பரிணாமக் கோட்பாட்டையே பாடத்திட்டத்தில் நீக்குவதா?பாசிச பா.ஜ.க. பாதையில் ncert! – மஞ்சை வசந்தன்

2023 கட்டுரைகள் மற்றவர்கள் முகப்பு கட்டுரை மே 1-15,2023

சார்லஸ் டார்வின்

மனிதன் விலங்கோடு விலங்காய் வாழ்ந்த காலத்தில் இயற்கைத் தாக்குதல்களாக கண்டு அஞ்சினான். தொடக்க காலத்தில் அவற்றிடமிருந்து தப்பிக்க ஓடி ஒளிந்தவன் பின்னாளில் அவற்றை வணங்கி தப்பிக்க இயன்றான்.
உலக அமைப்பை, உடல் அமைப்பைப் பார்த்து இதையெல்லாம் ஒருவர் படைத்திருக்க வேண்டும் என்று எண்ணினான். நம்பினான்.
இந்த உலகையும், உயிரினங்களையும் படைத்தவர் கடவுள் என்று கருதினான். அக்கடவுள் சார்ந்த மதங்கள் எல்லாரும் இவ்வுலகும், உயிரினங்களும் கடவுளாலே படைக்கப்பட்டன என்று போதித்தன; மக்களை நம்பச் செய்தன. சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை, இந்த நம்பிக்கையே உலக அளவில் ஆழமாய் இருந்தது. இந்த உலகம் தட்டையானது என்றும் உறுதியாய் நம்பினர்.

மவுலானா அபுல்கலாம் ஆசாத்

மனிதன் பேசக் கற்று, எழுதக் கற்று, படிக்கக் கற்று பின் தன் எண்ணங்களை, சிந்தனைகளை பேச்சு வழியும் எழுத்து வழியும் வெளிப்படுத்தினான். சிந்தனை வளர்ந்தது. உலகின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்தான். அனுபவம் அதிகமானது.
சிந்தனையும் அனுபவமும் தொடர்ந்து பின்னிப் பிணைய அறிவு வளர்ந்தது. ஏன்? எதற்கு? எப்படி? என்று வினா எழுப்பினான். எல்லாவற்றிற்கும் காரணம் என்ன? என்று சிந்திக்கத் தொடங்கினான்.

இதுவரை உலகில் நிலவும் நம்பிக்கைகளில் எது சரி? எது உண்மையாக இருக்க முடியும் என்று கூர்ந்து சிந்தித்தான்.
உலகு தட்டையாக இருந்தால் இரவு பகல் எப்படி ஏற்படும்? தனக்குள் வினா எழுப்பி ஆராய்ந்தான். பூமி உருண்டையாக இருந்தால் மட்டுமே இரவு பகல் ஏற்பட முடியும் என்னும் முடிவுக்கு வந்தான். எனவே, உலகு தட்டையில்லை; அது உருண்டையென்று கலிலியோ கண்டறிந்து அறிவித்தார். அதை மதவாதிகள் எதிர்த்தனர்.

அதேபோல் உயிரினங்கள் ஒரு செல் உயிரியிலிருந்து பரிணாமம் பெற்றே உருவாகின என்று டார்வின் கண்டறிந்து கூறினார். அப்பரிணாமக் கோட்பாடு அறிவியல் அடிப்படையில் உறுதியும் செய்யப்பட்டது. ஆனால், அதையும் மதவாதிகள் எதிர்த்தனர்.

அறிவியல் தொடர்ந்து வளரவளர இவையெல்லாம் உண்மை என்பது அய்யத்திற்கு இடமின்றி உறுதி செய்யப்பட்டன. அண்மைக் காலத்தில் கிறித்தவ மதத் தலைவர்களே இவ்வுண்மைகளை ஏற்றுத் தங்கள் எதிர்ப்பைக் கைவிட்டனர்.
பரிணாமக் கோட்பாடு போன்ற அறிவியல் கருத்துக்கள் தொடக்கப்பள்ளி முதல் பல்கலைக் கழகங்கள் வரை பாடமாக ஆக்கப்பட்டு, மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், அண்மைக்காலத்தில் ஒன்றிய ஆட்சியில் அமர்ந்த பா.ஜ.க. அரசு அறிவியல் கருத்துக்களைப் புறந்தள்ளி, தங்களின் மதநம்பிக்கையிலான கருத்துக்களைப் பாடமாக்க முயற்சித்து வருகின்றன. இதற்கு அவ்வப்போது அறிவியல் அறிஞர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, குளோனிங் முறையில் உயிரினப் பெருக்கம், ஆகாய விமானம் போன்ற அனைத்திலும் இந்தியாவில் பாரத, இதிகாச, புராண காலங்களிலே இந்துக்கள் அறிவு பெற்றிருந்தனர். இவற்றிற்கெல்லாம் நாம்தான் முன்னோடி என்று உண்மைக்கும், அறிவியலுக்கும் சற்றும் ஒவ்வாத வடிகட்டிய பொய்களை அறிவியல் மாநாடுகளிலே அமைச்சர்கள் பேசிய அவலம் நிகழ்ந்துள்ளது. இதையும் அறிவியல் வல்லுநர்கள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.


