இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்டமும் ‘இந்தியா’ கூட்டணியும்! – கி.தளபதிராஜ்

2024 ஏப்ரல் 1-15, 2024 கட்டுரைகள் மற்றவர்கள்

இந்திய ஒன்றியத்தை ஆண்டுகொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு கடந்த 2019ஆம் ஆண்டில் இந்தியக் குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது. மசோதா கொண்டுவரப்பட்ட போதே பலதரப் பட்டவர்களின் கடுமையான கண்டனத்தை எதிர் கொண்டது. கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சமூகவியலாளர்கள் என ஓங்கிக் குரல் கொடுத்தவர்களின் பட்டியல் மிக நீண்டது. இந்திய அளவில் மட்டுமல்லாது பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில் மசோதா சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கிய இந்த நேரத்தில் பா.ஜ.கவின் தேர்தல் பத்திர மெகா ஊழல் அவர்களே எதிர்பார்த்திராத நிலையில் விசுவரூபம் எடுத்து தற்போது நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு கடந்த 2018ஆம் ஆண்டு இந்த தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தேர்தல் பத்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், ஆகவே இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் பல தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தேர்தல் பத்திர நடைமுறை ரத்து செய்யப்படுவதாக ஒருமித்த தீர்ப்பு வழங்கியது.
மேலும், தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை SBI வங்கி வெளியிடவேண்டும் என்றும் உத்தரவிட்டனர். முதலில் இதற்குக் காலஅவகாசம் கேட்ட SBI, உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பைத் தொடர்ந்து அந்த ஆவணங்களைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்தது. அதனைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் அந்த அறிக்கைகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் வெளியான தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரத்தில் பா.ஜ.கவுக்கே அதிக நன்கொடை சென்றதும், ரூ.966 கோடி நன்கொடை கொடுத்த நிறுவனத்துக்கு ரூ.14,400 கோடி மதிப்புடைய ஒப்பந்தத்தை பா.ஜ.க. அரசு ஒதுக்கியுள்ளதும் அம்பலமாகியுள்ளது.
இந்த நிலையில், இதை திசை திருப்ப குடியுரிமைத் திருத்தச் சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக தடாலடியாக அறிவித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியதுபோல் இப்போது இந்திய ஒன்றியத்தைக் கடந்து உலகளாவிய அளவில் பா.ஜ.க. எதிர்ப்புத் தீ சுழன்றடித்துப் பரவிக் கொண்டிருக்கிறது

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் “கடந்த 2014ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் அடைக்கலம் தேடி வந்தவர்களில் இஸ்லாமியர் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், சமணர்கள், பவுத்தர்கள் என ஆறு பிரிவினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும்” என்று சொல்கிறது.
மதசார்பற்ற ஒரு நாட்டில் மக்களை இப்படி மத அடிப்படையில் கூறுபோட்டுப் பார்ப்பது சரியா?
‘இந்தியாவில் வாழ்கிற எந்த மக்களையும் மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்தக் கூடாது’ என்று சொல்லும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கே (பிரிவு 14) இது எதிரானதல்லவா?

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாகச் சொல்லும் இந்தச் சட்டத்தில் நமது தொப்புள் கொடி உறவான இலங்கை மக்கள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

இப்படிப்பட்ட கேள்விகள் நாடு முழுவதும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காகத்தான் இந்தச் சட்டம் எனில் இதில் இஸ்லாமியர்களையும் சேர்த்து இருக்க வேண்டும். பாகிஸ்தான் அகமதியாக்களையும், மியான்மர் ரோஹிஞ்சாக்களையும் கூட அவர்கள் நிராகரித்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் அகமதியாக்களை அவர்கள் இஸ்லாமியர்களாகவே ஏற்றுக்கொள்வதில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சி, சி.பி.எம்., சி.பி.அய்., தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் இதனை எதிர்க்கின்றன. நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதனைக் கடுமையாக தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். ஆனால், அ.தி.மு.க. இந்தச் சட்ட மசோதாவை ஆதரித்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக சுமார் 250 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரிசை கட்டி நிற்கிறது. கடந்த மார்ச் 19ஆம் தேதி இந்த வழக்குகளை ஒருங்கிணைத்து விசாரித்த உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், ஒன்றிய அரசு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று சொல்லி வழக்கின் மீதான விசாரணை அடுத்த ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என உத்தரவிட்டிருக்கிறார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டம் ஒரு புறமிருக்க, இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின் ‘மூலம்’ எது என்று பார்த்தோமானால் அது அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ்ஸின் சித்தாந்தமே என்பது விளங்காமல் போகாது.

‘நாம் அல்லது நமக்கான தேசத்தின் வரையறை’ (We or Our Nationhood Defined) என்ற நூலை ஆர்.எஸ்.எஸ்ஸின் பிதாமகன் என்று சொல்லப்படுகிற கோல்வாக்கர் எழுதியுள்ளார்.

“ஹிந்துஸ்தானில் வாழக்கூடிய அனைவரும் ஹிந்துக்கள். அவர்களுக்கான இனத்தின் அடையாளம் இந்தியர் அல்ல; ஹிந்து என்பது தான். ஹிந்து மதத்தைச் சாராத பிற மதத்தினர் அனைவரும் அந்நியர்கள். அவர்கள் ஹிந்துஸ்தான் என்ற பாரத தேசத்தில் வாழ வேண்டுமானால் ஹிந்துக் கலாச்சாரத்தை மதிக்க வேண்டும்; அதற்கு அடிபணிய வேண்டும். ஹிந்துக்கள் அல்லாத பிற மத அந்நியர்கள் தங்களுக்கான தனித்த அடையாளங்களை இழந்துவிட வேண்டும். ஹிந்துக்கள் பெருமையை மட்டுமே பேச வேண்டும். இதை ஏற்க மறுக்கும் ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு ‘குடியுரிமை’ கூட வழங்கக் கூடாது” என்று அந்த நூலிலே அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு மட்டும் அவர் விட்டுவிட வில்லை. “ஹிந்து அல்லாதோர் தங்களுக்கான தனி அடையாள உரிமைகளை இழந்தே தீரவேண்டும். அவர்கள் தங்களுக்கான உரிமைகளையோ, முன்னுரிமையோ கோர முடியாது என்பதோடு குடியுரிமை கோரவும் உரிமை இல்லை.” என்று அந்த நூலில் எழுதியிருக்கிறார்.
கோல்வால்கரின் மூளையில் புரையோடிக்கிடந்த அந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் தான் இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்பது இப்போது ஊரறிந்த ரகசியம்! அதனால்தான் சமூக நலனில் அக்கறை கொண்ட பலரும் இச்சட்டத்திற்கு எதிராகத் திரண்டு, ஒழித்தே தீருவோம் என போர்க்குரல் கொடுத்து வருகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் பல்வேறு கட்சிகள் இந்தியா கூட்டணியில் தற்போது இடம் பெற்றிருக்கின்றன.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை 20.3.2024 அன்று வெளியிடப் பட்டிருக்கிறது. “இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்!” என அதில் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த ஒற்றை அறிவிப்பிற்காகவே நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியைப் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெறச் செய்யவேண்டும். தமிழ்நாட்டில் 39, புதுவையில் 1 ஆக 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி வாகை சூட வேண்டும்! தமிழர் தலைவர் தலைமையில் அதற்கான ஆயத்தப் பணிகளில் கண்துஞ்சாது களம் காண்போம்! ♦