திரைப்படவிமர்சனம் : அசுரன்

நவம்பர் 01-15 2019

கோ.ஒளிவண்ணன்

அசுரன் பார்க்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். காரணம்???

காரணம், வெக்கை நாவலைப் படிக்காமல் இப்படத்தைப் பார்க்கக்கூடாது என்பதால்தான்.

ஒரு சில மணி நேரங்களில், முழு வீச்சில் படித்து முடித்தேன்.

வெக்கை _ பூமணி அவர்களின் நாவல்.

எழுத்தாளர்

பூமணி

இந்நாவலை திரைப்படமாக்க முடியுமா? இதனை எப்படி திரைப்படமாக்கியிருப்பார்கள்? இந்த நாவலைப் படித்தோர்க்கு இக்கேள்விகள் நிச்சயம் எழும்!

அண்ணனைக் கொலை செய்தவனை 15 வயதான தம்பி கொன்று விடுகிறான். அவனை போலீசாரிடமிருந்தும், கொலையுண்டவனின் உறவினர்களிடமிருந்தும் காப்பாற்ற, தந்தையார் மகனை இழுத்துக்கொண்டு காடுகளிலும் மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் ஓடுகிறார். ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் எத்தனை காலம்தான் இப்படி ஒளிந்து வாழ்வது, பேசாமல் நீதிமன்றத்தில் ஆஜராகி விடுவோம் என்று முடிவு செய்கிறார். மகனை அழைத்துக் கொண்டு நீதிமன்றம் செல்லப் புறப்படுகிறார். இதுதான் வெக்கையின் கதை.

கதையைக் கையாளும் இயக்குநரிடம்தான் இருக்கிறது திரைப்படத்தின் வெற்றி. அந்த வகையில் வெற்றிமாறன் தானொரு சிறந்த கலைஞன் என்பதை மீண்டும் ஒரு முறை மெய்ப்பித்துள்ளார். எழுத்தில் வெளிவந்த கதையை திரைப்படத்தில் காட்சிகளாக உருவாக்கும்போது சரியான திரைக்கதை அமைத்தல் வேண்டும். அந்த வகையில் அசுரனில் மிகவும் அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் அமைத்திருக்கிறார் வெற்றிமாறன். மூலக்கதையில் நேரடியாகச் சொல்லப்பட்ட செய்திகளையும் மறைமுகமாக உணர்த்திய செய்திகளையும் சரியாக உள்வாங்கி அதனை தக்கவாறு படைத்திருக்கிறார். உதாரணமாக, நாவலில் பஞ்சமி நிலம் குறித்தெல்லாம் விரிவாகப் பேசப்படவில்லை. ஆனால், அதை குறிப்பால் சுட்டிக்காட்டி இருப்பார் பூமணி. படிப்பவர்கள் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், வெற்றிமாறன் திரையில் அதனை விவாதப் பொருளாக்கி படத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

இயக்குநர்

வெற்றிமாறன்

வெற்றிமாறனின் திறமைகள் ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் அவருடைய கற்பனைகளுக்கும் எண்ணங்களுக்கும் சரியான வடிவம் கொடுத்திருப்பவர் தனுஷ். தான் மிகச்சிறந்த நடிகர் என்பதை தொடர்ந்து மெய்ப்பித்து வருகிறார்.

தன்னுடைய மகன்கள் மீது என்னமாய் பாசத்தை பொழிகிறார் மனிதர். உடல் வெந்து, உயிரற்று கிடக்கும் பெரிய மகன் முன்பு, தனுஷ் கையறு நிலையில், ஆற்றாமையுடன் அடிவயிற்றிலிருந்து எழுப்பும் அழுகையுடனான ஒலி, அரங்கு நிறைந்த பிரம்மாண்டமான சத்தியம் திரையரங்கில் சில மணித்துளிகள் மயான அமைதி. தனுஷின் குரல் மட்டும். அவருடைய துக்கம் நம்மையும் கவ்விக் கொள்கிறது.