என்றாலும் பி.ஜே.பி. ஒன்றிய அரசு வாஸ்து, சோதிடம் போன்ற அறிவியலுக்கு எதிரான நம்பிக்கைகளைப் பாடத் திட்டத்தில் சேர்த்து மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குக் கேடு செய்துள்ளது.
அத்தோடு நிற்காமல் அண்மையில், உலக அளவில் அறிவியல் வல்லுநர்களால்
உறுதி செய்யப்பட்டுள்ள பரிணாமக் கோட்பாட்டை பாடத் திட்டத்திலிருந்து NCERT நீக்கியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியும், கொதிப்பும் அடையச் செய்துள்ளது.பரிணாமக் கோட்பாடு என்பது டார்வின் அவர்களால் உருவாக்கப்பட்டு, அது பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டதோடு, உலகிலுள்ள அனைத்து அறிவியல் அறிஞர்கள் – குறிப்பாக உயிரியல் அறிஞர்களால் ஏற்கப்பட்டுள்ளது. உலகஅளவில் எல்லா பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப்பட்டு மாணவர்களுக்குக் கற்பிக்கப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட, உயிரியல் பாடத்தின் அடிப்படைக் கருத்தான பரிணாமக் கோட்பாட்டை, பாசிச பா.ஜ.க. ஆட்சியின் கட்டளைக்கிணங்கச் செயல்படும் NCERT நீக்கியுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது. மதச் சார்பற்ற நாட்டில், மூடநம்பிக்கைகளைப் புகுத்த முற்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரானது. இது இந்தியா அளவில் மட்டுமல்ல, உலக அளவில் எதிர்க்கப்பட வேண்டிய கொடுஞ்செயலாகும். இது கல்வித் துறையையும், அறிவியல் துறையையும் சீரழிக்கும் காட்டு மிராண்டிச் செயலாகும்.

பாடநூல்களிலிருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை என்.சி.இ.ஆர்.டி நீக்கியதைக் கண்டித்து திறந்த கடிதம்அறிவியல் பாட நூலில் இருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை என்.சி.இ.ஆர்.டி நீக்கியதைக் கண்டித்து 1,800 விஞ்ஞானிகளும் கல்வியாளர்களும் திறந்த கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

சார்லஸ் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கொள்கையை 9 மற்றும் 10ஆம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தகங்களிலிருந்து என்.சி.இ.ஆர்.டி (தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் – NCERT) நீக்கியதைக் கண்டித்து எழுதப்பட்ட திறந்த கடிதத்தில் இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்து 1,800க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

‘தி பிரேக் த்ரூ சயன்ஸ் சொசைட்டி’ (The Breakthrough Science Society) ஏப்ரல் 20ஆம் நாளன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புடன், இந்திய அறிவியல் கழகம் (Indian Institute of Science),டாடா அடிப்படை அறிவியல் ஆராய்ச்சி கழகம் (Tata Institute of Fundamental Research), இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology) உள்ளிட்ட குறிப்பிடத்தக்க ஆய்வு மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கையொப்பமிட்ட ‘பாடத்திட்டத்திலிருந்து பரிணாம வளர்ச்சிக் கொள்கையை விலக்குவதற்கு எதிராக ஒரு வேண்டுகோள்’ என்ற தலைப்பிட்ட இந்தக் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி தொடர்பான ஆலோசனைகளை ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்குவதற்கென்று ஏற்படுத்தப்பட்ட அரசு அமைப்பான ‘தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT), கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்புக்குப் பின் மாணவர்களின் சுமையைக் குறைப்பதற்காக பாடத் திட்டங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுத்தது.
அதன் விளைவாக, ‘மரபுவழி மற்றும் பரிணாமம்’ (Heredity and Evolution) என்ற தலைப்பிலான 9ஆம் வகுப்பின் அறிவியல் பாட நூல் மாற்றப்பட்டு ‘மரபுவழி’ (Heredity)என்னும் நூல் தரப்பட்டுள்ளது. ஆனால், டார்வினின் ‘பரிணாம வளர்ச்சிக் கொள்கை’ நீக்கப்பட்டது ‘கல்வியை கேலிக்குரியதாக்குவதாகும்’ என்றும், இந்த அடிப்படை அறிவியல் கண்டுபிடிப்பு மாணவர்களிடமிருந்து மறைக்கப்பட்ட நிலையில் அவர்களின் சிந்தனை செயல்பாட்டு முறை தடங்கலுக்கு உள்ளாக்கப்பட்டதாக ஆகிவிடும் என்றும் அறிவியல் சமூகம் நம்புகிறது.

