சிந்தனைக் களம் : உயர்பதவியில் இருப்பவர்களின் பொறுப்பற்ற பேச்சு

2022 சிந்தனைக் களம் செப்டம்பர் 1-15-2022

சரவண இராசேந்திரன்

எங்கும் பார்க்கிறேன் கபரிஸ்தான் இருக்கிறது (இஸ்லாமியர் இறந்த உடல்களைப் புதைக்கும் இடம்). ஆனால், சம்சான்கட் (ஹிந்துக்களின் இடுகாடு) எங்குமே இல்லை. இது 2017ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச இட்டாவா நகரில் பரப்புரையின்போது நாட்டின் பிரதமர் என்கிற உயர் பதவியில் இருக்கும் மோடி பேசியது.
இந்தியா ஹிந்து நாடாக மாறுவதற்கான அறிகுறிகள் என்ன? கடந்த ஆண்டு டிசம்பரில், பிரதமர் நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் ஆலய வழித் தடத்தை “ஹர்ஹர்மஹாதேவ்” என்ற கோஷங்களுக்கு மத்தியில் திறந்து வைத்தார். காவி உடை அணிந்து, முனிவர் போல் குளிர்ந்த கங்கை நீரில் நீராடி, கால பைரவர் கோவிலில் பிரார்த்தனை செய்தார். பின்னர் அவர் ஒரு ட்விட்டில், புனித நதியின் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

இவை அனைத்தும் தேசிய தொலைக்-காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின. “அவுரங்கசீப் வரும் போதெல்லாம் ஒரு சிவாஜியின் எழுச்சி இருக்கும்” என்று அந்த நேரத்தில் அவர் தெரிவித்த வார்த்தைகள் ஒரு மதச்சார்பற்ற அரசின் தலைவர் என்பதைவிட, ஒரு ஹிந்துத்துவ பிரதமரின் செய்தி போல இருந்ததாக சில அரசியல் விமர்சகர்கள் கூறினர்.
மோடி வரும் வரை எந்தவொரு இந்தியப் பிரதமரும் பிரார்த்தனை செய்வதை, இவ்வளவு பெரிய தேசிய நிகழ்வுபோல் அனைத்து தொலைக்காட்சிகளும் மாற்றியதில்லை. ஜாதி, மதம் மற்றும் பாலின அடிப்படையில் பாகுபாடு இருக்காது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் உறுதியளிக்கிறது. ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம் _ அதாவது சிஏஏ _ முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ், சில அண்டை நாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்தர்களாக இருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால், அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை கிடைக்காது. இந்தச் சட்டம் இந்தியர்களைப் பாதிக்காது என்று பாஜக அரசு வாதிட்டது.
ஆனால், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதற்கு எதிராக எச்சரிக்கைக் குரலை எழுப்பி, இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் என்று கூறி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, திமுக எம்.பி. கனிமொழி, இது ஹிந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கை என்று சொல்லும் அளவுக்குச் சென்றார்.
என்.ஆர்.சி.யின் (ழிஸிசி) கீழ் அசாமில் உள்ள 19 லட்சம் முஸ்லிம்கள், இந்தியர்கள் அல்லாதவர்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் மதம் காரணமாக சி.ஏ.ஏ.-வின் கீழ் அவர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது. குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அவர்கள் ஹிந்து/சீக்கிய/ஜைன மதத்திற்கு மாறுவதே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன.

எல்.கே.அத்வானி ராம ஜென்மபூமி இயக்கத்தை வழிநடத்தியதன் உச்சகட்டமாக ஹிந்துத்துவ கும்பல்களால் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவின் எல்.கே.அத்வானி, காங்கிரஸ் ஆட்சியின் கீழ் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியல் நடப்பதாகக் கூறி அதற்கு எதிராக ஒரு கடுமையான பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
“முஸ்லிம் வாக்கு வங்கியைப் போலவே, ஹிந்துத்துவவாதிகளும் ஹிந்து வாக்கு வங்கியைக் கட்டியெழுப்பப் பாடுபட்டனர். அதுதான் அவர்களின் அரசியல் இலக்கு. அவர்கள் அதைச் சாதித்துவிட்டனர். இப்போது ஹிந்து வாக்கு வங்கியை எதிர்க்க யாரும் துணியவில்லை.”

பாஜக ஆட்சியில் நிகழ்ந்த மாற்றங்கள்
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, பல நகரங்கள் மற்றும் தெருக்களின் முஸ்லிம் அல்லது முஸ்லிம் ஒலி கொண்ட பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. அவுரங்கசீப் சாலைக்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது போல டெல்லியிலுள்ள அக்பர் சாலை மற்றும் ஷாஜகான் சாலையின் பெயர்கள் மாற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
அவர்களுக்கு அக்பர் சாலை அல்லது ஷாஜஹான் சாலை பெரிய பிரச்சினை. ஆனால், டெல்லியில் மான்சிங் சாலை உள்ளது. அவர் யார்? அவர் அக்பரின் ராணுவ தளபதி. டெல்லியில் தோடர்மால் சாலையும் பீர்பால் சாலையும் உள்ளன. தோடர்மால் அக்பரின் நிதியமைச்சராக இருந்தார். பீர்பாலும் அக்பரின் நவரத்தினங்களில் ஒருவர்.
அக்பரை அரக்கனாகச் சித்திரிக்க விரும்புகிறீர்கள். ஆனால், பீர்பால், தோடர்மால் மற்றும் மான்சிங்கை அப்படிச் சித்திரிக்க விரும்பவில்லை. அது ஏன்? பல்வேறு ஹிந்துத்துவ அமைப்புகள் முன்பைவிட இப்போது ஹிந்து ராஷ்டிரா எண்ணத்தை மனதில் கொள்ளுமாறு மக்களை ஊக்குவிக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது சாதாரண ஹிந்துக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்தியாவை ‘ஹிந்து நாடு’ என்று அழைப்பதற்கு முன் இன்னும் நிறைய வேலைகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஹிந்துத்துவத் தலைவர்கள் நன்கு அறிவார்கள்.

ஜாதி அமைப்புகளை வலுப்படுத்துதல்; முஸ்லிம்கள் போன்ற சமூகங்களுக்கு வழங்கப்பட்ட சிறுபான்மையினர் அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வருவது; காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பலம்வாய்ந்த முஸ்லிம் அமைப்புகளை ஒன்றுமில்லாமல் ஆக்குவது; ஹிந்துத்துவாவும் ஹிந்துவும் எதிரெதிர் கருத்துகள் என்ற ‘தவறான கருத்தை’ நீக்குவது போன்றவை.
மதச்சார்பின்மை என்ற பெயரில் முஸ்லிம் திருப்திப்படுத்தலை அவர்கள் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறார்கள். சிறுபான்மை அந்தஸ்துக்கு ஒரு முடிவு இருக்க வேண்டும்; ஹிந்து தேசத்தில் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என இருக்கக் கூடாது என்கிறார்கள். இந்தியாவை ஹிந்து நாடாக ஆக்குவதற்கு முன் இவை அனைத்தும் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். இதுவொரு செயல்முறை. இதை ஒரே இரவில் செய்ய முடியாது.