அதைப் போன்று இன்னொரு காட்சி. தன் மகனைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, ஜாதிவெறி நிரம்பிய ஊரார் காலில் தனித்தனியாக விழ வேண்டும் என்கிறபோது, வயது வேறுபாடின்றி ஒவ்வொருவர் காலிலும் தனுஷ் விழும்போது நம் கண்களில் வரும் கண்ணீரை அடக்குவது சிரமம். வேதனை என்னவென்றால் சிறு பையன்கள் காலில்கூட விழ வைப்பார்கள். ஒவ்வொருவரும் தன் காலில் விழுவதைப் பெருமையாக ஏற்றுக் கொள்கின்றனர். ஒரேயொரு ஆறுதல், கருப்புச் சட்டை அணிந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் மட்டும், “வேண்டாக அவங்கதான் அறிவில்லாம செய்யறாங்கன்னு’’ தனுஷ் தன் காலில் விழுவதைத் தடுக்கிறார்.

தன் பொருட்டு தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்திற்கு எதிர்வினையாக தனுஷின் பெரிய மகன், வடக்கூரானை செருப்பால் அடிக்கும் போது திரையரங்கில் மக்கள் ஆர்ப்பரித்துக் கைதட்டும்போது நம் மெய் சிலிர்க்கிறது.

இடைநிலை ஜாதிக்காரர், அறிமுகம் அதிகமில்லாத தன்னுடைய ஜாதிக்காரனிடம் காட்டுகின்ற அபரிதமான பரிவும், அதே நேரத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதியினரிடம் அவர்கள் எத்தனை ஆண்டுகாலமாக நெருங்கிப் பழகி இருந்தாலும், அவர்களால் பல பயன்களைப் பெற்றிருந்தாலும், வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும் என்கிற அந்தக் கொடூரமான மனோபாவத்தை அழகியலாக வெளிப்படுத்துகிறார் வெற்றிமாறன்.

இத்தகைய சம்பவங்கள் எல்லாம் புத்தகத்தில் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட அவலங்கள் மகன் தந்தைக்கு இடையிலான உரையாடல்களில் பல இடங்களில் கூறப்பட்டிருகின்றன. இதனை எல்லாம் அழகாக நேர்த்தியாகக் கோத்து, காட்சிகளாக வடிவமைத்திருப்பது வெற்றி மாறனின் திறமை.

தந்தையும் தனயனும் காடுகளிலும் மேடுகளிலும் மற்றவர்கள் கண்ணில் பட்டுவிடக்கூடாது என்று அலைகின்றபோது நாமும் ஒரு பரிதவிப்புடன் அலைகிறோம்.

“நம்மிடம் நிலம் இருந்தால் எடுத்துக்கொள்வார்கள். பணம் இருந்தால் பிடிங்கி கொள்வார்கள். ஆனால், நம்மிடமிருந்து எடுக்கவோ அழிக்கவோ முடியாத ஒரே செல்வம், கல்வி. நாம் படிக்க வேண்டும், அது மட்டும்தான் நம்மை உயர்த்திப் பிடிக்கும்’’ என்று இறுதி காட்சிகளில் தனுஷ் பேசும் போது, அவர் மகன் மட்டுமல்ல, நாமும் சிலிர்த்து போகிறோம். மக்கள் ஆர்ப்பரித்து கைதட்டி வரவேற்கும் போது, ஈரோட்டுக் கிழவனின் உழைப்பு வீணாகிப் போகவில்லையென்று நாம் பெருமிதம் கொள்கிறோம்.

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

என்கிற குறளும் நமது நினைவில் வந்து போகிறது.

இப்படி காட்சிக்குக் காட்சி, எதிர்பார்ப்புகள், திருப்பங்கள் என படத்தை நகர்த்திச் சென்றிருக்கிறார் வெற்றிமாறன். தனுஷ் அவர்களுடைய நடிப்புக் கிரீடத்தில் பதிக்கப்பட்ட இன்னொரு வைரக்கல் _ அசுரன்.

இப்படத்தில் நடித்திருந்த அனைவரும் அவர்களுக்குரிய கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருப்பது கூடுதல் சிறப்பு. குறிப்பாக பிரகாஷ்ராஜ், பசுபதி போன்றவர்கள்.

கதையினை எழுதிய பூமணிக்கு எவ்வளவு பாராட்டுகள் உகந்ததோ அதே அளவிற்கு வெற்றிமாறனுக்கும் உள்ளது. காரணம் _ தன் முன்னால் கொட்டிக் கிடக்கும் பலவகை மலர்களை வகையாகப் பிரித்து, எடுத்து, கோத்து அழகிய மாலையாக திரையிலே உருவாக்கியதற்கு.

வெக்கை.. கதையும் படிக்க வேண்டும்; இத்திரைப்படத்தையும் பார்க்க வேண்டும். இரண்டுமே வெவ்வேறான அனுபவங்கள்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *