சிறுகதை: குப்பைத் தொட்டி

2023 சிறுகதை ஜனவரி 16-31 ,2023

கலைஞர் மு. கருணாநிதி

வீதியோரத்தில் அந்த மாடி வீட்டுக்குக் கீழேதான் நான் நீண்ட நாட்களாக தவம் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய தவம் எந்தக் கடவுளையும் வரவழைத்து அவர்களிடம் ஏதாவது அபூர்வமான வரங்கள் வாங்க வேண்டும் என்பதற்காக அல்ல! அகிலத்தைக் கட்டியாள வேண்டுமென்று அரசர்கள் பலர் தவமிருந்தும், தன்னை அழிப்பார் யாருமிலர் என்ற நிலை ஏற்பட வேண்டுமென்று அசுரர்கள் கொடிய தவங்களை மேற்கொண்டதும் சாபங்களின் மூலம் பகைவர்களைப் பழி வாங்குகிற வரங்களைப் பெறுவதற்கு முனிவர்கள் தவத்தில் முனைந்ததும் எனக்கு நேற்றுத்தான் விவரமாகத் தெரிந்தது. தவம் என்றால் ஒரே நினைவுடன் வேறு எதையும் பற்றிய சிந்தனையும் இல்லாமல் ஒரே இடத்தில் அமர்ந்து அன்ன ஆகாரமின்றி ஆண்டவனைக் காணத் துடிப்பது; அவன் வந்த பிறகு தேவையைக் கேட்பது! என்னைப் பொறுத்தவரையில் ஒரே இடத்தில் அசையாமல் அமர்ந்து இருப்பது ஒன்றைத் தவிர, தவத்துக்குரிய வேறு அடையாளங்கள் எதுவுமே இல்லை.
அப்படித் தவத்தில் ஈடுபட்டவர்களே கூட ஒரே நிலையில் நினைவைச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டிருக்கிறார்கள் யார்; எங்கே; எப்பொழுது தவம் செய்கிறார்கள் என்று அலைந்து திரிந்து கண்டுபிடித்து அவர்களது தவத்தைக் கெடுப்பதற்காகவே தேவலோகத்தில் ஒரு பெண்கள் படை தயாராக இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்க நட்சத்திரங்கள் மேனகை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகியோர். தவமிருப்பவர்களை அவர்கள் தான் போய்க் கெடுப்பார்களோ அல்லது அவர்கள் தங்களைக் கெடுக்க வரட்டும் என்று எதிர்பார்த்து இவர்கள் தான் தவம் செய்வார்களோ இரண்டும் ஆராய்வதற்குரிய விஷயங்கள்தாம்!

ஏதேதோ வந்து விழுந்து கொண்டிருந்த என் வயிற்றில் நேற்று ஒரு பழைய புராணம் வந்து விழுந்தது. புத்தக உருவில் அது இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில ஏடுகள்! பாதிக்கு மேல் செல்லரித்து விட்டிருந்தது! அதில்தான் தவத்தைப் பற்றிய விளக்கங்களையும் கதைகளையும் படித்துத் தெரிந்துகொண்டேன். விசுவாமித்திரர் தவத்தைக் கெடுக்க வந்த மேனகையின் சாகசங்களையும்; அவளது வலையில் முனிவர் விழுந்த பிறகு, அவன் புரிந்த சரசங்களையும்; கானகத்து அருவியோரங்களில் அவர்கள் நடத்திய காதல் கேளிக்கைகளையும்; கடவுளை நினைக்கும் தவக்கூடம் காமவேள் நடன சாலையாகக் காட்சியளித்ததையும்; மகேஸ்வரன் வருவதற்கு முன்பு மலர்மாரன் வருகை தந்து மாமுனிவரை மங்கையின் மடியிலும் காலடியிலும் உருட்டி உருட்டி மகிழ்ந்ததையும்; ஜெபமாலை இருந்த கையில் மேனகையின் துடியிடை சிக்கித் தவித்ததையும்; மறைந்துள்ள முனிவரின் தடித்த உதடுகள் மேனகையின்
மெல்லிதழ்த்தேன் பருகிடத் துடித்த விந்தையையும் வெகு சுவையுடன் நான் படித்துக்கொண்டிருக்கும் போதுதானா அந்தக் குப்பை வண்டிக்
காரன் வந்து தொலைய வேண்டும்?