திறந்த கடிதம் இவ்வாறு துவங்குகிறது: “10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்திட்டத்தில் பிரிக்க முடியாத ஒரு பகுதியாக இருந்த உயிரியல் பரிணாமக் கொள்கை நீக்கப்பட்டுள்ளதைக் கண்டு நாட்டின் அறிவியல் சமூகம் மிகவும் திகைப்புக்குள்ளாகியுள்ளது.” கொரோனா பெருந்தொற்றின்போது பாடத் திட்டத்தைக் குறைக்கும் இடைக்கால நடவடிக்கையாக முதலில் இந்தப் பகுதி நீக்கப்பட்டது. ஆனால், உள்ளடக்கத்தைச் சீரமைப்பதின் ஒரு பகுதியாக (!) இது நிரந்தரமாக நீக்கப்படுகிறது என்று https://ncert.nic.in/pdf/BookletClass10.pdfஇல் உள்ள
என்.சி.இ.ஆர்.டி ஆவணம் தெரிவிக்கின்றது.

மேலும், அறிவியல் மனப்பான்மையும் அறிவார்ந்த உலகப் பார்வையும் ஏற்படுவதற்கு பரிணாமக் கொள்கை குறித்த அறிவு மிக முக்கியமானதாகும். அறிவியல் முறை மற்றும் நுண்ணாய்வுடன் கூடிய சிந்தனையில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு டார்வினின்’இயற்கைத் தேர்வுக் கோட்பாடு’ பயிற்சியளிப்பதாக உள்ளது என்று இந்தக் கடிதம் விளக்குகிறது.

மேலும், “டார்வின் தனது இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை முன்மொழிந்ததிலிருந்து, உயிரிகளின் உலகம் தொடர்ந்து மாறுதல்களுக்கு உள்ளாவதாகும் என்பதும், பரிணாமம் என்பது இயற்கை விதிகளுக்குட்பட்ட, தெய்வீகத் தொடர்பு இல்லாத நிகழ்வாகும் என்பதும், மனித இனமானது ஒரு குறிப்பிட்ட இனவகையைச் சேர்ந்த குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து தோன்றியதாகும் என்பதும் அறிவு சார்ந்த சிந்தனையின் அடிப்படையாக உள்ளன” என்றும் மேற்கண்ட கடிதம் குறிப்பிடுகின்றது.

இன்றியமையாத அறிவியல் உள்ளீடுகளை நீக்கியிருப்பதை வரலாற்றாசிரியர்கள் கடந்த காலத்தில் விமரிசித்திருப்பதுடன், மிக முக்கிய உள்ளீடுகள் மற்றும் வருங்கால சவால்களைச் சந்திக்க அவசியமான வழிகாட்டு விழுமியங்கள் கல்வி கற்பவர்களுக்குக் கிடைக்காமல் ஆக்கப்படுகின்றன என்றும் அவர்கள் இந்தக் கடிதத்தின் வாயிலாக வாதம் செய்துள்ளனர்.

இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரானஅபுல் கலாம் ஆசாத் பற்றிய குறிப்பை 11ஆம் வகுப்பு பாடநூல்களிலிருந்து நீக்கிய என்.சி.இ.ஆர்.டிதேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (என்.சி.இ.ஆர்.டி) NCERT, பாடத் திட்டங்களைச் சீரமைப்பதின் (!) ஒரு நடவடிக்கையாக பாடத்திட்டத்திலிருந்து குஜராத் வன்முறைகள், முகலாயர் ஆட்சி, நெருக்கடி நிலை, பனிப் போர், நக்ஸலைட் இயக்கம் ஆகியவை தொடர்பான பாடங்கள் உள்பட குறிப்பிட்ட சில பகுதிகளை நீக்கியுள்ளது.

