண்ணப்ப நாயனாரை நம்பாமல் இருக்கலாமா? பூஜைக்கு அப்புறம் பாருங்க. எங்கம்மாவுக்கு நல்லா பார்வை வந்திடும்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் கண்ணப்பன்.

மரகதம் அம்மாவுக்கு நாளுக்கு நாள் பார்வை மங்கிக் கொண்டே வந்தது. இதற்கிடையில் கண்ணப்பன் பூஜை, யாகம் செய்ய வேண்டிய நாளும் வந்தது.
கடன் வாங்கிய பணத்தில் அனைத்தையும் செய்யத் துரிதமாகச் செயல்பட்டான் கண்ணப்பன். புரோகிதர்களை அழைத்து வந்து பூஜை, யாகம் நடத்தினார்கள். தன் அம்மாவை யாகம் நடக்கும் இடத்தில் அமர வைத்தான் . மிளகாய் உள்பட பல பொருள்களை புரோகிதர்கள் நெருப்பில் போட்டு புகை மூட்டத்தை உண்டாக்கினர். புகை மூட்டத்தில் சிக்கித் தவித்தார் மரகதம் அம்மாள். அவர் கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. ஏற்கெனவே ஒவ்வாமை நோயால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, புகையாலும் வேறு பல வாசனைகளாலும் ஒவ்வாமை அதிகமாகி இருமலும், தும்மலும் அதிகரித்தது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்-படாத புரோகிதர்கள் யாருக்கும் தெரியாத சமஸ்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்லி தங்கள் பணியினைத் தொடர்ந்தனர்.

ஒரு வழியாக பூஜை, யாகம் எல்லாம் நடந்து முடிந்தன. கண்ணப்பனின் கையில் இருந்த பணம் முழுவதும் செலவாகி விட்டது.
அடுத்த சில நாள்களில் மரகதம் அம்மாவுக்கு கண் பார்வை அதிகளவில் மங்கியதோடு அல்லாமல் ஒவ்வாமையால் கண்களிலிருந்து நீர் வழிவது நிற்கவே இல்லை.
நாள்தோறும் அழுது புலம்ப ஆரம்பித்து விட்டார் மரகதம் அம்மாள்.
இந்நிலையில் ஒரு நாள் மகாதேவன் கண்ணப்பன் வீட்டுக்கு வந்தார். மரகதம் அம்மாள் கண் வலியால் புலம்புவதைக் கண்டு மிகவும் வருந்தினார். அப்போது கண்ணப்பனும் அங்கு இருந்தான்.

“கண்ணப்பா, உங்கம்மாவோட நெலமையைப் பாத்தியா? அவங்க கண்ணி-லேயிருந்து நீர் வழிஞ்சிகிட்டே இருக்குது, பார்! இனி மேலாவது ஆஸ்பத்திரிக்கு அழைச்சி கிட்டுப்போ” என்று அறிவுரை கூறினார்.
அப்போது மரகதம் அம்மாவின் புலம்பல் சத்தமும் அதிகரித்தது. அவர் கண்ணில் நீர் ஆறாக ஊற்றெடுத்தது.
“தம்பி கண்ணப்பா, ஏதோ சாமி கண்ணி-லேயிருந்து இரத்தம் வழிஞ்சதாகவும், கண்ணப்ப நாயானார் தன் கண்ணை நோண்டி சாமி கண்ணில் அப்பினார் என்றும் சொன்னியே! இப்போ உங்கம்மா கண்களி-லேயிருந்து இரத்தம் வழியலே. நீர்தான் வழியுது. இப்ப நீ என்ன செய்வதாக உத்தேசம். உன் கண்ணைப் பிடுங்கி எடுத்து உங்கம்மா கண்ணில் அப்பி வைக்கப் போறீயா? அது முடியுமா? உனக்கு கண்ணைப் பற்றித் தெரியுமா? அதில் எத்தனை உணர்வு நரம்புகள் உள்ளன எனத் தெரியுமா? விழித்திரை பற்றித் தெரியுமா? கோபத்துடன் சரமாரியாகக் கேட்டார் மகாதேவன்.

“என் ரெண்டு கண்ணையும் என் அம்மாவுக்குத் தர இப்பவும் நான் தயாராக இருக்கேன்”, என்று மெதுவாகப் பதில் கூறினான் கண்ணப்பன்.
இதைக்கேட்டு மிகவும் கோபம் கொண்டார் மகாதேவன். “போடா பைத்தியக்காரா! நடக்கிறதைப் பேசு. அவங்களோட ரெண்டு கண்ணும் போனாலும் அவங்க கவலைப்பட மாட்டாங்க. ஆனா உன்னோட கண்ணு போறதை அவங்க விரும்ப மாட்டாங்க. உன் சாமியைப் போல உங்கம்மா கல் நெஞ்சம் கொண்டவங்க இல்லை” இவ்வாறு மகாதேவன் கோபத்துடன் பேசியதைக் கேட்ட மரகதம் அம்மாள் கண்ணீருடன் பேசினார்.
“நானும் தீவிரமான கடவுள் பக்தைதான். ஆனா இப்ப நான் சத்தியமா சொல்றேன். சாமி கீமின்னு எதுவுமே கிடையாது. பூஜை, யாகம் செய்யறது எல்லாம் அயோக்கியத்தனம். யாரும் இனிமேலும் இதைப் போலச் செய்யக் கூடாது”.

அம்மா இவ்வாறு கூறியதைக் கேட்டதும் மிகவும் அதிர்ச்சியடைந்தான் கண்ணப்பன்.
மகாதேவன் மீண்டும் பேசத் தொடங்கினார். “கண்ணப்பா, உனக்கு பெரிய புராணம் தெரியும்தானே! சிறுத்தொண்ட நாயனாரைப் பற்றி உனக்குத் தெரியுமா? அவரிடம் சிவனடியான் ஒருவன் வந்து அவனது மகன் சீராளனை வெட்டி கறி சமைக்க வேண்டும் என்றானாம். சிறுத்தொண்டனும் அவனை நம்பி சீராளனை வெட்டி கறி சமைத்தானாம். சாப்பிட உட்கார்ந்த சிவனடியான் தலைக்கறியைக் கேட்டதோடு அல்லாமல் சிறுத்தொண்டனையும் சாப்பிடுமாறு கேட்டுக் கொண்டானாம். இதைக் கேட்கவே அருவெறுப்பாக இல்லையா? பெற்றவர்கள் இப்படிச் செய்வார்களா? உங்கம்மாவிடம் எவனாவது வந்து இப்படிக் கேட்டால் அவர் ஒத்துக் கொள்வாரா? உன் கண்ணைப் பிடுங்கி அவங்களுக்கு கொடுத்தாலும் அதை அவங்க ஒத்துக்க மாட்டாங்க. வேணும்னா அவங்க கண்ணை உனக்கு கொடுப்பாங்க. புராணக் குப்பைகளை நம்பாதே. அறிவியலை நம்பு. கண்ணப்ப நாயனார் கதையெல்லாம் நம்பாதே”, என்று சொல்லி முடித்தார்.

எல்லாவற்றையும் கேட்ட கண்ணப்பன் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தான். தனது அம்மா தன் மீது வைத்துள்ள அன்பை நினைத்துப் பார்த்தான்.
பிறகு மவுனம் கலைந்து, அவன் அம்மாவிடம் பேசினான்.
“அம்மா, கிளம்புங்க, கண் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்.”