வந்தவன் மளமளவென்று என் வயிற்றைக் காலி செய்து அந்தக் கிழிந்த புராணத்தையும் தூக்கி வண்டியிலே போட்டுக்கொண்டு போய்விட்டான். சில நாட்கள் என் வயிறு உப்பி நான் திக்குமுக்காடிக் கொண்டிருப்பேன்; அப்போதெல்லாம் நாலு நாள் அய்ந்து நாள் என்று இந்தப் பக்கம் தலைகாட்டாத நகரசபைக் குப்பை வண்டி என் புராணப் படிப்பில் இப்படி மண்ணைப் போடு
மென்று நான் எதிர்பார்க்கவே இல்லை. யாரோ புது ஆபீசர் இந்தப் பக்கம் வந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை. இரண்டு மூன்று நாட்களாகத் தெருவைச் சுத்தம் செய்வதில் தீவிரம் காணப்படுகிறது. இதுவும் எத்தனை நாளைக்கு? “வந்தாற்போல மாமியார் பந்தடித்தாள்; வர வர மாமியார் கழுதைபோல் ஆனாள்’’ என்று பழமொழி சொல்வார்களே; அது போலத்தான் ஆகிவிடும்.

நானிருக்குமிடத்திற்கு நாலைந்து வீடு தள்ளி ஒரு பஜனைமடம். அந்த மடத்தில் அடிக்கடி புராணப் பிரசங்கங்கள் நடைபெறும். ஒலிபெருக்கியின் மூலமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். பாகவதர்கள் பல விஷயங்களைப் பூசி மெழுகிப் பேசியிருக்கிறார்கள் என்பது அந்தப் பழைய புராணத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது. கணவனில்லாத சமயம் வீடு புகுந்து தன்னைக் கற்பழித்தவன் இந்திரன் என்று தெரிந்த பிறகும் “ஆகா! இதுவல்லவா இன்பம்! இதுநாள் வரையில் ஏங்கிக் கிடந்த சுவைமிகு விருந்தை இன்றல்லவா கண்டேன்’’ என்ற மனநிறைவுடன் அவனைத் தழுவிக் கிடந்தாள் அகலிகை என்பதை நான் படித்தல்லவா தெரிந்துகொண்டேன்?

தாருகாவனத்துத் தபோதனர்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர்! அவர்தம் பத்தினிகளோ பத்தரை மாற்றுத் தங்கங்கள் மேனியின் பளபளப்பில்! பறிக்கப்படாத பாரிஜாத மலர்கள்! தழுவத் துடிக்கும் பருவக் கொடிகள்! அவர் தம் இளமையின் பூரிப்பு இறைவனையே தூண்டில் போட்டு இழுத்தது. ஒன்றா, இரண்டா? ஓராயிரம் பூஜை மலர்களைக் கசக்கி எறிந்தார்! வரம் கோரும் முனிவர்களின் பத்தினிகள்! வரம் தரவேண்டிய பரமன்! கரம் சிவக்கு மட்டும் கட்டித் தழுவினார். கண் சிவக்குமட்டும் காமச் சேட்டை புரிந்தார். இந்தக் கர்ணகடூரமான கதையைப் பஜனை மடத்துப் பாகவதர் எவ்வளவு நாசூக்காகச் சொன்னார் தெரியுமா?

தாருகாவனத்து ரிஷிபத்தினிகளுக்குப் பரமசிவன் அருள்பாலித்து ஆட்கொண்டார் என்று அவர் கூறியதைக் கேட்டுவிட்டு, ஆகா! ஆகா!! என ரசனையை வெளியிட்டுப் பிரசாதங்களை அருந்தி, இலைகளை என் வயிற்றுக்குள்ளே வீசி எறிந்து விட்டுப் போயினர் பஜனை கோஷ்டியினர். அப்படி வீசி எறிந்த பக்தர்களில் ஒருவர், பிரசாதம் சாப்பிட இலை கிடைக்காத காரணத்தால் ஒரு புத்தகத்தின் தாள் ஒன்றை உபயோகித்தார் போலும். கசங்கிப் போய்ச் சோற்றுக்கறை படிந்த அந்தத் தாளை உற்றுப் பார்த்தேன். எனக்கே வெட்கமாக இருந்தது. ஏதோ ஓர் உணர்ச்சி என்னை வளைத்துக்கொண்டது. குப்பைத் தொட்டி என்றால் உணர்ச்சிகள் இருக்காதா, என்ன? அப்படியென்ன அந்தத் தாளில் இருந்தது என்று அறிய உங்களுக்கும் ஆவல் இருக்கத்தான் செய்யும். அதையும் சொல்லிவிடுகிறேனே! குத்து விளக்குச் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது.

அதிலிருந்து நேரம் இரவாகத்தானிருக்குமென முடிவுகட்டி விடலாம். இரவு நேரத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை வர்ணித்து அந்த நிகழ்ச்சித் தலைவனைப் பிரார்த்தனை செய்கிறாள், ஓர் அம்மை! பெண்ணின் பிரார்த்தனையில் இரவு நேரத்து விரசங்கள் எதுவும் இருக்காது என்று தான் நினைப்போம். ஆனால் நாம் ஏமாந்துவிடுகிற அளவுக்கும் பிரார்த்தனையில் ரசம் மேலோங்கி நிற்கிறது. மறுபடியும் வர்ணனையைக் கவனிப்போம். குத்து விளக்கின் ஒளியில் கட்டில் ஒன்று தெரிகிறது. கட்டில் என்றால் சும்மாவா? அதன்மீது மெத்தென்று மஞ்சம்! மல்லிகை, முல்லை, ரோஜா, மலர்கள் தூவப்பட்ட மஞ்சம்! விளக்கு-_ கட்டில், மலர் மஞ்சம் மட்டும் இருந்தால் காட்சி ரசிக்குமா? பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் பால் நிலவாக ஒரு மங்கை; அந்தப் படுக்கையில் இருக்கிறாள். அவள் கொத்தலர் பூங்குழல் கொண்ட கோதை! பெயரோ நப்பின்னை!

கட்டிலும் மெத்தையும் கவினுறு மங்கையும் இருந்துவிட்டால் பூரணத்துவம் பெற்றதாக முடியாதே! அந்த மங்கையின் மாங்கனியன்ன மார்பகத்தின்மீது தனது மார்பகத்தை வைத்த
வாறு பிரார்த்தனைக்குரிய ஆடவன் படுத்திருக்-கிறான். யார் அந்த ஆடவன்? ஆடவனா? அல்ல; அல்ல. ஆண்டவன்! அந்த ஆண்டவனைப் பிரார்த்திப்பதோ ஆண்டாள் அம்மை! “மலர் மார்பா வாய்திறந்து எனக்கருள்வாய்!’’ என்று ஆண்டவனை அழைத்திட விரும்புகிற ஆண்டாள் அம்மையார்; அவனைத் தன் இருப்பிடத்திற்கு அழைக்காமல் அவனது பள்ளியறைக்குள்ளேயே போய்விடுகிறார். போனதும் கண்ட காட்சிதான் குத்து விளக்கு எரிகின்ற அறையின் கோலாகலக் காட்சி!
“குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலின்மேல் மெத்தென்ற பாஞ்ச சயனத்தின் மேலேறிக்
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக்கிடந்த மலர்மார்பா வாய் திறவாய்’’
இந்தப் பாடலைத் தான் அந்தக் கசங்கிய தாளில் நான் படித்துப் பார்த்தேன். அய்யோ நான் அமர்ந்திருக்கும் இந்தச் சாக்கடையோரம் அப்படியே சப்ரகூட மஞ்சமாகி விடக்கூடாதா? எனக்குப் பக்கத்திலே ஒரு பெண் குப்பைத் தொட்டி வந்து சேரக் கூடாதா? அப்படி ஓர் அதிர்ஷ்டம் வந்தால் அவளோடு நான் எவ்வளவு இன்பமாக இருப்பேன்.

புதிய புதிய காதல் மொழிகள் எல்லாம் பேசுவேன். “கண்மணி’’ என்று அழைப்பதற்குப் பதில் அவளைக் “குப்பைமணி’’ என்று அழைத்து அணைத்துக் கொள்வேன். அவளோடு ஊர்க் கதையெல்லாம் பேசுவேன். பிறகு எங்களுக்குப் பொழுது போவதே தெரியாது. இப்படியெல்லாம் காதல் நினைவுகளை ஆண்டாளின் கவிதை என் நெஞ்சில் உருவாக்கியது. பாவம்; ஆண்டாள் யார் பெற்ற பெண்ணோ? பெற்றவர்கள் தூக்கியெறிந்து விட்டுப் போய்விட்டார்கள்; யாரோ ஓர் ஆழ்வார் எடுத்து வளர்த்தாராம்! அந்த அம்மையார், கடவுளைத் தொழுவதில் இவ்வளவு காமரசத்தை ஏன்தான் கலந்தாரோ தெரியவில்லை. ஒரு பாட்டுப் படித்து விட்டே இந்தப் பாடுபடுகிறேனே; எல்லாப் பாட்டும் கிடைத்தால் என்னைப் பைத்தியக்கார விடுதியின் ஓரத்தில் கொண்டுபோய் வைக்க வேண்டியதுதான்.

எப்போதுமா இப்படிப்பட்ட தாள்கள், நூல்கள் கிடைக்கின்றன! பெரும்பாலும் எச்சில் இலை; வாழைப்பழத்தோல்¢ ஆரஞ்சு, கமலாத் தோல்; இப்படித்தான் ஏதாவது வந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் செத்துப்போன எலிகளை என் வயிற்றுக்குள் போடுவார்கள். முனிசிபாலிடி வண்டி எப்போது வரும் என்று மூக்கைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். தெருக்கோடியில் ஒரு வீட்டிலிருந்து இரவு 12 மணிக்கு மேல் வேலைக்காரப் பையன் என்னருகே வருவான்.
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு விஸ்கி, பிராந்தி முதலிய மதுப் புட்டிகளின் மூடிகளை எல்லாம் என்னிடம் வீசிவிட்டு விறுவிறு என்று போய்விடுவான். எனக்கு இரவெல்லாம் உடம்பு நடுங்கும்; எங்கே போலீசார் என் மீது சந்தேகப்பட்டு என்னைக் கொண்டுபோய் மதுவிலக்குச் சட்டப்படி உள்ளே போட்டு விடுவார்களோ என்று! பிறகு எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொள்வேன்_ குப்பைத் தொட்டி எங்கேயிருந்தால் என்னவென்று!

ஒருநாள் மூன்றாவது வீட்டிலிருந்து என் பக்கமாகக் காரில் போன ஒருவர் சட்டைப் பையிலிருந்த ஒரு கடிதத்தைக் கிழித்து என் மீது போட்டுவிட்டுப் போய்விட்டார். பரபரப்புடன் அதைப் படித்தேன். ஒழுங்கற்ற முறையில் அது கிழிந்து போயிருந்ததால் தொடர்பாகப் படிக்க முடியவில்லை. யாருக்கோ வாத்தியாரம்மா வேலை வாங்கித் தருவதாக வாக்களித்து இதற்குக் கைமாறாக முன்கூட்டியே முன்னூறு ரூபாய் வாங்கிக்கொண்டு ஏமாற்றிவிட்டானாம் எவனோ ஓர் எத்தன். அவன் பெயரும் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் பெயரும் தெரியவில்லை. இருவரின் பெயரும் அதில் இல்லை. அவை கிழிந்து போய்விட்டன. யாராயிருந்தால் என்ன; எங்கள் “டிபார்ட்மெண்ட்’’ விஷயம் என்பதை மட்டும் புரிந்துகொண்டேன். யாரிடம் முறையிடப்பட்டதோ அவரும் அதனைப் பொருட்படுத்தவில்லை என்பதற்கு அடையாளமாக அந்த மடலை என்னிடம் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விட்டார். அந்தோ! பரிதாபம்! அந்தப் பெண் என்ன ஆனாளோ அவளை நான் பார்க்காமலே இருக்க விரும்புகிறேன். அவளைப் போன்ற அபலைகளை மட்டும் அல்ல; பொதுவாக மனிதர்களைப் பார்ப்பது என்றாலே எனக்கு வரவர வெறுப்பாகிவிட்டது. அவர்கள், பொறுமையற்றவர்கள்-_ அலட்சியப் புத்தி படைத்தவர்கள்-_ வெறி கொண்டவர்கள்_ விவேகத்தின் விரோதிகள் என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறது. என்னுடைய நிழலிலேயே வாழ்ந்து கொண்டிருந்த நன்றி மறந்த ஒரு மனிதனைப் பற்றி நினைத்தாலே எனக்குக் கோபம் பொங்குகிறது. எங்கிருந்தோ ஒரு நாள் வந்தான்; சரியாக நடக்க முடியவில்லை. உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டிருந்தது.