என்.சி.இ.ஆர்.டி இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மவுலானா அபுல்கலாம் ஆசாத் பற்றிய குறிப்புகளை அண்மையில் அது வெளியிட்ட சீரமைக்கப்பட்ட 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடநூலிலிருந்து நீக்கியது சமுதாயத்தின் குறிப்பிட்ட பிரிவினரிடமிருந்து கடும் விமரிசனத்துக்கு இடங்கொடுத்துள்ளது.
இவை பொருத்தமற்றவை அல்லது திரும்பத் திரும்ப வருபவை என்று இதற்கு காரணம் கூறப்பட்டுள்ளது.
சீரமைத்தல் பற்றிய குறிப்பில் 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடநூலில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பாடத் திட்டத்தில் குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை என்றும், சென்ற ஆண்டு ஜூன் மாதத்தில் தான் சீரமைத்தல் செய்யப்பட்டது என்றும் என்.சி.இ.ஆர்.டி கூறியுள்ளது.

“சீரமைக்கப்பட்ட நூலில், சீரமைத்தல் பற்றிய குறிப்பில் குறிப்பிடப்படாத சில மாற்றங்கள் இடம் பெற்றிருப்பது கவனக் குறைவால் நேர்ந்திருக்கலாம் என்று என்.சி.இ.ஆர்.டி இயக்குநர் தினேஷ் சக்லானி வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்த குறிப்பிட்ட 11ஆம் வகுப்பு பாடநூலில் “அரசமைப்புச் சட்டம் – ஏன் மற்றும் எப்படி” என்னும் தலைப்பையுடைய முதல் அத்தியாயத்தில் இருந்த ஒரு வரியில் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்ற கூட்டங்களின் குறிப்புகளில் இருக்கும் அபுல் கலாம் ஆசாதின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

புதிதாகச் சேர்க்கப்பட்ட வரி, “வழக்கமாக ஜவகர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், சர்தார் பட்டேல் அல்லது பி.ஆர்.அம்பேத்கர் இந்தக் கூட்டங்களுக்குத் தலைவர்களாக இருந்தனர்” என்று கூறுகிறது.
இதைப்போல, “அரசமைப்புச் சட்டத்தின் சித்தாந்தம்” எனும் தலைப்பிட்ட 10ஆம் அத்தியாயத்தில் ஜம்மு & காஷ்மீர் நிபந்தனைகளுடன் இந்தியாவுடன் இணைந்தது பற்றிய குறிப்பும் நீக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக, “ஜம்மு & காஷ்மீர் அதன் சுயாட்சி உரிமை பாதுகாக்கப்படும் என்ற உறுதியளிக்கிற அரசமைப்புச் சட்டம் பிரிவு 370இன் அடிப்படையில் தான் இந்திய ஒன்றியத்தில் இணைந்தது” என்பதைக் குறிப்பிடுகின்ற பத்தி நீக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகத்தால் 2009இல் துவங்கப்பட்டு, அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை வகுப்பினருக்கு ஆய்வுப் படிப்புக்காக வழங்கப்பட்டு வந்த “மவுலானா ஆசாத் ஆய்வுதவித் தொகை” சென்ற ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.

“பொய்கள்”

என்.சி.இ.ஆர்.டி பாடத்திட்டத்தை மேற்பார்வையிடுகிற ஒன்றிய அரசு, மவுலானா அபுல் கலாம் ஆசாதின் பெயர், ஆளுமை, குண நலன்கள் மற்றும் அவருடைய பங்களிப்புகள் பற்றிய குறிப்புகளை அவருக்கு மதிப்பளிக்காத விதமாக நீக்கியது மிகவும் கேலிக்குரிய செயல் என்று காங்கிரஸ் கடுமையாக விளாசியுள்ளது

“பொய்கள், உண்மையற்ற புனைவுகள் மற்றும் திரிக்கப்பட்ட மரபுகளை அடுத்த தலைமுறையினருக்கு அளித்திட இந்த அரசு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது” என்று இங்குள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்ஷுல் அவிஜீத் கூறினார்.