என்னையும் மீறி அவன் மீது ஒரே துர்நாற்றம்! போனால் போகிறது என்று சகித்துக்கொண்டு “யாரப்பா?’’ என்று கேட்டேன். “பார்த்தாலே தெரியவில்லை… இந்த நாட்டு மன்னர்களிலே ஒருவன்; உன் பக்கமிருந்து ராஜ்ய பரிபாலனம் செய்ய வந்திருக்கிறேன். கொஞ்சம் நிழல் கொடுப்பாயா?’’ என்று அவன் என்னைப் பார்த்தான். “நிழல் தருகிற அளவுக்கு நான் என்ன அவ்வளவு வளர்ந்து வளமாகவா இருக்கிறேன்? வேண்டுமானால் என் மறைவில் ஒதுங்கியிருந்து ராஜரீகம் செய்வாயாக!’’ என்றேன். அவனும் பத்து நாட்கள் என் மறைவிலேயே உட்கார்ந்தான் _ படுத்தான் _ தூங்கினான் _ சாப்பிட்டான். அங்கு இருந்தவாறே அவன் சர்க்கார் நடந்தது. போகிறவர்களிடம் பல்லைக் காட்டி அவனது அரசாங்கத்திற்குத் தேவையான வரிகளைக் காசாகவோ பணமாகவோ வாங்கிக் கொண்டிருந்தான்.

பத்து நாள் எனக்கும் அவனோடு நல்ல பொழுது போயிற்று. அவன் பாடுகிற சினிமாப் பாட்டுகள் நாடோடிப் பாட்டுகள் இவைகளை என்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன். ஓர் இரவு இந்தப் பரதேசி மகாராஜா ஒரு பெண்ணைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்தார்; நான் தூங்குவதுபோல் நடித்து நடப்பவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவள் வரும்போதே சீக்கிரம் போகணும் என்று முனகிக் கொண்டு வந்தாள். “அட, பறக்காதே, இந்தா பணம்!’’ என்று ஓர் எட்டணாவை அவளிடம் கொடுத்தார் மகாராஜா! நான் கண்களை இறுக மூடிக்கொண்டு காதை மட்டும் நீட்டி வைத்துக் கொண்டிருந்தேன்.
‘கண்ணு!’
‘என் மூக்கு!’
‘அய்யோ மன்மத ராஜா!’
இப்படிச் சில கொஞ்சுதல் வார்த்தைகள் கரகரத்த தொண்டையிலிருந்து வெளிப்பட்டன. அந்தப் பாவி மகாராஜனுக்கு நான் ஒருவன் அவனுடைய நண்பன் அருகே இருக்கிறேனே என்ற நாணம் கூடக் கிடையாது. சிறிது நேரம் கழித்துக் கண்ணை விழித்துப் பார்த்தேன். என் நண்பன் சுருண்டு படுத்துக் கொண்டிருந்தான். மன்னிக்கவும்; இந்நாட்டு மன்னர் துயில் கொண்டி
ருந்தார். மகாராணியைக் காணவில்லை. அவள் அடுத்த ராஜ்யத்துக்குப் போயிருக்கக்கூடும். மறுநாள் காலையில் இரண்டு மூன்று போலீஸ்
காரர்கள் என் நண்பனிடம் பேசிக்கொண்டிருந்தார்கள். தொலைவில் பேசிக்கொண்டிருந்ததால். எதுவும் புரிகிற அளவுக்குக் காதில் விழவில்லை. பிறகு, என் நண்பன் என்னருகே வந்து, போலீசாரைக் கண்டு பயப்படாதே! அவர்கள் என்னைக் கைது செய்ய வந்ததாக நினைக்காதே! வெளிநாட்டிலேயிருந்து யாரோ பெரிய மந்திரி வருகிறாராம். அவரைப் பார்க்க இந்த ராஜாவை அழைக்கிறார்கள்’ என்றான்.
நான் வியப்புடன்; ‘அப்படியா? அந்த மந்திரியை எங்கே போய்ச் சந்திப்பாய்?’ என்று கேட்டேன்.