மேலும் “இதை நான் மிக வன்மையாகக் கண்டனம் செய்கிறேன். அவர் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக இருந்தவர். நாடு தழுவிய அளவில் 14 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் கட்டாயக் கல்வி அளிக்கும் திட்டத்திற்கு அடித்தளம் இட்டவரின் பெயர் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாத ஒரு முரண் ஆகும். இது மிகவும் வெட்கக்கேடானது” என்றும் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஆசாதுக்கு பெரும் பங்கு இருந்தது, அவர் ஒரு பெயர் பெற்ற அறிஞர், காந்திய கோட்பாடுகளைக் கடைப்பிடித்தவர், சுய ராஜ்யம் மற்றும் சுதேசக் கொள்கைகளைப் பின்பற்றியவர், அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையின் பல குழுக்களில் பங்கு வகித்தவர். மேலும் அவர் “வரலாற்றை மாற்றி எழுதும் இந்த அரசின் வேகத்திலிருந்து யாருக்கும் பாதுகாப்பு இல்லை” என்றும் கூறினார்.

வரலாற்றை மாற்றி எழுதும் தவறான செயலில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார். “விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லாதவர்கள், தேசியக் கொடியை அவமதித்தவர்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் பங்கு வகிக்காதவர்கள், இப்போது தங்களை வரலாற்றின் மேல் திணித்து, அதை மாற்றி, வரும் தலைமுறையினருக்குத் தவறான தகவலை அளிக்கிறார்கள்”

“குஜராத் வன்முறைகளைக் குறித்த குறிப்புகள் எல்லாம் அழிக்கப்பட்டுள்ளன. மகாத்மா காந்தியைக் கொலை செய்ததைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டதைப் பற்றிய குறிப்பு இல்லை. ஜாதிக் கொடுமைகளால் ஏற்பட்ட கொடுமைகள் எளிதானவை என்பதுபோல் குறிப்பிடப்பட்டுள்ளன.”

என்.சி.இ.ஆர்.டி.யின் புதிய பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள பிற பகுதிகள்:

அண்மையில் என்.சி.ஆர்.டி செய்துள்ள மாற்றங்கள் கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. நரேந்திர மோடியின் அரசுக்கு எதிராகப் போராடும் எழுச்சி அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் தம்முடைய சித்தாந்தங்களுக்கு ஏற்ற வகையில் கடந்த கால வரலாற்றைத் திரித்துக் கூறும் செயலில் அடிக்கடி ஈடுபடுகின்றன என்பதை ‘அவுட்லுக்’ முன்பே வெளிக்கொண்டு வந்துள்ளது.
வரலாற்றை அரசியல் மயமாக்குவது மற்றும் வேண்டாதவரை உட்சேர்க்காத அரசியல் ஆகியவற்றின்படி என்.சி.இ.ஆர்.டி-யின் ‘பாடத்திட்ட மறு சீரமைப்பு’ செயல்திட்டம் இருப்பதை ஜூலை 2022 ‘அவுட்லுக்’ இதழ் ‘பிழைகள். நீக்கங்கள். சேர்க்கைகள்’ என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ளது.

இந்த புதிய கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாட நூலிலிருந்து காணாமல் போயுள்ள பகுதிகளில் “காந்தியின் மரணம் நாட்டின் இனவாத சூழலில் மந்திரம் போன்ற பாதிப்பை ஏற்படுத்தியது”, “இந்து-முஸ்லிம் ஒற்றுமைக் கொள்கையை காந்தி பின்பற்றியது இந்து தீவிரவாதிகளுக்கு கோபமூட்டுவதாக அமைந்தது” மற்றும் “ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் சில காலத்திற்கு தடை செய்யப்பட்டன” போன்றவை அடங்கும்.
மேலும், 12ஆம் வகுப்பு பாட நூலிலிருந்து 2022 குஜராத் வன்முறைகளைக் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டு சில மாதங்களுக்குள் 11ஆம் வகுப்பு சமூகவியல் பாட நூலிலிருந்தும் குஜராத் வன்முறைகளைக் குறித்த பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

NCERT,யின் இச்செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கன. மக்களாட்சி நடைபெறும் நாட்டில் பாசிச செயல்பாடுகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். மக்கள் ஆட்சியில், அறிவியல் வளர்ச்சியில், மதச் சார்பின்மையில் அக்கறையுள்ள அனைவரும் நாடு தழுவிய அளவில் இதை எதிர்க்கும் நிலை வருவதற்குமுன் தனது இச்செயல்களை NCERT மாற்றிக்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்!

(தரவுகள் : ‘India Today’ 25-04-2023)
‘Outlook’, ஏப்ரல் 13, 2023)