“நான் போய் எனது வழக்கமான ஜெயில் மாளிகையில் இருப்பேன். அவர் வந்து என்னைச் சந்திப்பார். நீ கூட அவரைப் பார்க்கக்கூடும். ஏனென்றால் இந்தப் பக்கம்தான் அவர் ஊர்வலம் வருகிறார்.’’
என்று கூறிக்கொண்டே அவன் போலீசார் கொண்டு வந்த பெரிய காரில் ஏறிப் போய்விட்டான். அவன் சொன்னபடி மறுநாள் வெளிநாட்டு மந்திரி நான் இருக்கும் வீதிப் பக்கம் வந்தது உண்மைதான். ஆனால் அந்த நண்பன் மட்டும் என்னைத் திரும்ப வந்து பார்க்கவேயில்லை. இந்நாட்டு மன்னர்களிலே ஒருவனல்லவா? எந்தக் குப்பைத் தொட்டி மறைவுக்குப் போனானோ; தெரியவில்லை! நன்றிகெட்டவன்.
என்னமோ போங்கள்… சத்தமற்ற என் வாழ்க்கையில் எல்லாவற்றையும் சந்தித்தாகி-விட்டது. நான் படித்த கல்யாணப் பத்திரிகைகள் எத்தனை_ நான் அருந்திய விருந்துகள் எத்தனை-_ மங்கல காரிய அழைப்புகளும்; அமங்கல காரிய அழைப்புகளும் _ எவ்வளவு, எவ்வளவு? காதலன் -_ காதலிகள் கிழித்துப் போட்ட திருட்டுத்தனமான கடிதங்கள் எத்தனை_ நான் படித்துப் பார்த்து அவர்களை நினைத்துச் சிரித்திருக்கிறேன். ஒதுக்கப்பட்டவை, ஒளிக்கப்பட்டவை எல்லாமே என்னுடைய இரு கரங்களால் அன்போடு வரவேற்கப்பட்டிருக்கின்றன.
எதையும் பொறுத்துக்கொண்டு புன்னகை காட்டுகிற தூய்மையான துறவிகளைவிட நான் ஒருபடி மேலான பொறுமைசாலி.

இந்த நாட்டில் எத்தனையோ மக்கள் வயிறாரச் சோறின்றி வாடுகிறார்கள். என் வயிறோ காலியாகக் காலியாக நிரம்பிக் கொண்டேயிருக்கிறது. அய்யோ, உங்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது யாரோ ஒரு பெண் பதுங்கிப் பதுங்கி வருகிறாளே; சற்று மறைந்து கொள்ளுங்கள். ஆம்; அவளுடைய கையில் ஒரு குழந்தையிருக்கிறது. பச்சைக் குழந்தை; இப்போதுதான் பிறந்திருக்கிறது. அடடா, கழுத்தெல்லாம் ரத்தம்! குழந்தை தூங்குகிறதா? இல்லை! செத்துவிட்டது.
கழுத்து முறிக்கப்பட்டிருக்கிறது_ சரிதான்; அவள்தான் குழந்தையின் தாய்! குழந்தையை என் வயிற்றுக்குள் போடப் போகிறாள்_ போட்டேவிட்டாள்! அவள் ஓடுகிறாள்! என்னைப் போலீஸ் வரையிலே மாட்டி விட்டு அவள் ஓடுகிறாள்_ ஏன் ஓடுகிறாள்? புரிகிறது! புரிகிறது! அவள் கழுத்தில் தாலியைக் காணோம்.
(“16 கதையினிலே’’ என்ற கலைஞரின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து)